உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/384

விக்கிமூலம் இலிருந்து

384. மருந்து எனப் படூஉம்!

பாடியவர் : பாலை பாடிய பெருங் கடுங்கோ.
திணை : முல்லை.
துறை : உடன் போகா நின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து-வி.) தலைமகளைப் பாலைவழியே தன்னூர் நோக்கி அழைத்துப் போகின்றான் தலைவன் ஒருவன். அவள் கால் பரற்கற்கள்மேல் பட்டு வருந்தாவாறு, வேங்கை மலர் உதிர்ந்து கிடக்கும் பக்கமாக அழைத்துச் செல்பவன், அவளுக்குச் சோர்வு ஏற்படாதிருக்கத், தன் நெஞ்சொடு சொல்வான்போல, அவளும் கேட்டு மகிழக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


பைம்புறப் புறவின் செங்காற் சேவல்
களரி ஓங்கிய கவைமு ட்கள்ளி
முளரியம் குடம்பை ஈன்றிளைப் பட்ட
உயவுநடைப் பேடை உணீஇய, மன்னர்
முனைகவர் முதுபாழ் உகுநெற் பெறூஉம் 5
மாணில் சேய்நாட்டு அதரிடை மலர்ந்த
நல்நாள் வேங்கைப் பொன்மருள் புதுப்பூப்
பரந்தன நடக்கயாம் கண்டனம் மாதோ
காண்இனி வாழி—என் நெஞ்சே! நாண்விட்டு
அருந்துயர் உழந்த காலை 10
மருந்தெனப் படூஉம் மடவோ ளையே!

தெளிவுரை : என்னுடைய நெஞ்சமே! நீதான் வாழ்வாயாக! நாம் இவளை அடையமுடியாதேமாய்ப் பொறுத்தற்கரிய துயரத்திலே வருந்தியிருந்த போதிலே, தனக்குரிய பண்பாகிய நாணத்தையும் ஒதுக்கிவிட்டு, நம் நோய்க்கு மருந்தென வந்து வாய்த்தவள், இந்த இளமையோள் இவளை—

பசுமையான புறத்தையும் சிவந்த கால்களையும் கொண்ட புறவின் சேவலானது, களர் நிலத்திலே உயரமாக வளர்ந்திருந்த கவையான முட்களைக்கொண்ட கள்ளியின் தலைப்புறத்திலே, சுள்ளிகளால் கட்டப்பெற்ற கூட்டிலே, குஞ்சுகளை ஈன்று அவற்றைக் காத்திருத்தலாலே களைத்துப்போன், வருந்திய நடையினையுடைய பேடையானது உண்ணும் பொருட்டாக—

வேற்று நாட்டவரான மன்னர் வந்து போரிட்டுப் போர் முனையிலே வளத்தையெல்லாம் கவர்ந்து போய்விட, முதிர்ந்து கிடந்த பாழ்முனையிலே, தானே விளைந்து கொள்வாரன்றி உதிர்ந்து கிடக்கும் நெற்களைக் கொண்டுவந்து கொடுத்து உண்பிக்கும்—அத்தகைய மாட்சிகள் ஏதுமற்ற தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியினிடையிலே, நல்ல நாட்காலையிலே மலர்ந்த வேங்கையின் பொன்போன்ற புதுப்பூக்கள் உதிர்ந்து பரவிக்கிடக்க, அப்பரப்பின் மீதாக, மென்மெல நடக்கவும் யாம் கண்டனமே! அதன் செவ்வியை நீதானும் காண்பாயாக!

கருத்து : 'அவளை அடைந்தது என் பேறு' என்பதாம்.

சொற்பொருள் : பசும்புறம் – பசுமையான மேற்புறம். செங்கால் – சிவந்த கால். களரி – களர்நிலம். கவைமுள் – கவைபட்டமுள். முளரி – சுள்ளி. இளைப்பட்ட – காவற்பட்ட. உயவுநடை – வருந்திய தளர்ந்த நடை. முனை – போர்முனை. கவர் – கவர்ந்து போனதனாலே. முதுபாழ் – மக்கள் நெடுங் காலம் முன்பே நீங்கிப்போகப் பாழ்பட்டு முதிர்ந்து கிடக்கும் வயற்புறம். உகுநெல் – உதிர்ந்துகிடக்கும் நெல். நல்நாள் – நாட்காலை வேளையில். புதுப்பூ – அன்று பூத்த பூ. நாண்விட்டு – நாணத்தை விட்டு; இது புதியவனோடு அவனே துணையாகத் தன் வீட்டைவிட்டு வெளியேறி உடன்போக்கிலே சென்றதைக் குறித்துக்கூறியது. உழந்த – வருந்திய. மடவோள் – இளையவள்; மடப்பம் உடையவளும் ஆம்.

இறைச்சி : பார்ப்பை ஈன்று அவற்றுக்குக் காவலாக இருக்கும் புறவுப்பேடை உண்டு பசிதீருமாறு, அதன் சேவல் முதுபாழிற்சென்று உதிர்ந்த நெற்களைப் பொறுக்கி வந்து அளிக்கும் என்றனர். இவ்வாறே, இவளைக் கொண்டுசென்று மணந்து இல்லறம் பேணுவதற்கு முற்பட்ட யாமும், இவள் இனிதே குடும்பம் நடத்துவதற்கு வேண்டுவன முயன்று தேடி வந்து தந்து, உதவி நிற்போம் என்பதாம்.

விளக்கம் : நாணம் பெண்ணின் ஒப்பற்ற பண்பு. எனினும், கற்பறம் பேணுவதற்கு இடையூறு வந்த காலத்தில். அதையும் கைவிட்டுத் தாம் காதலித்தவனோடு யாருமறியாமற் செல்லும் துணிவைப் பெண் கொள்ளும்போது, நாணத்தை விட்டு விடுதலும் அறமென்றே கொள்க. இது முல்லைத் திணைச் செய்யுள் என்றிருப்பினும், 'முனைகவர் முதுபாழ்' எனப் பாலையும் வந்தது காண்க? பாலையெனத் திணை கொள்ளின், பிரிந்துறையும் தலைவன், தன் காதலி தன்னோடு முன்னர் உடன்போக்கில் உடன்வந்த செவ்வியை நினைத்து, அவள் நினைவாலே ஏங்கி வருந்துவதாகக் கொள்க.

பாடபேதங்கள் : வண்புறப் புறவு; பண்புறப் புறவு; மாணில் சேய்நாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/384&oldid=1698706" இலிருந்து மீள்விக்கப்பட்டது