நற்றிணை 1/176
176. காதலள் என்னுமோ?
- பாடியவர் :
- திணை : குறிஞ்சி.
- துறை : பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
[(து–வி) தலைவியால் பூப்பறிவிக்கப் பெற்ற தலைவன், உலகியலை நோக்கிப் பரத்தை வீட்டைவிட்டுத் தன் வீட்டிற்குச் செல்லுகின்றான். தலைவிக்கு அஞ்சித் தான் தலைவனை விடுத்ததாக ஊரார் தன்னைப் பழிப்பரெனப் பரத்தை கருதுகின்றாள். அதனால், தலைவியின் பாங்கிக்கு வேண்டியவர் கேட்டுத் தலைவியிடத்தே சொல்லுமாறு, தான், தன் தோழியாகிய விறலிக்குச் சொல்லுவாள்போல இப்படிக் கூறுகின்றாள்.]
எம்நயந்து உறைவி ஆயின் யாம்நயந்து
நல்கினம் விட்டதுஎன்? நலத்தோன் அவ்வயின்
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின் தோழி!
நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப்
5
போதுபொதி உடைந்த ஒண்செங் காந்தள்
வாழையம் சிலம்பின் வம்புபடக் குவைஇ
யாழ்ஓர்த் தன்ன இன்குரல் இனவண்டு
அருவி முழவின் பாடொடு ஓராங்கு
மென்மெல் இசைக்கும் சாரல்
10
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.
தோழி! எம்மை நயந்து கொண்டவளாகத் தலைவியும் இருப்பவளாயினால் யாமும் அவளது நட்பினை விரும்பி, தலைவனை அவள்பாலும் சில நாட்கள் சென்று வருமாறுவிட்டதனாலே தவறு என்னையோ? நம்முடைய நலத்திற் கருத்தாயிருக்கும் அவனை, அவ்விடத்திற்கு நம்முடைய பெருந்தன்மையின் காரணமாக நாம் அளித்துதவியதன் உண்மையினை அறியாதாராய், ஊரார் 'அத் தலைவிக்கு அப் பரத்தைதானும் அன்பினளாயுள்ளாள்' என்றுஞ் சொல்லூவார்களோ?
வரிசைப்பட நிற்கின்ற யானையது முகத்திலே தோன்றும் செங்கோடுகளைப்போல அரும்புகள் பொதுயவிழ்ந்து மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள், வாழை மரங்களையுடைய சோலைப் பகுதியின் கண்ணே புதுமணம் உண்டாகுமாறு செறிந்திருக்கும்; யாழினை மீட்டி ஒலியெழச் செய்தாலொத்த இனிய குரலினைச் செய்பவான வண்டுக் கூட்டங்கள் அருவியினது முழவொலி போன்ற முழக்கத்தோடு ஒருசேர ஒலித்தனவாய், மெல்ல மெல்ல ஆரவாரித்தபடியிருக்கும்; அத்தகைய மலைச் சாரலிடத்தே, குன்றுகளை வேலியாகக் கொண்ட அவர்கள் இருக்கின்ற ஊரிடத்தே உள்ளவர்கள்தாம் யாது சொல்வார்களோ? அதனை எனக்கும் உரைப்பாயாக!
கருத்து : 'தலைவன் மீளவும் நம்மை நாடி வந்து விடுவான்' என்பதாம்.
சொற்பொருள் : நயந்து – அன்பு செய்து; விருப்பப்படி நடந்து. நலத்தோன் – நலத்தைக் கருதுவோன்; பொருள் நலத்தை உடையோனும் ஆம். சால்பு – பெருந்தன்மை. அளித்தல் – அருளிச் செய்தல். காதலள் – அன்புடையாள். நிரைத்த – நிரையாக நின்ற. வரி – செவ்வரி. போது –அரும்பு, செங்காந்தள் – செந்நிறக் காந்தட் பூ. வம்புபட – புதுமணல் பரவ, ஓர்த்தல் – யாழினை இசைத்தல் முழவின் பாடு – முழவின் முழக்கம். ஓராங்கு – ஒரு தன்மைப்படா குன்றவேலி – குன்றுகளே வேலியாகச் சூழ்ந்த நிலை.
விளக்கம் : பரத்தையின் தோழி 'விறலி' என்பது இயல்பான் உணரப்படுவது. பரத்தை இப்படித் தன் தோழிக்குக் கூறியதைக் கேட்ட தலைவியின் பாங்கிக்கு வேண்டியவர்கள் அதனைப் பாங்கிக்கு உரைக்க, அவளும் தலைவிக்கு உரைப்பள் என்பதாம். தன்னுடைய பெண்மைக் கவர்ச்சியிலும் இளமைச் செவ்வியிலும் பரத்தைக்கு இருந்த நம்பிக்கையின் செறிவும், தலைவனைத் தான் இழந்துவிடலும் நேருமோவென இயல்பாகவே எழுந்த அச்சமும், ஊரவர் குறை கூறுவரோ என்பதனால் உண்டாகிய உணர்வும், அவளை இப்படிக் கூறச் செய்தன என்க.
உள்ளுறை : சிலம்பிற் செங்காந்தள் மலரின் மணம் பரவுதலும், வண்டினம் ஆரவாரித்தபடி அதனை நாடிச் செறுவதனையொப்ப நம்பாலும் பூப்புண்மையை அறிவித்தபடி விறலியாகிய நீதான் பாடியும் ஆடியும் செல்வையானால், தலைவனும் தலைவியைவிட்டு நின்னுடனே இவ்விடத்திற்கு வருபவனாவான் என்பதாம். இதனால் தலைவனது காமத்தில் எளியனாக வண்டுபோல மவருக்குமலர் செல்லும் தன்மையையும் உணர்த்தினாள். தலைவனை அடைதலாலே தலைவி பெரிதும் மகிழ்ந்துவிடுதல் வேண்டா; அவன் பரத்தைமையிலே நாட்டமுடையவனாதலின் அவனோடு நெடுநாள் தங்கி இரான் என்பதுமாம்.