நற்றிணை 1/083
83. குழறாய் கூகையே!
- பாடியவர் : பெருந்தேவனார்.
- திணை : குறிஞ்சி
- துறை : இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
[(து–வி.) இரவுக்குறி வந்த ஒழுகுதலிலே மனஞ் செல்லுபவனாகித் தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதலில் ஈடுபடாத ஒரு தலைவனுக்கு அறிவு கொளுத்தக் கருதிய தோழி, அவன் வந்து சிறைப்புறத்தானாக இவ்வாறு கூறுகின்றனள்.]
எம்ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூர்உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை!
மைஊன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்,
5
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கைஎம் காதலர் வரல்நம்சைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே.
எம் ஊரது முன்பக்கத்தேயுள்ள உண்ணுநீர்ச் சுனையின் அருகிலே பருத்த அடியையுடையதும் கடவுள் வீற்றிருப்பதுமான முதிய மரம் நிற்கும். அம் மரத்தினிடத்தே இருப்பாயாய், எம்முடன் ஓரூரிலே தங்கியிருந்து பழகிய கூகையே! தேயாத வளைந்த வாயினையும், தெளிவான கண்பார்வையினையும். கூரிய நகங்களையும் உடையாய்! வாயாகிய பறையின் முழக்கத்தாலே பிறரை வருத்துதலைச் செய்யும் வலிமிக்காய்! ஆட்டிறைச்சியுடனே தெரிந்து தேர்ந்த நெய்யினையும் கலந்து சமைத்த வெண்சோற்றை, வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு நிறையத் தந்து நின்னைப் போற்றுவோம். அன்பிற் குறைபடாத எம் காதலர் எம்மிடத்து வருதலை விரும்பினமாய்த் துயிலிழந்து, யாம் உளஞ் சுழல வருந்தியிருக்கும் இந்த இரவுப்பொழுதிலே யாவரும் அஞ்சினராக விழித்துக்கொள்ளும்படியாக, நீதான் நின் கடுங்குரவை எடுத்துக் குழறாதிருந்தனையாய், எமக்கு உதவுவாயாக!
கருத்து : கூழை குழற, இல்லத்தார் விழிப்பர்; களவும் வெளிப்பட்டு அலராம்; அதனால் இற்செறிப்பும் நிகழலாம்' என்பதாம்.
சொற்பொருள் : வாயில் முன்பக்கம். உண்துறை – உண்ணுநீர் எடுத்தேகற்கு என அமைந்த நீர்த்துறை, தடை இய – பருத்த. கடவுள் முதுமரம் – கடவுள் ஏறியிருக்கும் முதிய மரம். வாய்ப்பறை – வாயாகிய பறை. வலிமுந்து – வலிமிக்க மை – ஆட்டுக்கிடாய். புழுக்கல் – சோறு. சூட்டு – சூட்டிறைச்சி. எஞ்சாக் கொள்கை – அன்பிற் குறையாத கோட்பாடு. அலமரல் – உள்ளஞ் சுழன்று வருந்துதல்.
விளக்கம் : 'எம்மூர் வாயில்' என்றமையால், ஊரின் முன்புறத்துள்ள பொழிலகத்து இரவுக்குறி நேர்ந்தாராக அவர் காத்திருந்தமை புலப்படும். கூகை குழற, அதனால் உறங்குவார் விழித்தெழத், தலைவியின் களவுறவு வெளிப்பட்டு அலராகும் என்பதும், அதனால் அவன் இற்செறிக்கப் படுதலுற இரவுக்குறியும் அதன்பின் வாயாதாகும் என்பதும் இதனால் உணர்த்தி, வரைவு கடாயினாள் என்று அறிக. 'உடனுறை பழகிய' என்றது, உரிமை காட்டிப் பேசுவது ஆகும். கூகைக்கு வெள்ளெலி விருப்பமான உணவாதலின், 'எலிவான் சூட்டோடு மலியப் பேணுகம்' என்கின்றனள். கூகை – பேராந்தை; இது குழறக்கேட்ட இளமகளிர் அஞ்சுவர் என்பது, 'குன்றக் கூகை குழறினும் ... அஞ்சும்' என வரும் குறுந்தொகையடியிற் கபிலர் பெருமான் கூறுமாற்றாலும் அறியப்படும். 'மன்ற மராஅத்த கூகை குழறினும், நெஞ்சழிந்து அரணம் சேரும்' என்னும் அகநானூற்றுத் தொடர்களும் (அகம் 158) இதனைக் காட்டும். முதுமரம் பொந்துடைத்தாதலின் கூகைக்கு வாழும் இருப்பிடமாயிற்று.'உண்துறைத் தடைஇய' என்பதற்கு உண்ணுநீர் முகந்து கொண்டு போதற்கென ஒதுக்கப்பட்ட நீர்த்துறையிடத்தே அதனைக் கிளைகளால் தடவியபடி வளர்ந்து படர்ந்திருக்கும் எனலும் பொருந்தும். 'கடவுள் முதுமரம் ஆதலின் அவர்கள் அடிக்கடி சென்று தம் காதல் கைகூடி வருதலை வேண்டிக் கடவுளைத் தொழுதமையும் அறியப்படும்.
மேற்கோள் : இஃது இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது என்பர். நச்சினார்க்கினியர் (பொருள். தொல். சூ. 114 உரை).
பிறபாடம் : வாயில் ஒண் துறை – முன்னிடத்து ஒள்ளிய நீர்த்துறை.