உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மணக்கும் திருட்டு

விக்கிமூலம் இலிருந்து

79. மணக்கும் திருட்டு!

ன்னும் ஓரிரு மாதம் தொடர்ந்து இப்படியே நடந்தால், ‘ஃபாரஸ்டு கார்டு’ பரசுராம், அந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை என்பது போலாகி விடும். அவருடைய உத்தியோகத்துக்கு, அது ஒரு சோதனைக் காலமாக வாய்த்திருந்தது. சோதனையில் வெற்றி பெறுவதற்காக, அவரும்தான் இராப் பகல் பாராமல், காட்டிலும் மலையிலும் அலைந்து கொண்டிருந்தார். அலைந்து பயன் என்ன? யாரோ அவருக்கு ஆகாதவர்கள் மேலதிகாரிகளின் சந்தேகத்தை அவர் மேலேயே திருப்பி விட்டு விட்டார்கள்.

விஷயம் வேறொன்றும் இல்லை; இதுதான்.அவருடைய ஏரியாவுக்கு உட்பட்ட ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்டில்’ சந்தன மரங்கள் அதிகம். சர்க்காருக்கு அவைகளால் அதிக வருமானம். இப்பொழுது சில நாட்களாகத் தொடர்ந்து சந்தன மரங்கள் களவு போய்க் கொண்டிருந்தன. சந்தன மரங்களுக்கு வரிசை நெம்பர், தனி ரிஜிஸ்தர் எல்லாம் உண்டு. நாளைக்கு எப்போதாவது வருஷாந்திர இன்ஸ்பெக்ஷன் நடந்தால் ரிஜிஸ்தரில் உள்ள நெம்பர்களின் படிமரங்கள் இருக்க வேண்டும். இல்லையானால், மேலதிகாரிகள் அவரைத்தான் குடைவார்கள். பரசுராம்தான் அவைகளை வெட்டி, அங்கிருந்து இரகசியமாகக் கடத்திக் கள்ள விற்பனை செய்வதாக யாரோ மொட்டை மனு வேறு எழுதிப் போட்டிருந்தார்கள்.

சிந்தனையில் லயித்தவராய், வீட்டு வாசலில் உட்கார்ந்தார் பரசுராம். வேலைக்காரச் சின்ன மாயன், வீட்டு வாசலிலிருந்து காட்டிலாகா அலுவலகத்திற்குப் போகும் வழியைப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டிருந்தான். வீட்டுக்கு அடுத்த, கட்டிடம் காட்டிலாகா அலுவலகம்.

“எசமான், பண்ணையார் ஐயா வாராருங்கோ...”

பரசுராம் திரும்பிப் பார்த்தார். தொலைவில் பண்ணையார் சிவஞானம் பிள்ளையின் ஜீப் கார், முக்கித் திணறி மலைத் திருப்பத்தில் ஏறிக் கொண்டிருந்தது.

‘அடேடே! நான் இலாகா வேலைகளினால் ஒரே தொல்லையிலே மாட்டிக் கொண்டிருக்கிறேன். இப்போது இந்த மனுஷன் எங்கே வந்து சேர்ந்தார்? ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பேசாமல் எழுந்திருக்க மாட்டாரே?’

அவர் தமக்குள் அலுத்துக் கொண்டார். சிவஞானம் பிள்ளைக்கு அந்த மலையடிவாரத்தில் ஐம்பது அறுபது ஏக்கர் நிலம் அடங்கிய பெரிய பண்ணை ஒன்றிருந்தது. நிலங்களுக்கு நடுவே, நாலைந்து இறவைக் கிணறுகளும் இருந்தன. மழைக் காலத்தில் மலை ஓடைகளிலிருந்து வரும் நீரையும், மற்ற நேரங்களில் இறவைக் கிணறுகளையும் கொண்டு, அவர் விவசாயம் நடத்தி வந்தார். அந்த ‘ஏரியா’வில் கொஞ்சம் செல்வாக்குள்ள பெரும்புள்ளி என்ற முறையில், பரசுராமுக்குப் பழக்கமானார். பழக்கம் வளர்ந்து, தினம் பரசுராமுடன் ஏதாவது வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவது பண்ணைப் பிள்ளையின் ‘மாமூ’லாகி விட்டது.

“வாங்க வாங்க! ஏது இப்படி இந்தப் பக்கமா?...”

சிவஞானம் பிள்ளை ஜீப்பிலிருந்து இறங்கினார்.

“வேறே எதுக்கு வரப் போறேன்? எல்லாம் உங்களைப் பார்த்து நாளாச்சேன்னுதான்...”

“ரொம்ப சந்தோஷம்...”

“ஆமா! இதென்ன? நான் கேள்விப் படறது நெசந்தானா? யாரோ சந்தன மரங்களைக் கடத்தராங்களாமே?”

“அதையேன் கேட்கிறீங்க? ஒரு மாசமா எனக்கு ராத்திரித் தூக்கமில்லே. புலி, கடுவாய்க்குப் பயப்படாமே இருட்டிலேயே சுத்தறேன். அப்படியும் ஆள் இன்னார்தான்னு கண்டுபிடிக்க முடியலே, போங்க!”

“நீங்க சும்மாஇருங்க, ஸார்! இதை இப்படியே விடறதாவது? நான் கவனிக்கிறேன். உங்க பேரிலே அவப்பேரு ஏற்பட்டா அது எனக்கில்லியா?”

“என்னமோ, கூட இருந்து ஒருத்தருக்கொருத்தர் உபகாரமாத் திருட்டைக் கண்டுபிடிச்சுட்டா, சர்க்காருலே என் தலை உருளாது!”

“நான் சொல்றபடி கேளுங்க! இந்த மலையிலே திரியற பளிஞர்களை எல்லாம் பிடிச்சு, ஒரு நாளு கட்டி வச்சு உதைச்சா உண்மையைக் கக்கிடுவாங்க!”

“சே! சே! பளிஞங்க கள்ளங்கபடமில்லாத சாதியாச்சே! அவுங்க மேலே எனக்குக் கொஞ்சம் கூடச் சந்தேகமே இல்லை” பரசுராம் பண்ணைப் பிள்ளையின் கருத்தை மறுத்தார்.

“அதெல்லாம் நீங்க கொஞ்சம்கூட இரக்கப்படக் கூடாது ஸார். இப்போ எனக்குப் பண்ணை வேலையா கொஞ்சம் அலைய வேண்டியிருக்கு. நாளைக்கு என் ஆள்கள் ஏழெட்டுப் பேரைக் கூட்டி வர்றேன். எல்லாப் பளிஞர்களையும் பிடிச்சு, மேலே ஆகவேண்டியதைப் பார்ப்போம்” பண்ணைப்பிள்ளை வழக்கத்துக்கு விரோதமாகச் சீக்கிரமாகவே பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்.

“சரி! நீங்க போயிட்டு வாங்க” இந்த மட்டில் சுருக்கக் கிளம்பினாரே என்ற மகிழ்ச்சியில், அவருக்கு விடை கொடுத்து அனுப்பினார் பரசுராம்.

பண்ணையார் சிவஞானம் பிள்ளை ஜீப்பில் ஏறிக்கொண்டு கிளம்பினார். ஜீப் மலைப் பாதையில் இறங்கி மறைந்தது.

“எசமான்...” சின்ன மாயன் விளக்குமாற்றைக் கீழே போட்டுவிட்டு அருகில் வந்தான்.

“என்னடா? எதுக்குக் கூப்பிட்டே?”

“பண்ணைப் பிள்ளை எமப் புளுவுங்க! இது விசயத்திலே அவரைக்கூட நீங்க நம்பறது...”

“சீ! போடா... முட்டாப் பயலே. ஒன்னை ஒண்னுங் கேக்கலை நான்! வேலைக்காரனா லட்சணமா வேலையைப் போய்ப் பாரு”

சின்னமாயனுக்குப் படீரென்று முகத்தில் அறைந்தாற் போல் இருந்தது, இந்தப் பதில் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு, திரும்பிப் போய்த் தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.

“துப்புச் சொல்றானாம், துப்பு! அவரு கண்ணுக்குக் கண்ணாப் பழகற மனுஷன். ஏதோ கொஞ்சம் வழவழன்னு பேசுவாரு.. இந்த அற்பச் சந்தனக்கட்டையைத் திருடித்தானா பிழைக்கனும்?”

“அதுக்கு இல்லீங்க ரொம்ப நாளைக்கு முன்னே அவரு இப்படியெல்லாம்.”

“பேசாதே! உன் வேலையைப் பாரு” சின்ன மாயன் குனிந்த தலை நிமிராமல், விளக்குமாற்றை எடுத்து வழியைப் பெருக்க ஆரம்பித்துவிட்டான்.

அப்போது சின்னமாயனுடைய மனைவி வேலாயியிடம் பரசுராமின் மனைவி குடத்தைக் கொடுத்துத் தண்ணீருக்கு அனுப்பினாள். வேலாயி வீட்டுக் கொல்லைப் பக்கம் இருக்கிற கிணற்றடிக்குப் போகாமல், காம்பவுண்டைத் தாண்டி வெளியேறுவதைப் பார்த்த பரசுராம் அவளைக் கைதட்டி அழைத்தார்.கொல்லையில் கிணறு இருக்கிறபோது, அவள் ஏன் குடத்தை எடுத்துக்கொண்டு வெளியே போகிறாள் என்று சந்தேகம் தோன்றியது அவருக்கு.

“ஏஞ்சாமீ? கூப்பிட்டிங்களா?”அவர் கைதட்டி அழைத்த சத்தம் கேட்டு, வேலாயி குடத்தோடு வந்து நின்றாள்.

“குடத்தைத் துாக்கிக்கிட்டு எங்கே போறே நீ? கொல்லைக் கிணத்துலே தண்ணி இல்லையா?”

“அம்மா குளிக்கிறபோது புத்தம் புதுச்சோப்புக் கட்டியை முழுசா கெணத்துலே கை தவறிப் போட்டுட்டாங்க சோப்புக் கரைஞ்சு தண்ணி நாறுதுங்க.”

“அதுனாலே?.”

“நீ போயி, வேறெங்காச்சும் தண்ணி எடுத்துக்கிட்டு வான்னு அம்மா கொடத்தைக் கொடுத்தாங்க. சோப்புத் தண்ணியை வச்சுச் சமைக்க முடியுங்களா?”

“இங்கே பக்கத்துலே வேறே எங்கேயும் தண்ணீர் கிடையாதே? அருங்கோடையாச்சே! ஊற்றுத் தண்ணீர் கூட இருக்காதே?”

“என்னங்க செய்யிறது? அடிவாரத்திலே போயி, பண்ணையாரு இறவைக் கிணத்துலே இருந்துதான் கொண்டாரனும்.”

“அதுக்கு இங்கேருந்து ஒரு மைலுக்கு மேலே நடக்கணுமே?”

“நடந்துதான் ஆகணுஞ் சாமி வேறே வழியில்லையே?”

“சரி! சரி! போய்ச் சுருக்க எடுத்துக்கிட்டு வா. சமையல் சீக்கிரமா ஆகனும்.” பரசுராம் அவளைத் துரிதப்படுத்தி அனுப்பினார். அவள் போனபின் சின்னமாயனைக் கூப்பிட்டார். அவன், தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வந்தான்.

“சின்னமாயா! சாப்பாட்டுக்கு மேலே நாம ரெண்டு பேரும் சந்தனக் காட்டுக்குள்ளே போய் ‘ரிசர்வ் ஃபாரஸ்டி’லே ஒளிஞ்சிருக்கணும். நாளைக்கு விடிகிற நேரம் வரை அங்கேயிருந்து நகரக் கூடாது. துப்பாக்கிகளை எடுத்து ரவைகளை அடைச்சு வை. ராத்திரிக்குச் சாப்பாடு, கூஜாவிலே தண்ணி, எல்லாம் அங்கேயே கொண்டு போயிடனும்.இன்னிக்கு எப்படியும் உளவு தெரிஞ்சுக்காமே விடறதில்லை.”

“சரிங்க” என்றான் சின்னமாயன்.

“மத்தியானம் இரண்டு மணிக்குப் புறப்படலாமா? நீ என்ன நினைக்கிறே?”

“அப்படியே செய்வோமுங்க.”

“சரி போ! போய் அதற்கு ஆகவேண்டியதைக் கவனி.”

சின்னமாயன் துப்பாக்கியை எடுத்து ‘லோட்’ பண்ணுவதற்காக, ஆபீஸ் சாவியை வாங்கிக்கொண்டு போனான். பரசுராம் குளிக்கப் போனார். கிணற்றுத்தண்ணீர் ஒரு முழு ‘மைசூர் சாண்டல்’ சோப்பை முழுங்கிக் ‘கமகம’த்து கொண்டிருந்தது. ‘குளிப்பதற்குப் பரவாயில்லை’ என்று குளித்து முடித்தார்.

அவர் குளித்து ‘டிரஸ்’ பண்ணிக்கொண்டு, வெளிவாசல் பக்கம் வருவதற்கும், வேலாயி தண்ணீர்க் குடத்தோடு காம்பவுண்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“இது என்னங்க எசமான்? அந்தப் பண்ணைப்பிள்ளை கிணத்துலே தங்கத்தையா பொதச்சு வச்சிருக்காரு ரொம்ப அநியாயமாயில்லே இருக்கு?”

“ஏன்? என்ன நடந்தது?”

“ஒரு கொடம் தண்ணி எடுத்துக்கிட்டாக் கிணறு வத்தியா போயிடும்? அவரோட வேளையாளு,“யாரா இருந்தாலும் கண்டிப்பா கிணத்துலே இறங்கவிடப்படாதுன் ஐயா உத்தரவு!” அப்படின்னு என்னை மறிச்சு நிறுத்திட்டான்.”

“நீ சொல்லப்படாதோ; நான் ஃபாரஸ்டு கார்டு ஐயா வீட்டுலே இருந்து வரேன்னு?”

“சொல்லிப் பார்த்தேனுங்களே! அப்படியும் அவன் முடியாதுன்னுட்டான். கடைசியிலே துணிஞ்சு ஒரு பொய் சொன்னேனுங்க காரியம் முடிஞ்சுட்டுது.”

“என்ன பொய் அது?” பரசுராம் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“உங்க பண்ணையார் ஐயா, இப்போ அங்கேயேதான் எங்க எசமானோட உக்காந்து பேசிக்கிட்டிருக்கார். நம்ப கிணத்துல போய் எடுத்திட்டுவான்னு அவருதான் சொல்லி அனுப்பிச்சாரு நீ மாட்டேன்னா நேரே போயி அவரிட்ட சொல்லுவேன் என்றேன். அந்த ஆள் பயந்து போய், ‘அப்பிடியானா எடுத்துக் கிட்டு போ’ன்னுட்டான்!”

“சரி எப்படியானா என்ன? தண்ணீர் கொண்டு வந்திட்டே?”

“ஆமாங்க.”

“உள்ளே கொண்டுபோய்க் கொடு; சமையல் சீக்கிரமா ஆகனும்.”

வேலாயி தண்ணீர்க் குடத்தை உள்ளே கொண்டு போனாள்.சின்னமாயன் ஆபீஸ் சாவிக் கொத்தோடு திரும்பி வந்தான்.

“என்னடா?”

“எல்லாம் தயாரா வச்சிட்டேனுங்க.”

“சரி! நீ வேலாயியைக் கூட்டிட்டுப் போயி உன் சாப்பாட்டை முடிச்சுக்க. இராத்திரிப் பாட்டுக்கு ஏதாவது கட்டி வாங்கிக்க, சீக்கிரமா வா!”

“இதோ வந்திடறேனுங்க.” அவன் சாவியைக் கொடுத்துவிட்டுப் போனான். பரசுராம் இருந்த காம்பவுண்டுக்குள்ளேயேதான் அவன் குடிசையும் இருந்தது. சாவிக் கொத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வாசலில் குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்தார் பரசுராம்.

பதினொன்றரை மணி சுமாருக்குச் “சாப்பிட வரலாம்” என்று உள்ளேயிருந்து அழைப்புக் கொடுத்தாள் அவர் மனைவி. பரசுராம் உள்ளே போனார்.

இலை போட்டுக்கொண்டு உட்கார்ந்தார். சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்னால், நாலு மடக்குத் தண்ணிரைக் குடித்துக் கொள்வது அவர் வழக்கம். “அலமேலு, டம்ளரில் தண்ணீர் கொடு” என்றதும் அவர் மனைவி தண்ணீர் கொடுத்தாள்.பரசுராம் குடிப்பதற்காக அதைக் கையில் எடுத்தார். உதட்டருகே டம்ளரைக் கொண்டு போனவர், முகத்தைச் சுளித்தார்.

“ஏய்! நீ என்ன எங்கிட்ட விளையாடறியா? சோப்புத் தண்ணீயையா நான் குடிக்கனும்?”

“யார் விளையாடறது? நானா? நீங்களா? வேலாயி கொண்டு வந்தாளே, பண்ணையார் கிணத்துத் தண்ணீர்; அதைத்தான் டம்ளர்லே விட்டு வச்சேன்!”

“நிசம்மாவா?”

“அதிலே சந்தேகமா, என்ன? இதோ இந்தக் குடத்தையே பாருங்களேன்!” அவர் மனைவி குடத்தையே தூக்கிக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துவிட்டாள்.

அவர் குடத்தருகே மூக்கைத் தாழ்த்தி முகர்ந்து பார்த்தார். அதே வாசனை ஜமாய்த்தது. சந்தன அத்தர் ‘எஸென்’ஸில் நாலைந்து துளியைத் தண்ணீரில் ஊற்றி விட்டால் எப்படி மணக்குமோ, அந்த மாதிரி.

“இதுதான் வேலாயி கொண்டுவந்த தண்ணியா?”

“எனக்கு உங்ககிட்டப் பொய் சொல்லி என்ன ஆகணும்? சத்தியமா இதுதான் அவ கொண்டு வந்தது.”

“அலமேலு பூஜைக்குச் சந்தனம் அரைப்பாயே! அரைச்ச கையோட குடத்துத் தண்ணீரைப் புழங்கினாயோ?”

“இன்னிக்கு நான் சந்தனமே அரைக்கல்வியே? அவ தண்ணியைக் கொண்டுவர போதே, அது அப்படித்தான் வாடை அடிச்சுது!”

“சந்தனத்தை அரைச்சுக் கலக்கின மாதிரின்னா வாடை வரது?”

“யாரு கண்டா? இறவைக் கிணறுதானே? சந்தனக் கட்டை ஏதாவது தப்பித் தவறி விழுந்து அழுகிப் போயிருக்குமோ, என்னவோ?”

அலமேலு சாதாரணமாகத்தான் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பினாள்.

பளிச்சென்று மின்வெட்டுப் போலப் பரசுராமின் மனத்தில் ஒரு யோசனை எழுந்து நின்றது.

“அலமேலு, நிச்சயமா வேலாயி கொண்டுவந்த போதே இந்த வாடை தான் அடிச்சுதா?”

“நான் என்ன குழந்தையா, உங்ககிட்டப் பொய் சொல்றதுக்கு? இதே சந்தன வாடைதான்! வேலாயியை வேணும்னா கேட்டுப் பாருங்களேன்!”

“இந்தா, கொஞ்சம் இரு! சோற்றை இலையிலே போடாதே! நான் இப்போ சாப்பிடலை.”

“ஏன்? பசிக்காதோ?”

“ஓர் அவசரமான காரியம்; போயிட்டு வந்திடறேன். அந்தச் சின்னமாயன் குடிசையிலே இருப்பான். ஒரு சத்தம் போடு; நான் கூப்பிட்டேன் என்று!” அலமேலு சின்னமாயனைக் கூப்பிடப் போனாள்.

“என்னங்க எசமான்?”

“புறப்படு, போகலாம் சாப்பாடுகூட அப்புறம்தான்.”

“எங்கே எசமான்?”

"நீ பேசாமே எங்கூடவா சொல்றேன்!”

பரசுராம் சின்னமாயனை அழைத்துக்கொண்டு, அரைமணி நேரத்தில் சிவஞானம் பிள்ளையின் பண்ணையிலுள்ள இறவைக் கிணற்றுக்குப் போய்ச் சேர்ந்தார்.வேலாயி அடையாளம் சொல்லியிருந்த கிணற்றருகில் போய் நின்று கொண்டார்கள் இருவரும். கிணற்றுக்குக் காவல் இருந்ததாக வேலாயி சொன்ன ஆள், அப்போது அங்கேயில்லை. சாப்பிடப் போயிருந்தானோ என்னவோ? அதுவும் அவர்களுக்கு வசதியாகவே போயிற்று.

“டேய் உனக்கு முக்குளி நீச்சுத் தெரியுமாடா சின்னமாயா?”

“நல்லாத் தெரியுமுங்க!”

“கிணற்றிலே இறங்கி முக்குளிச்சுப் பாரு, சொல்றேன் - ஏதாவது கட்டிப் போட்டிருக்கான்னு?”

சின்னமாயன் வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தான்.

பத்து நிமிஷம் அவன் உள்ளேயே துழாவினான். மேலே நாலா புறமும் நீர்க் குமிழிகளும், தண்ணீர் வண்டலும் குபுகுபுவென்று வருவதிலிருந்து, பரசுராம் அவன் உள்ளே நாற்புறமும் துழாவுகிறான் என்பதை அனுமானித்துக் கொண்டார்.

சின்னமாயன் தண்ணீரிலிருந்து வெளியேறிப் படிவழியே மேலே வந்தான். அவன் முகத்தில் ஆச்சரியமும் பரபரப்பும் சாயையிட்டிருந்தன.

“எசமான் கட்டு கட்டா சந்தன மரம்... கிணறு தாங்காமக் கெடக்கு”... சின்ன மாயன் ஆச்சரியம் தாங்காமல் இரைந்து கூறினான்.

“உஸ்ஸ்! வாயை மூடு கத்திக் காரியத்தைக் கெடுத்துடாதே” பரசுராம் ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்துஅவனுக்கு ஜாடை காட்டினார்.

“நான் அப்பவே சொன்னேனே, கேட்டீங்களா? பண்ணை பிள்ளை, பழைய எசமான் காலத்துலேயே, ரெண்டு மூணு தரம் சந்தன மர விவகாரத்திலே அகப்பட்டுக்கிட்டிருக்காரு அவரை நம்பக் கூடாதுன்னு?”

“சின்னமாயா! நீ பேசாமே இருக்கமாட்டே? எனக்குப் படுகோபம் வரும்.”

சின்னமாயன் ‘கப்சிப்’ என்று அடங்கிவிட்டான்.

பரசுராம் பைக்குள்ளிருந்த காகிதம் ஒன்றை எடுத்துப் பேனாவால் ஏதோ எழுதினார்.

“இந்தா, ஓடு! போயி, இதை ஸ்ரீ வில்லிபுத்துரர் போலீஸ் ஸ்டேஷனிலே கொடு சப்-இன்ஸ்பெக்டர் இருப்பார். ஒண்ணரை மணிக்குள்ளே இங்கே வரச்சொல்லு. நான் சாப்பிடாமே இங்கேயே காத்திருப்பேன்.

“ஆகட்டுங்க!” சின்னமாயன் அதை வாங்கிக்கொண்டு ஓடினான்.

அது காட்டழகர் கோவில் ஃபாரஸ்ட் ஏரியா. அங்கிருந்து சண்பகத் தோப்பு வழியாகப் போனால், நாலு மைலில் ஸ்ரீவில்லிபுத்துர் பெரிய நகரம். அந்த நகரத்துக்குத்தான் போலீஸ் உதவி வேண்டிச் சின்னமாயனை அனுப்பிவிட்டுக் காத்திருந்தார் பரசுராம்.

எதிர்பார்த்ததற்கு முன், பகல் ஒரு மணிக்கே போலீஸை லாரியோடு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் சின்னமாயன். கடிதத்தில் பரசுராம் வேண்டிக் கொண்டிருந்தபடி கிணற்றுத் தண்ணீரை இறைப்பதற்காக ‘பாட்டரி செட்’,‘மோட்டார்-பம்ப்’ ஆகிய சாதனங்களோடு வந்திருந்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

பகல் மூன்று மணிக்குத்தான் கிணற்றிலிருந்த எல்லாத் தண்ணீரையும் வற்றச் செய்ய முடிந்தது. அதற்குள் பரசுராம் வீட்டிற்குப் போய்ச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வந்துவிட்டார்.

சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள, இருநூறு இராத்தலுக்கு மேற்பட்ட சந்தன மர முண்டுகள் கிணற்றுக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்டன. இதற்குள் கிணற்றை காவல் செய்வதற்கெனப் பண்ணைப்பிள்ளையால் நியமிக்கப்பட்டிருந்த காவலாள் வந்து சேர்ந்தான். அவனைப் பிடித்து அடித்து மிரட்டியதன் விளைவாக, அவன் சப் இன்ஸ்பெக்டரிடம் “எல்லாம் பண்ணை எசமான் வேலைதானுங்க” என்று உண்மையைச் சொல்லிவிட்டான்.

ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து மலைக்குப் போகும் வழியில் மொட்டைப் பத்தான் வெளியிலிருந்த பண்ணைப்பிள்ளையின் பங்களாவுக்குப் போய் அவரைக் கைது செய்தனர். அப்போது பரசுராமும் உடன் இருந்தார்.

“பிள்ளைவாள், சந்தனம் மணம் நிறைந்த பொருள்தான், திருடிச் சேர்த்தீர்கள். வாசனைப் பொருள்களைக் கள்ளக் கடத்தல் செய்து பணம் சேர்க்கும் முயற்சியினால், உங்களோடு கபடமின்றிப் பழகும் எனக்கே மோசம் செய்தீர்கள். திருடிய சந்தனம்தானே அது? இன்னும் தண்ணீரில் ஊறிய விசேஷத்தால் அபாரமாக மணக்கிறது. ஆனால், உங்களைத்தான் இப்படி நாறவைத்து விட்டது. இந்த நாற்றம் இலேசில் போகுமா?” பரசுராம் உருக்கமாகக் கூறினார். பிள்ளை பதில் பேசாமல் அவரை முறைத்துப் பார்த்தார். அலமேலு கிணற்றில் போட்ட சோப்பை வாழ்த்திக் கொண்டே வீடு திரும்பினார் பரசுராம்.

(1963-க்கு முன்)