நல்ல தோழிதான்/ரத்தக் காட்டேரி

விக்கிமூலம் இலிருந்து


ரத்தக்காட்டேரி




பெரிய முதலாளி' பிறவிப் பெருமாள் கண்விழிக்கும்போது வெயில் 'சுள்ளென்று' அடித்துக் கொண்டிருந்தது. வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்த உழைப்பாளிகளின் முதுகு மீதுதான்.

தனியாக அமைக்கப்பட்டிருந்த பங்களாவில், குளு குளு என்றிருந்த ஒரு அறையில், கட்டில் மீது மெத்தையிலே சுகதித்திரை பயின்று கொண்டிருந்த பெரிய முதலாளிக்கு வெயிலைப் பற்றிய கவலை கிடையாது. மழை, புயல், இடி, மின்னல் எதைப் பற்றியும் கவலை கிடையாது. அவருடைய கவலை எல்லாம் பணத்தோடு பணம் சொத்தோடு சொத்து சேர்ப்பது எப்படி என்பதேயாகும்.

பிறவிப் பெருமாள் பிறக்கும் பொழுதே பெரிய ஆளாகத்தான் பிறந்தார். சுயமுயற்சியால் முன்னுக்கு வந்து, சமூகத்தில் தனக்கென்று ஒரு தனி மதிப்பும் செல்வாக்கும் சம்பாதித்துக் கொண்டே வடமலையப்பரின் திருமகன் ராசாப் பிள்ளையின் புத்திரபாக்கியமாக அவதரித்தார் அவர். இந்தத் 'தற்செயல் நிகழ்ச்சி’ அவரை குட்டி முதலாளி என்ற கெளரவத்துக்கு உரியவராக ஆக்கிவிட்டது. எல்லோரும் அவரை சின்ன எசமான்’ என்றும் 'குட்டி முதலாளி' எனவும்  பெரிய வீட்டுச் சின்ன ஐயா' என்றுமே குறிப்பிட்டு, அவரிடம் பணிவும் மரியாதையும் காட்டி வந்தார்கள்.

உயிர்கள் பிறவி எடுப்பதே 'தற்செயல் நிகழ்ச்சி“--'ஆக்ஸிடென்ட்' தானே? முதலாளி மகன் முதலாளியாகப் பிறந்துவிட்டால், அந்த உயிர் சகல சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்ந்து வளர முடிகிறது. ஏழை எளியவர்கள் வீடுகளில் பிறக்கின்ற குழந்தைகள் வயிற்றுக்குப் போதுமான உணவுகூடக் கிடைக்க வழி இல்லாமல் அவதியுறுகின்றன.

பெரிய வீட்டாரின் அருளுக்குப் பாத்திரமான உழைப்பாளிகள் வீட்டுப் பிள்ளைகள் கட்டுவதற்குக் கோவணத் துணிகூ.ட இல்லாமல், பரட்டைத் தலையும் புழுதி நிறைந்த உடலுமாய் திரிந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் அப்பன்மாரும் தாய்மார்களும் வியாழன் உறங்கி வெள்ளி எழும்போது முதல் உழைக்கத் தொடங்கி, இருட்டி வெகு நாழிகை ஆன பிறகு திரும்பி வந்தார்கள். அப்படியும் அவர்களுக்குக் கிடைத்தது 'தண்ணியும் பருக்கையும்' தான்.

அதே காலத்தில் வீட்டோடு இருந்து, வேளா வேளைக்கு உண்டு களைப்பால் உறங்கியும், உறங்கியதால் எழுந்த பசியை அடக்கத் தின்பண்டங்கள் தின்றும் நாள் கழித்து வந்த ராசாப்பிள்ளை வீட்டுக் 'குட்டி முதலாளி' தங்க நகைகளைச் சுமக்கும் "ஸ்டாண்டு’ ஆக மாற முடிந்தது.

பிறவிப் பெருமாளின் இடுப்பிலே தங்க அரை ஞாண். கிண்கிணி கோத்த இடுப்புச் சலங்கை. 'திருஷ்டி தோஷம்' முதலியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாய் பொறித்த தங்கக் காசு, சிறு சாவி வகையறா. காதுகளில் வெள்ளைக் கல் குச்சு; கால்களில் பாதசரம். அவற்றைக் கூடத் தங்கத்தால் செய்து போட்டு அழகு  பார்க்க வேண்டும் என்று அம்மாக்காரி ஆசைப் பட்டாள். 'பெரிய ஐயா' தான் மறுத்து விட்டார். பையனைச் சுமந்து திரிய ஆள் மாற்றி ஆள். இவை எல்லாம் சிறப்புக் குறையாமல் இருந்தபோது, பாலுக்கும் பழத்துக்கும் பஞ்சமா ஏற்பட்டு விடும்? பட்டு பட்டாடைகளும் அளவுக்கு அதிகமாகவே குவிந்து கிடந்தன.

இப்படி 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்று வளர்ந்து, வீட்டார் பலராலும் செல்லம் கொடுக்கப் பெற்று, தான் பிடித்த மூப்பாக அகம்பாவம், கர்வம், பிடிவாதம் முதலிய குணங்களோடு பெரியவனான பிறவிப் பெருமாள் உரிய காலத்தில் 'முதலாளி' என்ற அந்தஸ்தையும் பெற முடிந்தது. நம்ம பையன் படிச்சுப் பாஸ்பண்ணி தாசில் வேலைக்கா போகப் போறான்? ஏதோ நாலு எழுத்து தெரிஞ்சால் போதும் என்று பெரியவர்கள், கருதினார்கள். அதனால், முதலாளி மகன் முதலாளிக்கு படிப்பு போன்ற விசேஷத் தகுதி எதுவும் கிடையாது.

அவர் எங்கும் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் எதுவுமில்லை. உலக விவகாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலையோடு பத்திரிகைகளைத் தேடும் ஆர்வமும் அவருக்கு இல்லை. ஆகவே, அவராக மனசு வைத்து எழுந்தால் தான் அவருக்குப் பொழுது விடிந்ததாக அர்த்தம்.

பிறவிப் பெருமாளின் தாத்தா அதிகாலையிலேயே விழித்தெழுந்து, வயல் வேலைகளுக்குப் போவார்; உச்சிப்பொழுதுவரை பல் விளக்காமலே பாடுபடுவார்; இவ்வாறு வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி உழைத்ததனால்தான் அவர் சொத்து சேர்க்க முடிந்தது என்று ஊரில் பேச்சு வழங்கியது. அவ்வாறு உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலையில் பிறந்துவிட்ட பலரின்  வயிற்றில் அடித்தும், உழைப்புக்கு உரிய பலனைச் சுரண்டியும், என்னென்னவோ பண்ணியும் சொத்தோடு சொத்து சேர்த்து, பெரிய முதலாளி ஆக முடிந்தது என்பதை யாரும் எடுத்துச் சொல்லவில்லை. வடமலையப்பரின் மகன் ராசாப்பிள்ளை சர்க்கார் தமூனாக்களிலும், பத்திரங்களிலும் 'தொழில்’ என்கிற கலத்தில் 'சுகஜீவனம்' என்று எழுதி, கெளரவம் பெறவும் முடிந்தது. சோம்பேறி வாழ்க்கைக்கு 'சுகஜீவனம்' என்று பெயர். அதுவும் ஒரு தொழில் என மதிக்கப் பட்டது சமுதாயத்தின் நோக்கிலே!

"துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறக்கும் என்பார்கள். முதலாளிக்குப் பிறந்த 'குட்டி முதலாளி' மட்டும் சுறுசுறுப்பனாகவா இருந்து விடுவான்? சோம்பேறி மகன் சோம்பேறியாக விளங்குவதுதான் சமூக நியதி; குலதர்மம், பிறவிப் பெருமாளும் விதிவிலக்கு அல்ல. அவருடைய சொந்த வேலைகளைக் கூட அவரே செய்வதில்லை. செய்ய முடிவதில்லை, அவற்றைக் கவனித்து முடிக்க தனித்தனி ஆட்கள். எல்லாம், அவரிடம் பணம் இருந்தது என்கிற ஒரே காரணத்தினால்தான். அந்தப் பணத்தைச் சேர்க்க அவர் என்ன பாடுபட்டார், தனது உழைப்பினால் கிடைக்காத பணத்தை அவர் இஷ்டம்போல் செலவு செய்ய அவருக்கு என்ன உரிமை இருந்தது? அதைக் கேட்கும் குரல் எழவேயில்லை. அவர் முதலாளி மகன் முதலாளி; அதனால் அவர் எப்படியும் வாழ முடியும் வாழலாம் என்ற நம்பிக்கை நிலைத்திருக்கிறது சமூகத்திலே, மனிதரின் பக்திக்கும், பணிவுக்கும், பயந்த சுபாவத்துக்கும் பூர்வ புண்ணியம்.... தலைவிதி- கொடுத்து வைத்தவர்' என்பன போன்ற இருண்ட எண்ணங்களும் துணை சேர்கின்றன.

ஆகவே, உழைக்க வேண்டியவர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கிவிடப் பெற்றிருந்த அலுவல்களில்  ஈடுபட்டிருந்த வேளையிலும், பிறவிப் பெருமாள் சோம்பேறித் தனமாகப் படுக்கையில் கிடந்து சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தார். அவசரம் இல்லாமல் எழுந்தார். திண்ணையில் சிறிது நேரம் உட்கார்த்திருந்தார். பல் துலக்குவதற்காக நந்தவனம் பக்கம் சென்றார்.

நந்தவனம் குளுமையான இடம். பூச்செடிகள், கனிமரங்கள் எல்லாம் எழில் குலுக்கி நின்றன. பசும் கரம்பை பதிக்கப்பட்டு, மணல் பரப்பப் பெற்ற ஒரு மேடும் இருந்தது, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பல் துலக்குவது முதலாளியின் நித்திய அனுஷ்டானங்களில் ஒன்று ஆகும். 'தந்த சுத்தி’ எனும் பெயரில் அரை மணிக்கு அதிகமாகவே அவர் போக்கடிப் பதில் வேறு ஒரு லாபமும் உண்டு. நந்தவனத்துக் கிணறு 'நல்ல தண்ணீர்க் கிணறு' என்ற சிறப்புப் பெற்றிருத்தபடியால், அக்கம் பக்கத்துப் பெண்கள் அங்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வருவார்கள். முதலாளியின் கண்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். தோட்ட வேலை பார்க்கும் பெண்களின் கட்டான உடலின் சில பகுதிகளைப் பார்க்கும் பாக்கியமும் கிட்டும். அப்போது அருமையான 'ஸ்ட்ராங் காப்பி' பருகிய உற்சாகமும் தெம்பும் பிறவிப் பெருமாளுக்கு ஏற்படும்.

இன்றும் அவருக்காகக் கண் விருந்து காத்திருந்தது, இருளம்மை உருவிலே.

தோட்டத்தில் வழக்கமாக வேலை செய்பவள் இருளம்மை அவள் புருஷனும் பண்ணையில் உழைப்பவன்தான். அவள் தன் சிறு பெண்ணையும் உடன் இட்டு வந்திருந்தாள். அது அழுததே என்று 'கொய்யாப் பழம்' ஒன்றைப் பறித்து அதனிடம் கொடுத்திருந்தாள். கையில் வைத்துக் கடித்துக்  கொண்டிருந்தது போக, இரண்டு காய்களும் சிறுமியின் முன் கிடந்தன.

இருளம்மையைப் பார்த்து மகிழ்ந்த கண்கள் பறிக்கப் பட்ட பழங்களையும் கண்டன. மகிழ்ச்சியுடன் அல்ல. 'ஏய், இந்தப் பழங்களை யாரு பறிச்சுது?’' என்று உறுமினார் முதலாளி.

"புள்ளே அழுதுது. நான்தான் பறிச்சுக் குடுத்தேன்' என்று பணிவுடன் தெரிவித்தாள் அவள்.

“ஒவ்!' என்று குரைத்தார் அவர். 'உன் மடியிலே என்னது? கனமாத் தெரியுதே? அவரது கழுகுப் பார்வை கண்டுவிட்டதற்குக் கேள்விகள் விளக்கம் தேடின.

"ஒண்னுமில்லே சாமி” என்று இழுத்தாள் அவள்.

"என்ன முழுங்குறே? அதுவும கொய்யாப் பழங்கள் தானா? 'பெரிய ஐயா'வின் தொணியில் அதிகாரச் சூடு ஏறிக்கொண்டிருந்தது. உண்மையைச் சொல்றியா; அல்லது ஆளை விட்டு......”

இருளம்மையின் முகம் வாடிக் கருகியது. அவள் கைகள் நாலைந்து எலுமிச்சம் பழங்களை வெளியே எடுத்து வைத்தன.

திருட்டுக் கழுதை! என்ன இருந்தாலும், எவ்வளவுதாள் கொடுத்தாலும் உங்க திருட்டுப் புத்தி போகவே போகாது. திருட்டுக் கை நீளாமல் நிற்கவும் செய்யாது. கீதாசாரியனின் பேரன் போல் பேசினார் முதலாளி மகன் முதலாளி.

இதுக்காக பத்துநாள் சம்பளத்தைப் புடிச்சு விடுவேன். ஒகோ. இவ்வளவுக்கு ஆயிட்டதா? உங்க வீட்டுத் தோட்டம் மாதிரி இஷ்டம் போலே  எல்லாவற்றையும் பறிக்கிறது என்ன திமிரு பார்றேன். இதை இப்படியே விட்டு விட்டால், ஆட்டைக் கடிச்சுமாட்டைக் கடிச்சு மனுசனையும் கடிக்க ஆரம்பிச்ச கதையாக மாறிவிடுமா, சும்மாவா? என்று பொரிந்து தள்ளினார் அவர்.

உழையாமலே அனுபவிக்கும் உரிமை கொண்டாடுவது பெரிய திருட்டு; பிறர் உழைப்பைச் சுரண்டி, அதன் மூலம் கொடுத்து வாழ்வது கொடிய திருட்டு என்பது அந்த மகா உபதேசியாரின் அறிவில் மின் வெட்டவில்லை.

பிறவிப் பெருமாள் காலைக் கடன்களை முடித்து, நீராடி, ஒரு கப் காப்பியையும் உள்ளே தள்ளி விட்டு, பூஜை அறைக்குள் புகுந்தார். ஒவ்வொரு நாளும் அவரும் அவரைப் போன்ற முதலாளிகளும் செய்கிற மாபெரும் காரியம் மணிக்கணக்கில் பூஜை பண்ணுவது தான். இரண்டு மணி நேரத்துக்குக் குறையாது பூஜை நேரம். பக்தி முற்றி விட்டால் பூஜை மூன்று- மூன்றரை மணி நேரம் வரைகூட வளர்ந்துவிடும். முதலாளி ஐயா கண்ணை மூடிக் கொண்டு கடவுளோடு உறவாடுகிற நேரத்தில், என்ன நேர்ந்தாலும்- 'எந்த ராஜா எந்தப் பட்டணத்தில் புகுந்து கொள்ளையடித்தாலும் - கண் திறந்து பார்க்கமாட்டார்; காது கொடுத்துக் கேட்க மாட்டார்.

இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் நெருக்கடிகளும் விபத்துக்களும் முன்னறிவிப்பும் தடபுடல் விளம்பரமும் செய்து கொண்டா வருகின்றன? இல்லையே?

வண்டிக்காரன் மாணிக்கம் நிதானமாகத்தான் வண்டி ஒட்டிச் சென்றான். மோசமான இடம், பாதை "பெரிய நொடி’, மிரளும் புது மாடுகள், எதிரே வந்த  லாரியின் அலறலும் ஊளையும், ஒரமாக வந்த சைக்கிள்காரனின் வேலைத் தனங்கள் எல்லாமாய் கூடி விபத்துக்குக் களம் அமைத்து விட்டன. வண்டி குடை வண்டி போட்டு விட்டது. மாணிக்கத்தின் வலது தொடை மீது சக்கரம் ஏறியது.

சிலர் ஓடி வந்தார்கள். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னார்கள். மாணிக்கத்தை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கு வண்டியும் பண உதவியும் ஐயாவின் அனுமதியும் வேண்டும், ஆனால் எஜமான் பூஜையில் அல்லவா ஈடுபட்டிருக்கிறார்? ஜீவராசிகளின் துயரங்களை எல்லாம் காண மறுத்துக் கல்லாகிவிட்ட கடவுளோடு உறவாடுவதற்காக, மனித உணர்வுகளுக்குச் சமாதி கட்டிவிட்ட பணக்காரர் கண்களை மூடிக்கொண்டு பக்திப் பாடல்களை முணமுணத்தபடி இருக்கிறாரே; அவர் காதுகளில் மனிதனின் வேதனைக் குரல் படுமா?

விண்ணகத்தின் எதிர்கால ஸீட் ரிசர்வேஷனுக்காக நிகழ் காலத்தின் பெரும்பகுதியை வீணே செலவு செய்வதில் ஈடுபட்டிருந்த முதலாளியின் மனக்கதவும் திறக்க வில்லை.

நஷ்டமும் கஷ்டமும் வண்டிக்காரனுக்குத்தானே? இச்சில்லறை விவகாரங்களைப் பற்றி எல்லாம் பெரிய வீட்டு ஐயா கவலைப்பட முடியுமா என்ன? அவரைப் பொறுத்த வரையில் ஒரு ஆள் போனால் இன்னொரு ஆள்! துட்டை வீசினால் நீ... நான் என்று எத்தனையோ பேரு ஓடி வருவாங்க, பணத்துக்குத்தான் பஞ்சம். ஆள்களுக்குமா பஞ்சம் இந்த உலகத்திலே!

பூஜையை முடித்த பிறகு, இட்டிலி தோசைகளுக்கு அருள் புரிந்து தீர்த்த பின்னர் பிறவிப் பெருமாள் களத்து மேட்டுக்குப் போனார். பொதுவாக அவர்  வயல்- காடு என்று அலைவது கிடையாது. அவற்றை எல்லாம் கவனிக்க கணக்குப் பிள்ளையும் வேறு ஆட்களும் இருந்தார்கள். எனினும் எப்பவாவது எண்ணிக் கொண்டு அவர் வயல்களின் பக்கம் போய் வருவார்.

இன்று அறுவடை தினம். முதலாளி ஜயா தலையைக் காட்டாவிட்டால், வேலை வேகமாக நடை. பெறாது. கதிர்க் கட்டுகளைக் கடத்தினாலும் கடத்தி விடுவார்கள். கூலிக்கு வேலை செய்கிறவர்களுக்கு நன்றி விசுவாசம் ஏது? எப்போடா முதலாளி கண்ணை மூடுவான்; அசந்து மறந்து இருப்பான்; நாம் அகப்பட்டதைச் சுருட்டிப் போகலாம் என்றுதான் காத்திருப்பாங்க இது முதலாளியின் திடமான அப்பிராயம்.

முதலாளி வந்து சேர்ந்த சமயத்தில், வயலிலிருந்து கட்டுகளைக் களத்தில் கொண்டுவந்து போட்டவர்களில் சிலர் சிறிது காலாற உட்கார்ந்து 'வெற்றிலை சுவைப்பதில்' ஈடுபட்டிருந்தார்கள். பிறவிப் பெருமாளுக்கு அது ஆத்திரம் புகுத்தியது

ஏண்டா சோம்பேறிக் கழுதைகளா, ஏன் வீண் பொழுது போக்குறீங்க? இப்படி நேரத்தை ஒட்டி அடைச்சால், வேலை எப்படி நடக்கும்?’' என்று அதட்டினார் அவர். இது மாதிரி வேலை செய்யாமல் எத்துறவங்களுக்கு கூலியைப் புடிச்சால்தான் புத்தி வரும்' என்றும் முனங்கினார்.

உழைப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிற கூலி மிகக் குறைவானதாக இருக்கலாம். இருந்தாலும், அதிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவைத்தாலும், உழைப்பவர்களிடம் அதிகமாக வேலை வாங்கினாலும் முதலாளிக்கு லாபம் தானே? முதலாளியின் நோக்கம் பணம் பண்ணுவது, சிறுசிறு துளிகளாகச் சேர்ந்து பெருவெள்ளமாக்கி விடுவது இயற்கையில்லையா? பிறவிப் பெருமாள் மேற்  பார்வை பார்த்துவிட்டுத் வீடு திரும்பினார். உரிய நேரத்தில், வயிறு புடைக்கத் தின்றார். அருமையான அரிசிச் சாதம், காய்கறி, பருப்பு, நெய், தயிர் எதற்கும் குறை வில்லை. 'உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு': என்கிறார்களே; முதலாளிக்கு இல்லாமல் போகுமா? ஒய்வு பெறுவதற்காகச் சாய்ந்தார் அவர்.

சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்தபடி உழைத்தவர்கள் உரிய நேரத்தில் கஞ்சி குடித்தார்கள். துணைக்கு வெறும் உப்பும், கடித்துக் கொள்ள இரண்டு மிளகாயும் இருந்தன. சிறிது பொழுது நிழலில் இருந்து விட்டு, மீண்டும் உழைக்கலானார்கள்.

அவர்களுடைய உழைப்பின் அளவுபோல் களத்தில் நெல் அம்பாரமாகக் குவிந்தது. எவ்வளவு குவிந்தால் தான் என்ன? முதலாளி வீட்டுக் களஞ்சியம் நிறையுமே தவிர, உழைத்தவர்களின் வயிறா நிரம்பப் போகிறது? அதனால் அவர்களுடைய மனம் மகிழ்வால் நிறையவில்லை.

நெல்லை அளந்து சாக்குகளில் கொட்டும் வேளையில் முதலாளி வந்து சேர்ந்தார். 'கோயில் மான்யம்! 'காவல் சுதந்திரம்' அது - இது என்று சிறிது பங்கு செலவு செய்யப்பட்டது. 'வீட்டிலே சாப்பாட்டுக்கு எதுவும் இல்லை. இரண்டு மூட்டை நெல் கொடுங்க சாமி என்று குடியானவன் ஒருவன் கெஞ்சினான். அழமாட்டாத குறையாகக் கெஞ்சினான். 'உழைத்துக் கழித்து விடுகிறேன், எசமான். ஆபத்துச் சமயத்துக்கு உதவுங்க! என்று கும்பிட்டான்.

ஊகும் முதலாளியின் மனம் இளகிவிடுமா என்ன? 'இந்தப் பயல்களே இப்படித்தான். காலை, கையைப் பிடிப்பானுக. ஐயோ பாவமின்னு இரக்கம் காட்டி விட்டோமோ; அவ்வளவுதான். அப்புறம் நம்ம  தலைமேலே ஏறி உட்காரப் பார்ப்பானுக’ என்று கணக்குப்பிள்ளையிடம் திருவாய் மலர்ந்து அருளினார் அவர்.

பிறவிப் பெருமாளின் கழுகுக் கண்கள் பசிப் பார்வையோடு வட்டமிட்டன; ஒரு இடத்தில் பதிந்து நின்றன. 'ஏய்;, சங்கரலிங்கத்தின் வண்டியை மறிங்கடா உம், சீக்கிரம் ஒடுங்க. இதோ நானும் வர்றேன்’ என்று குரைத்து, சில ஆட்களை விரட்டினார்.

சங்கரலிங்கம் என்கிற சிறு விவசாயி தனது வயலின் கண்டு முதலை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். பல மாதங்களாகப் பாடுபட்டதன் பலனை ஓரளவு பெற்றிருந்தான். மழை இல்லாமல் கெட்டுப் போனது, தேவையில்லாதபோது அநாவசியமாக மழை பெய்து கெடுத்து பூச்சி விழுந்து பாழ்பட்டது. தக்க தருணத்தில் ரசாயன உரம் பிரயோகிக்க முடியாமல் போனது போன்ற பல தொல்லைகளையும் தாண்டி, ஒரு தினுசாக விளைந்து, அறுவடையான தானியத்தை அவன் வீட்டுக்குக் கொண்டு போக வேண்டும். 'பெரிய வீட்டு ஐயா' மாதிரி அறைக்குள் பூட்டி வைத்து, விலை மிகவும் உயர்ந்து வருகிற சமயத்தை எதிர்நோக்கி காத்திருப்பதற்காக அல்ல. சாப்பாட்டுக்கு, விதைக்கு, கடனைத் தீர்க்க, குடும்பச் செலவுக்காக இப்படி எத்தனையோ இனங்களுக்கு அதை ஒதுக்கியாக வேண்டும், மிச்சம் பிடிக்கவோ, சேர்த்து வைக்கவோ அவனுக்கு வசதி ஏது?

ஏ சங்கரலிங்கம்! என்னதான் உன் நினைப்பு! என்று சீறியபடி சூறாவளி போல் பாய்ந்தார் பிறவிப் பெருமாள். என் கடனை நீ எப்பே தீர்க்கப் போகிறே? அடுத்த பூவிலே தீர்த்துவிடுகிறேன், அடுத்த பூவிலே தாறேன்னு சொல்லி இரண்டு வருசமாக ஏமாத்திக்கிட்டு இருக்கிறே.... என்று கர்ஜித்தார்,

சங்கரலிங்கம் கூனிக் குறுகினான், தலையைச் சொறிந்தான், கைளைத் தேய்த்தான். 'காலம்  சரியில்லை ஐயா, எவ்வளவு பாடுபட்டும் பலன் சரியாகக் கிடைக்கலே. ஏமாத்தனும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. குடும்பக் கஷ்டம் என்று இழுத்தான்.

அந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம்! நானும் எவ்வளவோ காலமாகப் பொறுத்துப் பார்த்தாச்சு, இனியும் பொறுக்க முடியாது. இந்த வண்டி நெல்லை நம்ம வீட்டுக்கு அனுப்பிவிடு. இது கூடக் கடனை அடைக்கப் பத்தாது என்றே தோணுது என்று சொன்னாா பெரிய வீட்டுக்காரர்.

ஐயா ஐயா, நீங்க அப்படிச் சொல்லப்படாது. என் பிள்ளைகள் கதி என்னாவது? நாங்க எல்லோரும் சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...?

அடிவயிற்றிலிருந்து பொங்கிய வேதனையோடு, ஏக்கத்தோடு, உணர்ச்சித் துடிப்போடு அவன் அலறினான். கையெடுத்துக் கும்பிட்டான். அவர் காலில் விழுந்து புலம்பினான்.

அருகில் நின்றவர்களில் சிலர் கண்களில் நீர் கசிந்தது. ஆனால், பிறவிப் பெருமாள் கல்சிலை மாதிரி தான் நின்றார். அவர் இதயத்தில் ஈரம் கசியவுமில்லை.

"ஊம். என்ன யோசனை? வண்டியை நம்ம களஞ்சியத்துக்கு ஒட்டு. நெல்லை களஞ்சியத்தில் கொட்டி விட்டு, வெத்துச் சாக்குகளோடு வண்டியை இவன் வீட்டுக்கு அனுப்பு'’ என்று வறண்ட குரலில் உத்தரவிட்டார் பெருமாள்.

இதற்குள் விஷயத்தைக் கேள்வியுற்று, சங்கரலிங்கத்தின் மனைவி பார்வதியும், பிள்ளைகளும் அழுது கொண்டு வந்து சேர்ந்தார்கள். பார்வதி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கோண்டு புலம்பினாள், பிச்சை கேட்பது போல் கெஞ்சினாள்.

 முதலாளி ஐயாவின் உள்ளத்தில் மனிதத் தன்மை இருந்தால்தானே? அவர் பூஜிக்கிற பணத்தின் ஆத்மா தானே அவருடைய ஆன்மாவும்? ஆகவே, அவர் விறைப்பாக வண்டியின் பின்னாலேயே நடந்தார். உழைத்துச் செத்தவர்களின் உரிமை உணர்வற்ற இதயங்களை நசுக்கிச் செல்வது போல் வண்டியின் சக்கரங்கள் கடகடத்து உருண்டன.

“ஏ பழிகாரா! நீ விளங்குவாயா? உன் பெண்டாட்டி பிள்ளைகள் நாசமாய்ப் போக! என்ற வயிற்றெரிச்சலோடு ஏசியபடி, மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அந்த மண் அவள் மீதும், அவள் குழந்தைகள் தலையிலும்தான் விழுந்தது.

அன்றைய நாளைப் பொன்னாளாக மாற்றிவிட்ட பெருமையோடு, மிடுக்கோடு, பணம் தந்த பலத்தோடு' நிமிர்ந்து நடந்தார் பிறவிப் பெருமாள். பிறரைப் பற்றிய கவலை அவருக்கு என்றுமே கிடையாதே!