உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தோழிதான்/ஓர் இரவு

விக்கிமூலம் இலிருந்து


ஓர் இரவு



மைதி நிறைந்தது என்று கருதப்படும் அந்த இடத்தில், அமைதி மிகுந்த நேரம் என நம்பப்படும் இரவிலே, கவிந்து கிடந்த அமைதியினூடாக எவ்வளவே ஒலிகள் குழம்பி அச்சம் தருவதை ராமலிங்கம் உணர்ந்தான்.

உயரமான மலைமுடி அது, அடிவாரத்தில் இருந்து, அதற்கென அமைந்த கரடுமுரடான பாதை வழியே ஐந்து மைல் தூரம் நடந்து வர வேண்டும் அந்த இடத்துக்கு. அங்கே ஒரு கோயில் இருந்தது. சிறு கல் கட்டிடம். மலைநம்பி என்ற பெயர் பெற்ற தெய்வம் யாரால் எந்தக் காலத்தில் அங்கு ஸ்தாபிக்கப்பட்டதோ தெரியாது. ஆனால் அதற்கு தினசரி பூஜை உண்டு. அதற்கென ஒரு பூசாரியும் உண்டு.

பூசாரி நாலைந்து நாட்களுக்கு ஒரு தடவை கீழே போய், மலை அடிவாரக் கிராமத்திலிருந்து தனது சாப்பாட்டுக்கும் தெய்வ பூஜைக்கும் இதர தேவைகளுக்கும் அவசியமான பொருள்களை எடுத்துக் கொண்டு உயரே வருவார். கோவில் அருகிலேயே ஒரு மடம் இருந்தது அதில் அவர் தங்கியிருப்பார் சமையல் எல்லாம் அங்கேதான். குளிப்பதற்கும் குடிப்பதற்கும் வசதியாக மிக அருகிலேயே சிற்றாறு ஒன்று சலசலத்து ஒடிக் கொண்டிருந்தது.

கண்ணாடி மாதிரி தண்ணீர்; அடியில் கிடக்கும் கல் மண் எல்லாம் நன்கு பளிச்சிடும்படி மிகவும் தெளிவான நீர். எப்போதும் பனிக்கட்டி மாதிரிக் குளிர்ந்து கிடக்கும்.  உச்சி வேளையில் கூட அந்தக் காட்டாற்று நீர் ஜில்லென்றுதான் இருக்கும்.

அந்த ஆற்றின் ஒட்டமும், சற்று தள்ளி இன்னொரு பள்ளத்தில் நீர் விழுகிற ஒலியும், அதற்கும் அப்பால் காடுகளினூடே நெளிந்து சென்று அது ஒரு மலைமுடியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அருவியாக இறங்கும் தடதட ஒசையும் பகலில் எப்போதும ஏதோ ஒரு பின்னணி சங்கீதம் போல் கேட்டுக் கொண்டே இருக்கும்,

இப்போது, நள்ளிரவில் இவ்வோசைகள் எல்லாம் கனத்து, தனித்தனி சத்தங்களாகவும், ஒன்றோடொன்று குழம்பியும் ராமலிங்கத்தை அச்சுறுத்தின. இனம் புரிந்த கொள்ள முடியா வண்டுகளின் ரீங்காரமும், இரவுப் பறவைகளின் கூச்சலும் சதா கேட்டுக் கொண்டே இருந்தன. காற்றின் கூப்பாடு வேறு.

தன்னந் தனியாக, மலைநம்பி கோயிலுக்குள், இரும்புக் கம்பிகளாலான கதவின் பின்னே, குறு குறு வென்று உட்கார்ந்திருந்த ராமலிங்கம், உண்மையான பயம் எப்படி இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்குத் துணையாக மலைநம்பி சிலையைத் தவிர, அரிக்கன் லாந்தர் ஒன்றும் இருந்தது. மிகவும் சிறிதாக ஒளி சிந்தும் வகையில் அதன் திரி உள்ளுக்கு இறக்கி வைக்கப்பட்டிருந்தது.

“இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு நாம் ஒப்புக் கொண்டது மடத்தனம்’' என்று ராமலிங்கம் எண்ணலானான் துணிச்சலான காரியம் என்றும், புதுமையான சோதனை என்றும் முதலில் அவன் நினைத்தது அசட்டுத்தனமேயாகும் என்று இப்போது அவனுக்குப் பட்டது.

 நிலைமை இவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று அவன் கற்பனைகூடச் செய்ததில்லை. இந்த விதமாக இருக்கும் என்று உண்மையில் ஒரு சிறு துணுக்குத் தெரிந்திருந்தால் கூட, அவன் விபரீதமான இந்த விளையாட்டுக்கு, வேடிக்கை பேச்சாக ஆரம்பித்து வினையாக மாறிவிட்ட பந்தயத்துக்கு இணங்கியிருக்கவே மாட்டான். அறியாத்தனமாக மாட்டிக் கொண்டாயிற்று. இனி என்ன செய்வது? இரவு பூராவும் அந்த இடத்தில் இருக்க வேண்டியதுதான். வேறு வழி கிடையாது.

விளையாட்டாக ஆரம்பித்த விவகாரம்தான் அது. ராமலிங்கமும், அவனைப் போன்று கவலையில்லாத வாலிப முறுக்கேறிய. இள வட்டங்கள் சிலரும் மலை அடிவாரக் கிராமத்துக்கு வந்தார்கள். மலைமீது உல்லாசமாக ஏறினார்கள். கரடு முரடான பாதையும், ஒருபுறம் அதலபாதாளமாய் காட்சி அளித்த மலைப்பள்ளங்களும், மறுபுறம் நெடிதுயர்ந்த கற்சுவர் என ஓங்கி நின்ற பகுதிகளும், மரங்களும், இனிய ஒலி எழுப்பியவாறே ஓடும் தண்ணீர்ச் சங்கிலிகளும் மொத்தமான இயற்கையின் ஆரவாரமற்ற கம்பீரமான எழிற் கொலுவே. அவர்களுக்கு மிகுந்த உற்சாகம் தந்தன.

சுற்றி நெளிந்து வளைந்து சென்ற பாதை வழியாக மேலே மேலே ஏறிச் செல்வது சிரமமாக இருந்தாலும் கூட, அருமையான வேடிக்கையாகவே அமைந்தது. மலை உச்சியில் நம்பிகோயிலும், ஆறும், இயற்கை வனப்பும் அவர்களுக்கு உளக் கிளர்ச்சி தந்தன.

நாகரீக உலகத்தின் அர்த்தமற்ற அவசர வேகமும் ஆழமற்ற பரபரப்பும் இல்லாத சூழ்நிலை அவர்களுக்கு இனியதாய், அற்புதமாய், சுகம்தருகிற நயமாய்த் தோன்றியது. எப்போதும் இங்கேயே இருந்துவிட முடியுமானால்... இப்படி ஒரு நினைப்பு சிலரது உள்ளத்தில் சலனமிட்டது.

 ராமலிங்கம் அந்த ஆசையை வாய்விட்டுச் சொன்னான்,

அந்தவிதமாக, தன்னந்தனியே, பகலையும் இரவையும் நாலைந்து நாட்கள் ஒட்டிவிட்டு, பிறகு கீழிறங்கி ஊருக்குள் வருகிற பூசாரி இந்தச் சூழ்நிலை வாழ்க்கையைப் பெரிதுபடுத்தவில்லையே! வயிறு என்ற ஒன்று மனிதனுக்கு இருப்பதாலும். அதன் தொல்லையைச் சகித்துக் கொள்ள முடியாமல் அதனுடைய தீய்க்கு அடிக்கடி ஏதாவது கொட்டிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் நீடிப்பதனாலும், ஏதேனும் ஒரு தொழிலைப் பிழைக்கும் வழியாகக் கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலினால் பூசைப் பணியை மேற்கொண்டிருந்த நபர் அந்தப் பூசாரி. அந்த ஆள் இயற்கையின் சன்னதியிலே மனம் லயித்து, இன்பமாக ஆனந்த அனுபவம் பெற முடியாதது தான்! இவ்வாறு ராமலிங்கம் சொன்னான்.

மலைமீது, காட்டு வெளியில் தன்னந் தனியாக, இரவு நேரத்தைக் கழிப்பதற்கு மிகுந்த துணிச்சலும் பொறுமையும் தைரியமும் வேண்டும் என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். அப்படி ஒரு இரவைக் கழிப்பது கூட விசேஷமான அனுபவமாக அமையுமே! இவ்விதம் வளர்ந்த பேச்சு, பந்தயத்தில் வந்து நின்றது.

சவாலை ஏற்றுக் கொண்டு செயல் புரிய யாரும் தயாராக இல்லை. முடிவில், ராமலிங்கம் இதற்கு இசைந்தான். பூசாரி இல்லாமல் தங்கியிருக்க ஒப்புக் கொண்டான். அன்று அந்த நாளாக வந்து வாய்த்தது.

இரவு நெருங்குவதற்கு முன்னரே, பூசாரியும் மற்றவர்களோடு சேர்ந்து கீழே இறங்கிவிட்டார். சில தினங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் பூசைச் சாமான்களையும் மலை அடிவாரத்தின் சிற்றூரில்  சேகரம் செய்து கொண்டு, மறுநாள் பகல் பன்னிரண்டு மணி சுமாருக்குத்தான் அவர் மீண்டும் வந்து சேருவார். நண்பர்கள் ராமலிங்கத்துக்காக சிற்றூரில் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்.

கடைசி நேரத்தில் கூட, வேண்டாம் பிரதர்! ஏன் இந்தப் பயங்கரமான சோதனை? ஒன்றில்லாவிட்டால் ஒன்று விபரீதமாக நேர்ந்துவிட்டால், என்ன செய்ய முடியும்? நீயும் எங்களோடு வந்து விடு என்று சிலர் சோன்னார்கள்.

அவர்களோடு போனோமில்லையே!” என்று, இரவில், தனியாக, கோயிலினுள் உட்கார்ந்த ராமலிங்கம் எண்ணினான். ஆனால் சாயங்கால வேளையில், அவன் முரட்டுப் பிடிவாதமாக, இதில் என்ன விபரீதம் வந்து விடப் போகிறது. பூசாரி தினசரி இந்த இடத்தில் இருக்கவில்லையா? நான் ஒர் இரவு தங்கியிருந்தால், செத்தா போவேன்! என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.

தின்ற கொழுப்பும் தீபாவளி மப்பும்’' என்பார்களே, அது மாதிரியான கொழுப்பும் அறிவு மந்தமும், அகம்பாவமும்தான் என்னை அப்படிப் பேசத் தூண்டியிருக்கும் என்று ராமலிங்கம் நினைத்தான். இப்போது மணி என்ன இருக்குமோ தெரியவில்லை. விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ? என்று அவன் மனம் குறுகுறுத்தது.

கைக் கடிகாரம் அவசியமான தேவைகளுள் ஒன்று என அவன் எண்ணியதில்லை. பலரைப் போல தாமும் கட்டிக் கொள்வதுதான் நாகரிகமாக இருக்கும் என்று அவன் ஆசைப்பட்டதுமில்லை. ஆனால், இப்போது நேரம் அசையாது கனத்த சுமை போல் தலைக்கு மேல் அழுத்துவது போன்ற உணர்வு வளர்கையில், தனியாக இருட்டினுள் இருக்கையில், 'சே, நேரமே போக மாட்டேன் என்கிறதே! என்ற எண்ணம் கம்பளிப் பூச்சியாய் அரிக்கையில், நாமும் ஒரு வாட்ச் வாங்கினோமில்லையே! இந்தச் சமயத்தில் ஒரு கடியாரம் இருந்தால் எவ்வளவு செளகரியமாக இருக்கும்! என்று நினைப்பு மீண்டும் மீண்டும் அவனுள் குமிழியிட்டது.

அது முன்னிலவுக் காலம். அகத்திப் பூ' போலவும், உருவமற்ற ஒரு முகத்தின் பெரும் சிரிப்பு போலவும், வானவெளியிலே தொங்கிக் கிடந்த அம்புலி மறைந்து விட்டது. நிலவொளியில் மலை முடிகளும் மரங்களும் மேடு பள்ளங்களும் ஒருவாறு பார்வைக்குப் புலனாகிக் கொண்டிருந்தன.


மேற்குத் தொடர்ச்சி மலை என்ற நீண்ட பெரிய மலைப்பகுதியின் தெற்கு கடைசிப் பகுதியில், ஒரு புறத்தில் அமைந்திருந்தது மலைநம்பி கோயில், பெருமலைத் தொடரின் வளமும் மிடுக்கும் கம்பீரியமும் குறைந்து குறுகி நின்ற பகுதி அது. ஆயினும் அது கூட பெரியதாய், வியப்பு எழுப்புவதாய், அச்சம் தரக் கூடியதாய், உயர்ந்த முடிகளையும் கிடுகிடு பள்ளங்களையும் பூதாகாரத் தோற்றங்களையும் இருண்ட காடுகளையும் பெற்றிருந்தது. மலையருவி சதா தடதடத்தும் காட்டாறு ஓயாமல் சலசலத்தும் இயற்கைமய ஓசை பாடிக் கொண்டிருந்தது.

நிலவு மறைந்த பிறரு எல்லாம் இருள் மொத்தையாய் கண்ணை உறுத்தின. வான் மண்டலம் எல்லையிலாப் பூக்காடு போல் நட்சத்திரங்களாய் ஒளி பெற்று விளங்கியது. மலை முடியின் சில சில புதர்கள், நட்சத்திரங்கள் போல் மினுக்கிய மின்மினிகளை அடுக்கடுக்காகச் சுமந்து, தனிச் சிறப்புடன் திகழ்ந்தன.

இரவு அமைதி நிறைந்தது இல்லை. இரவு நேரத்து மலைமுடியும் பூரணமாக அமைதி பெற்றிருக்கவில்லை. எத்தனையோ சத்தங்கள்! இனம் புரியாத பூச்சி வகைகள் எழுப்புகிற ரகம் ரகமான ஒலிகள் எவ்வளவு என்று ராமலிங்கம் எண்ணினான்.

அந் நேரத்தில் கூட மெய்சிலிர்க்க வைக்கும்படியான கோர ஒலி ஒன்று காற்றில் மிதந்து வந்தது. மரங்களின் இலைப் பாதுகாப்பினுள் பதுங்கியிருந்த பறவைகள் பயந்து கதறின. குரங்குகள் கூச்சலிட்டன. இருட்டின் ஆழத்திலிருந்து பல் ரகம்மான அலறல்கள் சிதறி வெடித்துப் பரவுவது போல் ஒலிக் குழப்பம் காற்றில் மிதந்து வந்தது.

காற்றும் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.

வெளவால்கள் சிறகடித்து 'விஷ் விஷ்' என ஒசையிட்டவாறு மலைநம்பி கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.

குளிரும் கொசுக்கடியும் அவனைப் பாதித்தன. நேரம் நகர்ந்தபோதிலும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

மலையின் வேறொரு பகுதியில், காற்றினால் மோதி உராய்ந்துகொண்டிருந்த மூங்கில் மரங்களில் நெருப்பு பற்றிக் கொண்டிருக்க வேண்டும். காற்று அதை மேலும் விசிறி, பெருந்தீயாக வளர்த்துக் கொண்டிருக்கும். அதனால் எழுந்த ஜுவாலை உயர்ந்த மரங்களின் மீது வெளிச்சம் பூசியது. அதை ராமலிங்கம் உணர முடிந்தது. அவன் அடிக்கடி மலைத்தீ பற்றிக் கேள்விப் பட்டதுண்டு.

'இதனால்தான் பறவைகளும் மிருகங்களும் வெறி பிடித்தவை போல் கத்துகின்றன போலும்!’ என்று அவன் எண்ணினான்.

ராமலிங்கம் கண்களை மூடியவாறு உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் கதவுக் கம்பிகளை அழுத்தமாகப் பற்றியிருந்தன. அவன் மனம் வீணான எண்ணங்களில் சஞ்சரித்தது.

"முன்பு, ஜம்புலிங்கம் இந்த மலைக் காடுகளில் வசித்து வந்தான்; எப்பவாவது கீழே போய் ஊர்களில் கொள்ளை அடித்துவிட்டு, மறுபடியும் இங்கே வந்து விடுவான். மேற்கு மலைக்காடுகள் அவனுக்கு வீடு மாதிரி!" என்று சிலர் சொல்லக் கேள்வியுற்றிருந்தான். ஒரு வைத்தியர் மூலிகைகளைத் தேடி மலைமீது அலைவார். கரடி, கடுவாய் போன்ற மிருகங்களை அவர் கண்டிருக்கிறார்; பெரிய பாம்புகளையும் பார்த்திருக்கிறார். அவர் மூலம் அவன் கதை கதையாய்க் கேட்பதுண்டு.

அவர்கள் எல்லாம் பயம் கொள்ளாமல் எப்படித் தான் பொழுது போக்கினார்களோ? இதை நினைக்கவும் அவனுக்கு அவனது பலவீனத்தின்மீது அவன் மீதோ வெறுப்பும் வருத்தமும் ஏற்பட்டது. இப்படியா பயந்து நடுங்கிக் கொண்டிருப்பான் மனுஷன்? இவ்வளவுக்கும் நான் வெட்ட வெளியில் இருக்கவில்லையே. பாதுகாப்பான ஒரு கட்டிடத்துக்குள்தானே இருக்கிறேன்!” என்று நினைக்கவும் அவனுக்கு அவனுடைய தோழைத்தனம் பற்றி வெட்கமும் தன்மீது ஒரு பரிதாப உணர்வும் எழுந்தன.

"கட்டிடம் என்றால்தான் என்ன? பெரிய பாம்பு ஒன்று இங்கே வந்துவிட்டால், நான் என்ன செய்ய முடியும்?" இந்த எண்ணம் எழவும் அவன் உடல் சிலிர்த்தது. அவன் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தான்.

அப்போது மெய்யாகவே அவனை நடுங்க வைக்கும் ஒரு காட்சி பார்வையைக் கவர்ந்தது.

ஒரு பாதைமீதிருந்த நெருப்புப் பந்து ஒன்று ஒரு பள்ளத்தில் பாய்ந்தது. அங்கே குதித்தவாறு, ஓடி வந்தது. அது என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியாதவனாய் அவன் கொள்ளிவாய்ப் பிசாசு என்பது இதுவாகத்தான் இருக்குமோ?" என்று திகைத்தான் அதையே நோக்கியவாறு இருந்தான்.

நெருப்புப் பந்து சிறிது நேரம் பார்வையில் படாதிருந்து, பிறகு அவன் இருந்த கோயிலின் பக்கமாகவே ஒடி வந்தது. நெருப்புத் தூண்போல் பட்டது. காற்றினாலும் ஓடி வரும் வேகத்தாலும் தீ திகுதிகுவென எரிந்தது அது என்ன?

இராமலிங்கத்தின் உள்ளம் பதைபதைப்புற்றது. பயம் அவனைக் கல்வி உலுக்கி உதறியது.

அவனது பீதியை அதிகரிக்கும் விதத்திலே, நகர்ந்து வந்த தீக்கோளத்திலிருந்து அமானுஷ்யமான, மிகவும் கோரமான, வேதனை மிகுந்த கதறல் தொடர்ந்து கொண்டிருந்தது. துயரத்தினால் அலறும் சத்தம்போலும், சகிக்கமுடியாத வேதனை தூண்டிவிட்ட மிருக அலறல் போலும், தெளிவற்ற ஊமைக் குரலாக எழுத்த அக்கூப்பாடு மலைமீது படிந்து தொங்கிய அமைதியைக் குத்திக் குதறிக் கோரமாய் நீண்டு எதிரொலி கிளப்பியது அந்தக் கூச்சலும் பயங்கரமான தீப் பிழம்பும் கோவிலை நோக்கியே வந்தன.

ராமலிங்கத்தின் உடல் வெடவெடத்தது. அவன் பயந்து நடுங்கினான். அவனுடைய அச்சம் தெளிவற்ற ஓலமாய் பீறிட்டது.அவன் கத்தியவாறு கண்களை மூட நெருப்புப் பந்தம் என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும் என்று உந்துதலினால் அடிக்கடி கண்கள் திறந்து விழித்தன.

அப்போது, அந்தத் தீயின் மத்தியிலே ஒரு முகம் தோன்றியது. மிருக முகம் போல் தெரிந்தது. அதன் கண்களில் வேதனையும் துயரமும் கலந்திருப்பதாகத் தோன்றிற்று.

பயம், எலியைப் பூனை உலுக்குவது போல அவனை உதறிக் குதறியது. அவன் செயல் திறமற்ற சிறு குழந்தை போல் கத்தினான். அவன் முகம் விகாரமாயிற்று. அவன் கைகளும் கால்களும், வலிப்பு நோய் கண்டவை போல இழுப்புண்டன. அவன் அச்சம் நிரம்பிய ஓலத்தைப் பரப்பியவாறே தரையில் புரண்டான்.

தீயில் எரிந்து கருகிக் கொண்டிருந்து மிருகமும் பயங்கரமாகக் கத்தியது.

ராமலிங்கம் சுய உணர்வு இழந்து விட்டான்.

விடிந்து சில மணி நேரம் சென்ற கிறகு பூசாரியும், இன்னும் இரண்டு பேரும் சேர்ந்தார்கள். அவர்களுக்காக அங்கே காத்துக் கிடந்தவை.

கோயிலினுள் கட்டையாய்க் கிடந்த ராமலிங்கமும், வெளியே தீயில் கருகிக் கிடந்த ஒரு மிருகத்தின் எலும்புக்கூடும்தான்.

மிருகத்தின் எலும்புக்கூட்டை நன்கு கவனித்த கிராமவாசிகள், "ஒரு கரடி எப்படியோ மூங்கில் காட்டுத் தீயில் அகப்ப்ட்டு எரிந்து, இங்கே ஓடிவந்து கருகிச் செத்துக் கிடக்கிறது. ஐயோ பாவம் !" என்று முடிவு கட்டினார்கள்.

மலைநம்பி சிலையருகே உண்ர்வற்று உயிரற்றுக் கிடந்த ராமலிங்கத்தைப் பார்த்துப் பெருச்சிசெறிந்தார் பூசாரி. 'பாவம் பயத்துக்கு பலியாகி விட்டான்' என்று தெரிவித்தார்.

{{right|*தினமணிக்கதிர்- 0.7.66

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்ல_தோழிதான்/ஓர்_இரவு&oldid=1382538" இலிருந்து மீள்விக்கப்பட்டது