உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/057

விக்கிமூலம் இலிருந்து

57. உள்ளம் மருளும்!

பாடியவர் : பொதும்பில் கிழார்.
திணை : குறிஞ்சி.
துறை : செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

[(து–வி.) பகற்குறியிலே வருகின்றோனா தலைவனுக்கு, இனித் தலைவி இற்செறிக்கப்படுவாள் என அறிவுறுத்தி வரைந்து கொள்ளுமாறு தூண்டுகின்றாள் தோழி.]

தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் 5
கல்லா வன்பறழ்க் கைக்நிறை பிழியும்
மாமலை நாட! மருட்கை உடைத்தே—
செங்கோல், கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்

கொய்பதம் குறுகும் காலை, எம்
மைஈர் ஓதி மாண்நலம் தொலைவே 10

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்படி ஒன்று, சிங்கம் முதலாய விலங்குகளின் கூட்டம் நிரம்பியிருந்ததான குன்றிடத்தே, ஓர் வேங்கை மரத்தடியிலே தன் கன்றோடும் தங்கியிருந்தது. அந்தப் பசு தூங்குகின்றதான தன்மையைக் கண்டு பஞ்சுபோன்ற தலையுடைய ஒரு மந்தியானது, கல்லென்று ஒலித்தபடியிருந்த தன் சுற்றத்தைக் கையமர்த்திவிட்டு, அந்தப் பசுவிடத்தே நெருங்கச் சென்றது. பால் நிரம்பிப் பருத்திருந்த அப் பசுவினது மடிக்காம்பினை அழுந்தும்படி பற்றி இழுத்து, இனிதான அந்தப் பாலினைத் தன் குலத்தொழிலையும் கற்றறியாத வலிய தன் குட்டியின் கைந்நிறையப் பிழிந்து தந்தது. அத்தன்மையுடைய பெரிய நாட்டைச் சார்ந்தவனே! சிவந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினைப் பயிரையுடைய அகன்ற புனமானது, கதிர்கொய்யும் பருவத்தை நெருங்கும் காலத்தே, எம்முடைய கரிய ஈரிய கூந்தலை உடையவளின் மாட்சிமைப்பட்ட நலமானது கெட்டொழிவது உறுதியாகும். அதனை எண்ணியபோது, என் நெஞ்சமும் மருட்சியுடையதாய் ஆகின்றதே!

கருத்து : 'அவள் இற்செறிக்கப்படுவாள்? அவள் நலமும் தொலைந்துபோம்; ஆகவே, அவளை வரைந்து மணந்து கொள்ளற்கு முனைவாயாக' என்பதாம்.

சொற்பொருள் : தடங்கோடு – வளைந்த கொம்பு. ஆமான் – காட்டுப் பசு, மடங்கல் – சிங்கம்; கூற்று. துஞ்சுபதம் தூங்கும் செவ்வி. துய் – பஞ்சு. ஞெமுங்க – அழுந்த.

விளக்கம் : 'கொடுங்குரல்' என்றது, தினைக் கதிர் முற்றியமை கூறியதாம். அதனாற் பகற்குறியும் வாயாது என்பதாம். 'கொய்பதம்' என்றது, தினைக் கதிர்களைக் கொய்து கொள்ளும் பருவத்தினை. 'அது நெருங்கத் தலைவி நலனழிதல்' அவள் இல்லிடத்தளாகித் தலைவனை பிரிந்து மெலிதலால் உண்டாவதாம்.

உள்ளுறை : 'துஞ்சு பதம் பெற்ற மந்தியானது; ஆமானின் பாவைக் கறந்து தன் குட்டிக்கு ஊட்டும் நாட' என்றது. தலைவியும் அவ்வாறே புதல்வனைப் பெற்று வாழும் இல்லற வாழ்வினை விரும்புகின்றனள்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/057&oldid=1731446" இலிருந்து மீள்விக்கப்பட்டது