நற்றிணை 1/191
191. வறுந்தேர் போதல்!
- பாடியவர் : உலோச்சனார்.
- திணை : நெய்தல்
- துறை : தோழி தலைமகன் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.
[(து–வி) தலைவியை வரைந்து மணந்து கொள்ளற்கு நினையாதானாய்க் களவின்பத்தையே உளங்கொண்டு வந்து போகும் தலைவனுக்குத் தலைவி இற்செறிக்கப்படுவாள் என்பதனை உணர்த்தி வரைவுக்குத் தூண்டுவாளான தோழி இவ்வாறு உரைக்கின்றாள்.]
'சிறுவீ ஞாழல் தேன்தோய் ஒள்ளிணர்
நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த
வண்டற் பாவை வனமுலை முற்றத்து
ஒண்பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி
5
எல்லிவந் தன்றோ தேர்?' எனச் சொல்லி,
அலர் எழுந் தன்றுஇவ ஊரே பலருளும்
என்நோக் கினளே அன்னை நாளை
மணிப்பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணிக்கவின் உண்மையோ அரிதே மணிக்கழி
10
நறும்பூங் கானல் வந்துஅவர்
வறுந்தேர் போதல் அதனினும் அரிதெ!
தேன் பொருந்திய ஒள்ளிய ஞாழற் பூங்கொத்துக்களின் சிறுசிறு பூக்கள், அழகிய கலன்களையுடையரான இளமகளிர் நெடிய மணலிடத்து வண்டலாட்டு அயர்ந்திருக்குமிடத்தே விளங்கும் வண்டற்பாவையின் அழகான கொங்கை முற்றத்திடத்தே படர்கின்ற ஒள்ளிய புள்ளிகளையுடைய சுணங்கினைப்போல, அழகு உண்டாகுமாறு உதிர்ந்து பரவா நிற்கும்; கண்டல் மரங்களாலாகிய வேலியை உடையதும் கண்டார்க்கு விருப்பந்தருவதுமான அத்தகைய சிறு குடியிடத்தேயே, 'நேற்றிரவு தேரொன்றும் வந்ததன்றோ' எனச் சொல்லியபடி, இவ்வூரிடத்தே பழிச்சொற்களும் எழுந்துள்ளன. அதனைக் கேட்டாளாகிய அன்னையும், கூடி நின்ற இளமகளிர் பலருள்ளும் என்னையே குறிப்பாக நோக்கினள். நாளைப் பகலில் கழியிடத்தேயுள்ள நீலமணி போலும் முள்ளியது மலரைக் கொய்யேனாயின். அழகுமிக்க என் மேனியது எழில் அழியாது உளதாயிருத்தல் அரிதாகும்; நீலமணி போலத் தோன்றும் கரிய கழிக்கரையிடத்தேயுள்ள நறிய பூக்களையுடைய கானற் சோலையிடத்தே வந்தும், நம்மை அடையாதாராய் வறிதே தேரேறி அவர் மீண்டுபோதலோ அதனைக் காட்டிலும் துன்பந் தருவதாகும்.
கருத்து : இனி வரைந்து கொண்டன்றித் தலைவியை நின்னால் அடைய வியலாது' என்பதாகும்.
சொற்பொருள் : வார் மணல் – நெடிய மணல்; ஒழுங்கு படப் பரந்து கிடக்கும் மணலும் ஆம். வண்டற் பாவை – வண்டலாட்டு அயர்தற்குச் செய்த மணற்பாவை. வனமுலை – அழகிய மார்பகம். முற்றம் – முன்பக்கம். கண்டல் – நெய்தனிலத்து மரவகையுள் ஒன்று. முண்டகம் – கடன் முள்ளி, நறும் பூங்கானல் – நறிய பூக்களையுடைய கானற்சோலை. விளக்கம் : 'பலருளும் அன்னை என் நோக்கினள்' என்றது, தோழியர் பலருள்ளும் தானே தலைவிக்கு உடனுறையும் உயிர்த்தோழியாதலால் தன்னைக் குறித்துத் தலைவியைப்பற்றி வினவுவாள்போல நோக்கினள் என்றனளாம். இதனால், தான் இடைநின்று அவர்களது களவுறவிற்கு உதவுவதற்கு இயலாமையைக் கூறித் தலைவியை வரைந்து கோடற்கு வற்புறுத்துகின்றாளும் ஆம். 'நேற்றுத் தேரொன்று வந்ததென அலரெழுந்தது' என்றமையால், 'இன்று வாரற்க' என்பதும் உணர்த்தினளாயிற்று. அவன் அதுபொழுது தேரிலன்றி நடந்தே வந்தமையும் புலனாயிற்று. 'கொய்யேன் ஆயின்' என்றது, தலைவி இற்செறிக்கப்படுவாளாதலை அறிவுறுத்தியதாம்; இது தலைவியைத் தானாகவே புனைந்து கொண்டு கூறியதும் ஆகும். 'வறுந்தேர் போதல் அரிது' என்றதனால், 'வரைந்து இவளையும் உடன் கொண்டு போதலே சிறந்தது' என்றனள்; அன்றி, 'உடன் போக்காகவேனும் கொண்டு செல்க' என்றனளுமாம். 'கானல் வந்து' என்றது, கானற்சோலையாகிய குறியிடத்தை நினைவுபடுத்தியதாம்.
உள்ளுறை : 'ஞாழலின் ஒள்ளிய பூங்கொத்து பூக்களை உதிர்த்து வண்டற் பாவையை அழகு செய்யும்' என்றது, 'எம்மாற் காக்கப்படும் தலைவிக்கு நின்னருள் புதுப்பொலிவு தரும்', என்பதாம்.
மேற்கோள் : நெய்தனிலத்து இளமகளிர் வண்டற் பாவையையும் பஞ்சாய்ப் பாவையையும் புனைந்து விளையாட்டயரும் இயல்பினராவர் 'ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டியன்ன என்னலம் தந்து' என வரும் குறுந்தொகையடிகளும் (238: 3-4); ஒண்டொடி மகளிர் வண்டலயரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை' எனவரும் குறுந்தொகையடிகளும் (243: 3-4) இதனைக் காட்டுவனவாம். ஞாழலைப் புலிநகக் கொன்றை எனவும் கொள்வர்; ஆரல் மீனின் முட்டையை உவமையாகவும் கொள்வர்; வெண் சிறுகடுகும் தினையரிசியும் உவமைகளாகக் கூறப்படுவதும் உண்டு இவற்றால் இஞ்ஞாழலென்பது நெய்தனிலத்து மரவகையுள் ஒன்றென்பது விளங்கும். 'வறுந்தேர் போதல் அரிது' என்பதற்கு, 'ஊரலர் எழுந்தது; அன்னையும் அறிந்தனள்: இனி அவன் வரின் எம்மவர் அவனைப் பற்றிக் கொடுமை செய்வர்; அதனால் அவன் தேர் வறிதே மீளலும் உண்டாகலாம்; அங்ஙனம் நேர்வது காணின் எம்முயிர் நிலைத்தல் அரிது' எனவும் பொருள் கொள்ளலாம்.