நற்றிணை 1/074
74. அவன் பெண்டு!
- பாடியவர் : உலோச்சனார்.
- திணை : நெய்தல்.
- துறை : தலைவி பாணற்கு வாயின் மறுத்தது.
[(து–வி) தலைவியை மறந்து பரத்தைபால் மயங்கிக்கிடந்த தலைவன், அவள் புதல்வனைப் பெற்று வாலாமை கழிந்தனளாதலைக் கேட்டதும், அவளை விரும்பியவனாகப் பாணனைத் தூது விடுக்கின்றான். அந்தப் பாணனுக்குத் தலைவி கூறுவதாக அமைந்தது இது.]
வடிக்கதிர் திரித்த வல்ஞாண் பெருவலை
இடிக்குரற் புணரிப் பௌவத்து இடுமார்
நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறைஅருங் களிற்றின் பரதவர் ஓய்யும்
சிறுவீ ஞாழற் பெருங்கடற் சேர்ப்பனை
5
'ஏதி லாளனும்' என்ப; போதுஅவிழ்
புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்குதொறும், குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும், தெண்கடல்
கண்டல் வேலிய ஊர் 'அவன்
பெண்டு'என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!
திருத்தமாக வடிக்கப்பெற்ற சுதிரினையிட்டு முறுக்கிய வலிய கயிற்றைக் கொண்ட பெருவலையினை, இடிக்குரலைப்போல ஆர்த்தெழும் அலைகளையுடைய கடலிடத்தே இடும் பொருட்டாக. தோணி நிறைந்துபோமாறு பெய்யப்பெற்ற வலையைக் கொண்ட தோணியினை, அடக்குதற்கரிய களிற்றினை அடக்கிச்செலுத்தும் பரிக்கோற்காரர் தன்மைபோலப் பரதவர் கடலினிடையே செலுத்திச் செல்வர். சிறுபூக்களையுடைய ஞாழல் மரங்களைக் கொண்ட அத்தகைய பெரிய கடற்கரை நாட்டினனாகிய நம் தலைவனை, நமக்கு அயலானாயினான் என்றும் ஊரார் கூறுவர். புதுமணற்பரப்பிலேயுள்ள கானலிடத்துப் புள்னையினது மலர்ப்போது, இதழவிழ்கின்றதனாலே அமைந்த நுண்ணிறப் பூந்தாதினை வீசுகின்ற கீழ்காற்று மோதி எடுக்குந்தொறும், குருகினனது வெள்ளிய முதுகுப்புறமானது மூடி நிறையுமாறு சொரிந்திருக்கும் தெளிந்த கடற்பரப்பிடத்தேயுள்ள, தாழை மரங்களை வேலியாகக் கொண்ட இவ் ஊரானது. அப்பரத்தையினையே அவன் கிழத்தியென அறிந்ததாயும் இருக்கின்றது. இந்தச் சொற்களை இனி மாற்றியமைத்தல் என்பது எவர்க்கும் அரிதாகும். ஆதலால் இனி அவருறவை யாமும் ஒருபோதும் விரும்பேம் என்பதாம்.
கருத்து : 'இனி அவர் அவளுடனே யாயினும் இன்புற்று வாழ்க' என்பதாம்.
சொற்பொருள் : கதிர் – வலையை முறுக்கும் கம்பி. வன்ஞாண் – வலிய நூற்கயிறு. காழோர் – பரிக்கோற்காரர்; குத்துக்கோற்காரர். சிறையருங் களிறு – அடக்கிக் கட்டுப்படுத்துதற்கரிய மதகளிறு. குருகு – நாரை. கண்டல் – தாழை. பெண்டு – இற்கிழத்தி
விளக்கம் : 'பெருவலை நிரையப் பெய்த அம்பியை ஒடக்கோவிட்டுச் செலுத்தும் பரதவரது தோற்றம், காழோர் சிறையரும் களிற்றினை அடக்கிச் செலுத்தினாற்போலும் முயற்சியது என்க. மீன் வேட்டமே கருத்தாகக் கொண்ட பரதவர், அதற்கு உதவியாகும் வலையினைத் தோணியிலிட்டபின் அந்தத் தோணியை முயற்சியுடன் செலுத்திச் செல்லுமாறுபோல, நின் தலைவனும் என்னை வயப்படுத்தக் கருதினனாய் நின்னைச் செலுத்தியவனாகத் தான் பின்னிருந்து சூழ்ச்சி செய்கின்றான் என்பதாம். கடலிடை ஓடம் மதகளிறுபோல இயக்கம் பிறழ்ந்து போகா வண்ணம், குத்துக்கோற்காரர் களிற்றை அடக்கிச் செலுத்துவதுபோலச் செவ்விதாக இயக்கிச் செலுத்தும் பரதவரைப் போல, நின் தூதுமொழி தடம் பிறழாவாறு அவனும் சிறைப்புறமாக நிற்பதனை யானும் அறிந்தேன்" என்பதுமாம். ஏதிலான் – அயலான்.
உள்ளுறை : பரதவர் தலைவனுக்கும், வலைசுமந்த தோணி பரத்தையரை வசப்படுத்தித்தரும் ஆற்றல்மிக்க பாணனுக்கும், வலைப்படும் மீன்கள் அவன் பேச்சால் மயங்கித் தலைவன் வலையிற் சிக்கித் துயருற்று நலியும் பரத்தையருக்கும் கொள்க. 'எம்மையும் அவ்வாறு அகப்படுத்தக் கருதினையோ?' என்று கூறி மறுத்ததாம்.
இறைச்சி :' புன்னையின் பூந்தாதுகளைக் காற்றெடுத்துத் தூற்றி வெண்குருகின் புறத்தை வேற்று நிறமாக மாற்றி மயக்கியதுபோலப், பொருளினை வாரியிறைத்துத் தலைவன் தலையளி செய்ததன் காரணத்தாலே, புல்லியளான பரத்தையும் அவனது மனைவியேபோலத் தோற்றிப் பிறரை மயங்கச் செய்கின்றாள் என்பதாம். 'பிரிவால் பசலை மூடி மறைக்கப்பட்ட உடலினமாகிய எம்மை, அவன் ஏதிலாட்டியெனப் பிறழ நினைந்தான் போலும்' என்றதும் ஆம்.
ஒப்பு : 'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள் : இனி, எம்போல் ஒருத்தி நலன் நயந்து என்றும், வருஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன், ஒல்லென ஒலிக்குந் தேரொடு, முல்லை வேலி நல்லூரானே' எனக் கண்ணகி கூறியதாக வரும் பரணர் பாட்டையும் இதனோடு ஒப்பிட்டு இன்புறுக (புறம். 144.).