உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/050

விக்கிமூலம் இலிருந்து

50. பெருமையும் சிறுமையும்?

பாடியவர் : மருதம் பாடிய இளங்கடுங்கோ.
திணை : மருதம்.
துறை : தோழி பாணற்கு வாயில் மறுத்தது.

[(து–வி.) பரத்தை காரணமாகத் தலைவியைப் பிரிந்து சென்று சின்னாளிருந்த தலைவன், மீண்டும் தலைவியை நாடியவனாகப் பாணனைத் தூது விடுக்கின்றான். அப் பாணனிடம், 'தலைவி தலைவனை ஏற்பதற்கு விரும்பாள்' எனத் தோழி வரவு மறுத்துக் கூறுகின்றாள்.]

அறியா மையின், அன்னை! அஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவுஅயர் துணங்கை தழூஉகம் செல்ல.
நெடுநிமிர் தெருவில் கைபுகு கொடுமிடை,
நொதும லாளன் கதுமெனத் தாக்கலின், 5
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று'என,
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர்,
'நாண்இலை, எலுவ!' என்றுவந் திசினே—
செறுநரும் விழையும் செம்மலோன் என,
நறுநுதல் அரிவை; போற்றேன்,
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே 10

அன்னையோ! குழையணிந்தோனாகவும், கோதை சூடியோனாகவும். குறிய பலவாய வளைகளை அணிந்தோனாகவும், பெண்மைக் கோலத்தைப் பூண்டு ஒருவன் சேரிப் பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடியிருந்தான். அக்களத்திடத்தே யானும் கூத்துக் காண்பாளாக ஒரு நாட் சென்றேன். அவனை அங்குக் கண்டதும் அஞ்சியவளாக அவ்விடத்தை விட்டு அகன்றேன். நெடிதாக நிமிர்ந்த தெரு முனையிலே, எதிர்ப்பட்டு வருவார் ஒருவர் கையிடத்தே ஒருவர் புகுந்து மோதிக்கொள்ளும் வளைவினிடத்தே, அயலானாகிய அவனும் கதுமென வந்தானாக, என்னோடும் மோதிக் கொண்டனன். 'இங்ஙனம் வந்து மோதிய நின்னைக் கேட்பாரும் உளரோ இல்லையோ? அதனை அறிந்துகொள்' என்று, யான் சினந்தேன். அவனோ, 'நின் பசலையும் புத்தழகினை உடையது' என்றான். அதற்கு எதிருரையாக 'எலுவ! நீ நாணம் உடையால் அல்லை' என்று கூறினவளாக. அவனிடமிருந்து விடுபட்டு வந்துவிட்டேன். அவனைப் பகைத்தோரும்; அவனையடைதலை விரும்புகின்ற தலைமையாளன் அவன் என்று கொண்டு, நறிய நெற்றியினையுடைய அரிவையே! யான் அவனைப் போற்றினேன் அல்லேன். சிறுமையானது தன்பாற் பெருமை வந்து திடுமெனச் சேர்ந்த காலத்தும், அதளைத் தனக்குச் சிறப்பென ஆராய்ந்து அறியாதல்லவோ? அவ்வாறே, என் அறியாமையினாலேதான் யானும் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்தேன்!

கருத்து : 'தலைவன் எத்தகைய மகளிரையும் காமுற்றுப் பின்தொடரும் வெறியன். அதனால், 'அவன் தலைவியிடத்தே உண்மையன்பினாலே வந்தானல்லன்'; என்பதாம்.

சொற்பொருள் : துணங்கை – மகளிர் கைகோத்துத் துணங்கை கொட்டியாடும் களியாட்டம். நொதுமலாளன் – அயலான். கதுமென – விரைய. தாக்கல் – வந்து மோதுதல்.

விளக்கம் : 'அறியாமையின்' என்றது, தலைவன் துணங்கை அயரும் களத்திலே பெண்வேடத்தோடு ஆடியிருந்தான் என்பதை அறியாத தன்மையை. ‘அஞ்சி' என்றது, அவனை அங்குக் கண்டதும், அஞ்சியகன்ற தனது நிலையை. அதனை உணராத அவன், தன்னை விரும்பிக் குறிப்புக் காட்டிப் போவதாக நினைத்து, வேறுவழியாக முற்படவந்து, வளைவிடத்தே, எதிர்பாராது அவள் கைப் புகுந்து அவளை அணைத்தனன். அது குறித்தே அவள் அரற்றுகிறாள். அவனே, அதனை அஞ்சுங்குரல் எனக் குறித்தானாக 'யாணது பசலை' எனக் கூறியவனாக, அவள் தோள்களை ஆராயப் புகுகின்றான். அதன்மேற் பொறுத்தல் கூடாத நிலையில், 'நாணிலை எலுவ' எனக் கூறி அவள் விடுபட்டு ஓடுகின்றாள். இது, தலைவன், புதியளான பரத்தை ஒருத்தியைத் தன்பாற் கொண்டதனையும், அவளைக் கூட்டுவித்தவன் அப் பாண்மகனே என்பதனையும் அறிந்த தோழி, தன்மேலிட்டு அவன் நாணுமாறு புனைந்து கூறியதாம். தலைவி, தன் பெருங் சுற்புத்திறத்தால், தலைவனைப் பழித்தமை செய்த தோழியைச் சினந்துகொள்வாளாகவே, 'போற்றேன், சிறுமை பெருமையின் காணாது துணிந்தே' என்கின்றாள். இவற்றால், தலைலியின் கற்பு மேம்பாட்டை உரைத்துத் தலைவி என்றும் தலைவனை மறவாதவள் என்பதனை வலியுறுத்தினளாம். 'பாணனிடம், தோழி தலைவிபாற் கூறுவாள்போலக் கூறும் இவற்றைக் கேட்கும் தலைவன், தான் செய்தற்கு நாணினனாகத் தலைபால் குறையிரந்து, அவளைத் தெளிவித்துக் கூடுவான்' என்பது இதன் பயன்.

மேற்கோள் : 'வரையா நாளிடை வந்தோன் முட்டிய வழிக் தலைவி கூறியற்குச் செய்யுள்' என இதனைக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ, 11 உரை) 'வரையாத நாளின்கண் மறைந்தொழுகா நின்ற தலைவன்', செவிலி முதலாயினாரை முட்டின வழி, தலைவி, அவனை அயலான் போலவும், தன்னை நாடிப் பின்வருவான் ஒருவன் போலவும், தான் அவன்பாற் செல்லா மனத்தள் போலவும் காட்டியவளாகத் தங்கள் உறவை மறைத்துக் கூறுவது இதுவென அப்போது கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/050&oldid=1731427" இலிருந்து மீள்விக்கப்பட்டது