உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/175

விக்கிமூலம் இலிருந்து

175. அடுபாலும்! சுடுவானும்!!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி.) சிறைப்புறமாக நிற்கும் தலைமகன் கேட்டுத் தலைவியை வரைந்து மணந்து கொண்டாலன்றி இனி உறவுவாயாதென்று உணருமாறு, தோழி தலைவிக்குச் சொல்லுவாள் போலச் சொல்லுகின்றது இச் செய்யுள்.]

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்
கொழுமீன் கொள்ளை அழிமணல் குவைஇ
மீன்நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறுதீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை 5
தான்அறிந் தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறுசொல் நம்பிச்
சுடுவான் போல நோக்கும்,
அடுபால் அன்னவென் பசலை மெய்யே.

வளைவான படகுகளிலே ஏறிக்கொண்டு, நெடுங்கடலிடத்தே வேட்டம் மேற்கொண்டு சென்றாரான பரதவர்கள், கடலினை வருத்திப் பிடித்துக்கொணர்ந்த கொழுமையான மீன்களைக், கடற்கரையிடத்தே கிடக்கும் நெகிழ்ச்சியான மணற்பரப்பிலே கொணர்ந்து குவித்துவைப்பார்கள். மீன் நெய்யைக் கிளிஞ்சிலிலே வார்த்துச் சிறுசுடர் விளக்கினையும் ஏற்றுவார்கள். காற்று அதனை அணைத்து விடாதிருக்கக் கிளிஞ்சில்களைக் கொண்டு நாற்புறமும் அவ்விளக்கினைப் பொத்தியும் வைப்பார்கள். அதன்பின், அச் சிறுதீ விளக்கின் ஒளியருகேயே படுத்துக் கொண்டாராக உறங்குதலையும் மேற்கொள்வார்கள். அவ்விடத்தே, நறிய மலர்களையுடைய புன்னை மரமும் உயரமாக வளர்ந்திருக்கும். அத்தகைய துறைக்கு உரியவன் நம் தலைவன். அவனோடு நாம் கொண்டுள்ள இக் களவுறவினை நம் அன்னை தானே அறித்துவைத்தாளும் அல்லள். ஆனால், இரவின் நடுயாமத்தே சேரியின்கண்ணுள்ள அலவற் பெண்டிர்கள் சுட்டிச் சுட்டிக் குறிப்பாகப் பேசிக்கொண்ட சிறுமையான சொற்களைக் கேட்டு, அவற்றை உண்மையெனவும் நம்பினாள். அதனாலே கொதிக்கும் பாலைப் போன்று பசலை பரந்துள்ள என் உடலினைச், சுடுகின்ற வானத்தைப் போல மேலும் எரித்து விடுவாளாகவும் நோக்கினாள். இனி, இல்லத்தே சிறையிட்டும் வைத்து விடுவாள் போலும்?

கருத்து : அன்னை களவுறவை அறிந்தனள்: இனி, இவளை மணந்தாலான்றிப் பெறுதல் வாயாது' என்பதாம்.

சொற்பொருள் : அலைத்த – வருத்திய: கடலிலுள்ள மீன்களைப் பற்றிக் கொளலால் வருத்திய. திமில் – மீன்பிடி படகு. கொடுமை – வளைவான தன்மை. மீன்நெய் – மீன் கொழுப்பிலிருந்து இறக்கப் படுவது. சிறுசொல் – சிறுமையுடைய சொல். சுடுவான் – எரிக்கும் கதிரவன். அடுபால் – அடப்பட்டுக் கொதிக்கும் பால்; அதன்பால் தோன்றும் ஆடைபோலத் தலைவியின் மேனியிடத்தும் புள்ளி புள்ளியாகப் பசலை பற்றிப்படர்ந்தது என்க.

விளக்கம் : தலைவனை இடையிடையே பிரிந்திருக்கவும் ஆற்றாளாய்த் துயருறும் தலைவியது பேரன்பினைக் கூறுவாள், அவள் மெய்யிடத்தே 'அடுபால் அள்ள பசலை' தோன்றிற்று என்றாள்; அதனைப் பிறர் அறியாவாறு மறைக்க வியலாமையினைக் கூறுவாள், சேரியம் பெண்டிர் சிறுசொல் பேசியவராக அலர் தூற்றினமை கூறினாள். அன்னை அறிந்தமை சுடுவான்போல் நோக்கினாள் என்றதனாலே உணர்த்தப் பெற்றது.

'மீன் நெய் அட்டி' என்பது சிந்தனைக்கு உரியது. பரதவர் விளக்கு எரிப்பதற்கு மீன்நெய்யைப் பயன்படுத்திய இச் செய்தியால், இத் தொழிலை அவர் அறிந்திருந்தமையும், இந்நெய் பலவற்றுக்கும் பயன்பட்டமையும் அறியப்படுவதாம்.

உள்ளுறை : 'கடல் வேட்டைமேற் சென்ற பரதவர்தாம் ஈட்டிய மீன்களைப் பலரும் காணக் கடற்கரை மணலிடத்தே குவித்துப்போட்டுச் சிறுதீ விளக்கில் துஞ்சுவர் என்றது, அவ்வாறே தலைவனும் பெரும்பொருளை ஈட்டிக் கொணர்ந்து தலைவியின் இல்லத்து முற்றத்திடத்தே குவித்துத் தலைவியை வரைந்து மணந்து இல்லறத்திலே இணை பிரியானாய் வாழ்தல் வேண்டும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/175&oldid=1731818" இலிருந்து மீள்விக்கப்பட்டது