உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/383

விக்கிமூலம் இலிருந்து

383. அருளாய் அன்றே!

பாடியவர் : கோளியூர்கிழார் மகனார் செழியனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழி, ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.

[(து-வி.) களவிலே வந்து உறவாடிச் சொல்லும் தலைவனின் உள்ளத்தை வரைந்துவந்து மணந்துகொள்வதிலே செலுத்த நினைக்கின்றாள் தோழி. அதனாலே, அவன் வரும் வழியிலுள்ள துன்பங்களை நினைந்து தாம் அஞ்சுவதாகக் கூறி, அவனுக்குத் தன் கருத்தை நுட்பமாகப் புரியவைக்கின்றாள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.]


கல்லயற் கலித்த கடுங்கால் வேங்கை
அலங்கலம் தொடலை அன்ன குருளை
வயப்புனிற் றிரும்பிணப் பசித்தென, வயப்புலி
புகர்முகம் சிதையத் தாக்கிக் களிறட்டு
உருமிசை உரறும் உட்குவரு நடுநாள் 5
அருளினை போலினும் அருளாய் அன்றே—
கனையிருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்புடன்று இரிக்கும் உருமொடு
ஓங்குவரை நாட! நீ வருத லானே!

தெளிவுரை : உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தோனே! நீதான் தலைமகளுக்கு அருளுடையவன் போலவே நடந்து கொண்டாயானாலும், உண்மையிலே அருளற்றவனே ஆவாய் காண்! மலையின் தாழ்ந்த பக்கத்திலே, தழைத்துள்ள கரிய அடியையுடைய வேங்கைமரத்தினது பூக்களாலே தொடுக்கப் பெற்ற, அசைதலையுடைய மாலைபோன்ற குட்டிகளை அணித்தாக ஈன்றிருந்தது பெண்புலி யொன்று. வயாநோய் பொருந்திய அந்தக் கரிய பெண்புலியானது பசியாலே வருந்தியதாக, அதனையறிந்த வலியுள்ள ஆண்புலியானது இரைதேடிவரப் புறப்பட்டது. புள்ளிகளையுடைய முகம் சிதையுமாறு தாக்கி, ஒரு களிற்றைக் கொன்று வீழ்த்தியது. அப்படி வீழ்த்திய அது, இடியினும் காட்டில் உரத்த குரலோடு முழக்கமிட்டபடியிருக்கும் அச்சமிகுந்த நடு இரவு நேரத்திலே, செறிந்த இருளானது மூடிமறைத்திருக்கும் அச்சம் வருதலையுடைய வழியிலே, பாம்பின்மீது சினந்து விழுந்து கொல்லும் இடியும் இடிக்கும்போதிலே, நீயும் வருகின்றனை! அதனாலே, எங்கள் கவலையே மிகுவதனால், நீயும் எங்கள்பால் அருள் உள்ளவன் அல்லை காண்!

கருத்து : 'இரவு நேரத்தில் இனி வருதல் வேண்டா' என்பதாம்.

சொற்பொருள் : கல் – மலை. அயல் – அடுத்துள்ள பக்கத்திலே. கலித்த – தழைத்த. அலங்கல் – அசைதல். தொடலை – மாலை. குருளை – குட்டி. வய – வயாநோய்; ஈன்ற தாய்க்குச் சிலநாள்வரை உள்ள சோர்வும் நோயும். புனிறு – ஈன்றதன் அணிமை. பிண – பெண்புலி. வயம் – வலிமை. புகர் – புள்ளி. உரறும் – முழக்கும். உட்கு – அச்சம். நடுநாள் – நள்ளிரவு. கனையிருள் – மிகுதியான செறிந்த இருள். இயவு – வழி. உரும் – இடி. உடன்று – சினந்து. இரிக்கும் – கொல்லும். ஓங்குவரை – உயர்ந்த மலை.

விளக்கம் : 'அருளினை போலினும்' என்றது, அவன் அவ்வாறு நினைத்தாலும், அவன் வரும் வழியினை நினைந்து வருந்தும் அவர்களுக்கு, அஃது அருளாகாது துயராகவே விளங்குகின்றது என்றதாம். நெறியின் ஏதங்கூறி இரவுக்குறி மறுத்தலால் இது வரைவு வேட்டலும் ஆயிற்று.

இறைச்சி : பெண்புலி பசியுற்றதென்று, ஆண்புலிகளிற்றைக் கொன்று அதனை உண்பிக்கும் என்றது, அவ்வாறே நீயும் நின் காதலியின் துயரத்தை நினைந்து, உரிய வரைபொருளோடு வந்து மணந்து கொள்ளவேண்டும் என்பதாம். களிற்றைக் கொன்று இரைபெற்ற புலியானது, அந்த வெற்றிக் களிப்பால் காடே அதிரும்படி முழங்கும் என்றது, அவ்வாறே நீயும் வரைவொடு வரும்போது, இன்னியங்களின் முழக்கோடு ஊரறிய வரலாம் என்பதாம்.

பயன் : தலைவியின் மனத்துயரத்தை உணரும் தலைவன், அவளை முறையாக வரைவொடு வந்து மணம் புரிந்து கொள்ளும் உறுதியுடையவனாகச் செயல்படுவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/383&oldid=1698705" இலிருந்து மீள்விக்கப்பட்டது