உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தோழிதான்/சாதனை வீரர்!

விக்கிமூலம் இலிருந்து

சாதனை வீரர்



"வே, உமக்கு கவனிப்பும் நிலையான பேரும் வரணும்னு சொன்னா, அதுக்காக நீரு அபாசமான காரியங்களை செய்தாகனும்கிற அவசியம் எதுவும் கிடையாது. அசட்டுத்தனமான, முட்டாள்தனமான, கோணல் தனமான காரியங்களை செய்தும் நீரு பேரு பெற முடியும்."

இப்படி ஓங்கி அடித்தார் சூரியன் பிள்ளை அண்ணாச்சி. அவரது முழுப்பெயர் சூரிய நாராயணபிள்ளை. வழக்கத்திலே அது சூரியப்பிள்ளை என்று குறுகிப் போச்சு, "என்ன அண்ணாச்சி இப்படிச் சொல்லுதிக?" என்று அதிசயித்தார், கூட இருந்த ஒரு தம்பியா பிள்ளை

"இல்லாததையா சொல்லுதேன். இந்திய சரித்திரம் முகமது பின் துக்ளக் செயல்களையும் பதிவு செய்து வச்சிருக்காக இல்லையா? அவன் ஏறுமாறான காரியங் களைத்தானே செய்துக்கிட்டிருந்தான்?" என்று கேட்டார் சூரியன் பிள்ளை,

பிறகு அவரே தொடர்ந்தார். "அவ்வளவு தூரம் போவானேன்! நம்ம தாமிரவர்ணி ஆத்திலே கொக்கிர குளம் பாலத்துக்கு கிழக்கே ஒரு ஓடை ஓடிக்கிட்டிருக்கு. புள்ளெயைப் போட்டு பலாப்பழம் எடுத்த ஒடையின்னு அதுக்குப் பேரு. அதுக்கு ஏன் அந்த பேரு வந்தது?" தம்பிமார்களுக்குத் தெரியவில்லை "நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி", என்றார்கள்.

"ரொம்ப காலத்துக்கு முந்தி அது நடந்து எத்தனையோ தலைமுறை ஆகுது. எவளோ ஒரு பொம்பிளை செய்த அசட்டுத்தனமான வேலையை நித்தியமா, நிரந்தரமா அது நினைவுபடுத்திக்கிட்டே இருக்கு!"-

"அது என்ன விசயம், அண்ணாச்சி?"

“ஒரு பொம்பிளை, ஒக்கல்லே புள்ளையை வச்சுக்கிட்டு அந்தப் பக்கமா வந்திருக்கா. ஒடையிலே ஒரு பலாப்பழம் உருண்டு புரண்டு வாறதை அவ பார்த்தா, பார்த்தானா? அவளுக்கு பலாப்பழத்து மேலே ஆசை உண்டாயிட்டுது. அதை புடிச்சி எடுத்துரலாம்னு தோணிச்சு. ஒக்கல்லே இருந்த புள்ளையை ஓடைக் கரை மேலே படுக்க வச்சிட்டு பலாப்பழத்தை புடிக்கப் போனா, ஓடையிலே தண்ணி நெறைய. அது வேகமாகவும் ஓடுது. அவ கைக்கு எட்டாம பலாப்பழம் உருண்டு, புரண்டு போயிக்கிட்டே இருக்கு. அவ அதை விரட்டிகிட்டே போறா.

"அவ கரையிலே படுக்கப் போட்டிருந்த பச்சப்புள்ளை, கரை சரிவா இருக்கறதுனாலே, உருண்டு, உருண்டு ஓடைத் தண்ணியிலே விழுந்திட்டுது. அதை தண்ணி அடிச்சிக்கிட்டுப் போகுது. புள்ளை கத்துது. பலாப்பழ ஆசையிலே அலையிற அம்மாக்காரி காதுலே அது விழலே. 'ஏய் சவத்துப் பய பலாப் பழமே, நீ எங்கிட்டே ஆப்பிடாமப் போயிருவியா? நான் உன்னை விட்டுருவனா’ ன்னு கறுவிக்கிட்டு அவ ஓடி, ஒருமட்டும் அந்தப் பழத்தை எட்டிப் புடிச்சு, கஷ்டப்பட்டு தூக்கி எடுத்து, புள்ளையை அணைக்கிற மாதிரி உடம்போடு சேர்த்து அமுக்கினா. அப்பதான் அவளுக்கு புள்ளை ஞாபகம் வந்தது.

“புள்ளையோட அழுகைச் சத்தமும் காதிலே விழுந்தது. தண்ணியிலே அது உருண்டுக்கிட்டு வர்றதும் கண்ணிலே பட்டுது. அடி ,பாவி மட்டை-பாதகத்தி கெடுத்தேனே கேட்டை! எம் பிள்ளை தண்ணியோடுல்லா போகுதுன்னுட்டு, அவ கையிலிருந்த பலாப்பழத்தை அவசரம் அவசரமா கரையிலே வச்சிட்டு புள்ணெயைப் புடிக்க ஓடினா. தண்ணிதான் வேகமா ஓடுதே, அது புள்ளையை இழுத்துக்கிட்டு வேகமாகப் போகுது. அவ ஓட ஓட புள்ளையோடு தண்ணியும் ஓடுது. மேட்டிலேயிருந்து பள்ளத்திலே விழற இடத்திலே புள்ளையும் தண்ணியோடு சேர்ந்து விழுந்து, ஆழத்திலே முங்கி முங்கி அலைக்கழிஞ்சு, அவுட்டாயிட்டுது.

“அவ தலையிலே, தலையிலே அடிச்சுக்கிட்டு அலறுதா. இதுக்குள்ளே அவ கரையிலே வச்ச பலாப் பழமும் உருண்டு தண்ணியிலே விழுந்து, ஓடைத் தண்ணி அதையும் அடிச்சுக்கிட்டுப் போயிட்டுது. பயித்தியாரி வாயிலேயும், வயித்துலேயும், தலையிலேயும் ஓங்கி ஓங்கி அடிச்சுக்கிட்டு ‘லபோ லபோ’ன்னு கத்துனா. கத்தி என்ன பிரயோசனம்? வழியோடு போனவங்க வந்தவங்க நின்னு விசாரிச்சாங்க. அந்தக் கூறுகெட்ட மூளியின் செயல் அம்பலமாச்சு. இது வாய் வழிச் செய்தியா பரவிப் பரவி, அந்த ஓடைக்கு ஒரு அடையாளமாக, ஓடையின் பெயரா நிலைச்சு நின்னிட்டுது!” என்று அண்ணாச்சி விளக்கினார்.

“அதனாலதான் நான் சொல்லுதேன், அசட்டுத் தனமான காரியங்களை செய்தாலும், நிலையான கவனிப்பை பெற்றுவிட முடியும்னு,” என்று பெருமையாக முடித்தார் சூரியன் பிள்ளை.

“அண்ணாச்சி சூரியன் பிள்ளை பலே எம்டன்லா. சரியான ‘அய்டியா பிரதர்’ என்று அவரை தெரிந்தவர்கள் பேசிக் கொள்வார்கள். அவர் சொல்வதை எல்லாம் செயலில் செய்து காட்டுவாரோ என்னவோ-யாரும் அதுபற்றி கவலைப்படுவது இல்லை. அவரோடு பேசிக் கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. அதுதான் தேவை மற்றவர்களுக்கு.

“வேய்; நீரு என்னதான் சொல்லும். நீங்கள்ளாம் தூக்கி வச்சுக் கொண்டாடுத இட்லி, தோசை, உப்புமா, பூரி இதுகள்ளாம் நம்ம பழயச் சோத்து பக்கத்திலே நிக்க முடியுமாவே? பழையச் சோறு-ஆ! அமிர்தம்லா அது. ஒரு மரவை நிறைய பழையச் சோத்தை திறுகப் பிசைஞ்சு வச்சுக்கிட்டு, அருமையான கட்டித் தயிரை ஊத்தி, கொஞ்சம் உப்புக்கல்லைப் போட்டு பிசைஞ்சு, தொட்டுக்கிடதுக்கு சுண்டக்கறியும் வச்சுக்கிட்டு, உருட்டி, உருட்டி வாயிலே போட்டா, வயிறு கொண்டா கொண்டானில்லே கேக்கும்! வயிறு முட்டச்சாப்பிட்டுப் போட்டா, மணிக்கணக்கிலே கம்னு இருக்கும். அதும் ருசியே தனி வேய்!” என்று ரசித்துச் சொல்வார் அவர்.

“அது சரி அண்ணாச்சி, என்னமோ மரவைன்னு சொன்னீங்களே, அது என்ன?” ஒரு தம்பிச்சியின் நியாயமான கேள்வி இது.

“ஓ அதுவா? அது வந்து ஒரு பாத்திரம், மரத்திலே செய்தது. அதனாலேதான் மரவைன்னு பேரு. மரத்தை கடஞ்சி, தேவைப்பட்ட சைசிலே அழகா வட்டில், குழம்புக்கு புளி கரைக்கிறதுக்கு கும்பா மாதிரி, சாப்பிடுற தட்டு எல்லாம் செய்திருப்பாங்க. நாற்பது, அம்பது வருசங்களுக்கு முன்னாலே நம்ம பக்கமெல்லாம் இது சர்வசாதாரணமா புழக்கத்திலே இருந்தது. அப்புறம் பீங்கான் தட்டு, கோப்பை, கெட்டில்னு எனாமல் பாத்திரங்க வந்தது. அதுக்குப் பிறகு ஜெர்மன் சில்வர்னு அலுமினியச் சாமான்கள் நெடுக ஆளுகையிலே இருந்துது. இப்ப இருந்தாங்குடியா எங்க பாரு, எவர்சில்வர் சாமான்கதான். இப்படி காலத்துக்குக் காலம் மாறுதல்கள் வந்துக்கிட்டே தானிருக்கு,” என்றார் பிள்ளை.

“ஒரு சமயம் சூரியன் பிள்ளை, கொம்பங்குளம் முருகையாப் பிள்ளையை கூட்டு சேர்த்துக்கிட்டு ஒரு ‘கிளப்புக்கடை’ ஆரம்பித்தார். ‘மண்பானை சமையல்’ விசேஷம் அந்த சாப்பாட்டுக் கடையில். சுண்டக்கறி, மாங்கா ஊறுகா ‘பேமஸ்’ சாயங்காலத்திலிருந்து இரவு வெகு நேரம் வரை ‘சுக்கு வெந்நி,’ ‘மொச்சைக் கொட்டை மசாலா சுண்டல்’ என்று ஜமாய்த்தார். கொஞ்ச நாள் கூட்டம் தூள் பரப்புச்சு, ஆனாலும் கடை ரன் பண்ணலே. தவசிப்பிள்ளையா இருத்த கொம்பங்குளத்துப் பிள்ளைவாள் அகப்பட்டதை சுருட்டிக்கிட்டு ‘ரன் பண்ணிட்டாக.’ மேலும், எல்லாரும் அண்ணாச்சிக்கு தெரிஞ்ச தம்பிச்சிகளா இருந்ததுனாலே, கடன் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போனாக. கடனை வசூல் பண்ண முடியலே. அண்ணாச்சி கொடுத்துத் தீர வேண்டிய கடன் பாக்கியும் ஏறிட்டுப் போச்சு. ஆகவே, கிளப்புக் கடை தானாகவே படுத்திட்டுது. அப்புறம் அதை தூக்கி நிறுத்துறது எங்கே?

“அந்தக் கட்டத்திலே தனக்கு அபாரமான அய்டியா ஒண்னு தோணிச்சு என்றும், ஆனாலும் பிழைச்சிட்டுப் போறானுகன்னு அதை செயல்படுத்தாமல் இருந்ததாகவும் அண்ணாச்சி பிற்காலத்தில் சொல்வது வழக்கம். அது என்னன்னு கேட்டா...

“வே, மகாயுத்தத்துக்கு முன்னாடி நம்மளவங்க பணம் சம்பாதிக்க ரங்கூன்-பர்மான்னு போனாங்க. அவங்கள்ளே சில பளுவான்க இருந்தாங்க. எமப்பளுவானுக. பிசினசிலே கடனாயிரும். இந்த கோப்பனுக என்ன செய்வானுக தெரியுமா? பெரிய பெரிய வீடுகள்ளே வாடகைக்கு இருப்பானுக. வீட்டுக்குள்ளே அருமையான தேக்கு மரக்கதவுக, உத்திரம், சன்னல் கதவு எல்லாம் இருக்கும். இந்த எம்டனுக அதுகளை, அதுகள்ளே உள்ள பித்தளை கைப்பிடி, கீலு இதுகளை எல்லாம் நைசா அகட்டி வித்து காசாக்கிப் போடுவானுக. தாராளமா கடனும் வாங்குவானுக. கப்பல் இந்தியாவுக்கு எப்ப போகுதுன்னு குறியா இருப்பாங்க. ராத்திரி வீட்டிலே விளக்கை ஏத்தி வச்சிட்ட-அப்பெல்லாம் அரிக்கன் லைட்டுக தானே!-வீட்டைப் பூட்டிட்டு நைசாக் கிளம்பி கப்பல் ஏறிருவாங்க.

“வீட்லே விளக்கு எரிஞ்சுக் கிட்டே இருக்கும். வெளியேயிருந்து பாக்கிறவங்க ஆளுக இருக்குன்னு நெனைச்சிக்கிடுவாங்க.

ஆனா, ஆளுகளோ கப்பல்லே ஏறி கம்பி நீட்டியிருப்பாங்க! நானும் அது மாதிரி செய்யலாமான்னு நெனச்சேன். அது வேணாம்னிட்டு மஞ்சக்கடுதாசி கொடுத்திட்டேன். அதுதான் ஐ.பி. இன்சால்வன்ட் பெட்டிஷன். பாப்பர் நோட்டிசு!”

இதை சொல்லிவிட்டு அமர்க்களமாகச் சிரிப்பா, அண்ணாச்சி. “வே, காதல்லேயும், சண்டையிலேயும் எதுவும் நியாயமாகி விடும்னு சொல்லுவாங்க, கடன் வாங்கிட்டு ஏப்பம் போடுறவங்களும், ஏமாளிகளுக்கு நாமம் போடுவது நியாயமான காரியம்னு நம்புறாங்க. நானும் அப்படி நடந்ததுலே என்ன தப்பு?” என்று கேட்டார் சூரியன் பிள்ளை.

“அய்டியா பிரதர் வடக்கே போயிட்டு வெற்றிகரமா வந்து வரவேற்பு பெற்றதுதான் அவருடைய சாதனை களில் முக்கியமானது" என்று அவருடைய வட்டாரத் தினர் சொல்லி மகிழ்வார்கள்.

அண்ணாச்சியின் இளம் பிராயத்தில் அந்த ஊர், பக்கத்து ஊர்களிலிருந்து 'வடக்கே போறது' என்பது அரும்பெரும் காரியமாகக் கருதப்பட்டது. அவர்களுக்கு மதுரை வரை போனாலும் சரி, மெட்ராஸ் போனாலும் சரி, 'வடக்கே போயிருக்காக' தான். அவர்களுக்கு அடுத்த தலைமுறையினருக்கு மெட்ராஸ் போவது சர்வசகஜம் ஆகிவிட்டது. டில்லி, பம்பாய், கல்கத்தா என்று போன வர்கள் உண்டு. எல்லாரும் 'வேலையா' வடக்கே போயிருப்பவர்கள் தான்.

"வே, வெள்ளைக்காரன் சொல்லுவான், 'சீ வெனிஸ் அன்ட் டய்'னு வெனிஸ் நகரத்தை பார்த்திட்டுச் சாகு'ன்னு சொன்னான். வெனிஸ் அப்படியாப்பட்ட அழகான ஊராம். நம்மளவங்களுக்கு மதுரைதான் ரொம்ப அழகான ஊரு அதனாலே 'மதுரை பாராதவன் கழுதை'ன்னு நம்ம பக்கத்திலே சொல்லிக்கிடுவாங்க, நான் ரொம்ப வயசுக்குப் பிறகுதான் மதுரைக்கு போக முடிஞ்சுது. சல்லி நடமாட்டம் நம்மகிட்டே தாராளமா இல்லாத காலம்தான் நம்ம வாழ்க்கையிலே நிறைய," என்டார் அண்ணாச்சி.

"அதுக்காக 'சாதனை புரியாமல்' இருக்க முடியுமா?"

ஒருநாள் ரயிலடியில் பெரும் பரபரப்பு, வடக்கே இருந்து வருகிற ரயிலை எதிர்பார்த்துத்தான்.

"வடக்கே போன சூரியம் பிள்ளை அண்ணாச்சி வாறாக," என்று பலரும சொன்னார்கள். அவருக்கு வேண்டியவர்கள் மாலைகளோடு நின்றார்கள். சிலர் கதர் நூல் மாலை வைத்திருந்தார்கள்.

எக்ஸ்பிரஸ் வண்டி வந்து நின்றது.

சூரியன் பிள்ளை மிடுக்காக இறங்கி, கம்பீரமாக அப்படியும் இப்படியுமாக பார்த்தார்.

அவருடைய நண்பர்களும், வியப்பர்களும் அவரை நெருங்கி மாலைகள் அணிவித்தார்கள். “வடக்கே சென்று வெற்றியோடு திரும்பும் அண்ணாச்சி அவர்களே, வருக! வருக! அண்ணாச்சிக்கு ஜே! சூரியன் பிள்ளை அண்ணாச்சி வாழ்க!” என்ற கோஷங்கள் முழங்கப்பட்டன.

அண்ணாச்சி பெருமையோடு முறுவலித்து பெரிதாகக் கும்பிடு போட்டார்.

“பட்டணம் போயி ஏதோ காரியம் முடிச்சிட்டு வாறாரு போலிருக்கு.” இப்படி எண்ணிக் கொண்டு போனார்கள் இதர பிரயாணிகள்.

“அண்ணாச்சி தூரதொலைக்கு எங்கேடா போனாரு?” முந்தாநத்து தானே போனாரு போலிருக்கு, என்று ஒரு அப்பாவி வியப்பன் தன் நண்பனிடம் கேட்டான்.

“ஸ்ஸ்.. சத்தம் போட்டுப் பேசாதே. அண்ணாச்சி கோயில்பட்டு போயி பக்கத்து ஊரிலே ஒரு சொக்காரன் வீட்டிலே தங்கியிருந்திட்டு வாறாரு. எல்லாம் ஒரு செட்அப்பு தான்,” என்றான் நண்பன்.

தினமலர் கதைமலர் 10-793

(Upload an image to replace this placeholder.)