உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/082

விக்கிமூலம் இலிருந்து

82. வருத்தம் அறிகின்றாயோ?

பாடியவர் : அம்மள்ளனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தோழியிற் புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.

[(து–வி) தோழியின் உதவியோடு தலைவியைக் களவிற் கூடிய தலைவன், தன்னுடைய மனநிலை தலைவிக்குத் தோன்றுமாறு, அவள் நலத்தைப் பாராட்டி உரைத்தது இதுவாகும்.]

நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே,
என்உயவு அறிதியோ, நல்நடைக் கொடிச்சி!
முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போலநின்
உருவுகண் எறிப்ப நோக்கல்ஆற் றலெனே— 5
போகிய நாகப் போக்குஅருங் கவலை
சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறுஆடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள்வசிப் படீஇயர், மொய்த்த வள்புஅழீஅக்
கோள்நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடி யானே. 10

யான் கொண்டிருக்கும் இந்தக் காமநோயும், அதனால் என்பால் வந்துற்ற உடலின் தளர்ச்சியும். என்னைவிட்டு முற்றவும் அகலுமாறு என்னைத் தழுவிக்கிடந்த, மூங்கிலின் வனப்பினை அடைந்திருக்கின்ற தோள்களை உடையவளே! நல்லதாகிய நடைப்பாங்கினை உடையானான குறவர் மகளே! வானில் உயரப்போகிய நாகமரங்களை உடையது, கடத்தற்கரியதான கவறுபட்ட காட்டுவழி. அதனிடத்தே. சிறுத்த கண்களைக் கொண்ட பன்றியது பெருஞ்சினத்தையுடைய ஆணானது சேற்றிடத்தே புரண்டதனால் தன்னுடைய கரிய முதுகுப்புறம் புழுதியோடு விளங்கச் சென்று கானவர் கண்ணியிட்டுள்ள வெறும் பிளப்பிடைச் சென்று விழுந்துபட்டது. அங்ஙனம் படுதலும், வேட்டை நாய்கள் அதன்பாற் சென்று மொய்த்தவாய், வாரை அழித்து அதனைப் பற்றிக் கொன்றுகொண்டன. கானவர் சென்று அந் நாய்களை விலக்கிப் பன்றியைத் தாம் எடுத்துக்கொண்டு சென்றனர். அத்தகைய சிறுகுடியிருப்பினது நின் ஊராகும். அதனிடத்தே, முருகனைக் கூடியபின் செல்லுகின்ற வள்ளி நாயகியைப்போல நின் உருவம் கண்ணைப் பறிக்கும் பேரொளியுடன் விளங்குகின்றது. அதனால் நின்னைக்காண்பதற்கு விருப்பம் மேலெழுந்தாலும், காணும் ஆற்றலிலேனாய் நிற்கின்றேன். நீதான் என்னுடைய அந்த வருத்த மிகுதியினை அறிகின்றாயோ?

கருத்து : 'நின் மேனி வனப்பு என் கண்களையும். மழுங்கச் செய்கின்றது' என்பதாம்.

சொற்பொருள் : நோய் – காம நோய். நெகிழ்ச்சி – உடலின் தளர்ச்சி, வீட – விட்டகல. உயவு – பெருவருத்தம். கொடிச்சி – குறவர்மகள். முருகு – முருகவேள். கண் எறிப்ப – கண்ணினைத் தாக்கி மழுங்கச் செய்ய. நாகம் – நாகமரம்; நாவல்மரம். வெள்வசி – வெறும் பிளப்பு: இதனிடைப் படும் விலங்குகளின் கால்கள் இதன்கண் மாட்டிக் கொள்ளும். வள்பு – வார்; வலையின் வார். கோள் நாய் – பற்றிக் கொள்ளும் வேட்டை நாய். கொள்ளை – வேட்டைப் பொருளான பன்றித் தசை.

விளக்கம் : 'நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த தோளை' என்றான், தோள் முயக்கம் பெற்றுத்தான் உயிர் பிழைத்த களிப்பினைக் காட்டுவானாக. 'நல் நடை' என்றது, நல்லதான ஒழுக்கத்தையுமாம், அது காதலனை அடைந்து அவனது நலிவு தீர்ப்பதான களவற ஒழுக்கமும் ஆம். 'உருவு கண் எறிப்ப' என்றது, கலவியால் அவள் மேனியில் தோன்றிய புதுப்பொலிவினைப் பெரிதும் வியந்து பாராட்டியதாம். 'முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோவ' என்றது. குறவர் மகளான வள்ளி தன் காதலனான செவ்வேள் முருகைக் கூடியதும், தெய்வத் தன்மை பெற்றுத் தெய்வமேயாகிச் சிறந்தமைபோல' என்று பாராட்டியதாம்.

உள்ளுறை : சேறாடிப் புழுதிபடிந்த பன்றியேறு வலையிற் சிக்கியதும், வேட்டை நாய்கள் மொய்த்துப் பிடுங்குவதும், அவற்றை விலக்கிக் கானவர் பன்றி இறைச்சியைக் கொண்டுபோதலும் நிகழும்; அதனால் சிறுகட்பன்றியுடைய பன்றியின் துணையது துயரமும் மிகுதியாகும். அவ்வாறே, நின் ஊர் அலவற்பெண்டிர் அறியின் பழியுரை மிகுதிப்பட்டு வருத்துவதும், நின் ஐயன்மார் காணின் உயிரழிவே உண்டாவதும் கூடும்; அதுகண்டு நீயும் மிக வருந்துவாய்; ஆதலின், இப்போது யான் நின்னையகன்று போய்வருவேன் என்பதாம்

மேற்கோள் : 'பரிவுற்று நலியினும்' என்னுந் துறைக்கு நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர் – (தொல். பொருள். சூ.103. உரை). புணர்ந்து நீங்கும் தலைவன், பிரிவதற்கு ஆற்றானாய்க் கூறியதாகப் பொருள் கொள்க.

பிறபாடம் : 'என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி; 'கானவர் பெயர்கஞ் சிறு குடியானே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/082&oldid=1731508" இலிருந்து மீள்விக்கப்பட்டது