நற்றிணை 1/010
10. கைவிடாது காப்பாயாக!
- பாடியவர் : ......
- திணை : பாலை.
- துறை : உடன் போக்கும் தோழி கையடுத்தது.
[(து.வி) தலைவி விரும்பியவண்ணம் அவளைத் தலைவனுடனே ஒன்றுசேர்த்த பின்னர், தோழி, 'இவளை என்றும் பேணிக் காப்பாயாக' என, அவனிடம் ஓம்படுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]
அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர!
இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்
5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீ இயர்
வெண்கோட்டு யானைப் போஓர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.
பூக்கள் கெழுமிய ஊரை உடையவனே! இனிப்புடையதும் கடுப்புடையதுமான கள்ளுணவையும், ஆபரணங்களால் அழகுபடுத்தப்பெற்ற நெடிய தேர்களையும் உடையவர், வலிமிக்க சோழவேந்தர்கள். அவர்கள், கொங்கு நாட்டாரைப் பணியச் செய்வித்தலின் பொருட்டாக, வெளிய கோட்டினையுடைய போர்க்களிறுகளை மிகுதியாகக் கொண்டிருந்தவனும், 'போஓர்' என்னும் ஊருக்குரியவனுமான, 'பழையன்' என்னும் குறுநிலத் தலைவனை ஏவினர். போரிடையே வெற்றியுற்று வந்த பழையனின் வேற்படையானது, தன் தொழிலிலே தப்பாது விளங்கி, அவனுக்கு வெற்றியைக் தேடிந்தந்தது. அங்ஙனமே, பிழையாது நிலைபெறும் நின்னுடைய நன்மைதரும் சொற்களைக் கேட்டு, அவற்றை உண்மையே எனத் தெளிந்தவள் இவள். இவளுக்கு, அண்ணாந்து உயர்ந்த வனப்பினைக் கொண்ட கொங்கைகள் தளர்ச்சியுற்றுப் போயினவானாலும், பொன்னையொத்த மேனியிடத்துக் கருமணிபோலத் தாழ்ந்திருக்கும் நல்ல நெடிய கூந்தலானது நரையோடு முடிக்கப்பெறும் தன்மையை அடைந்தாலும், இவளைக் கைவிடலின்றிக் காத்தலை நீயும் பேணுவாயாக!
கருத்து : 'இளமை நோக்கி இவளைக் காதலிக்கும் நீதான் முதுமையினும் இவளைக் கைவிடலின்றிக் காத்தலைப் பேணும் நிலையான மாறாக் காதலன்பினனாகத் திகழ்வாயாக' என்பதாம்.சொற்பொருள் : அண்ணாத்தல் – நிமிர்ந்து மேனோக்குதல். வனம் – அழகு. மணி – நீல மணி. கடுங்கள் கடுப்பு – ஏறிய கள்.
விளக்கம் : 'தளரினும் முடிப்பினும்' என்றதன்கண் தந்து சிறப்பிக்கும் உம்மையினைக் கவனிக்கவேண்டும். 'என்றும் இளமை குன்றாதாளாய் இவள் விளங்குவாளாக' என்ற வாழ்த்தோடு, 'ஒருக்கால் தளரினும் முடிப்பினும் இவளை நீத்தல் ஓம்புமதி' என்றும் உரைப்பாளாகவே கொள்ளுதல்வேண்டும். "போஒர்ப் பழையனின் வேல் வாய்த்தன்ன நின் பிழையா நன்மொழி' என்றது, குறித்த கொள்கையினை முற்றவும் நிறைவேற்றும் அவ்வேற்படை போன்று, நீயும் சொன்ன சொற்களை வாய்மையாக்குக' என்பதாம். 'நன் மொழி' என்றது. 'நின்னிற் பிரியேன்' என்றாற்போலக் கூறிய சொற்கள். 'தேறிய அவள்' என்றது, 'இவன் தன்னை மறந்து மற்றொருத்தி நாடிச் செல்வானோ' என அஞ்சிய அவள், அந்த நன்மொழிகளால் தெளிவுற்று, அவனது காதலன்பை ஏற்றனள் ஆதலால். 'பூக் கேழ் ஊரனாதலின், மலருக்கு மலர் சென்றுகளிக்கும் வண்டினத்தை ஒப்பானாகிவிடாதும், புது மலரை அணிந்தும் பிற்றைநாளில் அதனைக் களைந்து ஒதுக்கிவிட்டு வேறொன்றை நாடிச் செல்லும் தன்மைக்கு உள்ளாகியோனாகாதும், தலைவியைத் தளரினும் மூப்பினும் தாங்கிக் காத்தல் வேண்டும் என்று கூறுகின்றாளாகவும் கொள்க.
மேற்கோள் : தொல் பொருள் 39ஆம் சூத்திர உரையிடத்து, இத்துறைக்கே மேற்கோளாக இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர்.