நற்றிணை 1/043
43. உவகையும் அழிவும்!
- பாடியவர் : எயினந்தையார்.
- திணை : பாலை.
- துறை : பிரிவுணர்த்தப்பட்ட தோழி, தலைவனைச் செலவழுங்கு வித்தது.
[(து–வி.) தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுதலைத் தன்பாற் கூறக்கேட்ட தோழி, அதனால் தலைவிக்கு வந்துறும் பேரழிவைக் காட்டி, அவன் போக்கைத் தடுப்பது இது.]
துகில்விரித் தன்ன வெயில்அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்பசிச் நெந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்தன மிச்சில் சேய்நாட்டு
அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே
அஞ்சல் என்ற இறைகை விட்டெனப்
பைங்கண் யானை வேந்துபுறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
10
ஓர்எயின் மன்னன் போல,
அழிவுவந் தன்றால், ஒழிதல் கேட்டே.
வெயிலின் மிகுதி விளங்கிய வெப்பத்தையுடைய மலைப்பக்கமானது. வெண்துகிலினை விரித்து மூடியிருந்தாற்போலத் தோற்றும், கோடைநீடிய. அத்தகைய குன்றத்தின் பக்கத்தே. பசியினாலே தளர்ந்துபோன செந்நாயானது, கோடைக்காற்றாது வாடியிருந்த மரையாவைக் கொன்று தின்று, தன் பசி தீர்ந்தது. அங்ஙனம் தின்றபின் எஞ்சிக்கிடந்த மிச்சம், நெடுந்தொலைவிடத்து நாட்டினைக் குறித்தவராக, கடத்தற்கரிய அச் சுரநெறியிலே செல்லும் பயணிகளுக்கு உணவாகப்பயன்படும். அத்தகைய வெம்மைமிக்க வழிலனைக் கடந்து பொருள்தேடச் செல்லுதல் என்பது, நமக்கு மேனிதிளைக்கும் உவகையினை உடைத்தாகின்றது! இவட்கோ, நீவிர் விட்டுப் பிரிதலினாலே, 'அஞ்சேல்' என்று அபயமளித்துக் காத்த இறைவன் கைவிட்டுச் சென்றானாக, அவ்வேளையிற் பசுங்கண்களையுடைய யானைப் படைகளையுடையானான பெருவேந்தன் ஒருவன் எதிற்புறத்தே வந்து பாடியிட்டுத் தங்குதலும், தன் அழிவினைப் போக்குவாரைக் காணாதே கலங்கியவனான, உடைந்து கொண்டு போகும் ஒரே மதிலையுடைய சிற்றரசனைப்போல, அழிவும் வாரா நின்றது!
கருத்து: 'இவளைப் பிரிந்தால் இவள் அழிவாள் என்பதாம்.
சொற்பொருள் : உருப்பு – வெப்பம். என்றூழ் – கோடை. கவா அன் – பக்கமலை. ஓய்பசி – ஒய்ந்த பசியுமாம்; பலநாட் பசிக்கு உணவில்லாத நிலை. வல்சி – உணவு.
விளக்கம் : 'ஓரெயில்' தலைவியின் உடல்; அஞ்சலென்ற இறை' தெளிவித்துக் கூடியிருந்த தலைவன், 'அவன் நீங்கியதும் பகையரசன் கோட்டையை முற்றுகையிட்டு உடைத்தல்', தலைவன் அகன்றதும் பசலைநோய் தலைவியது மேனியழகைச் சிதைத்தல்; 'அதனாற் களையுநர்க் காணாது கலங்கிய மன்னனின் நிலை' தலைவியது உயிரின் நிலை; இவ்வாறு பொருத்திப் பொருள்கண்டு கொள்க.'ஓரெயில் மன்னன்' அதனைக் கைவிட்டகன்று வேறு சென்று வாழ்தற்கும் போக்கற்ற நிலையினன் ஆகின்றான். அவ்வாறே, இவ்வுடலைப் பசலைக்கு இரையாக தலைவியின் உயிரும், வேறு புகலிடம் காணாதே சென்றொழியும் என்கின்றனள்.
இறைச்சி : 'செந்நாய் தின்று கழித்த மரையாவின் ஊன் வழிச்செல்வார்க்கு உணவாகு மென்றதனாலே, நீ நுகர்ந்து கைவிட்டகன்ற இவளது மேனியின் எழிலினைப் பசலைநோய் பற்றி யுண்ணும் என்பதாம்.