உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/கற்பனையேயானாலும்

விக்கிமூலம் இலிருந்து

20. கற்பனையேயானாலும்...

யிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்; நானும் வேறொரு தமிழ் எழுத்தாள நண்பரும் லட்ச தீப உற்சவத்திற்காகத் திருவனந்தபுரம் போயிருந்தோம். லட்ச தீபம் முடிந்த மறுதினம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கத் தீர்மானித்தோம். முதல் முதலாக நாங்கள் பார்க்கக் கிளம்பிய இடம் ‘கோவளம்’ என்ற கடற்கரைச் சிற்றூர்.இயற்கைக் காட்சிகள் நிரம்பிய இடம். நானும் நண்பரும் ஒரு டாக்ஸி பிடித்து அந்த இடத்திற்குக் கிளம்பினோம்.

டாக்ஸி டிரைவர் கோவளத்திற்கு ஒரு மைல் முன்பே டாக்ஸியை நிறுத்தி, இறக்கி விட்டான். காரணம் வேறொன்றும் இல்லை. அந்த இடத்தோடு ரோடு முடிந்திருந்தது.அதற்கு மேல் ஒரு மைல் தூரம் தென்னைமரச் சோலைகளுக்கிடையே ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இறங்கி நடந்தோம். தென்னை, பலா என்று கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமரக் கூட்டம். அவற்றினிடையே மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்பட்டிருந்தது. மிளகுக் கொடி புதர் மண்டிப் படர்ந்திருந்தது. இடையிடையே வீடுகளும் தென்பட்டன. பொழுது புலர்ந்தும் புலராமலும் இருக்கின்ற கருக்கிருட்டு நேரத்தில் நாங்கள் போயிருந்தோம். காற்றும் ஜில்லென்று உடலை நனைப்பது போல் இருந்தது. ‘கீகீ’ என்ற சிள்வண்டுகளின் ஒசை அடங்கவில்லை.

“மனிதன் வசித்தால் இந்த மாதிரி இடத்தில் வசிக்க வேண்டும், ஐயா” என்றார் நண்பர்.

“போக பூமி, சுவர்க்கம், அது, இது என்று சொல்கிறார்களே; அவையெல்லாம் இதற்கு உறை போடக் காணுமா?” என்று அதை ஆமோதித்தேன். பேசிக் கொண்டே நடந்ததில் நடை தெரியவில்லை. கடற்கரையில் வந்து நின்றோம். பி.டபிள்யூ. இலாகாவால் அமைக்கப்பட்ட ஸ்நான கட்டடம் ஒன்று இருந்தது.அதை அடுத்து ஒரு சிறு குன்று. அந்தக் குன்றில் ஒரு வேடிக்கை. ஒவ்வோர் இடத்திலும் பாறை ஒவ்வொரு நிறமாக இருந்தது. பாறைகளுக்கிடையே இருந்த மண் இடைவெளியில் தென்னை மரங்கள் வளர்ந்திருந்தன. குன்றின் அடிவாரத்தில் கடல் அலைகள் மோதிக் கொண்டிருந்தன. -

கடல்ஒலியையும் மரங்கள் காற்றில் ஆடும் ஒலியையும் தவிர வேறு சந்தடி இல்லை. அன்று காலையில் அந்தப் பிரதேசத்தில் முதல் முதலாகப் பட்ட மனிதக் காலடிகள் எங்களுடையனவாகத்தான் இருக்க வேண்டும். சந்தடியின்றிக் கண்ணுக்கு எட்டிய தூரம் கரையில் வேறு மனித வாடையே தென்படாமல் இருந்தது. எங்களைப் போல் கற்பனை மனப்பான்மை இல்லாத வேறு எவராவது அன்று அந்த நேரத்தில் அங்கே வந்திருந்தால் பயந்து உடனே திரும்பியிருக்க நேரிடும். தனிமை என்றால் அப்படி இப்படி என்று சாதாரணமாகச் சொல்லிவிடக்கூடிய தனிமை இல்லை. நூற்றுக்கு நூறு தனிமை நண்பர் குன்றில் ஏறத் தொடங்கினார். நானும் அவரைப் பின்பற்றி ஏறினேன். சிறிது தொலைவுதான் ஏறியிருப்போம்.

திடீரென்று முன்னே சென்ற நண்பர் திடுக்கிட்டு நின்றார். எதிரே பேயைக் கண்டுவிட்டவர் போல் பயங்கரமான குரலில் ‘ஆ!’ என்று அலறினார்.

“என்ன, என்ன? ஏதாவது பாம்பு?...”அவர் பதில் சொல்லவில்லை. வாய் குழறியது. அவர் உடல் கீழே விழுந்து விடுவதுபோல ‘வெடவெட’ வென்று நடுங்கியது. வேகமாகத் திரும்பினார். அவர் முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. வாய் பேச வராததனால் கைகளால், ‘பேசாமல் திரும்பிவிடுங்கள்’ என்று கூறுகிற பாவனையில் எனக்கு ஜாடை காட்டினார். பயத்தினால் அகன்றிருந்த அவர் விழிகளையும் முகத்தையும் கண்டு எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன சார்? என்ன? எதுவாகத்தான் இருக்கட்டுமே; இப்படியா உதறுவார்கள்? வழியை விடும், ஐயா! நான் பார்க்கிறேன்” என்று சூரப்புலி போல் அவரை விலக்கித் தள்ளிக் கொண்டு முன்னே பாய்ந்தேன் நான்.அடுத்த கணம் என் வாயிலிருந்தும் அதே அலறல் கிளம்பியது.எதிரே கண்ட காட்சி மயிர் சிலிர்க்கச் செய்தது. செய்வதென்ன என்று தெரியாமல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டேன். நண்பராவது கை ஜாடை செய்கிற அளவிற்குச் சுயநினைவு பெற்றிருந்தார். எனக்கோ உடம்பு முழுவதுமே மரத்துப் போய் நின்றுவிட்டது.

எதிரே இருந்த பாறை இடுக்கில் ஒரு தென்னை மரம். அதன் அடியில் கயிறு கட்டி இரண்டுபேர் தூக்கிட்டுக் கொண்டிருந்தனர். ஒன்று பெண்ணின் உடல்; மற்றொன்று ஆணின் உடல். இருவருக்குமே வாலிப வயசு என்று அனுமானிக்க முடிந்தது. தென்னை மரத்தின் அடிப்பாகம் ‘டா’னாப் பாடாக வளைந்திருந்ததனால் தூக்கிட்டுக் கொண்டு பாறையின் இடைவெளியில் தொங்க வசதியாக இருந்தது. தோற்றத்தையும் அணிந்திருந்த உடை முதலியவற்றையும் பார்த்தால் படிப்பும் பணவசதியும் உள்ள குடும்பத்து ஆட்களாகத் தோன்றியது.

எவ்வளவு தேரந்தான் தானும் நண்பரும் அப்படி மலைத்துப் போய் நின்றோமோ? உடலில் மெல்லத் தைரியமும் நினைவும் வந்தபோது, ‘தப்பினோம் பிழைத்தோம்’ என்று ஓட்டமெடுத்தோம். திரும்பிப் பார்க்கவே இல்லை. யாராவது ஆளோ, போலிசோ நாங்கள் நின்றுகொண்டிருப்பதையும் மரத்தடிக் காட்சியையும் சேர்த்து ஒருங்கு கண்டுவிட்டால் சாட்சி விசாரணை என்று எதிலாவது மாட்டிக் கொள்ள நேரிடுமே என்று பயம் ஒருபுறம்; உள்ளத்தை நடுங்கச் செய்யும் காட்சியின் கோரம் ஒருபுறம்; இரண்டுமாகச் சேர்த்து எங்களை ஓட ஓட விரட்டின.

“கோவளமுமாயிற்று! இயற்கைக் காட்சியுமாயிற்று! இன்றைக்குப் பொழுது நமக்கு நன்றாக விடியவில்லை. பேசாமல் வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய்விடுவோம்” என்றார் நண்பர். அவர் குரல் இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை.

“ஆமாம், ஆமாம்! வந்தவுடனே நல்ல இயற்கைக் காட்சியைக் கண்டு விட்டோம். பத்மநாபசாமி புண்ணியத்தில் செளக்கியமாக ஊர் போய்ச் சேர வேண்டும். எட்டி நடையைப் போடுங்கள்” என்று நானும் ஒத்துப் பாடினேன்.

குன்றிலிருந்து இறங்கியதும் நெஞ்சு ‘படக் படக்’ என்று அடித்துக் கொண்டது. மேலிருந்து வேகமாகக் கீழே இறங்கிய இளைப்பும் பயத்தின் வேகமும் ஒன்று சேர்ந்து கொண்டதனால் மூச்சு இரைத்தது. சுற்றும் எங்களைப் பார்க்கவோ கண்காணிக்கவோ எவரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னே மூச்சும் நெஞ்சுத்துடிப்பும் சராசரி நிலைக்கு வந்தன. ஈ காக்கைகூடத் தென்படாத ஜனசஞ்சாரம் அற்ற அந்த அழகிய கடற்கரையிலிருந்து குறுகலான பாதையில் வேகமாகத் திரும்பி நடக்கலானோம். போகும்போது பரஸ்பரம் இருவருக்கும் இருந்த பயத்தினால் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடத் தோன்றவில்லை. ஏறக்குறையப் பத்து நிமிஷத்தில் ஒரு மைல் தூரத்தையும் கடந்து ரோட்டுக்கு வந்துவிட்டோம் என்றால் எவ்வளவு வேகமாக நடந்திருப்போம் என்பதை நேயர்களே தெரிந்து கொள்ள முடியும்.

“என்ன சார், அதற்குள்ளே திரும்பிவிட்டீர்கள்? பார்த்தாச்சா? இரண்டு மணி நேரம் ஆகுமென்று சொல்லிவிட்டுப் போனீர்களே!” என்று கேட்டான் டிரைவர்.

“அங்கே ஒன்றும் பிரமாதமாக இல்லை, பார்ப்பதற்கு போனோம்! உடனே திரும்பி விட்டோம்” என்று பச்சைப் பொய்யைப் பூசி மெழுகினேன். அதற்கு மேல் அவனும் கேட்கவில்லை. டாக்ஸி புறப்பட்டது. நண்பரும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டோம். திருவனந்தபுரத்தில் சாலை பஜாரில் ஒரு ஹோட்டலின் மாடி அறையில் நாங்கள் தங்கியிருந்ததால்தான் அங்கு வந்து இறங்கினோம். வாடகைக்காக டிரைவர் என் முன் வந்தபோதுதான் கையோடு கொண்டு போயிருந்த ‘தோல் பை’ எங்கோ தவறிவிட்டதை உணர்ந்தேன். பணம் அதில்தான் இருந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனாலும் என் திகைப்பை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “நீங்கள் கொடுங்கள், சார்!” என்று நண்பரை வேண்டிக் கொண்டேன். நண்பர் வாடகையைக் கொடுத்து அனுப்பினார். டிரைவரிடம் நான் மறைத்தாலும் என்னிடம் உண்டான கலவரத்தை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையானால் போகும்போது அவன் என்பக்கம் திரும்பி ஒரு தினுசாகப் பரிதாபம் தோன்றப் பார்த்துவிட்டுப் போக வேண்டிய அவசியம் என்ன?

“சார், ஒரு பெரிய முட்டாள்தனம் பண்ணிவிட்டேன். என் தோல் பை அந்த இடத்தில் விழுந்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம்?” என்று அறைக்குள் நுழைந்ததும் மெல்லிய, பயம் நிறைந்த குரலில் நண்பரைக் கேட்டேன்.

“எந்த இடத்தில்? நினைவு இருக்கிறதா?”

“அதுதான் ஐயா! அந்தக் குன்றில், தென்னைமரத்தடியில்.”

“அடபாவி மனுஷா அங்கேயா போட்டீர்?”

“நான் என்ன செய்வேன்! பதற்றத்தில் விழுந்ததே தெரியவில்லை. டிரைவர் இங்கே வந்து வாடகைக்கு நின்றபோதுதான் எனக்கே நினைவு வந்தது.”

“எந்தப் பை? ‘ஸிப்’ வைத்துச் சதுரமாக வைத்துக் கொண்டிருந்தீரே; அந்தப் பையா?”

“அதுவேதான் ஐயா! கொஞ்சம் பணம், முக்கியமான காகிதங்கள் எல்லாம் உள்ளே கிடக்கின்றன.”

“ஐயையோ இப்போது என்ன செய்யப் போகிறீர்?”

“அதுதான் எனக்கே தெரியவில்லை என்ன செய்வது?”

“ஒன்றும் செய்ய வேண்டாம். போனால் போகிறது. தலை முழுகிவிடும். திரும்ப அங்கே போவது நல்லதல்ல.”

“உண்மைதான்! போவதில் பயன் இல்லை. சனி, தொலையட்டும்!”

“அதுதான் சரி. நீர் பையைத் தேடிக் கொண்டு போவீர். ஒருவேளை அங்கே போலீசும் விசாரணையுமாக இதற்குள் ஒரே களேபரம் ஆகியிருக்கும். ‘நீர் எப்போது வந்தீர்? எதற்காக வந்தீர்? ஏன் பை விழுந்தது?’ என்று உம்மை விசாரிக்காமல் பையைத் தரமாட்டார்கள். நீர் முழி முழி என்று முழிப்பீர் மாட்டிக்கொள்ள நேரிடும். ஆகவே போகாமல் இருப்பதே நல்லது” என்றார் நண்பர். எனக்கும் அதுதான் சரி என்று பட்டது.

இரண்டு மணி நேரமாகிவிட்டது. ஸ்நானம், சாப்பாடு எல்லாம் ஹோட்டலிலேயே முடிந்தன. அறைக்குள் உட்கார்ந்து நிம்மதியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். காலையில் நடந்த சம்பவத்தைப் பற்றிய பயமோ நடுக்கமோ துப்புரவாக இப்போது இல்லை. நேர்மாறாக அதே சம்பவத்தைப் பற்றிக் கதாசிரியர்கள் என்ற முறையில் ஓரளவு வேடிக்கையாகவே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். “என்ன என்.பி.சார் இந்தச் சம்பவத்தை ஓர் அருமையான சிறுகதையாகக் கற்பனை செய்தால் நன்றாக இருக்காது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று நண்பர் கேட்டார்.

“ஓ! பேஷாகச் செய்யலாம். காதல் கதை ஒன்றை ‘டிராஜடி’யில் (சோக முடிவு) முடித்துக் காட்டலாம்.”

“அது மட்டுமா? லைலா ― மஜ்னு, அம்பிகாபதி ― அமராவதி, ரோமியோ ― ஜூலியட் இந்த மாதிரி படிக்கிறவனைக் கண்ணீர் சிந்த வைக்கலாம், ஐயா!”

“வெளுத்து வாங்கும். நீரே எழுதிவிடுவீர்போல் இருக்கிறதே!”

“ஏன்? நீங்கள் எழுதுவதாக இருந்தால் நான் எழுதவில்லை.”

“சே சே! நீர்தாம் முதலில் பார்த்தீர். அதனால் உமக்குத்தான் முதல் உரிமை, நீரே எழுதும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“இப்பொழுதே கருத்து உருவாகிறது; எழுதினால் ஜோராக வரும்!” நண்பர் காகிதக் கற்றையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு மேஜையருகே சென்றார்.

“ஜமாய்த்துத் தள்ளும். நான் நிம்மதியாக ஒரு தூக்கம் போடுகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தூக்கத்தில் ஆழ்ந்தேன். நல்ல தூக்கம் வருகிறவரை ‘கிர்கிர்’ என்று எழுதும் ஒலியும் ‘பரட் பரட்’ என்று காகிதம் கிழிபடுகிற ஒசையும் சிறிதுநேரம் செவிகளில் விழுந்து கொண்டிருந்தன. பின்பு நினைவிழந்து துயிலின் வசப்பட்டுவிட்டதால் எனக்கு ஒன்றும் தெரியாது.

மூன்று மூன்றரை மணிக்கு நண்பர் எழுப்பவே தூக்கம் கலைந்து எழுந்தேன்.

“போய் முகம் கழுவிக் கொண்டு வாரும். ஹோட்டல் பையன் காபி, சிற்றுண்டி கொண்டுவரக் கீழே போய் இருக்கிறான்.” நான் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தேன்.

சிற்றுண்டி சாப்பிட்டு முடிந்ததும், “இதோ எழுதி முடித்துவிட்டேன். படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லும்.அதற்குள் வெளியே வெயிலும் தணிந்துவிடும்.நாம் சுற்றுவதற்குக் கிளம்பலாம்” என்று சொல்லியவாறே என் கையில் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தார். நண்பரின் கதையைப் படிக்கத் தொடங்கினேன்.

முடிந்த காதல்

(கதையின் முதல் மூன்று பக்கங்களும் கோவளம் கடற்கரையைப் பற்றிய வருணனையாகவே இருப்பதால் அதை இங்கேயிருந்து நீக்கி எஞ்சியதை மட்டும் தருகிறேன்).

அம்முவும் பாஸ்கரனும் நேரம் போவதே தெரியாமல் குன்றின்மேல் உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுற்றுப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக இருள ஆரம்பித்தது. கரையில் செம்படவர்களின் கட்டு மரங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பிவிட்டன. மீன் கூடைகளோடு அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கடல் ஓசையும் தென்னை மட்டைகள் காற்றில் உரசும் சப்தமும் தவிர வேறு பேச்சுக் குரல் இல்லை. அம்முவின் செம்பவள இதழ்கள் மெல்லத் திறந்தன.

“பாஸ்கர், நேரமாகிவிட்டதே நாம் ஊர் திரும்ப வேண்டாமா?”

“அம்மு, ஏன் இவ்வளவு அவசரப்படுகிறாய்? இந்தத் தனிமையையும், இதன் இன்பங்களையும் இன்னும் சிறிது நேரந்தான் அனுபவித்து விட்டுப் போவோமே!”

“அதற்கில்லை, பாஸ்கர்! கடைசிப் பஸ்ஸும் போய்விட்டால் எட்டு மைல் நடந்தா போக முடியும்?”

“நடந்துவிட்டால்தான் என்ன? என்னோடு நீயும் உன்னோடு நானும் உடன்வரும்போது எட்டு மைல் என்ன? எண்பது மைல்கூட நடக்கலாமே!” அவன் பேச்சைக் கேட்டு அம்மு சிரித்தாள். அந்தக் கவர்ச்சி நிறைந்த புன்னகையின் அழகில் பாஸ்கரன் அப்படியே சொக்கிப் போனான். மலரைக் காட்டிலும் மென்மையான அவள் பட்டுக் கரத்தைத் தன் கரத்தோடு இணைத்துக் கொண்டு, “அம்மு , ‘பார்பரியோ’வின் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று இனிய குரலில் கேட்டான் பாஸ்கரன்.

“பார்பரியோவா? அப்படி என்றால்... யார்? எனக்குத் தெரியாதே!”

“சொல்கிறேன், கேள். அவள் ஒரு காவிய நாயகி. ஆங்கிலத்தில் காதலர்களைப் பற்றிப் படித்திருந்தால் பார்பரியோவைத் தெரிந்திருக்கும்!”

“என்ன செய்தாள் அவள், அவ்வளவு புகழ்பெற?”

“முடிவு இல்லாத இன்பத்தைக் காதலர்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் பரிபூரணமான மகிழ்ச்சி ஒன்றிற்குப் பின் தொடர்ந்து வாழக்கூடாது. அந்த மகிழ்ச்சியின் போதே இறந்துவிடவேண்டும்’ என்பது பார்பரியோவின் கொள்கை”

“...ஊம்! அப்புறம்” அம்மு அதைக் கேட்டுவிட்டு ஒய்யாரமாகத் தலையை அசைத்தாள்.

“ஒருநாள்தன் காதலன் தன்னைத் தழுவிக்கொண்டிருக்கும்போதே தன் கூந்தலால் தனது கழுத்தையும் அவன் கழுத்தையும் சேர்த்துச் சுருக்கிட்டுக் கொண்டாள் பார்பரியோ. இருவருமே ஏக காலத்தில் அமரத்துவம் அடைந்தனர். இதுதான் பார்பரியோவின் கதை.”

பாஸ்கரன் கூறி முடித்ததும் அம்மு குறும்புதனமான நகைத்துக் கொண்டே, “பாஸ்கர், நானும் அப்படிச் செய்து விடட்டுமா?” என்றாள்.

“சீ குறும்புக்காரி உதாரணத்திற்குச் சொல்ல வந்தால்.” என்று செல்லமாக அவள் கன்னத்தைத் தட்டினான் பாஸ்கரன்.

அப்போது குன்றின்மேல் யாரோ திடுதிடுவென்று நாலைந்து பேர் ஓடிவரும் ஓசை கேடடது. இருளில் ஒன்றுமே தெரியவில்லை. பாஸ்கரனும் அம்முவும் திடுக்கிட்டு எழுந்து நின்றனர்.

இதுவரைதான் நண்பரின் கதையை நான் படிக்க முடிந்தது.இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்த அறையின் கதவு வெளிப்புறம் ‘தடதட’வென்று தட்டப்பட்டது. வழுவழுவென்று போய்க் கொண்டிருந்த கதையில் விறுவிறுப்புத் தட்டும் சமயத்தில் சிவபூஜை நடுவே கரடி பிரவேசித்தது போல் யாரோ வந்துவிட்டார்களே! என்று எண்ணிக் கொண்டு கதையின் பிரதியை மேஜைமேல் வைத்தேன். நண்பர் முணுமுணுத்துக்கொண்டே எழுந்து போய்க் கதவைத் திறந்தார். உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்தோமோ, இல்லையோ இருவரும் ஏக காலத்தில் திடுக்கிட்டோம்.

அந்த ஓட்டலின் முதலாளியும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், கடுகடுப்பான முகபாவத்தோடு உள்ளே நுழைந்தனர், நாங்கள் எழுந்து நின்றோம்.

“இவர்கள்தான் சார்!” ― ஹோட்டல் முதலாளி இன்ஸ்பெக்டரிடம் எங்கள் இருவரையும் சுட்டிக்காட்டி இப்படிச் சொன்னார். எனக்கும் நண்பருக்கும் ஒன்றுமே புரியவில்லை. காரணம் இல்லாமல் ஒருவிதமான பயம் மட்டும் ஏற்பட்டது. அதற்குள் இன்ஸ்பெக்டர் எங்களருகில் வந்து நேரடியாகவே பேச ஆரம்பித்துவிட்டார்.

“நீங்கள்தானே எழுத்தாளர் என்.பி.சாரதி”

“ஆமாம், நான்தான். என்ன வேண்டும்?” - குரல் உளறிவிடாமல் சமாளித்துக் கொண்டு பதில் சொன்னேன்.

“இதோ, இந்தத் தோல் பையைப் பாருங்கள்; இதில் உங்கள் விஸிட்டிங் கார்டு, புகைப்படம், அந்த ஓட்டலில் தங்கியதற்கு உரிய ரசீது, எல்லாம் இருக்கின்றன. கொஞ்சம் பணமும் இருக்கிறது. இது உங்களுடையதுதானே?”

“ஆமாம்!”

“எங்கே போட்டுவிட்டு வந்தீர்கள்?”

அது என் பை அல்ல என்று நான் மறுத்திருக்கலாம். ஆனால் அப்படி நான் மறுத்துவிட வழியில்லாமல் பையில் உள்ள ஆதாரங்களை முழுமையாக ஒப்பித்து என்னை ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டார், இன்ஸ்பெக்டர். ‘இனி ஏமாற்ற முடியாது; உண்மையை நடந்தது நடந்தபடியே சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று தோன்றியது.

இன்ஸ்பெக்டரை அமரச் செய்து நானும் நண்பருமாகக் காலையில் நடந்ததைத் தெளிவாகக் கூறினோம்.

“நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் தற்செயலாகப் பார்க்கப் போனவர்கள்தாம்; உங்களுக்கும் மேற்படி கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை உங்கள் வாய்மொழியால் மட்டுமே நம்புவதற்கில்லை. வேறு ஏதாவது ஆதாரம் வேண்டும்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“என்ன இன்ஸ்பெக்டர் சார் ஏதோ ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர்களை இப்படிப் பெரிய வம்பில் மாட்டி வைக்கிறீர்களே?” என்று கெஞ்சும் குரலில் கேட்டேன்.

“எனக்கு என்ன சார்? உங்கள் மேலே தனிப்பட்ட முறையில் எனக்குக்கூட அனுதாபமாகத்தான் இருக்கிறது.இந்தத் தோல்பையை நீங்கள் அங்கே போட்டுவிட்டு வந்ததனால்தானே இவ்வளவு வம்பும்? இது அங்கே கிடக்கவில்லையானால் ‘மனம் வெறுத்துத் தற்கொலை’ என்று நாங்களே பொதுவாக எழுதிவிட்டு நடவடிக்கையே எடுக்காமல் பேசாமல் இருந்திருப்போம். இனிமேல் எங்கள் கடமையை நான் செய்ய வேண்டியதுதான்.” இன்ஸ்பெக்டர் கையை விரித்துவிட்டார்.

“சார், அந்த டிரைவரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சாட்சி சொல்லச் செய்கிறோமே; அப்போதாவது நம்புவீர்களா?” என்றார் நண்பர்.

“அதில் பிரயோஜனமே இல்லை. அந்த டிரைவர் என்ன சொல்வான் தெரியுமா? இவர்களைக் கோவளத்திற்குப் போகும் ரோட்டில் இறக்கிவிட்டேன். இவர்கள் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்
ஆனால் அரைமணி நேரத்திலேயே அவசர அவசரமாகத் திரும்பி வந்துவிட்டார்கள் இவ்வளவுதான் எனக்குத் தெரியும்’ என்று சொல்வான். எனவே அவனுடைய சாட்சியத்தால் உங்களுக்கு நன்மை ஏற்படுவதற்குப் பதிலாகத் தீங்கே ஏற்படும்” என்றார் இன்ஸ்பெக்டர். அவர் பேசுவதைப் பார்த்தால் உண்மையில் எங்கள்மேல் அனுதாபப்படுவதுபோலவும், ஆனால் சட்டப்படி அந்த அனுதாபத்தைச் செயலளவில் காட்டமுடியாமல் வருந்துவது போலவும் தோன்றியது. நாங்கள் மேலே ஏதும் பேச வழியின்றி வாயடைத்துப் போய் நின்றோம்.

“இப்போது நான் இந்த அறையைக் கொஞ்சம் சோதனை போடலாமா?” இன்ஸ்பெக்டரின் தொனியில் அனுதாபம் மாறி அதிகாரம் வந்துவிட்டது. நாங்கள் தலையை அசைத்தோம்.

எடுத்த எடுப்பில் அவருடைய பார்வையில் பட்டது, மேஜைமேல் இருந்த கதையின் கையெழுத்துப் பிரதிதான்.அவர் அதைக் கையில் எடுத்துப் பொறுமையோடு கடைசி வரை படித்தார். பின்பு எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே பேசினார். “சார், நீங்கள் தப்புவதற்கே வழி இல்லை. பல வகையிலும் இந்தக் கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் நெருங்கிக் கொண்டே வருகிறது. இதோ இந்தக் கதையை நீங்கள் எப்படி எழுதினர்கள்?”

“அதை நான் எழுதவில்லை. இந்த நண்பர் எழுதியது. காலையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்போதுதான் கற்பனை செய்து எழுதினார்.” நான் இப்படிச் சொல்லிவிட்டு நண்பரைச் சுட்டிக் காட்டினேன்.

“கற்பனையா? கற்பனை! அஹ்ஹஹ்ஹா! யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?” - இன்ஸ்பெக்டர் இடிச் சிரிப்புச் சிரித்தார்.

“ஏன் சார், அதில் சந்தேகம் என்ன? நிச்சயமாகக் கற்பனைதான்” என்று வற்புறுத்திக் கூறினார் நண்பர்.

“சார், சும்மா அளக்காதீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா? போலீஸ் இலாகாவில் இன்னும் அறிவாளிகள் இருக்கிறார்கள். எல்லோரும் முட்டாள்களாகிவிடவில்லை. நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.”

“இன்ஸ்பெக்டர் சார், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சற்றுத் தெளிவாகத்தான் சொல்லுங்களேன்? ”நான் கேட்டேன்.

“தெளிவாகச் சொல்வதற்கு என்ன ஐயா இருக்கிறது? கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும்? இந்தக் கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றால் செத்தவர்களின் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அதுதான் போகட்டும் இறந்தவர்கள் காலடியில் பாறை இடுக்கினுள் கிடந்த ‘பாரம்பரியோவின் கதை’ என்ற புத்தகத்துக்கும் உங்கள் கதையில் வரும் சம்பாஷணைகளுக்கும் காப்பி அடித்தாற்போல அவ்வளவு சரியாக ஒற்றுமை இருக்கிறதே! அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“ஐயோ! நான் ஒரு பாவமும் அறியேன், சார்! இந்தக் கதையில் வரும் பாத்திரங்களின் பெயர்களும் சம்பாஷணைகளும் முற்றும் கற்பனை, சார்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு, என்னை நம்புங்கள். நான் நிரபராதி சார்!” என்று பிரலாபிக்கத் தொடங்கினார் என் நண்பர்.

“நிறுத்துங்கள் பேச்சை குருடன் கூட நம்பமாட்டான்.கற்பனை எப்படி இவ்வளவு கச்சிதமாக அமைந்தது? அட, சம்பாஷணைகள்தாம் அப்படி அமைந்தாலும் ‘அம்மு, பாஸ்கரன்’ என்ற பெயர்கள் கூடவா ஒன்றாக அமையும்?”

“சார், ஏதோ என் மனத்தில் தோன்றிய பெயரைப் போட்டு எழுதினேன். கொலையுண்டவர்களின் பெயரும் இப்படியே இருக்குமென்று எனக்குத் தெரியுமா?”

“சரி ஐயா, பெயர், சம்பாஷணைகள் எல்லாமே உம்முடைய சொந்தக் கற்பனை என்றே வைத்துக் கொள்வோம்! கொலை செய்யப் பெறுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்வரை அவர்கள் ‘பார்பரியோவின் காதலை’ப் பற்றிப் பேசியிருக்கலாம் என்பது அங்கு விழுந்து கிடந்த புத்தகத்திலிருந்து அனுமானிக்கப்படுகிறது. அதைக்கூடவா நீராகக் கற்பனை செய்து எழுதினீர்?”

“ஏன் சார்? கற்பனை செய்திருக்கக்கூடாதென்பதற்கு மட்டும் என்ன நியாயம் இருக்கிறது?” என்று ஆத்திரத்தில் இன்ஸ்பெக்டரை எதிர்த்துக் கேட்டார் நண்பர். இன்ஸ்பெக்டரின் குதர்க்கம் நிறைந்த கேள்விகள் அவருக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டிருந்தன.

“இந்த விதண்டா வாதமெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். நான் போலீஸ் அதிகாரி. எனக்குக் கடமைதான் தெரியும்.”

“கடமைதானே தெரியும்? தெரிந்ததைச்செய்து கொள்ளுங்கள்!” நண்பரின் பேச்சு வரம்பு மீறிவிட்டது.

“உங்கள் இருவர் மேலும் வாரண்டு பிறப்பித்திருக்கிறேன். இருவரையும் இப்போதே அரெஸ்டு செய்கிறேன். வேறு சரியான புலன்கள் அகப்படுகிற வரையில் நீங்கள் ‘ரிமாண்டில்’ இருக்க வேண்டியதுதான்.”

நாங்கள் பதில் சொல்லவில்லை.

“புரொப்ரைட்டர்!”- மாடியே அதிரும்படி கூச்சல் போட்டார் இன்ஸ்பெக்டர். அடுத்த கணம் அந்த ஹோட்டலின் முதலாளி கை கட்டி வாய் பொத்திப் பவயமாகத் தெய்வத்திற்கு முன் நிற்கும் பக்தரைப்போல இன்ஸ்பெக்டருக்கு முன் ஓடி வந்து நின்றார்.

“இவர்களை ‘லாக்கப்’பிற்குக் கொண்டு போகிறேன். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பாகிறவரை இந்த அறையை வேறு எவருக்கும் வாடகைக்கு விடக்கூடாது. இப்படியே பூட்டிச் ‘சீல்’ வைத்துவிடுவோம். இது சர்க்கார் பொறுப்பில் இருக்கும்.”

“சரி சார், அப்படியே செய்யுங்கள்.” புரொப்ரைட்டர் சம்மதித்தார். ‘இந்தப் பாழாய்போன மனிதர்கள் நம் ஹோட்டலில் ஏன் தங்கினார்கள்? இவர்களால் எவ்வளவு தொல்லை!’ என்று மனத்திற்குள் எங்களை வசைபாடியிருப்பார் அவர்.

விதியையும் போதாத வேளையையும் எண்ணிச் சபித்துக் கொண்டே இன்ஸ்பெக்டரோடு சென்றோம். “இந்த வருஷம் ஏன்தான் லட்சதீப உற்சவத்துக்கு வந்தோமோ?”

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சாந்தம் அடைந்திருந்தார்.“சார், எதற்கும் நீங்கள் இருவரும் நடந்தது நடந்தபடியே ― அதாவது நீங்கள் என்னிடம் சொல்லியதுபோல் ― ஆளுக்கு ஒரு ‘ஸ்டேட்மெண்ட்’ எழுதிக் கொடுத்துவிடுங்கள். பின்னால் ஆகிற படி ஆகிறது!” என்று சொல்லிக் கொண்டே காகிதத்தை எடுத்து ஆளுக்கு ஒன்றாக நீட்டினார். நாங்கள் அதை வாங்கி விரிவான ஸ்டேட்மெண்டு ஒன்று எழுதிக் கொடுத்தோம். அதை வாங்கிக் கொண்டதும் எங்களை ‘லாக்கப்’புக்கு அனுப்பினார். யாரை நோவது? யாரிடம் கோபித்துக் கொள்வது? குனிந்த தலைநிமிராமல் அரசாங்க ‘விருந்தாளி’களாக ‘விருந்தறை’க்குள் நுழைந்தோம். அந்த நாற்றம் நிறைந்த அறையையும் கிழிந்த ஓலைப்பாயையும் பார்த்தபோது குமட்டிக் குமட்டி வாந்தியெடுக்க வந்துவிடும் போலிருந்தது.

“என்ன, என்.பி.? ‘அந்தக் காலத்திலே தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குப் போகவில்லையே!’ என்ற குறை இப்படியா தீர வேண்டும்” ― நண்பர். ஏதோ ஹாஸ்யமாகப் பேசுவதுபோல் பேசினாலும் அந்தப் பேச்சின் முடிவில் துன்பத்தால் ஏற்படும் விரக்தியே நிறைந்தது.

“அட, அதுதான் போகிறது! நாசமாய்ப்போகிற கதையில் எப்படி ஐயா அவ்வளவு திருத்தமாக எழுதித் தொலைத்தீர்?” என்று நான் அவர் மேல் எரிந்து விழுந்தேன்.

“என்னைச் சொல்லாதீர். நீர் தோல் பையைப் போட்டுவிட்டு வராவிட்டால் இருக்கிற இடம் தேடி வந்து கதையைப் படிக்கவா போகிறான்?” என்று என் மேல் பதிலுக்கு எரிந்து விழுந்தார் அவர்.

இருவருமாகச் சேர்ந்து விதியின் மேல் எரிந்து விழுந்தோம். அந்த ஜெயில் அறையில் இருவருமாக மூன்று வாரம் கழித்துவிட்டோம். எங்கள் கதி என்ன ஆகுமென்று எங்களாலேயே சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. முகம் நிறையத் தாடியும் மீசையும் வளர்ந்துவிட்டன.ஜெயில் உணவும் ஒருவிதமாக நாலைந்து தடவை வாந்தியெடுத்தபின் இப்போது வழக்கமான உணவுபோல் ஒத்துக்கொண்டுவிட்டது.

“பரிபூரணமாக நிறைந்த அனுபவமுள்ளவன்தான் கதாசிரியனாக இருக்க வேண்டும் இல்லையா? அதனால்தான் இதுவரை ஏற்படாத இந்தச் சிறை அனுபவத்தைக் கற்பனாதேவி நமக்கு அளித்திருக்கிறாள்” என்று இருவருமாக மெல்ல ஆத்மதிருப்தி அடைந்து கொண்டிருந்தோம். சிறையில் பத்திரிகை கிடைத்தாலாவது அந்தக் கேஸ் நிலவரம், புலன் விசாரணை எல்லாம் எப்படி இருக்கின்றன என்று படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதுதானே கிடைக்கவில்லை.

இதோ அதோ என்று பின்னும் பதினைந்து நாட்கள் கழிந்துவிட்டன. மறுமாதம் முதல்தேதி காலை திடீரென்று இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் இரண்டு மூன்று முரட்டுக் கைதிகளுடன் எங்கள் அறைப் பக்கமாக வந்தனர். எங்கள் வார்டின் கதவு திறக்கப்பட்டது.

“சார், நீங்கள் இருவரும் வெளியே வாருங்கள். உங்களுக்கு விடுதலை. இவர்கள்தான் உண்மைக் குற்றவாளிகள்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் இன்ஸ்பெக்டர். ‘அப்பாடா? பிழைத்தோம்’ என்று நானும் நண்பரும் வெளியேறினோம். அவர் எங்களிடம் மிகவும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“ஆமாம் சார், அது எப்படி அந்த மாதிரி அச்சில் வார்த்தாற்போல் உங்களால் கற்பனை செய்ய முடிந்தது? நீங்கள் உங்கள் கதையை எப்படி முடித்திருக்கிறீர்களோ அப்படியேதான் உண்மையிலும் நடந்திருக்கிறது. அம்முவும் பாஸ்கரனும் பேசிக் கொண்டிருந்தபோது இருட்டிவிட்டதென்று எழுதியிருந்தீர்கள் அல்லவா? அப்போது இந்தத் திருட்டுப் பயல்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் இருந்த நகைநட்டுக்களைப் பறித்துக் கொண்டு தாமாகவே தற்கொலை செய்து கொண்டதுபோல் தோன்றும்படி அவர்களை அடித்துத் தென்னை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்த ஒரு மாதமாக அலைந்து இதைக் கண்டுபிடித்தேன். நேற்று ஒரு நகைக் கடையில் திருட்டு நகைகளை விற்க வந்தபோது இவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள்” என்று எங்களுடைய பழைய ஸ்தானத்தில் இப்போது இருந்தவர்களைக் காட்டினார் இன்ஸ்பெக்டர். திரும்பத் திரும்ப அவர் நண்பரின் கதையைப் பற்றி ஆச்சரியப்பட்டார்.

“காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல்தான் இன்ஸ்பெக்டர் சார். இந்த மாதிரி கற்பனைதான் ஓர் எழுத்தாளனின் மனச்சக்தி. அவன் தன் பேனாவில் உருவாக்கும் கற்பனை எங்காவது என்றாவது நடந்திருக்கிறது; அல்லது நடக்கிறது; இரண்டும் இல்லாவிட்டால் நடக்க இருக்கிறது ― தெரிந்து கொள்ளுங்கள்” என்று பெருமிதத்தோடு இன்ஸ்பெக்டருக்குப் பதில் சொன்னார் என் நண்பர்.

“என்னவோ போங்கள். உங்கள் இருவரையும் மகத்தான கஷ்டத்தை அனுபவிக்கும்படி செய்துவிட்டேன்!”

“நீங்களா செய்தீர்கள்? சந்தர்ப்பம் அப்படிச் செய்துவிட்டது” நான் உபசாரமாக இப்படிக் கூறினேன்.

“அடுத்த வருஷம் லட்சதீப உற்சவத்திற்கு வந்தால் நீங்கள் அவசியம் என் விருந்தாளியாகத் தங்க வேண்டும்.”

“ஐயையோ மறுபடியுமா?”

“பார்த்தீர்களா? பார்த்தீர்களா? இந்தக் குயுக்திதானே வேண்டாம் என்கிறது? நான் என் வீட்டில் விருந்தினராகத் தங்க வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தப்பர்த்தம் செய்து கொள்கிறீர்களே.”

“அதற்கென்ன சார், நாங்கள் அடுத்த வருஷம் வந்தால் தங்குகிறோம்.”

“கட்டாயம் வர வேண்டும்.”

“லட்ச தீபத்திற்குத்தானே? பிழைத்துக் கிடந்தால் வருகிறோம்... அது சரி இன்ஸ்பெக்டர், அந்தக் கதையின் பிரதியைக் கொஞ்சம் திருப்பித் தருகிறீர்களா?”

“ஓஹோ அது உங்களுக்கு வேண்டுமா?”

“வேண்டுமாவாவது! அதன் சக்தி எவ்வளவு பெரியது, அதை விட்டுவிட்டா போவது?”

நண்பர் இன்ஸ்பெக்டரிடம் அதைக் கேட்டு வாங்கிக் கொண்டார்.

“என்னைப் பற்றி எந்தக் கதையிலாவது எழுதி மானத்தை வாங்கி விடாதீர், ஐயா! நான் சுபாவத்தில் நல்லவன்!” வேடிக்கையாக இப்படிச் சொல்லிக் கொண்டே எங்களுக்குக் கைகூப்பி விடை கொடுத்தார் அவர். நானும் நண்பரும் திருவனந்தபுரம் இருந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஊர் திரும்பினோம்.

(கலைமகள், செப்டம்பர், 1957)