உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/396

விக்கிமூலம் இலிருந்து

396. ஏமம் என்று அருளாய்!

பாடியவர் : .....
திணை : குறிஞ்சி.
துறை : (1) தோழி, தலைமகனை வரைவு கடாயது; (2) வரைவு உணர்த்தப் பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉம் ஆம்; (3) இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.

[(து-வி.) வரைந்துகொள்வதற்கு நினையாதே களவு வாழ்வினை விரும்பி வருபவனைத் தோழி நெருங்கிச் சென்று, வரைந்துகொள்ளல் வேண்டும் என்பதனைக் குறிப்பாக உணர்த்தியது இது; (2) வரைவுடன் வரும் நாள் உணர்த்தப்பட்டும் அதுவரை அவனைக் காணமுடியாதுபோவதை நினைந்து பெருகிய ஆற்றாமையால் சொல்லியதும் இதுவாகலாம்;(3) இரவுக்குறி வருவானை வாராதே என மறுத்துக் கூறுவதன்மூலம், வரைவு வேட்டலாகவும் கொள்ளலாம்.]


பெய்துபோகு எழிலி வைகுமலை சேரத்
தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பணி நன்னாள்
பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக்
கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை 5
பாசறை மீமிசைக் கணங்கொள்பு ஞாயிற்று
உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன்
நின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே—பன்னாள்
காமர் நனிசொல் சொல்லி
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே! 10

தெளிவுரை : மழையைப் பெய்து கழித்த பின்னே செல்லும் மேகங்கள் தாம் தங்குவதற்கான மலையைச் சென்று சேர்ந்தன; தேன் கூடுகள் தொங்கும் உயர்ந்த வெற்பிடத்திருந்து வீழும் அருவிகள் ஆரவாரித்து வீழ்கின்றன; வேங்கை மலர்ந்ததனாலே வெற்பிடம் அழகுடன் விளங்கும் நல்ல நாட்காலையிலே, பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலே துழாவி மணம் கமழும் மகரந்தத்திலே அளைந்து, அதனாலே பொற்கவின் பெற்றது மயில்; அது பசுமை போர்த்த பாறையின் உச்சிமீதிலே தன் கூட்டத்தோடுங் கூடியதாக, ஞாயிற்றின் மிக்க கதிராகிய இளவெயிலைத் துய்த்தப்படி இருக்கும்; இத்தகைமைகொண்ட மலைநாடனே! நின் மார்பானது தாக்கியதனாலே நீங்குதற்கும் அரிதாகி எம்மைப் பற்றிக்கொண்டுள்ள இக்காமநோயினை, மனம் நொந்துயானும் யாரிடத்துத்தான் சொல்வேனோ? பலநாளும் இனிய சொற்களை மிகுதியாகச் சொல்லியதன்றி, மணவாழ்வே இவட்குக் காப்புடைத்தென்று அருளாதவன் ஆகி, நீதான் மயங்கியுள்ளனையே! இனி என்செய்வேம்? என்பதாம்.

கருத்து : 'நின் உறவாலே துன்புற்றனம்' என்பதாம்.

சொற்பொருள் : 'பெய்து போகு எழிலி' – பெய்தபின் மேலும் போகும் மேகம்; பெய்துகொண்டே செல்லும் மேகமும் ஆம். வைகுமலை – தங்கும் மலை. தேன் தூங்கு – தேன்கூடுகள் தொங்கும். வேங்கை தந்த வெற்பணி – வேங்கை மலர்ந்து அளித்ததான மலையின் அழகு. பூஞ்சினை – பூவினைக் கொண்ட கிளை. துழைஇ – துழைந்தாடி. கவின்பெறு தோகை – அழகு பெற்ற மயில்; இது வேங்கையின் பூந்தாது படிதலாலே பெற்ற புதிய கவின். பாசறை – பசுமையான பாறை; பசுமை மேலுள்ள செடிகொடிகளால் வந்தது. கணம் – கூட்டம். உறுகதிர் – மிகுந்த கதிர். உண்ணும் – துய்க்கும். அணங்கிய – தாக்கி வருத்திய. செல்லல் – துன்பம்; நீங்குதலும் ஆம் காமர் – விருப்பந்தரும். நனி சொல் – மிகுதியான சொற்கள்.

விளக்கம் : தலைவியைக் களவிற் பெறுகின்ற காலத்து, அவள்பால் அச்சம் தோன்ற, அதைத் தெளிவிக்கும் வகையால் 'நின்னிற் பிரியேன்; நின்னையே விரைவில் மணந்து வாழ்வேன்; பிரியின் உயிர் தரியேன்' என்றாற்போலச் சொல்லிய சொற்களை நினைப்பிப்பாள். 'காமர் நனி சொல் சொல்லி' என்றனள். அவை சொல்லளவாகவே பொய்ப்பட்டுக் கழிந்தன என்பாள், 'ஏமம் என்று அருளாய்' என்றனள். 'மயங்கினையே' என்றது செய்வோமோ வேண்டாமோ என எதுவும் துணியாது குழம்பியிருந்த மனநிலையை.

மழை பெய்தலும், அருவி ஆர்த்தலும், மயில்கள் இளவெயில் நுகர்தலும், வேங்கை பூத்தலும் கூறியது, அதுதான் மணவினைக்கு உரிய காலம் என்பதை உணர்த்தி, அதனால் இனி வேற்றுவரைவும் பிற தொல்லைகளும் தம்மைச் சூழும் என்பதை நினைப்பித்ததுமாம்.

உள்ளுறை : மயிலானது வேங்கைத் தாதினை அளைந்து வந்து தன் கூட்டத்தோடு சேர்ந்து இளவெயில் துய்க்கும் என்றது, நீதானும் இவளோடு மணம் பெற்றனையாய், நின்னூர்க்குக் கொண்டு சென்று, நின் தமரோடும் கூடியிருந்து, மனையறம் பேணி மாண்படைவாய் என்பதாம்.

பயன் : இதனாலே மனம் தெளிபவன், விரைவிலே வரைந்து மணங்கொண்டு இன்புறுதற்கு முற்படுவான் என்பதாம்.

பாடபேதம் : வேங்கை தந்த வெற்பணி நன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/396&oldid=1698737" இலிருந்து மீள்விக்கப்பட்டது