உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/021

விக்கிமூலம் இலிருந்து

21. காட்டுக் கோழி!

பாடியவர் : மருதனிள நாகனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

[(து–வி.) அரசவினையை முடித்தற் பொருட்டகச் சென்றிருந்தான் தலைவன். அவ்வினையை முடித்த பின்னர் தன் நாட்டிற்குத் தேர்மீதமர்ந்தவனாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றான். காட்டுவழியாக வரும்போது, அவன் தன் பாகனுக்குச் சொலுவதுபோல அமைந்த செய்யுள் இது.]

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டுஅமர் நடையர் மென்மெல வருக!
தீண்டா வைமுள் தீண்டிநாம் செலற்கு
ஏமதி வலவ, தேரே! உதுக்காண் 5
உருக்குறு நறுநெய் பால்விதிர்ந் தன்ன
அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல்பொறிக்
காமறு தகைய கான வாரணம்
பெயல்நீர் போகிய வியல்நெடும் புறவிற்
புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி 10
நாள் இரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!

வலவனே! நம் படைமறவர், நம்மொடும் விரைவாக மிகுதியும் நடந்து வருதலினாலே பெரிதும் வருத்தமுற்றனர். அவர்கள், தம் அரைக்கண் செறித்துள்ள கச்சையின் கட்டை அவிழ்த்து, இடையிடையே தங்கி இளைப்பாறிக்கொண்டு, மெல்ல மெல்லத் தத்தம் விருப்பம் போன்று நடந்தவராக வருவாராக! உருக்குதல் பொருந்திய நறுமணமிக்க நெய்யிடத்தே, பாலைச் சிதறித் தெளித்தாற்போலத் தோன்றும் அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளைக் கொண்டதும், கடைகின்ற குரலை எழுப்புவதுமான மிடற்றையுடையது. காண்பார்க்கு விருப்பந் தருவதான காட்டுக்கோழியின் சேவல். அது, பெயலால் வீழ்ந்த மழை நீரானது போகிய அகன்ற நெடிய காட்டினிடத்தே, புலராத ஈரமணலை நன்றாகப் பறிக்கின்றது. நாட்காலையிலே தனக்குரிய இரையான நாங்கூழைக் கவர்தலும், அதனைக் கொன்று தன் பேடைக்கு ஊட்டுதற்கு நினைந்ததாய், அதனை நோக்குகின்றது. அந்தப் பெருமைத்தகுதி விளங்குகின்ற அதன் நிலையினை அதோ பாராய்! ஆகலின், நாமும் விரைந்து நம் காதலிபாற் செல்லுவதற்கு வாய்ப்பாக, இதுகாறும் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளினாலே குதிரைகளைத் தீண்டித், தேரினை நீயும் விரையச் செலுத்துவாயாக!

கருத்து : 'தலைவியை விரையச் சென்று அடைதற்குத் தேரினை இன்னமும் விரையச் செலுத்துக' என்றதாம்.

சொற்பொருள் : பரி – செலவு. வீங்குசெலல் – மிக்க செலவு; நெடுந்தொலைவு கடந்த செலவு. அரிக்குரல் – கடைதற்குரல். விதிர்த்தல் – தெளித்தல்; சிதறல். மலிர – நன்றாக விளங்க. கெண்டி – பறித்து. தகுநிலை – தகை கொண்ட நிலை

விளக்கம் : 'ஏமதி வலவ தேரே என்றமையின், தலைவன், படைத்தலைமை பூண்டோனாகி, வேந்து வினைமேற் சென்ற தகுதியுடையான் என்பது காணப்படும். ‘பெயனீர் போகிய புறவு' என்றது, கார்ப்பருவத்தின் வரவினைக் கண்டு கூறியதாகும். 'தீண்டா வை முள்' என்றது, 'தீண்டாது தானே விரையச் செல்லும் இயல்பினவான குதிரைகள் அவை' என்றற்காம்.

'வேண்டமர் நடையர் மென்மெல வருக' என்பதனுள், 'விரும்பியவண்ணம் அமர்ந்த நடையினராய்' என வருவதைக் கவனிக்கவேண்டும். அவருள்ளும் விரைந்து சென்று தம் தலைவியரை இன்புறுத்தலை நாடுவார் இருந்தனரெனின் அன்னார் தம் விருப்பம்போலவே விரைந்து செலவைத் தொடர்க; அங்ஙனம் நாடாதார், தாம் விரும்பும் வண்ணம் மென்மெல நடந்தனராய் வருக" என்கின்றதாகவே கொள்க. இது தலைவனின் பெருந்தகைமையினைக் காட்டுவதுமாகும்.

உள்ளுறை : 'கானவாரணம், நாளிரை கவர மாட்டித்தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே உதுக்காண்' என்றனன். அவ்வாறே, தானும் தன் தலைவியை அடைந்து அவளுக்குத் தலையளிசெய்து இன்புறுத்தலை விரும்பிய காதல் தன்மையை இது அறிவுறுத்தியதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/021&oldid=1731331" இலிருந்து மீள்விக்கப்பட்டது