நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள்
இப் பெண்மணி சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள், பெரியவர்களானவுடன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். பன்முறை கிட்டப்பா அவர்களுடன் கதா நாயகியாக நடித்து பெரும்பெயர் பெற்றார்கள். நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர்கள். ஆயினும் இவருடைய பெயர் தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்க வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமே யாம், அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு ஒரு மாதிரியாய் இருக்கும். இவரது பாட்டில் அப்படியில்லை. பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாயிருக்கும். இது ஒரு அரிய குணம். காலஞ் சென்ற கிட்டப்பா அவர்கள் ஆடவர்களுள் சங்கீதத்தில் எப்படி பெயர் பெற்றரோ அப்படியே பெண்டிருக்குள் இவர்கள் பெயர் பெற்றனர். இவர்கள் எப்போதும் ஸ்திரீ வேடம் தான் தரிப்பது வழக்கம். ஒரு முறை வடக்கிலிருந்து வந்த பேசும்படம் பிடிக்கும் முதலாளியின் வேண்டுகோளிற் கிணங்கி நந்தனாராக—ஆண் வேடம் தரிக்க இசைந்தார்கள். அப்படம் சரியாக சோபிக்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு பெண்மணி ஆண் வேடம் தரித்து கழனிகளில் வேலை செய்யும் ஆதி திராவிடன் வேடம் தரிப்பது மிகவும் அசாத்தியமான காரியம். இதற்கு மேல் நான் சொல்வதற்கில்லை இவர்களும் இனி ஆண் வேடம் தரிப்பது இல்லை என்று தீர்மானித்தார்கள் என்று நினைக்கிறேன். நந்தனாருக்குப் பின் மணிமேகலை என்னும் பேசும் படத்தில் கதா நாயகியாக நடித்தார்கள். இது யாது காரணத்தாலோ முதலில் காட்டிய போது ஜனங்களுக்குத் திருப்தியாயில்லை. அதன் பேரில் அந்த படம் எடுத்தவர் ஹிந்து பத்திரிகை ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற எனது நண்பர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் போய் கேட்க, அவர் பிலிம் முதலாளியை என்னிடம் அனுப்பினார். அதன் பேரில் அம்முதலாளி அந்த படத்தை சீர்திருத்தி நன்றாக செய்து கொடுக்க வேண்டுமென்று என்னை கேட்க, நான் அதற்கிசைந்து கோயமுத்தூருக்குப் போய் பல விஷயங்களில் அதை மாற்றி என்னால் இயன்ற அளவு திருத்திக் கொடுத்தேன். அதன் பேரில் அப்படம் நன்றாய் ஓடியது என்று அறிந்தேன். அச்சமயம் ஏறக்குறைய மூன்று மாதம் இவர்களுடன் பழகலானேன். அப்போது அவர்களுடைய ஓர் சிறந்த நற்குணத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அதாவது சுந்தராம்பாள் கிட்டப்பாவுடன் பன்முறை கதா நாயகியாக நடித்ததைக் கருதி மேற்படி கிட்டப்பா அகாலமரண மடைந்த உடனே இவர்கள் அதுமுதல் கைம்பெண் வேடத்தை எப்பொழுதும் தரித்ததாகும். பேசும் படங்களில் நடிக்கும் காலம் தவிர மற்ற காலங்களில் எல்லாம் வெள்ளை உடையே (வெண் பட்டாடையே) தரித்து ஆபரணங்கள் ஒன்றும் போடாமல் வாழ்ந்து வந்தனர். இப்போதும் அப்படியே இருக்கின்றனர். இது மிகவும் மெச்சத் தக்க குணமாம். 1957-வது ஆண்டில் சுதந்திர போராட்ட நூற்றாண்டு விழாவில் நாடகத் தமிழுக்காக எனக்கும் ஓர் சிறந்த பொற் பதக்கமும் வெள்ளி வேலைப் பாடமைந்த தட்டையும் சென்னை ராஜாஜி ஹாலில் கூட்டிய ஓர் பெரும் கூட்டத்தில் அளித்த போது இசைத் தமிழில் பெருமை பெற்றதற்காக ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாளுக்கும் அதே மாதிரி பொற் பதக்கமும், வெள்ளித் தட்டையும் அளித்தனர். இவர்கள் இன்னும் ஜீவந்தராய் இருப்பது இசை அபிமானி களுடைய பெரும் பாக்கியமாம். இவர்கள் இவ்வருடம் தேசீய பாதுகாப்பு நிதிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடை கொடுத்ததை நான் சந்தோஷமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இவர்கள் தற்காலம் வசிக்கும் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் ஊரிலிருக்கும் சிவபெருமானது அருளால் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாடகக்கலையை இன்னும் முன்னேறச் செய்வார்களாக!