நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/சீ! சீ! இந்தப் பழம்!
19. சீ! சீ! இந்தப் பழம்!
“அழகாக இருப்பது எப்படி? மற்றவர்களைக் கவருவது எப்படி? உங்களுடைய சருமத்தைக் காந்தி நிறைந்ததாகவும், மினுமினுப்பாகவும் எப்படி வைத்துக் கொள்வது? நீங்கள் சுருள் சுருளான அழகிய கேசத்தைப் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று இந்த மாதிரியில் தொடங்கும் விளம்பரங்களையோ, புத்தகங்களையோ கவனிக்காத நாட்கள் இராமசாமியின் வாழ்க்கையில் ஏற்பட்டது இல்லை.
பத்திரிகைகளில் இந்தப் பாணியில் வெளிவருகிற விளம்பரங்களை அவன் ஒன்று விடாமல் கத்தரித்து, ஒரு ஆல்பமே தயாரித்து வைத்திருந்தான். கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்குக் கூட அவனுடைய புத்தக அலமாரியில் முதல் இடம் கிடையாது. இம்மாதிரி எப்படித் தலைப்போடு கூடிய புத்தகங்களுக்குத்தான் முதல் இடம்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்த இளமைப் பருவத்திலேயே, உடலைப் பேண வேண்டும், உடல் அழகினால் பிறரைக் கவர வேண்டும் என்று இராமசாமிக்கு அளவற்ற மோகம். அது ஒரு விடலைத் தனமான பருவம். அந்தப் பருவத்து உணர்ச்சிகளே தனிப்பட்டவை.
ஒரு நாளைக்கு நாற்பது தடவையாவது முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளா விட்டால் ஏதோ குறைந்து விட்டது போலத் தோன்றும். தலைக் கிராப்பை வாரிக் கொள்வதற்கு ஒரு சீப்பு எப்போதும் சட்டைப் பையிலேயே இருக்க வேண்டும். ஒரு மயிர் கலைந்து விட்டாலும் அழகே போய் விட்டது போலத் தோன்றும் பளபளப்பாக மின்னும்படி எண்ணெய் தடவி, நீரோடிய கருமணல் போல் அலை அலையாகப் படியும்படி வாரி விட்டுக் கொண்டால் தான் அவனுக்குத் திருப்தி
இராமசாமிக்கு இருபத்திரண்டாவது வயது. சரியான காளைப் பருவம், கவலை, அவலங்கள் இல்லாத மாணவ வாழ்க்கை. உல்லாசம் நிறைந்த எண்ணங்கள், உல்லாசம் நிறைந்த பேச்சுக்கள், உல்லாசம் நிறைந்த செயல்கள். அடுத்த வீட்டில் ஒரு அழகிய யுவதி, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களைச் சேர்த்து மகிழ வைக்கும் வயது. நடக்குமோ, நடக்காதோ - துணிவான அனுராக நினைவுகள் தோன்றி விடும். அவளும் அவன் படிக்கிற அதே கல்லூரியில் படிக்கும் மாணவிதான். அந்த வயதில் அந்தச் சூழ்நிலையில் இராமசாமிக்கு ஏற்பட்ட உற்சாகத்துக்கும், உல்லாசத்துக்கும் இந்தப் பெண் ஒரு வகையில் முழுக்க முழுக்கக் காரணம் என்று சொல்ல வேண்டும். அந்தப் பெண்ணின் கண்களின் பார்வை ஒரு கணம் தன் மேல்நிலைக்கலாகாதா? என்று அவன் ஏங்கிய நாட்கள் எத்தனை? அவளோடு இரண்டொரு விநாடிகள் பேசுவதற்கு முயன்று அது முடியாமல் ஏமாற்றமடைந்த தோல்விகள் எத்தனை?வசியத் தாயத்து, வசிய மோதிரம், ‘இப்னாடிஸம்’ என்று இந்த உலகத்தில் செயற்கைக் காதல் முறையின் தளவாடங்களாகப் பத்திரிகைகளில் விளம்பரமாகும் சகலவிதமான சாதனங்களையும் பிரயோகித்த பின்னரும், அந்த மயில் இந்தக் கட்டிளங் காளையின் பக்கமாகப் பார்வையைச் சாய்க்கவில்லை. இராமசாமிக்கு ஏமாற்றம் சாதாரண ஏமாற்றமா? நூற்றுக்கு நூறு சதவிகித ஏமாற்றம்.
‘ஆகா! இது என்ன அநியாம் நிறைந்த உலகம்? படிப்புத்தான் வரமாட்டேனென்கிறது. பரீட்சைகளும் எத்தனை தரம் எழுதினாலும் பாஸ் ஆவதில்லை. பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரைகள் எழுதலாம் என்றால் அவர்கள் ‘நன்றாயில்லை’ என்ற ஒரு காரணத்துக்காகத் திருப்பியனுப்பி விடுகிறார்கள். என்ன அக்கிரமம்? ‘நன்றாயில்லை’ என்பதற்காக ஒரு கதையைத் திருப்பியனுப்புவதாவது? இப்போதெல்லாம் தான் நன்றாயிருக்கிற எதுவுமே பத்திரிகையில் வருவதில்லையே! என் கதையைப் பிரசுரிக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுவதே, அது ‘நன்றாயில்லை’ என்ற ஒரே தகுதிக்காகத்தானே? சரி. இதெல்லாம் போகிறது.நம்மால் முடியாத காரியங்கள். கடைசி முயற்சியாக இந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொஞ்சம் காதலித்துப் பார்க்கலாம் என்றால் அதிலுமா இவ்வளவு தொல்லைகள்!' என்று தனக்குத்தானே எண்ணி ஏங்கிக் குமுறுவான் இராமசாமி.
கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது பஸ்ஸில் தான் நின்றுகொண்டு, அவளுக்கு எத்தனையோ நாட்கள் உட்கார இடம் கொடுத்திருக்கிறான். ‘சரி! இப்படி உட்கார இடம் மட்டும் கொடுத்தால் இவள் நம்மோடு பேசுவதற்கு வாய்ப்பில்லை; நினைவில்லாமல் போட்டுவிட்டு எழுந்திருப்பது போல் பஸ்ஸில் உட்காருமிடத்தில் நம் கைக்குட்டையைப் போட்டுவிட்டு எழுந்திருப்போம். "மிஸ்டர்! இந்தாருங்கள் உங்கள் கைக்குட்டை” என்று அப்போதாவது இரண்டு வார்த்தை இவள் சொல்லித்தானே ஆக வேண்டும்!” என்து எண்ணித் திட்டமிட்டவனாக மறுநாள் அவளுக்கு இடம் கொடுப்பது போல் கைக்குட்டையையும் அந்த இடத்தில் வைத்துவிட்டு எழுந்தான்.
ஆனால் அந்தப் பெண்புலி அவன் எண்ணியதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்துவிட்டது. விறுவிறு வென்று அந்தக் கைக்குட்டையை ஸீட்டிலிருந்து எடுத்துச் சுருட்டிப் பஸ்ஸுக்கு வெளியே ரோட்டில் வீசி எறிந்துவிட்டாள். இராமசாமியின் தன்மானம் கொதித்து எழுந்தது. அவள் தன்னுடைய உள்ளத்தையே அந்த மாதிரி அலட்சியமாகச் சுருட்டிஓடுகிற பஸ்ஸிலிருந்து நடுரோட்டில் விசிறிவிட்டதுபோலத் துடித்தான் அவன்.அத்தனை பேர் இருக்கிற பஸ்ஸில் அவளை என்ன செய்ய முடியும்? திருடனுக்குத் தேள் கொட்டினாற் போலத் தவிக்கும் நிலை அவனுடையதாயிருந்தது.
அடாடா அந்தப் பெண்ணிண் பெயரை இதுவரை சொல்லவே இல்லையே! ‘நளினி’ என்ற நளினமான பெயர் அவளுக்கு. மயிலேறும் பெருமாள் தெருவில் தொண்ணுாற்றொன்பதாம் நெம்பர் வீடு நம்முடைய கதாநாயகனான இராமசாமியினுடையது. நூறாம் நெம்பர் வீடு கதாநாயகியாவதற்குத் தயங்குகின்ற அல்லது மறுக்கின்ற நளினியினுடையது.
தொண்ணுாற்றொன்பதாம் நெம்பர் வீட்டுக்கும், நூறாம் நெம்பர் வீட்டுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தன. உதாரணமாகத் தொண்ணுற்றொன்பதாம் வீட்டுக்குப் பால் விடுகிற தீர்த்தவாரியா பிள்ளை (இது காரணப் பெயர்) தான் நூறாம் நெம்பருக்கும் வாடிக்கைப் பால்காரர். இரண்டு வீடுகளுக்கும் வாசல் பெருக்கிக் கோலம்போடும் வேலைக்காரி ஒருத்தி. இரண்டு வீடுகளுக்கும் தபால் கொண்டு வரும் தபால்காரன் ஒருவனே! இரண்டு வீடுகளிலும் ‘செய்திக் குழப்பம்’ - என்ற ஒரே தினசரி பத்திரிகையைத்தான் வாங்குகிறார்கள். இப்படி இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தும் இந்த வீட்டில் இருக்கின்ற ஒரு பையன் அந்த வீட்டில் இருக்கின்ற ஒரு பெண்ணைக் காதலிக்க முடியாமல் இருந்தால் அதை என்னென்பது? இராமசாமியின் வருத்தத்தில் நியாயமிருக்கிறதா? இல்லையா? என்று இப்போது நீங்கள் சொல்லுங்கள்."என்னடா இராமசாமி, உன்னுடைய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?” என்று அந்தரங்கமான மாணவ நண்பர்கள் கிண்டலாக விசாரித்தால் “தொண்ணுாற்றொன்பதுக்கும் நூறுக்கும் நடுவில் ‘மைனஸ்’ ஒன்று” என்று கணித ரீதியாக ஏக்கத்தோடு பதில் சொல்வான் அவன் ‘அல்ஜீப்ரா’ கணக்கின்படி வேண்டுமானால் 'மைனஸூம் மைனஸும்’ பிளஸ் ஆக இருக்கலாம்! ஆனால் காதலால் வெயில் காலத்துத் தார் ரோடு போல் உருகிக் கொண்டிருக்கும் இராமசாமிக்கு ‘அல்ஜீப்ரா’ எக்கேடு கெட்டுப் போனால் தான் என்ன?
ஒருநாள் தொண்ணுற்றொன்பதாம் நெம்பர் வீட்டுக் கதாநாயகனும், கதாநாயகியாக விரும்பாத நூறாம் நம்பர் வீட்டுத் திருமதியும் கல்லூரிக்குப் போவதற்காக ஒரே பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாகத் திடீரென்று மழை தூறத் தொடங்கிவிட்டது. முன் ஜாக்கிரதையாகக் குடை கொண்டு வந்திருந்த தொண்ணுாற்றொன்பதாம் நெம்பர், இத்தகைய அரும்பெரும் வாய்ப்பை நழுவவிடாமல் குடையை விரித்து, "மழையில் நனைகிறீர்களே! பஸ் வருகிறவரை இப்படிக் குடையில் நிற்கலாமா” என்று கெஞ்சும் குரலில் திருமதி நூறாம் நம்பரை அழைத்தது.
'இந்தத் தடியன் இப்படித் துணிந்து நம்மை அழைப்பதாவது?’ என்று உள்ளூர ஆத்திரமடைந்த நூறாம் நம்பர், குறும்புத்தனமான முறையில் இராமசாமியின் அனுதாபத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது.
பதில் பேசாமல் எட்டி நின்றபடியே அவனிடமிருந்து குடையை வாங்கித் தான் மட்டும் நனைந்துவிடாதபடி பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டாள் அவள். தன் இதய தேவதைக்கு உதவி செய்ய முடிந்த பெருமையோடு மழையில் தெப்பமாக நனைந்து கொண்டு நின்றான் இராமசாமி. அவனை சொட்டச் சொட்ட நனைய வைத்த பிறகு ‘நன்றி’ என்று வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் குடையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பஸ் ஏறிப் போய்ச் சேர்ந்தாள் அவள்.
காதற் போர்க் களத்தில் இரண்டாவது முஸ்தீபும் தோல்வி அடைந்துவிட்டது. அந்தோ! பரிதாபம். ஆனால் இராமசாமி முயற்சி வீரன். ‘அருமை உடைத்தென்று அகாவாமை (மலையாதிருத்தல்) வேண்டும்’ - என்பது போன்ற மணிமொழிகளை எல்லாம் படித்தவனாயிற்றே அவன்! ‘ஊக்கமது கைவிடேல்’ என்று ஒளவையார் தனக்காகவே சொல்லியிருப்பதாக எண்ணிக்கொண்டான் அவன். மூன்றாவது முஸ்தீபாகப் புதுமையான முறையில் ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினான்.
‘ஏ! முட்டாள் மூளையே! உனக்கு இதுவரை இந்த யோசனை ஏன் தோன்றாமல் போய்விட்டது? ஒரு காதல் கடிதம்கூட எழுதாமல் காதலில் வெற்றி கிடைக்கவில்லையே என்று எண்ணி ஏங்குவது எவ்வளவு பெரிய பேதைமை? இன்றைக்கே ஒரு காதல் கடிதம் எழுதிவிடுகிறேன்.ஒரு பெண்ணின் உள்ளத்தை உருக்க வேண்டுமென்றால் அது இலேசான காரியமா? எழுத்தின் மூலமாகத்தான் உருக்க முடியும் போலிருக்கிறது’ என்று சிந்தித்து, எதுகை, மோனைகளோடு ஒரு காதல் கடிதம் எழுதிவிடுவதென்று உட்கார்ந்தான். வசனத்தில் எழுதப்போக நளினியின் மேல் அவனுக்கிருந்த அளவற்ற காதலின் வேகத்தால் அது கவிதையாகவே பிறந்து தொலைத்துவிட்டது!
"இச்சைக்கினியாளே - பச்சைக் கிளியாளே - கொச்சை மொழியாளே - பச்சையாகவே சொல்லிவிடுவேன் பாவையுனைப் பாவி நான் காதலிக்கிறேன் - சொச்சம் நாளைக்குச் சொல்லுகிறேன். சுகத்துக்கு மறு கடிதம் போட்டு விடு”
இந்த வரிகளை எழுதி முடித்தவுடன் இராமசாமி துள்ளிக் குதித்தான்."எனக்கும் கவிதை வருகிறது: ஆகா! என்ன எதுகை? என்ன மோனை?” என்று தன்னைத் தானே ஆத்மார்த்தமாகப் பாராட்டிக் கொண்டான்.
அந்தக் கடிதத்தை நேரில் கொடுப்பதோ, ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டுக்குள் வீசி எறிவதோ நேர்மையல்ல. (இராமசாமி காதலில் நேர்மை தெரிந்தவன் பாருங்கள்!) என்று எண்ணித் தபாலில் ஒட்டிப் போட்டான். மறுநாள் மாலை பதில் கவரும் தபாலிலேயே வந்து சேர்ந்தது. இராமசாமி மகிழ்ச்சியோடு அதைப் பிரித்தான். ஏதோ ஒரு பத்திரிகையிலிருந்து கத்தரித்து எடுத்த கொரில்லா - குரங்கின் படம் ஒன்று கவருக்குள் இருந்தது. அவமானம்! அவமானம்! இராமசாமிக்குத் தாங்க முடியாத அவமானம் வந்த ஆத்திரத்தில் அந்தக் கணமே படத்தையும் உறையையும் நெருப்பை வைத்துக் கொளுத்தினான்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நூறாம் நெம்பர் வீட்டு நளினியைக் காதலிக்கும் முயற்சியை அறவே கை விட்டு விட்டுப் படிப்பில் கவனத்தைச் செலுத்தினான் இராமசாமி. அவனுடைய போக்கே மாறிக் கொண்டு வந்தது. ‘படிப்பு வீசை என்ன விலை?’ என்று கேட்டுக் கொண்டிருந்தவன், ‘இந்த உலகத்தில் படிப்பைத் தவிர வேறெதுவுமே இல்லை’ என்று எண்ணத் தொடங்கி விட்டவனைப் போல எப்போதுமே புத்தகமும் கையுமாக வீட்டிற்குள் அடைந்து கிடந்தான். ஏதாவதொரு பயனற்ற முயற்சியில் அவமானப்பட்ட பிறகுதான் மனிதனுக்கு நல்லதில் அக்கறை ஏற்படுமென்பார்களே; அது அவன் விஷயத்தில் உண்மையாகிவிட்டது.
மார்ச் பரீட்சைக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்களே இருந்தன. பூர்வாங்கமாக நடத்தப்பட்ட ‘செலக்ஷன்’ பரீட்சையில் கணிதத்தில் இராமசாமி கல்லூரியிலேயே முதல் மார்க் வாங்கிவிட்டான். மற்றப் பாடங்களிலும் தரமான தேர்ச்சி. பழைய இராமசாமியின் உடலுக்குள் புதிய சக்தி ஏதாவது நுழைந்துவிட்டதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டாகிவிட்டது. மாறுதல் என்றால் முற்றிலும் மாறுதல்."அழகாக இருப்பது எப்படி?” போன்ற ‘எப்படி’ பாணிப் புத்தகங்களைப் படிக்கும் அசட்டுத்தனம் முதல் சகல அசட்டுத்தனங்களும் ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழன்று சென்றுவிட்டன. படிப்பைத் தவிர வேறு எதையும் கவனிக்காத ‘படிப்பு வெறி’ அவனிடம் உண்டாகியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
மார்ச் மாதத்தில் வெய்யிலின் கொடுமை அதிகமாக இருந்தது. ஊரில் அங்கங்கே அம்மை, வைசூரி பரவியிருந்த சமயம், பரீட்சைக்கு நாலுநாள் இருக்கும்போது இராமசாமிக்கு வைசூரி போட்டுவிட்டது. உடம்பு முழுவதும் ஊசி குத்த இடமின்றி அரிநெல்லிகாயாக முத்துக்கள் வெடித்திருந்தன. முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. கொப்புளங்கள் கோரமாக்கியிருந்தன. அசையாமல் ஒரே இடத்தில் படுத்துக்கிடந்தான். சுற்றி வேப்பிலையைத் தூவியிருந்தார்கள். உடம்பில் கொப்புளங்கள் உறுத்தக்கூடாதென்று தலைவாழை மரத்தின் மெல்லிய குருத்து இலையில் விளக்கெண்ணையைத் தடவி விரித்து அதில் படுக்கவிட்டிருந்தார்கள்.
நாலுநாட்களாகப் பரீட்சை தொடங்கி நடந்து கொண்டிருந்தது. மெடிகல் 'சர்டிபிகேட்’ வாங்கிக் கொடுத்துவிட்டு அவன், பரீட்சைக்குப் போகாமல் இருந்துவிட்டான்.
அன்று கணக்குப் பரீட்சை காலை எட்டு, எட்டரை மணி சுமாருக்கு நளினியின் தம்பி, இராமசாமி படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான்.
"மாமா! மாமா!"-இமைக் கொப்புளம் உறுத்தாமல் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்த இராமசாமி கண்ணை விழித்துப் பார்த்தான். நளினியின் தம்பி கையில் எதையோ ஒளித்து மறைத்துக் கொண்டு நின்றான்."என்னடா அது?”
"அக்கா உங்களிடம் கொடுத்துப் பதில் வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள்” என்று சொல்லிக் கொண்டேதன் கையில் மடித்து வைத்துக்கொண்டிருந்த கடிதத்தை இராமசாமியிடம் நீட்டினான் பையன். இராமசாமி படுக்கையில் சாய்ந்தபடியே அலட்சியமாக ஒரு கையை நீட்டி வாங்கினான். பிரித்துப் படித்தான்.
"பத்து மணிக்குக் கணக்குப்பரீட்சை,இன்னும் இரண்டுமணிநேரமே இருக்கிறது. சில கணக்குகள் எனக்கு விளங்கவே இல்லை. இப்போது உங்களிடம் வந்தால் சொல்லிக் கொடுக்க அவகாசப்படுமா? பழைய சம்பவங்களை நினைத்து என் மேல் கோபித்துக் கொண்டு முடியாது என்று சொல்லி அனுப்பி விடாதீர்கள்! அப்போது உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போனேன்.இப்போது...! தெரிந்து கொண்டநளினி.”
படித்து முடித்ததும் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன். "அப்போது உங்களைப்புரிந்து கொள்ள முடியாமல் போனேன், இப்போது...!” என்று வார்த்தை எழுதாமல் இடைவெளியாக விட்டிருக்கும் இடத்திற்கு எவ்வளவு அர்த்தம் இருக்கிறதென்று நினைத்தபோது அவனுக்கு உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஒரே ஒரு கணம்தான் அது நிலைத்தது. அதையடுத்து இனம் புரியாத ஒருவகை அருவருப்பு. “பார்க்க வருகிறாளாம் பார்க்க! பார்க்க விளங்காத உடம்போடு வைசூரி போட்டிருக்கிறபோது நீ பார்க்க வரவில்லை என்றுதான் குறை” தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் அவன்.
“இந்தா, இந்த நோட்டை உன் அக்காவிடம் கொண்டு போய்க் கொடு, இதில் எல்லாக் கணக்குகளுக்கும், அவைகளைப் போடும் விதம் அடங்கியிருக்கின்றன. பார்த்துப் படித்துக் கொள்ளச் சொல் என்னைப் பார்க்க இப்போது இங்கே வரவேண்டாம் தெரிந்ததா? போய்ச்சொல்லிவிடு!” இராமசாமியின் குரலில் கண்டிப்பு ஒலித்தது. பையன் நோட்டைப் பெற்றுக்கொண்டு போனான்.
கூடத்தில் இரண்டாவது வகுப்பு படிக்கும் இராமசாமியின் தம்பி தன் பாடப்புத்தகத்திலிருந்து இரைந்து படித்துக்கொண்டிருந்தான். “நரி தன்னால் ஆன மட்டிலும் முயன்று பார்த்தது; திராட்சைக் குலை அதற்கு எட்டவே இல்லை. உடனே திராட்சைக்குலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்த நரி,"சீ!சீ! இந்தப்பழம் புளிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது!”
இராமசாமிக்காகவே தம்பி அந்த வரிகளைப் படித்தானா?
படுக்கையில் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த இராமசாமி சிரித்துக் கொண்டான். “ஆசை நிறைவேறினால் மகிழ்ச்சி. நிறைவேறாவிட்டால் அந்த ஏமாற்றத்தை மறைக்க ஒரு வேதாந்தம். எந்த வகையில் பார்த்தாலும் மனிதன் கெட்டிக்காரத்தனமாக எதையும் சமாளிக்கப் பழகியிருக்கிறான்” என்று அவன் வாய் முணுமுணுத்தது.
(ஆனந்த விகடன், பிப்ரவரி, 1957)