உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/177

விக்கிமூலம் இலிருந்து

177. நீந்தும் நாள்!

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

[(து–வி.) தலைமகன் வேந்துவினை மேற்கொண்டு செல்லற்குரிய ஏற்பாடுகளிலே ஈடுபட்டான்; அதனைக் குறிப்பால் அறிந்த தலைவி தன் தோழியிடத்தே அதனைக் கூறி இப்படிப் புலம்புகின்றாள்.]

பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப
மரந்தீ யுற்ற மகிழ்தலை அம்காட்டு
ஓதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிலின் யானே நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்பப் பலகையும் 5
நீலி சூட்டி மணிஅணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்துநொந்து
எழுதுஎழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. 10

தோழி! நம் தலைவரின்கீழ்ப் பணியாற்றும் பிறரான படைமறவர் எல்லாரும். பரந்துபட்ட பெருந்தீயானது காட்டினை அழிக்க, மரங்கள் அனைத்தும் தீ வாய்ப்பட்டுகிடக்க, மகிழ்ச்சி நீங்கும் காட்டிடத்தே செல்வார், ஒதுங்கி நிற்றற்கும் நிழலற்ற வெம்மையுடைய சுரத்தின்கண்ணே சென்றுவிட்டார்கள். இவரிடம் தோன்றும் குறிப்புக்களாலே அதனை யாதும் உண்டுகொண்டேன். இவரும், ஒழுங்குபட வேலினையும் அதன் விளக்கங்கொண்ட இலைப்பகுதியினையும் துடைப்பாராயினர்; கிடுகினையும் அதற்கு மயிற்பீலி சூட்டி மணியணிந்து அழகு செய்வார் ஆயினர்; முன்னைக் காட்டினும் மிகப் பலவாக என்பாலும் அன்புகாட்டி அருள் செய்வாராயினர். ஆதலின், இவரைப் பிரிந்து வருந்தி வருந்தி மைதீற்றிய அழகினைக் கொண்ட நம் மையுண்ணும் கண்களிடத்துப் பாவையும் மறையுமாறு, நாம் நம் நலனை அழித்தலைச் செய்கின்ற துயரவெள்ளத்திலே நீந்தி உழலுதற்குரிய நாளும் இனித்தான் வந்துறுவது போலும்? யான் எவ்வாறு அதனைப் பொறுத்து ஆற்றியிருப்பேனோ?

கருத்து : 'தலைவர் என்னைப் பிரிந்தனராயின் என் நிலைதான் யாதாகுமோ?' என்பதாம்.

சொற்பொருள் : கூர்எரி – கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு. ஒதுக்கு – ஒதுக்கிடம். நெறிப்பட – ஒழுங்குபட. எழுது எழில் – எழுதுதற்கும் அரிதான அழகும் ஆம். வந்தன்று – வந்துற்றது.

விளக்கம் : மற்றவர் சென்ற பின்னர், அவரை நடத்திச் செல்லும் தலைமைப் பொறுப்பினரான இவர் தாம் செல்லாதிரார் என்பதாம்; அஃது ஆண்மைக்கு அழகன்று ஆதலினால், 'பலகை" என்றது கேடகத்தை; இதற்கும் வேலிற்கும் களத்திற்குப் போகு முன்பு மாசுபோக்கி வழிப்பாடு செய்தல் பண்டை மரபாகும். அதனைத் தலைவன் மேற்கொண்டான்; அதுகண்ட தலைவியின் உள்ளம் துணுக்குற்றது; அவள் அவன் போர்க்களத்தை நாடிச் செல்லுதற்கு நினைந்தானெனக் கருதிக் கலங்கினான் என்று கொள்க. பண்டினும் நன்பல அளிப்பது, பிரிவை மேற்கொள்ளும் காதலர்க்கு இயல்பான தன்மையாதல் அறியப்படும். பிரிந்துறையும் மகளிர் கண்ணீர் வெள்ளத்தே அழுந்துபவராவர்; இதனை, 'இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கிநோம் என் நெஞ்சே' என வருவதனாலும் அறிக (குறு. 4) 'பலகை' என்பது கேடகம் ஆகும்; 'விளங்கு பொன் எறித்த நலங்கிளர் பலகையொடு எனப் புறநானூற்றுள்ளும் வரும் (15); பலகை அல்லது களத்து ஒழியாதே (புறம்.82) எனவும் வரும். போர்க்கருவிகட்குப் பீலி சூட்டி வழிபடுதல் பண்டைய மரபு; இதனைப் புறநானூற்று 95 ஆம் செய்யுளாலும் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/177&oldid=1731823" இலிருந்து மீள்விக்கப்பட்டது