உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தோழிதான்/ஒரே பாடம்

விக்கிமூலம் இலிருந்து

ஒரே பாடம்



குராமன் 'ஒரு மாதிரியான பேர் வழி' என்று தான் அவனை அறிந்தவர்கள் சொல்வார்கள். அவன் தன்னைப்பற்றி அவ்விதம் சொல்லிக் கொள்வானா என்ன! அவனுக்கு மற்றவர்கள் எல்லோருமே 'ஒரு மாதிரி' ஆகவும் உலகமே என்னமோ ஒரு தினுசாகவும் தான் தோன்றக் கூடும்.

'காதல் தேவதையின் பட்டயம் பெற்ற சீடன்' தானேதான் என்ற எண்ணம் ரகுராமனுக்கு இருக்குமோ என்னவோ அல்லது, 'காதல் செய்வீர் உலக்த்தீரே' என நாவலித்த கவியின் வாக்கை ஏற்று, அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு கவி உள்ளம் பெற்ற தனக்கு உண்டு என்ற நினைப்பு அவனுக்கு இருந்தாலும் இருக்கலாம்.

அவனுடைய எண்ணங்கள் எப்படி இருந்தால் என்ன? அவற்றின் விளைவாக மலர்ந்த செயல்கள் அவன் வாழ்க்கையின் ஏறு அலைகளாகவும் இறங்கு அலைகளாகவும் விளங்கின என்பதுதான் முக்கியம்.

காதல் எனும் அற்புதத்தின் முதல் ரேகை அவன் உள்ளத்தை தொட்டபோது, ரகுராமனுக்கு பதினேழு வயதுதான் ஆகியிருந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சும்மா ஊர் சுற்றிப் பொழுது போக்கி வந்த அவன், 'கண்டது கற்றுப் பண்டிதன் ஆகும்' நோக்கத்துடன், கைக்குக் கிடைத்த எல்லாப் பத்திரிகைகளையும் நாவல்களையும் படித்து மகிழ்ந்தான். அதன் கோளாறுகளாகவே இருக்கலாம். அவன் தேடிக் கொண்ட அனுபவம்.

அவன் பெற்றோருடன் வசித்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு அம்மணி வசித்தாள். அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். என்றாலும் தான் ஒரு 'சின்னப் பொண்ணு' என்ற நினைப்பு அவளுக்கு. கிருஷ்ணம்மா எனும் அந்த அம்மணிக்கு கல்யாணம் ஆகியிருந்தது. பல வருட இல்லற வாழ்வு அவள்மீது குழந்தைச் சுமையை ஏற்றிவிடவில்லை. அதை ஒரு குறையாக அவள் கருதவுமில்லை.

கிருஷ்ணம்மா 'ரொம்ப ஸ்டைல் பேபி!' நாகரிக அலங்கார விதிகளை பின்பற்றி தன்னை சிங்காரித்துக் கொண்டு அங்குமிங்கும் அலைவாள். வாசல்படி ஓரம் நின்று வீதி வழியே போவோரை கண்டு களிப்பாள். மென்குரலில் பாட்டிசைத்து மகிழ்வாள். வீட்டினுள் குதித்துக் குதித்து நடப்பாள். கண்ணாடி முன் நின்று முகத்தைக் கோரணிகள் பண்ணி, கலகலவெனச் சிரிப்பாள். அவள் விழிகள் ஆயிரம் கஜல்கள் பாடும் எப்போதும்.

ரகுராமனுக்கு அவளை அடிக்கடி பார்க்க வாய்ப்பும் வசதியும் இருந்தன. அவன் தன்பக்கம் பார்க்கும் போதெல்லாம், கிருஷ்ணம்மா ஒய்யாரப் பார்வை எறிந்து சொகுசுச் சிரிப்பை சிந்துவது வழக்கம். ரகு, ரகு என்று செல்லமாக அழைத்து வம்புகள் பேசி ஆனந்தம் அடைவாள். எப்பொழுதாவது அபூர்வமாக அவள் தன் கைவிரல்களை அவன் கன்னத்தில் விளையாட விட்டு, மோவாயைப் பற்றி கொஞ்சுதலாக அசைத்து, காந்தப் பார்வையை அவன் முகத்தில் நிறுத்தி, வசியச் சிரிப்பு தீட்டுவதும் உண்டு. அச்சமயம் அவனுக்கு ஐயோ! 'ஐயோ!' என்று இருக்கும்.

ஆகவே கிருஷ்ணம்மா தன்மீது காதல் கொண்டு விட்டாள் என்று ரகுராமன் நம்பினான். தனக்கு அவள் பேரில் அளவிலாக் காதல் என்று அவன் என்றோ முடிவுகட்டியிருந்தானே! அதனால் ஒருநாள் அவன் துணிச்சல் கொண்டான். கிருஷ்ணி, கிருஷ்ணி என்று ஆசையோடு குழைந்தான்.

அவள் திகைத்துப் போய் நின்றாள். வியப்புடன் அவனைப் பார்த்து 'ஊம்ங்?' என்றாள்.

"உனக்கு என்மீது காதல்தானே?" என்று கேட்டு அவள் மேல் சாய்ந்தான் ரகு.

"ஐயோ, லவ்வே" என்று கிண்டலாகக் கூறி, "வவ்வவ்வே" என்று முகம் சுளித்துப் பழிப்பு காட்டிய கிருஷ்ணம்மா சடாரென விலகிக் கொண்டாள். அதனால் அவன் தடாலென தரையில் விழுந்தான்.

ரகுராமனுக்கு தலையில் நல்ல ഖலி. உள்ளத்திலும் வலி எடுத்தது. கண்கள் நீர் சிந்தின.

"அழாதே கோந்தே, லட்டு முட்டாசி வாங்கித் தாறேன். அப்பா அம்மாகிட்டே சொல்றேன்" என்று அவள் நையாண்டி பண்ணவும், அவனுக்கு ஒரே மானக்கேடுதான்.

உடனே அங்கிருந்து கிளம்பியவன்தான். ரகு மறுபடியும் வீட்டுக்குப் போகவில்லை. எப்படியாவது, ஏதாவது, ஒரு வேலை தேடிக் கொள்வது என்று ஒரு நகரத்துக்கு பிரயாணமானான்.

அவன் போன நகரில் அவனுக்கு உறவினர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் தங்கினான். அவரே அவனுக்கு ஒரு வேலையும் தேடிக் கொடுத்தார்.

கொஞ்ச காலம் அவன் ஒழுங்காக இருந்தான். அப்புறம் காலம் அவனை சும்மா இருக்கவிடவில்லை.

அந்த உறவினரின் மகள் மைதிலிக்கு பதினைந்து வயசாகியிருந்தது. அவள் பள்ளிக் கூடம் போய் வந்து கொண்டிருந்தான். அப்படி அவள் போகிற அழகும், வருகிற ஜோரும் ரகுராமனை கிறங்கடித்தன.

மைதிலி அவனிடம் சகஜமாகப் பழகினாள். சாதாரணமாகப் பேசிச் சிரித்தாள். பாடங்களில் சந்தேகம் கேட்டாள். தன் சிநேகிதிகள் பற்றி சிரிக்கச் சிரிக்கப் பேசினாள்.

ஒருநாள் ரகுராமன் அருகில் நின்று அவள் பேசிக் கொண்டிருந்த போது, அவன் அவளுடைய கையைப் பிடித்து ஆசையோடு வருடினான். 'மைதிலி' உள்ளதை சொல்லிப் போடு. உனக்கு என் மீது லவ்வு தானே?' என்று கேட்டுவிட்டான்.

மைதிலி இதை எதிர்பார்க்க வில்லை. அவள் முகம் குபிரென ரத்த ஒட்டம் பெற்றுச் சிவந்தது. தலைகுனிந்து நின்றாள்.

அது சம்மதத்தின் அடையாளம் என்று அவனாகவே எண்ணிக் கொண்டான் ரகுராமன், 'நாம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். இப்பவே இல்லை. உன் படிப்பு முடிந்த பிறகுதான். நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம். நான் ராமன். நீ மைதிலி' என்று கொஞ்சுதலாகப் பேசினான். அவன் கன்னத்தைத் தடவக் கைநீட்டினான்.

அப்புறம் நடந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. சிரித்து சிங்காரமாக நின்று. பின் முகம் சிவந்து தலை தாழ்த்திய மைதிலி கேவிக் கேவி அழுது கொண்டே ஓடினாள். அவள் அம்மா என்னவோ ஏதோ என்று பதறினாள்.

மகளிடமிருந்து விஷயத்தை மெது மெதுவாகக் கேட்டறிந்து கொண்ட அம்மா காளிதேவியாக மாறினாள். அவள் கொட்டிய ஏச்சுக்களுக்கும், சாபங்களுக் கும் அளவே கிடையாது.

எல்லாவற்றையும் மவுனமாக ஏற்று நின்ற ரகுராமன், 'சுத்த மூளை கெட்ட ஜேன்மங்கள்'! என்று தான் எண்ணினான். 'வீட்டை விட்டு வெளியே டோடா எச்சிக்கலை நாயே'! என்று அந்த அம்மையார் சொல்லும்வரை தான் அங்கேயே நின்றிருந்த மடத்தனத்துக்காக அனுதாபப்பட்டவாறே அவன் வெளியேறினான். இருந்த வேலையையும், ஊரையும் விட்டுவிட்டுப் போக வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டது.

ரகுராமனின் மூன்றாவது காதல் முயற்சி அவனது இருபதாம் வயசில் தலைகாட்டியது. அப்போது அவன் இருந்த ஊரும் வேறு; பார்த்த வேலையும் சிறிது வசதியானதுதான்.

அவன் அலுவலகத்துக்கு வழக்கமாகப் போய்வரும் தெருவில் ஒரு வீட்டின் சன்னலில் சந்திரோதயம் கண்டான் ஒரு நாள். அம்முக மண்டலத்தில் அற்புத நட்சத்திரங்கள் போல் இரண்டு கண்கள் ஒளிவீசக் கண்டான். அம்புலியும் விண்மீன்களும் சிரிப்பை மலர்வித்துக் காட்டும் தாமரையாக மாறித் திகழ்வதை மறு நாள் பார்த்தான். கருவிழிகள் புரளும் கயல் மீன்களாக வேலை காட்டுவதைக் கண்டான் அடுத்த நாள்.

இப்படியாக வளர்ந்த அற்புதம் வாசல்படியில் மின்னல் கொடியென உருவெடுக்கக் கண்டான்.

அவன் பார்க்கவும் மான் போல் ஓடி ஒளியக் கண்டான். மறுநாள் மயிலென நிற்கக் கண்டான். அன்னம் போல் அசைந்து கள்ளப் பார்வை நோக்கக் கண்டான். தினந்தோறும் இவ்விதம் புதுமைகள் பலவும் கண்டான். காலம் ஒடுவதும் கருத்தில் கொண்டான்.

பார்த்தாள் பதுங்கி நின்று. முகம் முழுவதும் காட்டினாள். பின், மேனி எழில் காட்டி நின்றாள். நாணி ஓடினாள். அப்புறம் நின்று பார்க்கலானாள். நின்றவள் சிரிக்கத் துணிந்தாள். குரல் நயம் காட்டத் துணிந்தாள். ஆகவே, இவளுக்கு என்மீது காதல்தான்; வேறென்ன! என்று தீர்மானித்தான் ரகுராமன்.

காதலை வளர்க்க என்னென்னவோ செய்தான்.

ஒரு நாள் அக்குமரி வளைகள் கலகலக்க கை அசைத்தாள். வீதி வழியே சென்ற அவன் திரும்பிப் பார்த்தான். அவள் சிரிப்பது போல் தோன்றவே அவனும் சிரித்தான்.

அருகில் சென்று, 'உனக்கு என் மீது காதல் தானே?' என்று தனக்குத் தெரிந்த பாடத்தை ஒலிபரப்ப நினைத்து நின்றான்.

ரகுராமன் திடுக்கிட்டுத் திகைக்க நேரிட்டது. காரணம், தி.மு.தி.மு வென்று ஓடிவந்தார் ஒரு பெரியவர்.

ஏய் அயோக்கியப் பயலே! தெருவோடு ஒழுங் காகப் போகமுடியலியோ? நானும் தினம் தினம் கவனிக் கிறேன். இந்தப் பக்கமே முறைக்கிறது. பல்லைக் காட்டுகிறது, உருட்டி உருட்டி முழிக்கிறது. இப்படி வீனத்தனம் பண்ண உனக்கு எவ்வளவு தைரியம்?' என்று அவர் கத்தினார்.

உம்ம மகளா அவள்? அவளை கண்டிக்கிறது தானே?' என்று அவன் மனம் முனகியது. ஆனால் நாக்கு உச்சரிக்கவில்லை. அவன் மண் போம்மை மாதிரி நின்றான். அவனைச் சுற்றிலும் கும்பல் கூடி விட்டது.

'நீ இனிமேல் இந்தத் தெருவில் அடி எடுத்து வைத்தால் தொலைந்தே என்ன நடக்கும்.கிறதை அப்புறம் பார்த்துக் கொள்' என்று உமினார் பெரியவர்.

ரகுராமனின் கண்கள் வாசல்படியின் பக்கம் ஓடின. அங்கு அவள் நின்று கொண்டுதாணிருந்தாள். வேடிக்கை பார்த்துச் சிரிக்கும் களிப்பு அவள் முகத்தில் நிறைந்து காணப்பட்டது.

அவனுக்கு 'சீ' என்றாகி விட்டது. 'சே என்ன உலகம்' என்ன மனிதர்கள்! எனக் குமைந்தது அவன் உள்ளம்.

நிமிர்ந்து பார்க்காமலே நடையைக் கட்டினான் அவன். அன்றே இரவோடு இரவாக ரகுராமன் அந்த வீட்டை காலி செய்தான் . இதரை விட்டு வெளியேறினான்.

ரகுராமன் வாழ்க்கையில் இவ்விதம் எத்தனையோ அனுபவங்கள் குறுக்கிட்டன. அவன் அந்த ஒரு பாடத்தை பலமுறை உச்சரித்து விட்டான். எப்பவும் அவனுக்கு தவறான விடையே கிடைத்து வந்தது.

அவனுக்காக அனுதாபப்பட்டவர்கள் பலர் 'வாழத் தெரியாத அப்பாவி' என்றார்கள் சிலர். 'எதை எப்படிச் செய்யவேனும் என்று தெரிந்து கொள்ளாதவன்சாமார்த்தியம் போதாது' 'மடையன்' 'பைத்தியம்' 'காதல் பித்து'-இப்படி அவனுக்குக் கிடைத்த சான்றுகள் பலவாகும்.

லைலாவும், மஜ்னுவும் காவியத்தில்தான்னன் பதுசரி யல்ல. ஒரு மஜ்னுவுக்கு ஒரே லைலா என்பது வேண்டு மானால் காவியத்தில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கலாம். மஜ்னு ஒரு காதலில் தோல்வி அடைந்த பிறகு மனம் ஒடிந்து போயிருக்கத் தேவையில்லை. முதல் காதல் முறிந்து போனால் அடுத்து வேறு காதல்; ஒரு காதலி நழுவி விட்டால், இன்னொரு காதலி. எதிர்ப்படாமலா போவாள்? 'நவயுக ஜூலியட் ஒரு டஜன் ரோமியோக்களை விரும்ப முன் வருவாள்' என்று ஒரு அறிஞர் சொல்லவில்லையா? இது ராமனின் தடம் புரண்ட சிந்தனை.

அவன் இப்போது ஒரு முதலாளியிடம் செயலராகப் பணியாற்றி வருகிறான். அந்த முதலாளியின் மகள் செல்வா குதித்து ஆடும் கோலமயில். ஒயிலாக நடக்கும் மணிப்புறா. எல்லோரிடமும் சி ரி த் து ப் பேசும் வண்ணக்கிளி.

ரகுராமன் அவளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவனை நன்கு அறிந்தவர்கள் ஒரு சோதிடம் கூறமுடியும்.

"அவன் அறிந்தது ஒரே பாடம். ரகுராமன் செல்வாவிடமும் அந்தப் பாடத்தை ஒப்புவிப்பான் அவள் கையினால் கன்னத்தில் அறைவாங்கிக் கொண்டு வெளியேறுவான். அப்புறம் வேறு ஊர் வேறு வேலை, வேறு காதலி மயக்கம்!"

அவர்கள் கூறும் 'எதிர்காலப் பலன்' அப்படியே பலித்துவிடக்கூடும். அனுபவங்கள் மனிதர்களை அவ்வளவாக ஞானவான்கள் ஆக்கி விடுவதில்லை என்பதுதானே வாழ்க்கை நியதியாக இருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்ல_தோழிதான்/ஒரே_பாடம்&oldid=1382556" இலிருந்து மீள்விக்கப்பட்டது