நற்றிணை 1/059
59. இனி வருந்தும்!
- பாடியவர் : கபிலர்.
- திணை: முல்லை.
- துறை : வினைமுற்றி மீள்வாள் தேர்ப்பாகற்கு உரைத்தது
[(து–வி.) சென்ற வினையை முடித்துவிட்டு மீண்டு வருவானாகிய தலைவன்: தேரினை விரையச் செலுத்துமாறு தன் பாகற்குச் கூறியது இது.]
உடும்பு கொலீஇ வரிநுணல் அகழ்ந்து
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லுமுயல் எறிந்த வேட்டுவன், சுவல
பல்வேறு பண்டத் தொடைமறந்து, இல்லத்து
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும்;
5
வன்புலக் காட்டுநாட் டதுவே அன்புகலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண்முகை அவிழ்ந்த புறவின்
பொறைதலை மணந்தன்று; உயவுமார் இனியே.
10
உடும்பினைக் கொன்று எடுத்துக்கொண்டும், மண்ணை அகழ்ந்து வரிகளையுடைய தவளைகளைப் பிடித்துக் கொண்டும். நெடிய உச்சிகளையுடைய புற்றுக்களிலே தோண்டி அங்குள்ள ஈயலை வாரிக் கொண்டும், முயலினைக் கொன்று அதனைத் தூக்கிக்கொண்டும், தோள் மேலாகப் பல்வேறான இப்பண்டங்களைக் கொண்ட மூட்டையோடு, வேட்டுவன் ஒருவன் தன் வீடு சேர்வான். இல்லத்தில் இரவுப்போதிலே, அந்த மூட்டையை அறவே மறந்தவனாக, மிகுதியாகக் கள்ளைப் பருதியவனுமாக, அதன் இனிய கணிப்பிலேயே அவன் செருக்கியும் கிடப்பான். அத்தகைய வன்புலமாகிய –காட்டு நாட்டிடத்ததாக உள்ளது. அன்பு கலந்து நம்மிடத்தே விருப்புற்ற கோட்பாட்டினோடு, நெஞ்சத்து நம்மையே நினைந்தாளாயிருக்கும் தலைவியானவள் இருக்கின்ற ஊர். முல்லையின் நுண்ணிய அரும்புகள் பிணிப்பவிழ்ந்து மலர்ந்த புறவினிடத்ததாகிய அந்த ஊரிலிருந்தாளானாலும் அவளுள்ளம் பொறுத்தலையே மேற்கொண்டதாய் இருக்கும். இன்று மாலைக்குள் நாம் 'செல்லாவிடிலோ, அது தான் பெரிதும் வருந்தா நிற்குமே! கருத்து : 'ஆதலின் தேரினை விரையச் செலுத்துக' என்பதாம்.
சொற்பொருள் : கொலீஇ – கொன்று. நுணல் – தவளை. தொடை – தொடுத்த மூட்டை. இருமடைக்கள் – பெரிய மடுத்துச் செய்யப் பெற்ற கள். கொள்கை – கோட்பாடு. பொறை பொறுத்துப் பிரிவாற்றியிருக்கும் தன்மை.
விளக்கம் : பொறை தலைமணந்தன்று: உயவுமார் இனியே' என்றது, தான் மீள்வதாகக் குறித்து வந்த நாளெல்லை அற்றைப் பொழுதோடும் கழிந்து போவதனைக் கருதிக் கூறியதாம். அதனால், அதுவரை பிரிவைப் பொறுத்திருக்குமவள், அவ்வெல்லை கழியின் அவன் பொய்த்தனன் எனக் கருதித் துன்புறுவாள்' என்றான். பகற்போதில் காடெல்லாம் சுற்றியலைந்து வேட்டமாடிவரும் வேட்டுவன், மாலையிலே வீடு திரும்பியதும், அந்த முட்டையை மனைவியின் பொறுப்பிலே விட்டுவிட்டுத் தான் கள்ளயர்ந்து செருக்கிக் கிடக்கின்றான். 'அத்தகைய காட்டு நாட்டது'. எனவே, தானும் கொணர்வன அனைத்தையும் தலைவியின் பொறுப்பிலே விட்டுவிட்டுக் களிப்பிலே திளைத்துக் கவலையின்றி வாழ்வான் என்பதாம். முல்லை நுண்முகை அவிழ்தல் காரின் தொடக்கத்தே ஆதலின்' அதுகண்டும். குறித்தபடி வருவேமென்ற நம்பிக்கையால் நம் வரவை எதிர்பார்த்துப் பொறுத் திருப்பாள்" என அவளது கற்புத் திண்மையையும் கூறுகின்றான்.
மேற்கோள் : முல்லைக்கு உரிய ஒழுக்கம் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆம். அவள் பெரிதும் இரங்குவாளாயிருப்பாள் எனக் கூறாதே, 'வன்புலக் காட்டு நாட்டதுவே' என நிலத்தை உரைப்பதன் மூலம் ஒழுக்கத்தையும் பெற வைத்தனர் (தொல். பொருள், சூ 5. நச். உரை)
பிறபாடம் : உடும்பு கொரீஇ உடுப்பைக் குத்திப்பிடித்து.