உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/397

விக்கிமூலம் இலிருந்து

397. சாதல் அஞ்சேன்!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : பாலை.
துறை : பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை, வற்புறா நின்ற தோழிக்கு, ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.

[(து-வி.) தலைமகன் பிரிந்து போயிருந்த காலத்திலே, அவன் பிரிவைத் தாங்கமாட்டாது வருந்திய தலைவியை, அவன் வரும்வரை ஆற்றியிருத்தலே மகளிர் கடனென வலியுறுத்தித் தெளிவிக்க முயன்றாள் தோழி. அவளுக்குத் தலைவி, தான் ஆற்றியிருப்பதாகச் சொல்லும் முறையிலே அமைந்த செய்யுள் இதுவாகும்.]


தோளும் அழியும் நாளும் சென்றென
நீளிடை அத்தம்நோக்கி வாளற்றுக்
கண்ணும் காட்சி தௌவின என்நீத்து
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று 5
யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப்பிறி தாகுவது ஆயின்
மறக்குவென் கொல், என் காதலன் எனவே!

தெளிவுரை : நம் தலைவர் வருவதாகக் குறித்துச் சென்ற நாளும் கழிந்தது. அதனாலே என் தோள்களும் நலன் அழிந்து போம். நீண்ட நெறியையுடைய சுரத்து வழியை நோக்கி நோக்கித் தம் ஒளியிழந்தவாய், என் கண்களும் பார்வை மங்கின. என்னைக் கைவிட்டு என் அறிவும் மயக்கமடைந்து வேறாகப் போயிற்று. காமநோயானது பெருகுகின்ற மாலைப் பொழுதும் வந்துவிட்டது. யான் எவ்வாறுதான் ஆவேனோ? இவ்விடத்திலே, இதனாற் சாதல் வந்தடையும் என்பதற்கு யான் அஞ்சமாட்டேன். ஆனால், சாவின் பின்னர் வரும் பிறப்பானது வேறொன்றாக அமைவதாயின், என் காதலனை அப்பிறப்பிலே மறந்துவிடுவனோ என்றே யான் அஞ்சாநிற்பேன் என்பதாம்.

கருத்து : 'அவனன்றி எனக்கு வாழ்வில்லை' என்பதாம்.

சொற்பொருள் : வாள் அற்று – ஒளியிழந்து. தௌவின –பொலிவிழந்தன. பிறிது ஆகின்று – வேறாகின்றது; அஃதாவது பித்தாகிப் போதல். ஈங்கோ – இவ்விடத்திலோ; என்றது இந்த உலகிலே இப்போது பெற்றுள்ள பிறப்பினைக் குறித்துக் கூறியதாகும். பிறப்பு பிறிது ஆகுவது – பிறப்பு வேறொன்றாக நேர்வது; இது மக்கட் பிறப்பன்றி வேறு உயிர்வகைகளுட் சென்று பிறத்தலும்; மக்கட் பிறப்பாயினும் நெடுந்தொலைவு இடைப்பட்ட வேற்று நாடுகளிற் சென்று சென்று பிறத்தலும் போல்வன.

விளக்கம் : அவர் வரவில்லை, என் நலன்கள் அழிந்தன, நோய் பெருகுதற்குரியதான மாலைக்காலமும் வந்தது, இனி எவ்விதம் ஆற்றியிருப்பேனோ என்று துயருற்றதாம். சாதல் அஞ்சேன் என்றது, அதுதான் தனக்கு நேரப்போகின்றது என்ற வெறுப்பிடையிலே கூறியதாம். பின் பிறப்பில் இவன் காதலன் என்பதனை என் பிறப்புச் சார்ந்த அறியாமையால் மறப்பேனோ என்றே அஞ்சுவேன் என்றது, அவளது கற்புச் செவ்வியை உணர்த்தும். கண்கள் ஏக்கத்தாலும் நோக்கி நோக்கி உண்டாகும் சோர்வாலும் ஒளியிழந்துபோகும் என்பது இயல்பு.

'என் கண்ணே நோக்கி நோக்கி வாழ் இழந்தனவே' எனக் குறுந்தொகையுள்ளும் (44) வருவது காண்க. இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49) என அம்மூவனார் பிறிதோரிடத்தும் தமிழ் மகளிரின் கற்புளப் பாங்கினை எடுத்துச் சொல்வர்.

பயன் : தன் ஆற்றாமை தீரத் தலைவி மேலும் சில நாட்கள் பொறுத்து ஆற்றியிருப்பாளாவள் என்பதாம்.

பாடபேதம் : ஆசிரியர் பெயர் கழார்க்கீரன் எயிற்றியார் எனவும் சில ஏடுகளிற் காணப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/397&oldid=1698738" இலிருந்து மீள்விக்கப்பட்டது