உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/051

விக்கிமூலம் இலிருந்து

51. எதனைச் செய்வோம்?

பாடியவர் : பேராலவாயர்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆற்றது ஏதமஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி) வெறியயர் களத்திலே ஒரு பக்கமாக நின்ற தலைவி, தன்னை நாடி வந்து நின்ற தலைவன், அவ்விடத்தே வருதலால் வரும் துன்பத்திற்கு அஞ்சுகின்றாள். அதனால், மறைய நின்ற அவன் கேட்குமாறு, இவ்வாறு தோழிக்கு உரைப்பாள்போல் உரைத்து, அவனைப் போக்குகின்றாள்.]

யாங்குச் செய்வாம்கொல்—தோழி! ஓங்குகழைக் காம்புடை விடரகம் சிலம்பப் பாம்புஉடன்று ஓங்குவரை மிளிரஆட்டி; வீங்குசெலல் கடுங்குரல் ஏறொடு கனைதுளி தலைஇப் பெயல்ஆ னாதே, வானம்; பெயலொடு 5

மின்னுநிமிர்ந் தன்ன வேலன் வந்தெனப்
பின்னுவிடு முச்சி அளிப்ப ஆனாதே;
பெருந்தண் குளவி குழைத்த பாஅடி,
இருஞ்சேறு ஆடிய நுதல கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த 10
வீததர் வேங்கைய மலைகிழ வோற்கே?

தோழி! ஓங்கியுயர்ந்த தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடங்கள் எல்லாம் எதிரொலிக்குமாறும் பாம்புகள் உயர்ந்த வரையிடத்துக் கிடந்தவாய் வருத்தமுற்றுப் புரண்டு ஒளிரவும், கடிய குரலைச் செய்தன இடியேறுகள். அவற்றோடு, விரைந்த செலவையுடைய மேகங்கள் மிக்க துளிகளைச் சொரியத் தலைப்பட்டுப் பெயலும் நீங்காதே உள்ளது. அத்தகைய பெயலைக் கண்டதும், யான் அவ்வழியே நம் பொருட்டாக வரும் தலைவனுக்குத் துன்பம் உண்டாகுமோ எனக் கருதினளாக அஞ்சினேன். அதனால் வேறுபட்ட என் மேனியை நோக்கித் தெய்வம் அணங்கிற்றெனக் கருதிய அன்னையும், வெறியாடலை ஏற்படுத்தினாள். மின்னலைக் கொண்டு செய்தமைத்தாற் போன்று ஒளிறும் வேலினைக் கைக் கொண்டோனாக, வெறியாடும் வேலனும் வந்தனன். பின்னி விடுதலையுடைய கொண்டையிற் பூவைக் குலையாதே காத்தலும் இயலாதாயிற்று. பெரிதுங் குளிர்ச்சி வாய்ந்த காட்டுமல்லிகைக் கொடியினை மிதித்துச் சிதைத்த பரந்த அடிகளையுடைய கொலைவல்ல களிறானது, கரிய சேற்றிலே திளைத்தாடிய நெற்றியைக் கொண்டதாய், இளமைப் பருவத்தைக் கொண்ட ஆசினியை ஒடித்துப் போட்டபின், வேங்கைப் பூக்கள் சிதறிக்கிடக்கின்ற வேங்கை மரத்தினடியிலே சென்று தங்கா நிற்கும். அத் தன்மையுடைய மலைக்கு உரியோனாகிய நம் தலைவனுக்கு; இனி நாம் தாம் எதனைச் செய்யமாட்டுவாம்? நீதான், அதனை எனக்குக் கூறுவாயாக.

கருத்து : இனித் தலைவனோடு களவிற்கூடி இன்புறுதல் வாயாது போலும்' என்பதாம்.

சொற்பொருள் : உடன்று – வருந்தி, மிளிர ஒளி கொள்ள. வீங்கு செலல் - விரைந்த செலவு. கனைதுளி – மிக்க துளிகள். முச்சி – கொண்டை. குளவி – காட்டு மல்லிகை. ஆசினி – ஆசினிப் பலா; பேதை ஆசினி – முதிராத ஆசினி.

விளக்கம் : பெயலைக் கண்டவள். அக்காட்டூடு இரவினும் வருதலையுடையானாகிய தலைவனை நினைந்தாளாய், அவனுக்கு வரும் ஏதத்தைக் கருதித் தளர்ந்தாள். அதனால் வேறுபட்ட அவள் மேனியைக் கண்ட அன்னை, முருகு அணங்கிற்றென வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்தாள், வெறியயரும் வேலனும் வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றான். இனித் தலைவியை முன்னிறுத்தி அவள் கூந்தலிற் பூவை எடுத்துப் போட்டுப் பரவுக்கடன் தருதலும் நிகழும். இதற்கிடையே ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கும் தலைவியும் தோழியும் தலைவன் வந்து ஒருசார் ஒதுங்கி நிற்பதைக் காணுகின்றனர். தம் நிலையை உணர்த்தித் தம்மைக் கைவிடாது காக்குமாற்றான் விரைய வரைந்துவருமாறு அறிவுறுத்தவும், அந்நிலையே அவ்விடத்தை விட்டுப் போக்கவும் நினைக்கின்றனர். இந்த நினைவோடு தோழியிடத்துக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.

உள்ளுறை : பெருந்தண் குளவி குழைத்த பாவடிக் கொல்களிறு தலைவியைக் களவிற்கூடிப் பிரிந்து அவளது நலத்தைச் சிதையுமாறு செய்த தலைவனாகவும், இருஞ்சேறாடிய நுதலதாக அது ஆகியது அலருரையாற் பழியேற்ற தன்மையனாக அவன் ஆகியதனையும், பேதை ஆசினியை ஒசித்தது வரைந்துவரும் முயற்சியிலே செல்லாது களவையே நாடி வந்து இன்பத்தை இழக்கச்செய்து வருத்தியதையும், வீததர் வேங்கையடியிலே நின்றது வெறியயர் களத்திலே முருகைப்போல வந்து நிற்கும் நிலையினையும் குறிப்பனவாகக் கொள்க இனி, வேங்கை பூக்கும் காலம் ஆதலின் அதுவே மணத்திற்கான காலமென்பதை இதன் மூலம் உணர்த்தினளாகவும் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/051&oldid=1731430" இலிருந்து மீள்விக்கப்பட்டது