உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/192

விக்கிமூலம் இலிருந்து

192. எமக்கு ஏமம் ஆகும்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : இரவுக் குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

[(து–வி.) இரவுக்குறி வந்தொழுகுவானாகிய தலைவனிடம், 'அவன் வரும் நெறியிடையே அவனுக்கு நேரக் கூடிய ஏதத்திற்கு அஞ்சினேம்' எனச் சொல்வதன் மூலம். இரவு குறியை மறுக்கின்றாள் தலைவி, அவளுக்குத் தலைவன் 'அதற்கு அஞ்சாதே கொள்' எனக் கூறித் தெளிவிப்பானாக இவ்வாறு கூறுகின்றான்.

'குருதி வேட்கை உருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும்
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நாள்மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை 5
நீநயந்து வருதல் எவன்? எனப் பலபுலந்து
அழுதனை உறையும் அம்மா அரிவை!
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின் 10
ஆய்நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே.

'இரத்தத்தைக் குடிக்கும் வேட்கையினாலே சினமிகுந்த வலிய ஒரு புலியேறானது, வளமிகுந்ததும் ஆற்றலுடையதுமான இளைய களிற்றினை எதிர்நோக்கியபடியே, புதரிடைப் பதுங்கியிருக்கும் கொடுமையினைக் கொண்டதும், மரங்கள் நிரம்பிய சோலைகளால் மலிந்திருப்பதும், பூழி நாட்டாரது நிறத்தையுடைய யாட்டு மந்தைகள் வைகறைப் போதிலே புல்லை மேய்வனவாகப் பரந்து விளங்குமாறுபோல மாரிக் காலத்து இரவிலே கரடிகள் பரவிக்கிடக்கும் தன்மை கொண்டதுமான, மலைவழியாகிய நெடிய பாதையூடே நீயும் எம்மை விரும்பியவனாக வருபவனாகின்றனை! அதுதான் என்னையோ?' என்று கூறினையாகப் பலவாக வருந்தி அழுதனையாக இருக்கின்ற, அழகிய மாமை நிறத்தை உடையவளான அரிவையே! கொல்லிமலைச் சாரல் பயன் மிகுந்த பலாமரங்களை மிகுதியாக உடையதாகும். அதன் மேற்குப் புறத்தேயாகத் தெய்வம் இயற்றிவைத்த புதுமையோடு இயலுகின்ற கொல்லிப் பாவையின் உருவம் இருக்கும். அப்பாவையானது கதிரவனின் கதிர்விரிந்து பரவுகின்றதான இளவெயிற் காலத்திலே தோன்றினா லொத்தது நின்னது அழகிய மேனியின் வனப்பாகும். அதனை நினைத்தபடியாக வருகின்ற காலத்தே, எமக்கு மலையினது அடிப்புறத்தே விளங்கும் அவ்வழியே பாதுகாவலாக அமைந்துவிடுகின்றது. ஆதலின் நீதான் வழியின் ஏதத்தைப் பற்றிய நின் கவலையைக் கைவிடுவாயாக!

கருத்து : 'நின் நினைவு எதனையும் எமக்கு எளிதாகச் செய்யும்' என்பதாம்.

சொற்பொருள் : குருதி வேட்கை – இரத்தங் குடிக்கின்ற வேட்கை. உரு – சினம்; பசியினாலே உண்டாயது. வயம் – வலி. முன்பு – ஆற்றல். மழகளிறு -இளங்களிறு. பூழியர் – பூழி நாட்டார்; தமிழ்நாட்டுப் பகுப்புக்களுள் ஒன்று பூழி. துரு – யாடு. மாரி – மாரிக்காலம். எண்கு – கரடி. பூதம் – பூதமாகிய தெய்வம். புதிதியல் பாவை – புதிதான ஆற்றலோடு இயங்கும் பாவை; தன் ஒளியால் பிறரை மயக்கியழிக்கும் சக்தி. ஏமம் – பாதுகாவல்.

விளக்கம் : களிற்றை எதிர்பார்த்திருக்கும் பெரும் புலியும், யாட்டு மந்தைபோலப் பரவிக்கிடக்கும் கரடி மந்தைகளும், மாரிக்காலமும் அம் மலை வழியே வரும் அவனுக்கு ஏதம் தருவதாகுமெனத் தலைவி எண்ணிக் கவலையடைகின்றாள். அவளுக்கு, அவள்பால் அவன் கொண்டுள்ள தெய்வீகக் காதல் அவ்வழியையும் அவனளவிற் காப்புடையதாகச் செய்துவிடுமெனத் தலைவன் கூறி, அவள் கவலையை மாற்றுகின்றான்; அவளை மறந்து தன்னால் இருக்கவியலாத தன்மையையும் கூறுகின்றான்.

இறைச்சி : 'புலி களிற்றைக் கொன்று குருதியுண்பதற்குப் பதுங்கியிருக்கும் காட்டிடையே யாடுகள் அச்சமின்றி மேய்ந்திருக்கும் என்றது, அவ்வாறே துன்பங்கள் பலவும் சூழ்ந்திருப்பினும் தான் ஏதமின்றி வருதல் கூடும் என்பதற்காம்.

மேற்கோள் : தலைவியும் தோழியும் வருவழியருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்பதற்குத் தொல்காப்பியக் களவியல் உரையுள் இச் செய்யுளை ஆசிரியர் நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியதென்று உரைப்பர்.

தொல் களவியல் சூத்திர உரையுள் (100) இச்செய்யுளை எடுத்துக் காட்டி, 'இந் நற்றிணைப் பாட்டுத் தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது' என்று இளம் பூரண அடிகள் உரைப்பர்.

'தலைவி கண்புதைத்தவழித் தலைவனுக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு, இச் செய்யுளை ‘வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்' என்னும் துறைக்கு மேற்கோளாகவும் எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர்.

பாடபேதம் : நாள்மேயல் பரக்கும், அழுதனள் உறையும், மாண்நலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/192&oldid=1731858" இலிருந்து மீள்விக்கப்பட்டது