நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/கண்மாய் உடைப்பு
80. கண்மாய் உடைப்பு
கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளைக்குத் திக்கென்றது. நாலைந்து விநாடிகள் ஒன்றுமே தோன்றாமல், பிரமை பிடித்துப் போய், சிலை போல் நின்று விட்டார் அவர்.
ஆறு மைல் சுற்றளவுள்ள பெரிய கண்மாய் உடைந்து, பிரவாகம் ஊரை நோக்கி வருகிறது என்றால், அந்தச் செய்தி யாரைத்தான் திடுக்கிடச் செய்யாது?
ஊரெல்லாம் ஒரே கலவரமாகி விட்டது. கூச்சலும் கூப்பாடுமாக, மண் வெட்டியை எடுத்துக் கொண்டு ஓடுவோர் ஒரு பக்கம்; அணையிட்டு அடைப்பதற்காக வைக்கோற் பரணைகளையும், மணல் அடைத்த சாக்கு மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு ஓடுவோர் ஒரு பக்கம். போர் வந்தவுடன் உண்டாகிற படைகளின் எழுச்சி போல, வற்றாயிருப்பு ஊர் முழுவதிலும் கண்மாய் உடைப்பு பெரிய குழப்பத்தை உண்டாக்கி விட்டது.
ஊருக்கு மேற்கே மலைச் சரிவில் கண்மாய். அது நீர் நிரம்பி அலை மோதிக் கொண்டிருக்கிற கடல் போல இருந்தது. கண்மாய்க்கு முன்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கதிர் வாங்கும் பருவத்தில் இருந்தன நெற் பயிர்கள். இந்தப் புறம் ஊர்.
இப்படிப்பட்ட ஒரு நிலையில், நட்ட நடுவில் மடையிருந்த இடத்திற்கு அருகில் கரை உடைத்துக் கொண்டது என்றால், அந்தப் பயங்கரத்தை என்னென்பது! பரமசிவம் பிள்ளை தலையாரியையும், வெட்டியானையும் அழைத்துக் கொண்டு கரைக்கு ஓடினார். போகும் போதே ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்கு ஆள் அனுப்பினார். கலெக்டருக்குத் தந்தி பறந்தது.
பயமும், பரபரப்பும், குழப்பமுமாக ஊர் அல்லோலகல்லோலப்பட்டதே ஒழிய, ‘எப்படி கண்மாய் உடைந்தது? ஏன் உடைந்தது?’ என்பதை யாருமே சொல்லவில்லை. அது யாருக்கும் தெரியவுமில்லை.
ஊராருக்குக் கவலை ஒரு விதத்தில் இல்லை; பல விதத்தில் கவலை! சமுத்திரம் போலத் தேங்கி நிற்கிற தண்ணீர் உடைத்துக் கொண்டால், அதற்கு முன்புறமிருக்கிற விளைநிலங்கள் பயிர்களோடு அழிந்து போகுமே என்ற கவலை, தண்ணீர் முழுவதும் உடைத்துக் கொண்டு போய்விட்டால் அந்த வருஷ மகசூலே இல்லாது போய் விடுமே என்ற ஏக்கம்; உடைத்துக் கொண்டு வருகிற தண்ணீர் ஊருக்குள் புகுந்து, வீடு வாசல்களை அழிக்காமல் விட வேண்டுமே என்று மற்றோர் பெரிய பயம்! இப்படியாக ஊர் மக்கள் எல்லோருமே கவலையில் ஆழ்ந்திருந்தார்கள். சிறுவர் சிறுமியர்களுக்கும், விடலைப் பிள்ளைகளுக்கும் இதையெல்லாம்விட பெரிய கவலை ஒன்று ஏற்பட்டிருந்தது; ‘என்றும் காண முடியாத பெரிய வெள்ளம் கண்மாய் உடைத்துக் கொண்டு வருகிறது. ‘அந்த வெள்ளத்தைப் பார்க்கப் போகக்கூடாது’ - என்று தாய் தந்தையர்கள் தங்களை வீட்டில் அடைத்து வைக்கிறார்களே!’ என்பதுதான், இளம் உள்ளங்களின் அந்தக் கவலை!
குழந்தைகளை அடக்கிவிட்ட பெரியவர்கள், தங்கள் ஆசையை மட்டும் அடக்க முடியவில்லை! வீடுகளின்மேல் மச்சுகளில் ஏறி மேற்கே பார்த்தனர்.
என்ன கோரம்? பார்க்கச் சகிக்கவில்லை. மேற்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒரே நீர்ப்பிரவாகம். பச்சைப் பசேலென்று நெற்பயிர்கள் தென்பட்ட இடமெல்லாம், காவி நிறச் செந்நீர் மூடி முக்குளித்துப் போகச் செய்திருந்தது.
செந்நிற மலைப்பாம்பு ஒன்று தென் வடவாகக் கிடப்பதுபோலத்தான் அந்த நீளமான கண்மாய்க் கரையின் நடுவே பயங்கரமான உடைப்பும் அப்போது தென்பட்டது.
மனிதன் கட்டிவைத்த மண் சுவரான கரையை உடைத்துக் கொண்டு, இயற்கை கட்டு மீறும், பிரமிக்கத்தக்க அழகைக் கண்டு வியந்து கொண்டிருந்தார்கள் பெரியவர்கள்.
கண்மாயின் வடபுறத்துக் கரையில் திருவிழாக் கூட்டம். “போடு! எங்கே மணல் மூட்டை?” “கரடு வெட்டிக் கொண்டு வா.” “கொண்டா, வைக்கோற் பரணையை!” “அடே தள்ளி நில்லு! விழுந்தால் செத்துப் போவே!” இப்படியாக ஒரே கூக்குரல்.
‘ஹோ’வென்று உடைத்துக் கொண்டு, ஓடும் தண்ணீரின் இரைச்சலையும் மீறிக்கொண்டு, அங்கே கூடியிருந்தவர்களின் இரைச்சல் கேட்டது.
கரையின் தெற்கு முனைக்குப் போவதற்கு வழியில்லாமல் வெள்ளம் சூழ்ந்து விட்டதால், வடபுறத்துக் கரையில்தான் ஊரார் அடைக்க முயன்று கொண்டிருந்தனர். வடபக்கம் மலைச் சரிவைச் சேர்ந்த மேடாக இருந்ததனால் போகவரப் பாதை இருந்தது.
உடைப்பின் வடக்கு முனையில் நிகழ்ந்துகொண்டிருந்த அடைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோர், தென்முனையில், ஒரு வியக்கத்தக்க காட்சியைக் கண்டனர்.
பன்னிரண்டு பதின்மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு குடியானப் பெண் கையில் தொரட்டுக் கம்புடனும் மேய்ப்பதற்காகக் கொணர்ந்திருந்த் ஏழெட்டு ஆடுகளுடனும் தன்னந்தனியே உடைப்பின் தெற்கு முனையில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்.
‘அவள் என்ன கூச்சலிடுகிறாள்? ஏன் கூச்சலிடுகிறாள்?’ என்பதே வடக்கு முனையில் நின்று கொண்டிருந்தவர்களின் செவிகளில் கேட்கவில்லை. வெள்ளத்திற்கு அப்பால் மறுகரையில் தனியே அகப்பட்டுக் கொண்டதனால், பயந்து போய்க் கூச்சலிடுகிறாள் என்றே எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.
மணல் மூட்டைகளும், வைக்கோற் பரணைகளும், கூடை கூடையாகக் கரடுகளும் உடைப்பில் விழுந்தன. உடைப்பு அடைப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசைதான் இவ்வளவும். ஆனால் அடைக்கக் கூடிய அளவை மீறிவிட்ட வெள்ளம், மணல் மூட்டைகளையும், வைக்கோற் பரணைகளையும் தன்னுடைய சமாளிக்க முடியாத வேகத்தில், இழுத்துக் கொண்டு போயிற்றே தவிர தடைப்பட்டு நிற்பதாகத் தோன்றவில்லை.
பரமசிவம் பிள்ளை உதட்டைப் பிதுக்கினார். “அடைப்பதை நிறுத்துங்கள். வேகமாக ஓடிப்போய், வடக்கு மூலையிலுள்ள வடிகால்களைத் திறந்துவிடுங்கள். தண்ணீர் இரண்டு பக்கமாகக் கழிந்து போனால் ஊருக்கும் வீடு வாசல்களுக்குமாவது சேதம் ஏற்படாமல் காப்பாற்றலாம்.”
பிள்ளையின் யோசனை மற்றவர்களுக்கும் சரியென்றே பட்டது. உடைப்பை எந்த வகையிலும் இனிமேல் அடைக்க முடியாது என்று தோன்றியதால், அந்த முயற்சியை யாவரும் கைவிட்டனர். முழுத்தண்ணீரும் உடைப்பு வழியாகவே வெளியேறுமானால், வயல் வரப்புக்கள் மட்டுமில்லாமல், கீழே பள்ளத்தாக்கிலுள்ள ஊரும் மூழ்கிவிட வேண்டியதுதான். ஊருக்கு அந்தக் கதி நேராமல் காப்பதற்குத்தான் கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளை வடக்கு மூலையிலுள்ள கலுங்கலின் வடிகால்களைத் திறந்துவிடும்படி சொன்னார்.
கரையில் உடைத்துக் கொண்ட இடத்தைவிட வடிகால் இருந்த இடம் தாழ்ந்த மட்டமாகையினால், வடிகாலைத் திறந்துவிட்டால் உடைப்பில் வெள்ளம் குறைந்து மட்டுப்பட்டு உடைப்பை அடைக்க வசதியாக இருக்கும்.
பரமசிவம் பிள்ளை கூறியதைக் கேட்டவுடன் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அத்தனைபேரும், வடக்கு மூலையிலிருந்த கலுங்கலை நோக்கி ஓடினர்.
ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தலையாரி, வெட்டியான் இவர்கள் புடைசூழக் கிராம முன்சீப் பிள்ளை மட்டும் உடைப்பின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
எதிரே தென் கரையிலிருந்து முன்போலவே கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
மணியம் பரமசிவம் பிள்ளையின் மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவர் ரெவின்யூ இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கூறினார். “இன்ஸ்பெக்டர் சார்! உடைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை யாருமே பார்க்கவில்லை.அதோ எதிர்க்கரையில் தன்னந்தனியே நின்று கொண்டு, கூப்பாடு போடும் அந்த ஆட்டுக்காரப்பெண் பிள்ளையைப் பாருங்கள். உடைப்பு ஆரம்பமான போதே அவள் தென்கரையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். பயந்து போய் அங்கேயே நின்றுவிட்டாள். உடைப்பின் காரணம் அவளுக்குத் தெரிந்திருக்கலாம்!”
“அவள் ஏதோ கூப்பாடு போடுகிறாளே? அது உங்கள் காதில் விழுகிறதா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“எப்படிங்க விழமுடியும்? தண்ணி பாயிற சத்தந்தான் காதைத் தொளைக்குதே!”
வெட்டியான் அவருக்கு முன்சீப்பின் சார்பாகச் சமாதானம் கூறினான்.
“அந்தப் பெண் யார் மகள்? உனக்குத் தெரிகிறதாடா?”
“வீரையாக் கோனான் மகள், தங்கம் மாதிரி அசப்பிலே தெரியுதுங்க”
“போன மாதம் கல்யாணங் கட்டிக் கொடுத்தானே அந்தப் பொண்ணாடா?”
“அது மாதிரிதான் தோணுதுங்க, எசமான்!”
“ஏன் இப்படி வாய் கிழியக் கத்துது? பாவம் வெள்ளம் வடிந்தால் தானாக இக்கரைக்கு வந்திட்டுப்போவுது?. அது என்ன கூப்பாடு போடுகிறதென்றே காதில் விழவில்லையேடா?”
“மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த ஆடுகளில் ஏதாவது வெள்ளத்தில் விழுந்துவிட்டதோ என்னவோ?”
“அட! ஏதோ உசிரைப் பறிகொடுத்திட்டாப்பிலே இல்லே கத்தித்தொலைக்குது!”
“என்ன வேண்டுமானாலும் கத்தட்டும்! விடு... இப்போது யார் அங்கே போவது? வெள்ளம் வடிகிறவரை எதுவும் செய்ய முடியாது. வாருங்கள், நாமும் கலுங்கல் பக்கமாகப் போகலாம்.”
கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளை வடக்குப் பக்கமாக நடந்தார். ரெவின்யூ இன்ஸ்பெக்டரும் பின்பற்றினார். தலையாரியும் வெட்டியானும் கூட நடந்தார்கள்.
கலுங்கலில் இருந்த நாற்பத்திரண்டு வடிகால்களையும் திறந்துவிட்டார்கள்.
இரவு எட்டு எட்டரை மணி சுமாருக்கு உடைப்பில் தண்ணீர் குறைந்து, ஆள் இறங்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. காலை பத்துப் பத்தரை மணி சுமாருக்கு ஏற்பட்ட உடைப்பின் வேகம் தணிய அவ்வளவு நேரமாயிற்று. ஊர்ச் சாவடியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டரும் கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளையும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கண்மாய் உடைப்பைப் பற்றி ஜில்லா கலெக்டருக்கு அனுப்பவேண்டிய ‘ரிப்போர்ட்’ விஷயமாக அவர்களுக்குள் பேச்சு நடந்துகொண்டிருந்தது.
உடைப்பின் காரணமாக, எதைக் குறிப்பிடுவது என்றுதான் இருவருக்குமே தெரியவில்லை.
தென்கரையில் நின்று கூச்சலிட்டுக்கொண்டிருந்த வீரையாக் கோனான் மகள் தங்கத்திற்குத் தெரிந்திருக்குமோ என்று பரமசிவம் பிள்ளைக்கு மனதில் ஒரு சந்தேகம் இருந்தது.
அதனால் வெட்டியானை வீரையாக் கோனான் வீட்டிற்குத் துரத்தியிருந்தார் அவர்.
இன்ஸ்பெக்டரும், பரமசிவம் பிள்ளையும் வெட்டியானை எதிர்பார்த்தே சாவடியில் காத்துக் கொண்டிருந்தார்கள். மணி ஒன்பதரைக்கும் மேல் ஆகிவிட்டது. வெட்டியான் ஏன், தாமதிக்கிறான் என்பது அவர்கள் இருவருக்கும் புரியவில்லை.
மணி பத்து ஆவதற்குக் கொஞ்ச நாழிகைக்கு முன்பே வெட்டியான் திரும்பி வந்தான். பரபரப்போடு அவன் மட்டும் தனியாக ஓடி வருவதைப் பார்த்ததுமே பிள்ளை ‘ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது’ என்று நினைத்தார். தங்கத்தை அழைத்து வரச் சொல்லியல்லவா அவனை அவர் அனுப்பியிருந்தார்? அவனோ தனியாக ஓடிவருகிறானே!...
அவனை ஆசுவாசப்படுத்தி இருவரும் விஷயத்தைக் கேட்டார்கள். கண்மாய் உடைந்ததற்குரிய காரணத்தையா அவன் சொன்னான்? ஓர் அற்புதமான கற்பனைக் கதையைக் கைதேர்ந்த கதாசிரியன் சொல்வது போலிருந்தது அவன் கூறிய விவரம். நம்பவே முடியவில்லை அவர்களால் இப்படியும் நடக்குமா? இதை ‘ரிப்போர்ட்’டில் எப்படி எழுதுவது? எழுதினால் யாராவது நம்புவார்களா? என்று திகைத்தனர் இன்ஸ்பெக்டரும் பரமசிவம் பிள்ளையும்.
அப்படி அவன் கூறிய காரணம்தான் என்ன?
வீரையாக் கோனான் தன் மகளைக் கட்டிக்கொடுத்திருந்ததும் உள்ளூரில்தான். தங்கத்தின் புருஷன் பொன்னையாவுக்கு, சொந்தத்தில் ஆடுகள் இருந்தன. அடிக்கடி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டுபோவது அவன் வழக்கம். காலையில் பொழுது புலருவதற்கு முன்பே ஆடுகளை ஒட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவான்.அவன். தங்கம் எட்டு எட்டரை மணி சுமாருக்கு, அவன் ஆடு மேய்க்கிற இடத்திற்குக் கஞ்சி கொண்டுபோய்க் கொடுப்பது வழக்கமாக இருந்தது.
பிரஸ்தாப சம்பவம் நடந்த அன்று காலையில் கண்மாய்க்கரைப் பக்கமாக ஆடுகளை மேய்ப்பதற்குக் கொண்டு போயிருந்தான் தங்கத்தின் புருஷன்.
வீட்டில் வீரையாக் கோனானுக்கு ஏழெட்டு நாட்களாக உடம்பு சுகமில்லை. காய்ச்சலும் இருமலுமாக வந்து, முடங்கிக் கிடந்தான். உள்ளூர் நாட்டு வைத்தியர் வந்து கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, இரண்டு மூன்று வேளை கண்டங்கத்திரி வேரினால் கஷாயம் கொதிக்க வைத்துக் கொடுக்கும்படி சொல்லிவிட்டுப் போயிருந்தார்.
தங்கம் அக்கம் பக்கத்தில் கண்டங்கத்திரி வேரைத் தேடி அலைந்து பார்த்தாள். கிடைக்கவில்லை.
“ஏம்மா! இங்கே அதைத் தேடி அலையிறே? உன் புருஷனுக்குக் கஞ்சி கொண்டு போயி கொடுக்கிறப் பக்கமாகக் கரையிலே இருந்தா நாலு வேறு பிடுங்கித் தரச் சொல்லி, வாங்கிட்டுவா!” என்றான் வீரையாக் கோனான்.
தங்கம் கஞ்சிக் கலயத்தோடு கண்மாய்க் கரைக்குப் புறப்பட்டாள். கண்டங்கத்திரி வேரைக் கொண்டு வந்து கஷாயம் போடவேண்டும் என்று, வழக்கமாகப் புறப்பட்டுச் செல்லும் நேரத்திற்கு முன்பே புறப்பட்டாள். வேரை வெட்டுவதற்காக ஒரு சின்ன மண்வெட்டியையும் எடுத்துக் கொண்டு போனாள்.
கண்மாய்க் கரையில் ஒரு மரத்தடியில் அவள் புருஷன் பொன்னையாவுக்குக் கஞ்சி ஊற்றி உண்ணச் செய்தபின், ‘கண்டங்கத்திரி வேர் வேண்டும்’ என்பதைப் பிரஸ்தாபித்திருக்கிறாள்.
“நீ இங்ங்னே குந்திக்கிட்டிரு, ஆடுக காடுகரைகளிலே நுழைஞ்சிடாமே பாத்துக்க... அந்த மம்மட்டியேக் கொடு... நான் போயி, அந்த வேரை வெட்டிக்கிட்டு வாரேன்” என்று அவளை அங்கே மரத்தடியில் இருக்கச் செய்துவிட்டு, கையில் மண் வெட்டியோடு கண்மாய்க் கரைமேல் ஏறிப் புறப்பட்டான் அவன்.
கண்மாய்க் கரையில் குறுக்கும் நெடுக்குமாகக் கண்டங்கத்திரி வேரைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் தங்கத்தின் புருஷன். அவன் எந்தெந்த இடங்களில் அலைந்தானோ அங்கெல்லாம் அந்த வேர் கிடைப்பதற்குரிய கண்டங்கத்திரிச் செடி படர்ந்திருக்கவில்லை. தாகத்திற்குத் தண்ணீர் பருகிவிட்டு, இன்னும் சில இடங்களில் தேடிப் பார்க்கலாம் என்ற கருத்துடன், மண்வெட்டியைக் கரையின் மேல் வைத்துவிட்டு மடையின் பக்கமாக இறங்கினான் அவன்.
தண்ணீரைப் பருகுவதற்காக மடைப் பக்கம் குனிந்தவனுடைய பார்வை, மடையோரத்தில் நிலைத்தது. அவன் முகம் மலர்ந்தது. மடையின் காரைச் சுவருக்கும், மண் கரைக்கும் நடுவே இருந்த இடுக்கில் ஓர் இரண்டு பாக நீளத்திற்குப் பரவிப் படர்ந்து வேரோடியிருந்தது கண்டங்கத்திரி.
அவ்வளவுதான்! தாகத்தையும்கூட மறந்துவிட்டு, மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வந்து, வேரைத் தோண்டும் முயற்சியில் இறங்கினான்.
கண்மாயில் கரை முட்ட முட்டத் தண்ணிர் அலைமோதுகிறது. மடைப் பக்கத்தின் கரையின் அகலம் ஏற்கெனவே மிகவும் குறைவு. மண்ணோ உதிர்த்து வைத்த பிட்டு மாதிரி நனைந்து போயிருந்த சிவப்புக் கரம்பை மண். மடையின் கரைச் சுவரோ, நீரில் நனைந்து நெகிழ்ந்திருந்தது. கண்டங் கத்திரிச் செடிவேரோடியிருந்த இடமோ, நல்ல மூட்டு வாய் கரையும் மடையும் பொருந்துகிற மெல்லிய வளைவு.
அந்த வளைவில் ஒரே வரிசையில் இரண்டு மூன்று நண்டுகள் பொந்து தோண்டினால்கூட ஆபத்து. அப்படிப்பட்ட இடம் அது.
அந்த முட்டாள் பொன்னையாவுக்கு அதையெல்லாம் யோசிக்க நேரம் ஏது? அவனுக்கு வேண்டிய கண்டங்கத்திரி வேர் அங்கே படர்ந்திருக்கிறது. அது போதும். சுவரில் கடப்பாறையால் ஓங்கி அறைவதுபோலப் பிரம்மாண்டமான அலைகள் கரையின் ஈரமண் மேலும், மடைச் சுவரின் மேலும் மோதி அறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவன் கையிலிருந்த மண்வெட்டி சதக் சதக்கென்று பாய்ந்தது.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்தாவது முறையாக அவன் மண்வெட்டியைத் தூக்கி வெட்டுவதற்காக ஓங்கியபோது புலுபுலுவென்று மண் சரிந்தது. கையிலிருந்த மண்வெட்டி சரிந்த மண்ணுக்குள் புதைந்துவிட்டது. கண்மூடித் திறப்பதற்குள் ஒரு பெரிய அலை மண்சரிந்த இடத்தில் வந்து மோதியது.
அடுத்து ‘ஹோ’ வென்று தண்ணீர் எதையோ உடைத்துக்கொண்டு பாயும் பெரிய சப்தம் அந்தப் பிராந்தியத்தில் பயங்கரமாக எதிரொலித்தது. பொன்னையா தண்ணீரில் மிதந்தான். எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தவனாக இருக்கட்டுமே; மேட்டிலிருந்து பள்ளத்தில் உடைத்துப் பாயும் தண்ணீரில், எதிர்நீச்சுப் போட யாரால் முடியும்? மகாகோரமாகச் சுழித்தோடிய உடைப்பு வெள்ளம், அவனை நீந்தவும் விடவில்லை; கரை சேரவும் விடவில்லை. தன்னோடு இழுத்துக் கொண்டு போயிற்று.
தங்கமும் இந்த உடைப்பின் பயங்கர இரைச்சலைக் கேட்டாள். ஆடுகளை விட்டு விட்டுத் தென்பக்கத்துக் கரைமேல் ஏறி ஓடி வந்தாள். தன் புருஷன் என்ன ஆனான் என்றே அவளுக்குத் தெரியவில்லை. எதிரே உடைந்து மூளியாக நிற்கும் வடக்குப் பக்கத்துக் கரையைத்தான் அவளால் காண முடிந்தது. சிறிது நேரத்தில் வடபக்கத்துக் கரையில் அடைப்பு வேலைக்காக ஊர் ஜனங்கள் கூட்டமாக வந்தபோது, தென்கரையில் நின்றுகொண்டிருந்த அவள் கையிலிருந்த தொரட்டுக் கம்பை ஆட்டி, அவர்களைப் பார்த்துக் கூச்சல் போட்டாள். ஆனால் அவள் கூச்சலை யாரும் கவனிக்கவே இல்லை.
“ஏண்டா, இதெல்லாம் நிஜந்தானாடா?”
"ஐயோ! சாமீ, நீங்க வேணும்னா அங்கே போயிப் பாருங்க - அந்தப் பொன்னையாப் பய சவத்தை; குறுக்குத் துறை மதகிலே சிக்கிக் கிடந்திச்சாம். கொண்டாந்து போட்டிருக்காங்க.” வெட்டியான் அழுத்தமாகக் கூறினான்.
மூளியாக உடைந்து நிற்கும் கண்மாய்க்கரை, மூளியாக வெறுமை தவழும் தங்கத்தின் கழுத்து, இரண்டும் ஒரே சமயத்தில் உருவெளித் தோற்றமாகப் பரமசிவம் பிள்ளைக்குத் தோன்றின. ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பெருமூச்சு விட்டார்.
‘வீரையாக் கோனான் மருமகன் வேர்வெட்டப் போனார்போல’ என்று காலப்போக்கில் ஒரு பழமொழியே வற்றாயிருப்பு கிராமத்தில் உண்டாகி விட்டது!
(1963-க்கு முன்)