நற்றிணை 1/073
73. பசலையும்! அம்பலும்!
- பாடியவர் : மூலங்கீரனார்.
- திணை : பாலை.
- துறை : செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.
வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீ இய
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம்இவண் ஒழியச்
5
செல்ப என்ப தாமே—செவ்வரி
மயிர்நிரைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்னஎன்
நுதற்கவின் அழிக்கும் பசலையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.
10
முருக்க மரத்தினிடத்தெ காய்ந்து முற்றிய நெற்றுக்கள் வேனிற்காலத்தே தோன்றும் தோற்றத்தைக் கொண்ட மாண்பற்ற விரல்களையுடையது, வலிய வாயினை உடையதான பேய் ஆகும். அதுதான், வளமுடைய பழைய ஊரினிடத்தே தனக்கிடப்பெறும் மலர்ப்பலியினை உண்ணும் பொருட்டாகத் தனக்குரிய மன்றிடத்தே, அந்த மன்றத்தையும் மோதியபடியாக எழுந்து தோன்றும். அத்தகைய புன்கண்மை கொண்ட மாலைக்காலம் இது. தம்மோடு கூடியிருப்பினும் பிரிவை நினைந்தேமாய் அச்சங்கொள்ளும் நாம் இவ்விடத்தாகக் கழிந்துகிடக்க, அவர்தாம் நம்மைக் கைவிட்டுச் செல்கிற்பர் என்கின்றனர். செந்நிறங் கொண்டமென்மயிரை வரிசைப்படுத்தி வைத்தாற்போன்ற நெடியதண்டினையுடைய வளைந்த நெற்கதிர்கள் விளங்கும் செந்நெற்பயிரைக் கொண்ட அழகான வயலினிடத்தே அன்னப் புள்ளானது உறக்கங்கொண்டிருக்கும். மலர் வகைகள் நிரம்பிய தோட்டக்கால்கள் சூழ்ந்த பேரூர் 'திருச்சாய்க்காடு' ஆகும். அதனைப் போன்ற என் நுதலது அழகினை அழியச் செய்யும் பசலை நோயினையும், அதனைக்கண்டு நம்மைப் பழிதூற்றும் அயலிலாட்டியரது பழிச்சொற்சுளையும் நமக்குக் கைம்மாறாக அளித்தவராக, அவர்தாம் செல்கிற்பர் என்கின்றனரே! இனி, யான் யாதாவேனோ?
கருத்து : 'அவர் பிரியின், யான் அழிவேன்' என்பதாம்.
சொற்பொருள் : வேனில் – முதுவேனில். விளைதுணர் – விளைந்த நெற்று. மல்லல் – வளமை. மலர்ப்பலி – மலரும் பச்சூனும் கலந்து படைக்கும் பலி. மன்றம் – பேய் மன்றம். செவ்வரி மயிர் - செவ்விய மென்மயிர்; செவ்விய வரியின் மயிரும் ஆம். வார்கோல் – நெடிய தாள். 'சாய்க்காடு' – திருச்சாய்க்காடு என்னும் ஊர்.
விளக்கம் : பேய் வந்து மன்றம் பிளக்கும்படியாக ஆரவாரித்துப் பலியேற்று உண்ணும் மாலைப் போதிலே, அவரருகிருக்கவும் அஞ்சுவேன் யான்; அவரின்றேல் என்னாவேனோ என்பதாம் மாலைக் காலத்துப் பேய்க்குப் பலியூட்டு ஊட்டுதல் பண்டைய மரபாகும். 'புன்கண் மாலை என்றது, பிரிவால் நலிந்த மகளிரை மேலும் அது வருத்துதலால்.
இறைச்சிகள் : (1) பேய் மலர்ப்பலியை உண்ணுதற் பொருட்டாக மன்றத்தைப் போழும் குரலோடு ஆர்ப்பரித்து வருதலைப் போலத் தலைவியின் நலத்தை உண்ணும் பொருட்டாகப் பசலையும் ஆர்த்தெழும் என்பதாம். அதனால், பலரும் அறிய அலரும் மிகும் என்பதுமாம்.
(2) கதிரரிவாரைப் பற்றி நினையாதே செறுவிலே அன்னம் துஞ்சிக் கிடந்தாற்போல, யானும் அவர் பிரிவைப்பற்றிக் கருதாதே அவரது செஞ்சாந்து பரந்த மார்பிடத்தே துயின்று கிடந்தேன் என்பதாம்.