நற்றிணை 1/020
20. வாழிய மடந்தை !
- பாடியவர் : ஓரம்போகியார்.
- திணை : மருதம்.
- துறை : (1) பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது: (2) வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.
((து–வி.) (1) பரத்தை உறவினால் தலைவியை மறந்து பிரிந்துறைந்த தலைவன், மீளவும் தலைவிபால் வருகின்றான். அவள், அவன் செயலைக் கூறிப் பழிக்க, அவன் 'யாரையும் அறியேன்' எனக் கூறியவனாக, அவளது சினத்தைத் தணிவிக்க முயலுகின்றான். அப்போது தலைவி, அவனுக்குச் சொல்வதாக அமைந்தது. (2) தலைவளின் பரத்தமையால் ஊடிச் சினந்திருந்த தலைவியின் ஊடலை நீக்கி, அவனோடு மீண்டும் சேர்க்கக் கருதிய தோழி, தலைவியிடத்தே சென்று சொல்வது.]
ஐய! குறுமகட் கண்டிகும்; வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ்இணர்த்
தேம்பாய் மரா அம் கமழும் கூந்தல்
துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச்
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகிற்
5
பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள் — வாழிய, மடந்தை!—நுண்பல்
சுணங்கணி வுற்ற விளங்கு பூணள்
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழைப்
பழம்பிணி வைகிய தோள் இணைக்
10
குழைந்த கோதை கொடிமுயங் கலளே.
ஐயனே! ஓர் இளைய பரத்தை, தன் காதலனின் மார்பிடத்தே நேற்றிராக் கிடந்து உறங்கிய அடையாளங்களோடுஞ் செல்லக் கண்டேன். வண்டுகள் பாயப்பெற்று, வண்கடப்பம் பூக்களின் மணம் கமழ்ந்தபடியிருந்த அவளது கூந்தல், கலவிக் காலத்துத் துவட்சியோடு அவளுடைய சிறு புறத்திலே வீழ்ந்து அசைந்து கொண்டிருந்தது அவளுடைய இடையில் விளங்கிய மெல்லாடையும் தளர்ந்து அசைந்து கொண்டிருந்தது. செறிவான வளைகள் ஒலிமுழங்கக் கைகளை வீசிக்கொண்டவளாக, நீலப்பூப்போன்ற மையுண்ணும் கண்கள் சுழன்று நோக்கும் பார்வையைச் செய்ய, எம் தெருவூடே சென்றனள். விளங்கிய பூண்களுடன், நுண்ணிய பலவாகிய சுணங்குகள் அணியப் பெற்றவளாகத், தன் காதலனின் மார்பிடத்தே பெற்ற முயக்கத்திடையில் நெரிந்த சோர்கின்ற குழையையும் கொண்டிருந்தனள். பழம் பிணியாகிய காமநோய் தங்கிய இரட்டைத் தோள்களையும் உடைய வளாயிருந்தனள். குழைந்த மாலையினை அணிந்த பூங்கொடிபோன்ற அவள்தான் இன்றைக்கு அவனைத் தழுவிலள் போலும்! அற்தகையாளான ஓர் இளையோளைக் கண்டேன். பெருமானே!
கருத்து : 'நினக்கு உரியவளாகிய அவள்பாலே நீயும் இனிச் செல்க' என்பதாகும்.
சொற்பொருள் : குறுமகள் – இளையோளாகிய பரத்தை; குறுமை – இளமை. மராஅம் – வெண்கடம்பு. கலிங்கம் – மெல்லிய ஆடை. தெளிர்ப்ப – ஒலிப்ப. ஞெமிர்ந்த – நெரிந்த.
விளக்கம் : 'குறுமகள் கண்டிகும்' என்றது, அவள் தன்னைக் காட்டினும் இளமைப் பருவத்தினளாதலைச் சுட்டிக் கூறியதாம். 'மகிழ்நன்' எனத் தலைவனையே படர்க்கையிடத்து வைத்துக் கூறினள். 'வாழிய மடந்தை' என வாழ்த்தியது. 'என்னைப் போலப் பிரிவால் வருத்தமுறாது, அவளாயினும் நின்னோடும் பிரியாத இன்பவாழ்வைப் பெறுவாளாக' என்றதாம்.
இரண்டாவது துறை : தோழி சொல்வதாகக் கொள்ளும்போது, 'இளம் பரத்தையின்பாற் கொண்ட காமங் காரணமாகத் தலைவன் தன்னைப் பிரிந்தான் என்று ஊடிய தலைவியிடத்தே, அவளாற் குறிப்பிடப்பெற்ற பரத்தை காமநுகர்வுக்கு ஏலாத சிறுமி என்று கூறி, அவளது ஊடலைத் தீர்த்துத் தலைவனுடன் கூட்டுவிக்கின்றாள் என்று கொள்க.