நற்றிணை 1/045
45. நும்மொடு பொறுந்தாது!
- பாடியவர் : ......
- திணை : நெய்தல்.
- துறை : குறை... வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது.
[(து–வி.) தோழி மூலம் தலைவியை அடைவதற்கு முயன்றான் ஒரு தலைவன். அவனுக்கு இசைதற்கு விரும்பாத தோழி, இவ்வாறு கூறியவளாக, அவனைப் பெரிதும் விலகிப் போகச் சொல்லுகின்றாள்.]
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;
5
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ?
புலவு நாறுதும் செலநின் றீமோ!
பெருநீர் விளையுள்ளம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
10
எம்ம னோரில் செம்மலும் உடைத்தே!
ஐயனே! நீ அடைதற்கு நினையும் இவள்தான், கானற்சோலையிடத்துப் பொருந்திய அழகிய சிறு குடியினைச் சேர்ந்தவள்; நீலநிறப் பெருங்கடலும் கலங்குமாறு, அதனுட் புகுந்து சென்று மீன்களைப் பிடித்துவரும் பரதவருடைய மகள்! நீயோ வென்றால், நெடிய கொடியானது அசைந்தாடிக் கொண்டிருக்கும், 'நியமம்' என்னும் மூதூரிடத்தே இருக்கின்ற, கடிய செலவினைக் கொண்ட தேர்ப்படைகளை உடையவனான மன்னனது, அன்பிற்குரிய மகனாக இருக்கின்றனை! நிணத்தினை உடைய சுறாமீனை அறுத்திட்ட தசைகளைக் காயவைத்தலை வேண்டினமாக, அவற்றைக் கவர வரும் புள்ளினங்களை ஒட்டியவராக யாமும் உள்ளேம். எமக்கு நலன் என்பது யாதாகுமோ? யாம் புலவு நாற்றத்தை உடையேம்! அதனால், அகன்று நின்றே சொல்வதனைச் சொல்வாயாக! பெரு நீரான கடலையே விளைவயலாகக் கொண்டு வாழும் எமது சிறிதான நல்வாழ்க்கை, நும்மோடும் ஒப்பாக விளங்குவதும் அன்று. மேலும், எங்கள் பரதவர் குலத்தினருள்ளேயே, இவளை மணக்கத் தகுந்த தலைமைப் பாட்டினரையும் யாம் உடையராயிருக்கின்றேம்
கருத்து : எமக்கு ஏற்றவன் நீயன்றாதலின், எம் பக்கலில் வராதே அகன்று போக' என்பதாம்.
சொற்பொருள் : கானல் – கடற்கானல். காமர் – அழகு. 'நியமம்'– ஓர் ஊர். செம்மல் – தலைமை.
விளக்கம் : நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் என்றது, கோசர்க்கு உரியதான பேரூர்: இந்நாளிலே, இவ்வூர் 'நெகமம்' என்று விளங்குவது. அகநானூற்றுத் தொண்ணூறாவது செய்யுளைச் செய்த மருதனிள நாகனார், 'அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணாஅது, பெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர், இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர், கருங்கட் கோசர் நியமம்' என்று இவ்வூரைக் குறிப்பர். 'கடல் கலங்க உள்புக்கு மீனெறி பரதவர் எம்மவராதலின், நின்னைக் காணின் நினக்குப் பெரிதும் ஏதமாகும்; ஆதலின் அகன்று போக' என்கின்றாள். 'உணக்கல் வேண்டிப் புள் ஓப்புவோம்' என்றது எம்மை நெருங்கின் நின்னையும் அங்ஙனமே அகன்று செல்லப் போக்குவேம் என்பதாம். 'புலவு நாறுதும்' என்றது, அவனுடைய நறுஞ்சாந்தணிந்த மார்பைக் கண்டு அவன் தமக்குப் பொருந்தாமை கூறி விலக்கியதாம். 'எம்மனோரின் செம்மலும் உடைத்தே' என்றது, இவளை மணத்தற்கு உரியான் உறவிலேயே உள்ளனன்' எனக் கூறிப் போக்கியதாம்.இனி, இவையெல்லாம், தலைவனை வெறுத்தொதுக்கற் பொருட்டுப் புனைந்து கூறும் சொற்களாகவும் கொள்ளதற்கு உரியன. நியமம் கடற்கரைக் கண்ணதாகலின், அவனும் அவட்கு இசைவான் என்பதை நோக்க, இவ்வாறு கருதுதலும் பொருந்தும்.
மேற்கோள் : தலைவனது பெருமை காரணமாக, அவன் தனக்குப் பொருந்திய தலைவனாக மாட்டான் எனத் தலைவி அவனது விருப்பத்தை மறுத்து, அவனைப் போக்குதற்கண் கூறுவதாக இச்செய்யுளை இளம் பூரணனார் காட்டுவர் (தொல். பொருள்.சூ. 109 உரை), அவ்விடத்து, இது தலைவி கூற்றாகவே கொள்ளப்பட்டது.
'அருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக்குறிப்பால் தலைமையாகக் கூறினாள்' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். சூ. 22 உரை). இரவு வலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி, 'தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத்தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றுதல்' எனக் கூறி இச் செய்யுளைக் காட்டித், 'தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி, அன்பின்மை ஒருதலையாக உடையவள் அல்லள்' எனவும் நச்சினார்கினியர் கூறுவர் (தொல். பொருள். 144. உரை).