நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒரு சர்வதேசக் கருத்தரங்கு
165. ஒரு சர்வதேசக் கருத்தரங்கு
நகரின் மிகவும் செல்வாக்கு நிறைந்த ஸ்தாபனமாகிய சமூக இலக்கிய சேவா சங்கத்தின் ஜெனரல் பாடி கூடிய போது, யாரும் எதிர்பாராத விதமாக அப்படி ஒரு சர்ச்சை அங்கே கிளம்பியது. எல்லோரும் பயந்தே போனார்கள்.
“உங்கள் சங்கம் மேல் மட்டத்தையும், உயர் வர்க்கத்தையும் சேர்ந்த இலக்கிய கர்த்தாக்களையே கொண்டாடுகிறது. அடித்தளத்து வர்க்கத்தையும், தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் கண்டு கொள்வதே இல்லை.”
தலித் இயக்கத்தில் ஈடுபாடுள்ள ஒருவர் இந்தக் குற்றச்சாட்டைக் கிளப்பினார். கூடவே ஒரு யோசனையையும் தெரிவித்தார்.
“நூறு ஆண்டுகளுக்கு முன் செருப்புத் தைக்கும் தொழிலாளியாகப் பிறந்து, மகத்தான கவிதைகளை இயற்றிவிட்டு மறைந்த, குசேல தேவநாயனார் என்பவருடைய கவிதைகளைப் பற்றிய விழாவையும், நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிக் கருத்தரங்கு ஒன்றையும் நடத்த வேண்டும் - அக்கருத்தரங்கிற்கு இப்போது அக்கவிஞரின் வம்சாவளியினராயிருக்கும் கொள்ளுப் பேரனை அழைத்துக் கெளரவிக்க வேண்டும்.”
எப்படியாவது எதிர்ப்புக் குரலை அடக்கக் கருதிய பொதுக் குழுவினர், உடனே அதைச் செய்ய ஒப்புக் கொண்டார்கள்.
“வறுமைக் கோட்டுக்குக் கீழே கல்வி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமுக ரீதியாகவும் பிற்பட்ட சமூகம் ஒன்றில் தோன்றிய சித்த புருஷரும், கவிஞரும் ஆகிய குசேல தேவநாயனரின் நூற்றாண்டு விழாவை ஈடு இணையற்ற முறையில் கொண்டாட வேண்டும் என்று 'சமூக இலக்கிய சேவா சங்கம் ஒரு மனமாக முடிவு, செய்கிறது” என்று தீர்மானத்தின் டிராஃப்ட்ரெஸல்யூஷனைப் படித்தார்.
உடனே கமிட்டியிலிருந்த ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர், “மெக்ஸிகோவில் தற்போது வாழும் ஸாவ்லோ காப்டா என்ற கவிஞர் நோபல் பரிசு பெற்ற புகழுக்குரியவர். குசேல தேவநாயனார் மாதிரியே செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து புகழ் பெற்றவர். அவரையும் இந்த நூற்றாண்டுவிழாக் கருத்தரங்கிற்கு அழைக்க வேண்டும்” என்று அதற்கு ஒரு திருத்தத்தை முன் மொழிந்தார்.
“ஆமாம்! அப்படியே செய்யலாம்” என்று வேறு பலரும் அதை உடன் வழி மொழிந்தனர்.உடனே கமிட்டியிலிருந்த வைஸ்-சான்ஸ்லர் ஒருவருக்குத் தமக்குத் தெரிந்ததைச் சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.
“லத்தீன் அமெரிக்காவில் சிலி நாட்டில் குழாய் ரிப்பேர்க்காரரான ப்ளம்பர் ஒருவர் - ஸில்வியா பிளம்பர் என்று 'மிகப்பெரிய புரொக்ரஸிவ் கவிஞராக விளங்கி வருகிறார். இக்கருத்தரங்கிற்கு அவரையும் அழைக்க வேண்டும் என்பது என் கருத்து' - என்றார் துணைவேந்தர்.
அந்தக் கூட்டத்தில் அதை யாரும் ஆட்சேபிக்க முன் வரவில்லை. ஒரு துணைவேந்தரை யாராவது ஆட்சேபிக்க முடியுமா, என்ன?
கமிட்டியின் மற்றோர் அங்கத்தினர் ஆன ஜைனுத்தீன்பாய் எழுந்து, "சிறுபான்மை மதப்பிரிவைச் சேர்ந்த வகுப்பினரை இந்தச் சங்கம் நீண்டநாட்களாகவே புறக்கணித்து வருகிறது. “மஸ்காட்டி'ல் மாமிசக் கடை வைத்திருக்கும் ஹலால்புட்சர் ஒருவர் 'அல்-அமீன்' என்று மிகச்சிறந்த அரபுமொழிக் கவிஞராக இன்று விளங்கி வருகிறார். இந்தக் கருத்தரங்கிற்கு 'அல்அமீன்' கண்டிப்பாக அழைக்கப்படவேண்டும்” என்றார்.
"சங்கத்தின் மதச்சார்பற்ற தன்மையை நிரூபிக்கும் பொருட்டுக் கட்டாயம் அல்அமீன் அழைக்கப்படுவார்” என உறுதி கூறப்பட்டது. ஜைனுத்தீன் பாய் திருப்தியடைந்தார்.
உடனே சங்கத்தின் நிதி நிலைமைகளுக்குப் பொறுப்பாளரான பொருளாளர், மெக்ஸிகோ, சிலி, மஸ்காட் இந்த மூன்று இடங்களிலும் இருந்து விமானத்தில் வந்து போகவும் சென்னையில் தங்கவும் ஆக எல்லாம் சேர்த்து ஒரு லட்ச ரூபாய்க்குக் குறையாமல் ஆகும் என்பதைத் தெரிவித்தார். அவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது.
“புத்த மதத்தை நாம் புறக்கணித்ததாக ஆகிவிடக் கூடாது. தாய்லாந்திலிருந்து குணசீல தர்மதேரோ என்ற பெளத்தக் கவிஞரை எப்படியும் அழைத்தாக வேண்டும்” என்றார் செல்வாக்குள்ள மற்றொரு கமிட்டி உறுப்பினர்.
அவருடைய விரோதமோ மனஸ்தாபமோ கூடாதென்பதற்காக அதை யாரும் எதிர்க்கத் துணியவில்லை.
“பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்! வசூல் செய்து கொள்ளலாம். மத்திய மாநில அரசாங்கங்களிடம் மான்யம் வாங்கிக் கொள்ளலாம். செருப்புத் தைக்கும் அடித்தளத்து மக்கள் கவிஞரைப்பற்றிய செமினார் என்பதால் மான்யத்தை மறுக்கும் துணிவு எந்த அரசுக்கும் வராது” என்றார் அரசியல் நெளிவு சுளிவு தெரிந்த ஒர் அங்கத்தினர். ஆகவே செலவைப் பற்றிய கவலை தற்காலிகமாக நீங்கியது.
என்ன செலவானாலும் கருத்தரங்கை ஒர் இண்டர்நேஷனல் செமினாராக மூன்று நாள் நடத்தியே தீருவது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற விருந்தினர்களுக்கும் சர்வதேசக் கருத்தரங்கு என்கிற நிலைமைக்கும் ஏற்ப ஒர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் செமினார் நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.குசேலதேவ நாயனாரின் பாடல்கள் பாமர மக்களுக்கும் புரிகிற எளிய தமிழில் இருப்பதால் சர்வதேசக் கருத்தரங்கை எந்த மீடியத்தில் எந்த மொழியின் மூலம் நடத்துவது என்ற சர்ச்சை எழுந்தது.
“அவர் தமிழில் தான் பாடியிருக்கிறார். அதுவும் தோல் பதனிடுதல், செருப்புத் தைத்தல் போன்ற தொழிகளில் ஈடுபட்டிருந்த பாமர மக்களின் பேச்சுத் தமிழ் மொழியில் சித்தர் பாடல்களுக்கு இணையாக எழுதியிருக்கிறார். ஆகவே கருத்தரங்கைத் தமிழில் தான் நடத்தவேண்டும். பாடியவருக்குத் தெரியாத மொழியில் - பாடல்கள் பாடப்படாத அந்நிய மொழியில் கருத்தரங்கு நடத்தப்பட வேண்டாம்” என்றார், அந்த யோசனையை முதலில் தெரிவித்த தலித் இயக்கத்தைச் சேர்ந்தவர்.அவர் குரலில் கண்டிப்பிருந்தது.
“மெக்ஸிகோவைச் சேர்ந்த ஸாவ்லோ காப்டாவுக்கும், சிலி நாட்டைச் சேர்ந்த எபில்வியா பிளம்பருக்கும், மஸ்கட்டைச் சேர்ந்த அல்அமீனுக்கும் தாய்லாந்தைச் சேர்ந்த குணசீல தர்மதேரோவுக்கும் தமிழ் தெரியாதே? என்ன செய்யலாம்” என்று உடனே கேட்டார் மற்றோர் உறுப்பினர்.
“வரப்போகிற விருந்தினர்கள் நாலு பேருக்குத் தமிழ் தெரியாது என்பதற்காகக் கலந்து கொள்ளப் போகிற நானூறு பேருக்கு நன்றாகத் தெரிந்த தமிழை ஏன் புறக்கணிக்க வேண்டும்? உண்மையிலேயே அந்த நாலு அந்நியர்களுக்கும் நன்றாகத் தெரிந்த மொழிகளில் நடத்த வேண்டுமானால் ஸ்பானிஷ், லத்தீன், அராபி, பாலி போன்ற மொழிகளில்தான் நடத்தியாக வேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் ஆங்கிலம் அந்நிய மொழிதான்.”
“உங்கள் வாதம் சரி என்றே வைத்துக் கொண்டாலும் நம் குசேலதேவ நாயனாரைப் பற்றி நாலு பேர் ஆங்கிலத்தில் கட்டுரை படிப்பதும், நானூறு பேர் அவை பற்றி விவாதிப்பதும் பெருமைதானே? அதை ஏன் தடுக்கிறீர்கள்?’ என்று சமூக இலக்கிய சேவா சங்கத்தின் செயலாளர் கேட்டபோது தலித்காரர் வழிக்கு வந்தார். ஆங்கிலத்திலேயே நடந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்.
“பாமர மக்களின் பிரதிநிதியான எங்கள் ஏழைக் கவிஞரை உலகளாவிய ஆங்கில மொழியால் கெளரவிக்கப் போகிறீர்கள் என்றால் அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அந்தப் பாட்டாளி மக்கள் கவிஞனின் பரம்பரையில் எஞ்சியிருக்கும் கொள்ளுப்பேரன் மல்லையா இன்று பெரிய பாளையத்தருகே ஒரு குக்கிராமத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளியாகக் காலந்தள்ளி வருகிறான். அவனைக் கண்டிப்பாக இந்தக் கருத்தரங்கிற்கு அழைத்துக் கெளரவிக்க வேண்டும்."
“அதைப்பற்றிக் கவலையே வேண்டாம் அந்த மல்லையாவின் அட்ரஸை மட்டும் விவரமாக எங்களிடம் எழுதிக் கொடுத்து விடுங்கள். அவருக்கு விசேஷ அழைப்பு அனுப்பிக் கெளரவிப்பது சமூக இலக்கிய சேவா சங்கத்தின் முதல் கடமையாக இருக்கும்.”தலித்காரர் மல்லையாவின் முழு விலாசத்தையும் எழுதிச் சங்கக் காரியதரிசியிடம் கொடுத்தார். காரியதரிசி கோயில் அர்ச்சகர் ஒருவரிடமிருந்து பிரசாதம் வாங்குவது போல அத்தனை பயபக்தியோடும் மரியாதையோடும் அதை வாங்கிக் கொண்டார்.
குசேலதேவ நாயனார் தத்துவப் பாடல்கள் என்று 1886ல் அச்சான ஒரு பழைய நைந்த புத்தகத்தை கன்னிமரா நூலகத்திலிருந்து தேடிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்தப் புத்தகம் தொட்டாலே உதிர்ந்து விடும் நிலைமையிலிருந்தது. அந்தப் புத்தகமே நூறாண்டுகளுக்கு முன் அந்தக் கவிஞரின் இனத்தாருடைய நிதியுதவியால்தான் பிரசுரிக்கப்பட்டு முதற் பதிப்பாக வெளியாகியிருந்தது. ஆறணா விலைக்கு 800 பக்கங்களுக்கு மேல் பெரிய புத்தகம். இன்று வெளியிட்டால் 60 ரூபாய்க்கு மேல் அடக்கவிலையே ஆகும். ஆயிரம் பிரதி அச்சிட அறுபதாயிரம் ரூபாய் ஆகலாம். அதனால் சமூக இலக்கிய சேவா சங்கம் புத்தகத்தை மறுபிரசுரம் செய்யும் வம்பிலேயே இறங்க விரும்பவில்லை. அந்த ஒரு பிரதியை வைத்தே விழாவைச் சமாளித்துவிட விரும்பியது.
மிருகங்கள் செத்த பிறகும் தம் தோல்களை மனிதருக்குச் செருப்பு முதலிய பண்டங்களாய் அளித்துப் பயன்படும்; மனிதன் அதற்குக்கூடப் பயன்படமாட்டானே' என்ற அர்த்தத்தில் குசேலதேவ நாயனாரின் ஒரு பாட்டு இருந்தது.
"பாலின் நிறத்திலும் மேனி
பகட்டு நிறத்திலும் மனிதர்
நாலுவித மாய் வருணம் பெற்றீர்
நல்லவித மாய்த் தோலும் பெற்றீர்
வாலினை ஆட்டும் மிருகங்கள்
வகை வகையான விதங்களிலே
தோலினை அளித்துப் பயன்நல்கும்
என்று வருகிற குசேலதேவரின் அந்த ஒரு பாட்டையாவது தமிழில் அப்படியே நிகழ்ச்சி நிரலில் அச்சிட வேண்டும் என்றார் குசேலதேவ நாயனாரின் இனத்தைச் சேர்ந்த அந்த தலித் இயக்க ஆள்.
நிகழ்ச்சி நிரல் ஆங்கிலத்தில் அச்சிடப்பட இருப்பதால் நடுவே தமிழில் இந்தப் பாடலை இடைச்செருகல் போலப் போடுவது நன்றாக இராது என்று சொல்லிவிட்டார்கள். இதன் அர்த்தத்தை அல்லது கருத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிகழ்ச்சி நிரலின் தலைப்பில் வெளியிட்டு விடுவதாகக் கூறிவிடவே அவருக்குத் திருப்தியாகப் போய்விட்டது.
ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்தன. செல்வாக்குள்ளவர்கள் முயற்சி செய்து மத்திய அரசிடம் இருந்து இரண்டு இலட்சரூபாயும் மாநில அரசிடம் இருந்து ஓர் இலட்ச ரூபாயும் மான்யமாக இந்த இண்டர்நேஷனல் செமினாருக்கு வாங்கி விட்டார்கள். சிறப்பு மலர் விளம்பரங்கள் வசூல்கள் மூலமாக மேலும் ஒர் இலட்சம் தேறியது. எப்படியோ நாலு லட்சம் கையில் சேர்ந்துவிட்டது.
எல்லோருக்கும் அனுப்பப்பட்டது போல் பெரியபாளையத்திலிருந்த குசேலதேவ நாயனாரின் கொள்ளுப் பேரனான மல்லையாவிற்கும் ஒரு சைக்ளோஸ்டைல் செய்த ஆங்கிலக் கடிதம் அழைப்பாகப் போயிற்று. எழுதப் படிக்கத் தெரியாத மல்லையா அதைத் தன்னிடம் வாடிக்கையாகச் செருப்புத் தைக்கும் ஒரு புரொபஸரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி விவரம் தெரிந்து கொண்டான். மூன்று நாள் அங்கும் இங்குமாக வெயிலில் ஒடியாடிச் செருப்புத் தைத்த கூலியை ஒன்று சேர்த்து பஸ் பயணத்துக்கும் மற்றவற்றுக்கும் செலவழித்துச் சென்னை புறப்பட்டான்.
சர்வதேசக் கருத்தரங்கு ஆகையினால் எல்லா நாட்டாருக்கும் ஒத்து வருகிற, பொதுத் தலைப்பாக இருக்க வேண்டும் என்று 'ரேர் பொயடிக் வாய்ஸஸ் ஃப்ரம் அப்ரெஸ்ட் கிளாஸ்' என்று செமினாரின் தலைப்பைக் கொடுத்துவிட்டார்கள். முழு நிகழ்ச்சி நிரலிலும் எங்கேயோ ஓரிடத்தில் 'டு மார்க் த (ஹண்ட்ரட்த்) டெத் 100 செண்டினரி ஆஃப் கிரேட் பொயட் குசேலதேவா' என்று மட்டும் இருந்தது. மற்றபடி அந்தக் கவிஞரின் பெயர் வேறு எங்கும் இல்லை.
ஸாவ்லோ காப்டா, எபில்வியாபிளம்பர், அல்அமீன், குணசீலதர்மதேரோ ஆகியோருக்குப் போக வரப் பயன்படும் விமான ரிடர்ன் டிக்கெட்டுகள் எடுத்து அனுப்பியாயிற்று. சென்னையில் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலில் அறைகள் ரிஸர்வ் செய்தாயிற்று. மத்திய கல்வி மந்திரி கருத்தரங்கைத் தொடங்கி வைக்கவும் மாநிலக் கல்வி மந்திரி வெலிடிக்டரி உரை நிகழ்த்தவும் ஸாவ்லோ காப்டாவின் கீ நோட் அட்ரசுடன் உரையைத் தொடங்கவும் ஏற்பாடாகிவிட்டது.
அபூர்வமாகத் தேடிக் கண்டுபிடித்த ஒரே ஒரு பிரதியாகிய குசேலதேவ நாயனாரின் பாடல்கள் அடங்கிய புத்தகப் பிரதியை மேடைமேல் ஒரு கண்ணாடிப் பேழையில் மாலையிட்டுப் பத்திரமாக அலங்கரித்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கிடைத்தது, அந்த ஒரே ஒரு பிரதி புத்தகம்தான்.
கருத்தரங்கின் இடையே காலையிலும், மாலையிலும் பிஸ்கட்டுடன் இரு காப்பி பிரேக், பகலில் லஞ்ச், இரவு டின்னர், எல்லாம் அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக ஏற்பாடாகி இருந்தன.
கருத்தரங்கத் தொடக்கத்தில் 'பிரதமரின் எழுபத்தேழு அம்சத் திட்டத்தில் அறுபத்தேழாவது திட்டம் ஒடுக்கப்பட்டவர்களை விடுவித்து உயர்த்துவது ஆகும். இந்தக் கருத்தரங்கில் அதை விளக்க இருப்பதறிந்து நான் மட்டுமின்றிப் பிரதமரும் மகிழ்ச்சியடைவார்' என்று மத்திய கல்வி மந்திரி பேசியதை மறுநாள் காலை எல்லா செய்தித்தாள்களும் ஃபிளாஷ் செய்திருந்தன. குசேலதேவரின் பேரோ, அவர் ஒரு தமிழ்க் கவி என்பதோ அதில் வரவே இல்லை, 'இண்டர்நேஷனல் செமினார். 1190 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
ஆர்கனைஸ்ட் பை ஸோஷியோ லிட்டரரி கல்சுரல் அஸோஸியேஷன்'- என்று மட்டுமே வந்திருந்தது.
செமினார் மூன்று நாளும் தடபுடல்பட்டது. தொடக்கம் முதல் முடிவு வரை எல்லாமே ஆங்கிலத்தில்தான். மாநிலக் கல்வி மந்திரி கூடச் சிரமப்பட்டுத் தமிழ் உச்சரிப்போடு கூடிய ஆங்கிலத்தில் பேசினார். மெக்ஸிகோவிலிருந்து கீ நோட் அட்ரஸ் வழங்க வந்திருந்த கவிஞர் மட்டும் சில வரிகள் சம்பிரதாயமாக ஆங்கிலத்தில் பேசிவிட்டு, "ஐ டோண்ட் வாண்ட் டு ஸ்பீக் இன் எ லாங்வேஜ் விச் இஸ் நெய்தர் யுவர்ஸ் நார் மைன்” என்று திடீரென்று ஸ்பானிஷ் மொழியில் புகுந்துவிட்டார். அது எல்லாருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது. மற்றவர்கள் எல்லாரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். கருத்தரங்கு பிரமாதமாக முடிந்தது. பத்திரிகைகள் பத்தி பத்தியாய்ப் புகழ்ந்து பிரசுரித்திருந்தன. விருந்தினர் நாடு திரும்பினர்.
ஒரு வாரம் கழித்து 'டிஸ்பியூட்' என்ற பிரபல ஆங்கில வார இதழில் இந்தச் சர்வ தேசக் கருத்தரங்கு பற்றி ஒரு தலையங்கமும் சில முக்கிய பேட்டிகளும் வெளிவந்தன. எல்லாவற்றையும் பற்றி மற்றவர்கள் அணுகாத புதிய கோணத்தில் அணுகிப் பரபரப்பாக ஏதேனும் வெளியிடுவதில் மிகவும் புகழ்பெற்ற வார இதழ் இது. பிரச்னைகளை எதிர்மறையாக அணுகும் இதழ் டிஸ்பியூட்.
முதல் பேட்டி குசேலதேவ நாயனாரின் கொள்ளுப் பேரன் மல்லையாவிடம் இருந்து பிரசுரமாகி இருந்தது. அதற்கு ஆசிரியரால் ஒரு முன் குறிப்பும் எழுதப்பட்டிருந்தது.
'பெரியபாளையத்திலிருந்து இந்த இண்டர்நேஷனல் செமினாருக்குக் கெளரவ விருந்தாளியாக அழைக்கப்பட்ட இவர் செமினார் நிகழ்ந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ளே அனுமதிக்கப்படாத காரணத்தால் ஊர் திரும்ப பஸ் சார்ஜ் - வழிச் செலவுக்குப்பணமும் ஏற்பாடும் இன்றித்தவித்துத் 'தம் கையே தமக்குதவி' என்ற முடிவுடன் மவுண்ட்ரோடு புகாரி அருகே பிளாட்பாரத்தில் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தபோது இப்பேட்டி எடுக்கப்பட்டது என்ற முன்னுரையுடன் பேட்டி ஆரம்பமாகி இருந்தது.
தாம் இரண்டு மூன்று நாள் வெயிலில் தெருத் தெருவாக அலைந்து பெரியபாளையத்தில் செருப்புத் தைத்துச் சேர்த்த பணத்தைத் திரட்டிப் பஸ்ஸுக்குக் கொடுத்தது போக நாலு பேர் பார்க்கக் கெளரவமாக இருக்க வேண்டும் என்று செலவழித்துப் புதுச்சட்டை வேட்டி எடுத்துத் தயாராகிச் சென்னை வந்தது பற்றியும் எவ்வளவோ மன்றாடியும் கருத்தரங்கு நடந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தம்மை உள்ளே விட மறுத்துவிட்டதையும் மல்லையா பேட்டியில் கூறியிருந்தார்.'ஊர்திரும்ப பஸ் சார்ஜுக்காகவும் பிற செலவுகளுக்காகவும் நான் செருப்புத் தைச்சுப் பணம் தேட வேண்டியதாப் போச்சு' என்றும் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.
பேட்டியைத் தலித் இயக்கத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் கொடுத்திருந்தார். இரண்டாம் தொகுதி/ ஒரு சர்வதேசக் கருத்தரங்கு * 1191
“இந்த இண்டர்நேஷனல் செமினாரினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. குசேலதேவர் எந்த மொழியில் எந்த மொழிக்காரர்களுக்காக எழுதினாரோ அந்த மொழியிலேயே அவரைப் பற்றி இன்னும் சரியாகத் தெரியாதபோது ஆங்கிலத்தில் இந்த செமினார் நடத்தியது எதற்காகவோ?
செமினாரில் குசேலதேவரைப் பற்றி யாருமே எதுவும் சொல்லவில்லை. காரணம் அவரது பாடல்களின் கிடைத்த ஒரே ஒரு பிரதியும் மேடைமேல் பத்திரமாக ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டுவிட்டது. கடைசி வரை -செமினார் முடிகிற வரை அது வெளியே எடுக்கப்படவே இல்லை.
இந்தச் சர்வதேசக் கருத்தரங்கை நடத்தி நாலு லட்சத்தை வீணடித்ததற்குப் பதில் குசேலதேவரின் கவிதைகளை மலிவுப் பதிப்பாகத் தமிழில் அச்சிட்டு வெளியிட்டு இருக்கலாம். தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, முதலிய மொழிகளில் மொழி பெயர்த்தும் வெளியிட்டிருக்கலாம். இப்போது நடந்த செமினார் வெறும் லஞ்ச், டின்னர், காபி பிரேக், டீ பிரேக் செமினார்தானே ஒழிய இதன் மூலம் எந்தப் பயனும் கிடையாது. இதனால் உள்ளளூராருக்கும் பயனில்லை. வெளிநாட்டாருக்கும் என்னவென்று புரியவில்லை. இங்குள்ள சில படித்த மேல்தட்டு மக்களின் 'இண்டலெக்சுவல் அரகன்ஸை' மட்டுமே நிரூபித்தது இந்தக் கருத்தங்கம்” என்று சாடியிருந்தது இந்தப் பேட்டி.
மூன்றாவது பேட்டி ஒரு வாசகருடையது. “சுதந்திரத்திற்குப் பின் கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகச் செயல்திட்டங்களுக்குச் செலவழிப்பதை விடச் செமினார்களுக்கும் விவாதங்களுக்குமே அதிகமாகச் செலவழித்து நஷ்டப்படும் நாடுகளில் இந்தியா இன்று முன்னணியில் நிற்கிறது. ஒரு விஷயத்தைப் புரியவிடாமலும், தெரியவிடாமலும் செய்யப் போதுமான செமினார்கள் நாட்டில் அங்கங்கே ஏராளமாக நடக்கின்றன. இதுவும் அப்படித்தான் நடந்தது. இனியும் இத்தகைய செமினார்கள் வேறு மாதிரி இருக்கப் போவதில்லை. பேசுவதற்குச் செலவழிப்பதை விடச் செயல்படுவதற்கே நேரடியாகச் செலவழித்து விடலாம். யோசிப்பதற்குச் செலவழித்தே நஷ்டப்படும் நாட்டில் செயல்படுவதற்குப் பணமே மிச்சமிருக்காது” என்று கூறியிருந்தார் வாசகர்.
நாலாவது பேட்டி மெக்ஸிகன் பொயட் 'ஸாவ்லோ காப்டாவிடமிருந்து.
அந்தப் பேட்டியில் “தனக்கு யாரென்றே தெரியாத, தான் அறிந்திராத ஓர் இந்தியக் கவிஞர் பற்றிய செமினாருக்குத் தன்னைத் துணிந்து அழைத்ததன் மூலம் இந்திய நண்பர்கள் தனக்கு அளித்த அதிர்ச்சியிலிருந்து தான் இன்னும் மீளவில்லை” என்று சொல்லியிருந்தார் காப்டா."செமினாருக்குரிய கவிஞரும் நீங்களும் ஒரே ஜாதி - ஒரே இனம் என்பதற்காக உங்களைக் கூப்பிட்டதை நீங்கள் விரும்புகிறீர்களா?”
“அந்த நினைப்பே குமட்டுகிறது எனக்கு. ஜாதி வித்தியாசங்களை விட மோசமானது அவற்றைக் 'காபிடலைஸ்' பண்ண முயல்வது. குசேலதேவரும் நானும் கவிஞர்கள் என்பதால் ஒரே இனம் என்ற நினைப்பு மட்டுமே எனக்குப் 1192 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
பெருமையளிக்கிறது. வேறு நினைப்புக்கள் இர்ரெலவண்ட்; அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்”
“இந்த இண்டர்நேஷனல் செமினாரை நடத்தியவர்கள் குசேலதேவர் பற்றிய வாழ்க்கைச் சுருக்கத்தையோ, அவர் கவிதைகளின் சாராம்சத்தையோ உங்களுக்கு எப்போதாவது, இங்கு வந்த பிறகாவது கூறினார்களா?” “மன்னிக்கவும். எந்த நிலையிலும் அந்தக் கவிஞரைப்பற்றி எனக்கு யாரும் எதுவும் கூறவில்லை. வருத்தப்படுகிறேன். நானாக முயன்று விசாரித்த போதும், "யூ நீட் நாட் கோ இன் டு த ஸ்ப்ஜெக்ட்"- என்று தட்டிக் கழித்துவிட்டார்கள்.”
இந்த நான்கு பேட்டிகளையும் வெளியிட்டுவிட்டு, 'டிஸ்பியூட்' வார இதழ் 'தி டார்க்கர் ஸைட் ஆஃப் த ஸெமினார்' என்ற தலையங்கம் ஒன்றும் தீட்டியிருந்தது. அந்தத் தலையங்கத்தில் கருத்தரங்கு நடத்தப்பட்ட விதத்தைக் கண்டித்திருந்ததுடன் குசேலதேவரின் கவிதை ஒன்றுக்குரிய விளக்கத்தையும் கூறி நயமாகச் சாடியிருந்தது. அந்தத் தலையங்கத்தின் பிற்பகுதி பின்வருமாறு :
“மனிதர்களின் அறிவு நுண்ணியதாயிருந்த போதிலும் அவர்களில் சிலருக்கு மிருகங்களைவிடத் தடித்த தோல் இருக்கிறதாலோ என்னவோ மானம், வெட்கம், கூச்சம், ரோஷம் எதுவுமே பட்டு உறைப்பதில்லை”.
அவர்கள் இதை 'வி ஆர் திக் ஸ்கின்ட்' என்று பெருமையாகக் கூடக் கருதலாம். ஒரு வகையில் நாமும் அதே முடிவுக்குத் தான் வரவேண்டியுள்ளது. கவி குசேலதேவர் மேலே கூறியதுபோல் மனிதர்களில் - இந்தக் கருத்தரங்கை நடத்திய மனிதர்களில் சிலருக்கு எதுவுமே உறைக்காத அளவுக்குக் கனமான தோல் இருந்திருக்க வேண்டுமென்றே இப்போது தோன்றுகிறது நமக்கு” .
(கல்கி, விடுமுறை மலர், 1986)