நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/உண்மையின் நிழல்
166. உண்மையின் நிழல்
செல்லம்மாள் அப்போது மிகவும் மனம் குழம்பிப் போயிருந்தாள். ‘மகளுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால், செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டும். செல்வாக்குள்ள சிபாரிசு வேண்டுமானால், நிலாவழகனைத் தேடித்தான் போக வேண்டும்’ என்று அறிந்த போது செல்லம்மாளுக்கு மலைப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. பணம் இல்லாமல் நிலாவழகனிடம் எதுவும் நடக்காது என்று அவனைத் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
வெறும் அப்பளம், வடாம் இட்டு, நாலு வீடுகளில் விற்றுப் பிழைப்பு நடத்தும் செல்லம்மாளால் மகளுக்கு உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதென்பது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அத்தனை சிரமப்பட்டு, மகளைப் படிக்க வைத்து ஆளாக்கியதே பெரிய காரியம். அதற்கு மேல் செல்வாக்குள்ளவர்களைப் பார்த்து, லஞ்சம் கொடுத்து வேலை தேடுவது என்பது செல்லம்மாளால் நிச்சயமாக இயலாது. நிலாவழகன் வீட்டுக்கும் செல்லம்மாள்தான் அப்பளம் கொண்டு போய்க் கொடுக்கிறாள். யாரோ சமையற்கார ஆச்சி ஒருத்திதான் அப்பளத்தைச் செல்லம்மாளிடம் வாங்கிக் கொண்டு பணம் கணக்குப் பார்த்துக் கொடுப்பது வழக்கம். நிலாவழகனை அவள் பார்க்க நேர்ந்ததே இல்லை. முன் பக்க வாசல் வழியாக அந்த வீட்டில் அவள் ஒரு நாளும் நுழைந்ததே இல்லை. பின்பக்க வாசல் வழியாகப் போய்ச் சமையற்கார ஆச்சியைப் பார்த்து விட்டுத் திரும்புவதுதான் செல்லம்மாளின் வழக்கம். தலைவரின் வீடு என்பதால், அந்த வீட்டின் முன் பக்கத்தில் தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டமாக எப்போதும் நிரம்பியிருக்கும். கார்களும், ஸ்கூட்டர்களும், சைக்கிள்களும் வாசலில் மொய்த்திருக்கும். அவளைப் போன்ற நிலையிலுள்ள ஏழைகள் நாட்கணக்கில் காத்திருந்தாலும், தலைவர் நிலாவழகனைப் பார்க்க முடியாது. தர்ம தரிசனமே அங்கு கிடையாது. ஏழுமலையான் சந்நிதியில் கூடத் தர்ம தரிசனம் கிடைத்து விடலாம். ஆனால், நிலாவழகன் சந்நிதியில் அது முடியவே முடியாது. மாலையோடும், ஆப்பிளோடும், கரன்ஸி நோட்டுக்களின் புத்தம் புதிய கட்டுக்களுடனும் வருகிறவர்களே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்கிற நிலையில்m அப்பளம் இட்டு விற்கிற செல்லம்மாள் என்கிற அநாதை விதவைக்கு உடனே எப்படி எதிர்பார்க்க முடியும்? அது நடக்கக்கூடிய காரியமே இல்லை.
அவளைப் பொறுத்த வரை மகளுக்கு வேலை கிடைக்கா விட்டால், எதிர்காலமே இருண்டு போய் விடும். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது. அடுத்த வேளைச் சோற்றுக்கும், அரையில் உடுக்க ஒரு கிழிசலுக்கும் திண்டாடினாலும், அவள் ‘ஃபார்வட் கம்யூனிட்டி’ என்ற இடையூறு வேறு. வேலை கிடைப்பதைப் பொறுத்துத்தான் வேறு நல்ல காரியங்களும் நடக்க வேண்டும். மகளுக்குத் திருமணம் ஆவது கூட வேலை கிடைப்பதைப் பொறுத்துத்தான் சாத்தியம். வேலை கிடைக்கா விட்டால், பையில் அப்பளக் கட்டுக்களுடன் வீடு வீடாக ஏறி இறங்கும் ஏழைச் செல்லம்மாளின் பெண்ணை யார் தேடி வந்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்? படித்த பெண் என்றால்தான் என்ன? அப்பளம் விற்கும் செல்லம்மாளின் பெண் என்று கேட்ட பின் எத்தனை பெற்றோர்கள் துணிந்து முன் வருவார்கள்? படிப்பும், அழகும் பணத்திற்கும், அந்தஸ்திற்கும் ஈடாகி விட முடியுமா? ஒரு கல்யாணம் என்று வந்து விட்டால் பையன் அழகையும், படிப்பையுமே கவனித்தால் கூடப் பெற்றோர்கள் பணத்தையும், அந்தஸ்தையும்தானே கவனிக்கிறார்கள்?
இப்படி இந்தக் கவலை பீடித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு இராத் தூக்கமே போய் விட்டது. ஒரு வேலையும் ஓடவில்லை. சதா காலமும் இந்த நினைப்பே பூதாகாரமாக உருவெடுத்து வாட்டியது. அவள் விசாரித்த யாருமே நிலாவழகனைப் பற்றி நல்லபிப்ராயம் சொல்லவில்லை. தாறுமாறாகச் சொன்னார்கள். பயப்படும்படியாக இருந்தது. கேட்கவே கூசியது.
மானமுள்ள, கௌரவமான பெண்கள் யாரும் அவனிடம் சிபாரிசு என்று தேடிப் போய் விட்டுக் கௌரவமாகவும், மரியாதையுடனும் திரும்ப முடியாதென்றார்கள். எதற்கும் அஞ்சாத பஞ்சமாபாதகன் என்றார்கள். எதையும் செய்யத் தயங்காத கிராதகன் என்றார்கள். கேட்கும் போதே நடுங்கினாள் செல்லம்மாள். பக்கத்து வீட்டுப் பரிமளம் வேறு ஏதேதோ சொன்னாள். காது கொடுத்துக் கேட்க முடியாத விஷயங்களாயிருந்தன. செல்லம்மாளுக்குப் பதற்றம் தான் அதிகமாயிற்று.
“இத்தனை பெரிய மனுஷன் நீ சொல்ற மாதிரிகூட இருப்பானா? பேர் கெட்டுப் போகுமேன்னு பயமா இருக்காதா? ஊர் உலகத்துக்கு அஞ்சமாட்டானா?”
“கெடறத்துக்கு இன்னும் என்ன பேரு மிச்சமிருக்கு? அடுத்த தெரு விறகுக் கடை மன்னாரு தன் மச்சினிச்சியை நர்ஸ் ட்ரெயினிங் கோர்ஸிலே சேர்க்கணும்னு கூட்டிக்கிட்டுப் போனராம். சிபாரிசு வேணும்னாராம். நிலாவழகன் கண்ணைச் சிமிட்டிக்கிட்டே பேசினானாம். அப்புறம், நாளை ராத்திரி எட்டரை மணிக்கு உன் மச்சினிச்சியை எல்லா சர்ட்டிபிகேட்டும் எடுத்துக்கிட்டு ஹோட்டல் ப்ளு ஸ்டாருக்கு வரச்சொல்லுன்னானாம். அடக்க முடியாத ஆத்திரத்தோடப் பொறுத்துக்கிட்டு வந்த மன்னாரு, மச்சினிக்கு நர்ஸ் படிப்பே வேணாம்னு விட்டுட்டாரு.”
“தட்டிக் கேட்க ஆளில்லே. கை நீட்டிப் பணம் வாங்கறது போறாதுன்னு பொம்பளைங்களோட மானம், மரியாதையைக் கூட விலையாக் கேக்கறாப்பல இருக்கு.”
“இந்த லட்சணத்திலே கண்ணகி கற்பு ஒசத்தியா, மாதவி கற்பு ஒசத்தியாங்கற பட்டி மன்றத்துக்குத் தலைமை வகிக்கக் கண்ணகி கற்பே ஒசத்தின்னு தீர்ப்பு வேறே…”
“என்ன செய்யலாம்? அதிகாரம் அவா கையிலே இருக்கே?”“மஞ்சுளாவை எக் ரணத்தைக் கொண்டும் அவன் கண்ணு மின்னாடிக் கூட்டிக்கிட்டுப் போயிடாதீங்க… வேலை கெடைக்காட்டிக்கூட பரவாயில்லே… நம்ம வீட்டுப் பொண்ணு மானம், மரியாதையோட இருக்கணும்.”
“போனாப் போறதுன்னு கடனை, ஒடனை வாங்கி... நூறு ரூபாய் கொடுத்துடலாம்... அதுக்கு மேலே என் நிலைமைக்கு ஏலாது.”
“உங்க நூறு ரூபா அவனுக்கு ஒரு வேளைச் சாராயத்துக்குக் கூடப் பத்தாது செல்லம்மா.”
“அப்பளம் வித்துப் பொழைப்பு நடத்தற நான் அதுக்கு மேலே எங்கே போறது?”
“எங்கே போவீங்களோ, என்ன பண்ணுவீங்களோ? அவங்க ரேட்டே ஆயிரத்துக்கு மேலேதான் தொடங்குது செல்லம்மா!”
செல்லம்மாளுக்குக் கொஞ்சம் சந்தேகமாகக் கூட இருந்தது. பரிமளம் நிலாவழகனைப் பற்றிக் கொஞ்சம் மிகைப்படுத்தியே பயமுறுத்திச் சொல்கிறாளோ என்று அபிப்பிராயப்பட்டாள் செல்லம்மாள். அதற்குக் காரணம் இருந்தது. பரிமளத்தின் அண்ணன்தான் நிலாவழகனை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றிருந்தான். அந்தத் தோல்விக்குப் பின் பரிமளம் அடிக்கடி நிலாவழகனைப் பற்றி இப்படித்தான் தாறுமாறாக ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள். சில நம்பும்படி இருக்கும். வேறு சில நம்பும்படியாக இராது. செல்லம்மாள் கேட்டுச் சிரித்துக் கொண்டே போவது வழக்கம். எதையும் முழுக்க நம்பி ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிடவும் முடியவில்லை.
நிலாவழகன் உழைத்துச் சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவன். நடுத்தெருவில் காய்கறி வண்டி, பழவண்டி தள்ளி, நடைபாதை வியாபாரியாக உழைத்து முன்னுக்கு வந்தவன். ஏழை, எளியவர்கள் மேல் இரக்கமுள்ளவன். ‘நானும் வீடு வீடாக அலைந்து அப்பளம் விற்கிற ஏழை’ - என்று எடுத்துச் சொன்னால், அவனுக்கு இரக்கம் ஏற்படாமல் போகாது என்று எங்கோ ஒரு மூலையில் செல்லம்மாளின் உள் மனத்தில் ஒரு கீற்று அளவு சிறிய நம்பிக்கை ஒளி மின்னிக் கொண்டிருந்தது.சின்ன ஒளிதான். ஆனால், அது இடையறாது மின்னி மின்னி மறைந்தது.
பரிமளம் சொல்லியது போல், நிலாவழகனின் கூட்டத்தினர் லஞ்சப் பேர்வழிகள் என்பதால், அவனையும் அப்படியே கணக்கிட முடிந்தது. அனுமானிக்கவும் ஏதுவாயிற்று.அந்தத் தலைமுறையில் அரசியலில் இருந்த பலர் அப்படித்தான் எதற்கும் துணிந்து ரேட்டுப் போட்டுப் பணம் கை நீட்டி வாங்கினார்கள். ஒழுக்கமின்றி, நாணயமின்றி-மானம், மரியாதை இன்றி நடந்து கொண்டார்கள். அதனால் யாரைப் பற்றி எப்படி அவதூறு சொன்னாலும், மக்கள் நம்பும்படிதான் இருந்தது.அவதூறு சொல்கிறவர்களும் தாராளமாகச் சொன்னார்கள். கேட்கிறவர்களும் தயங்காமல், பயப்படாமல், தாராளமாகக் கேட்டார்கள். எவ்வளவு பெரிதாகச் சொன்னாலும், நம்பும்படித்தான் இருந்தது. தன் மனத்தில் மின்மினியாக மினுக்கிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு நம்பிக்கை ஒளி தூண்டிவிடச் செல்லம்மாள் மறுநாளே நிலாவழகனின் வீட்டுச் சமையற்கார ஆச்சியைச் சந்தித்தாள். தன் கவலையை எடுத்துச் சொன்னாள்.ஆச்சி அனுதாபத்தோடும், ஆதரவோடும், செல்லம்மாள் சொன்னதைக் கேட்டாள். பின்பு குரலைத் தணித்துச் செல்லம்மாள் காதருகே அந்தரங்கமாகச் சொன்னாள் : “ஒரு சூட்சுமம் இருக்கு! அதைச் சொல்றேன், கேட்டுக்க. உங்காரியம் நடந்துடும்.”
“என்ன ஆச்சி?”
ஆச்சி அவளை ஜாடை காட்டித் தன்னைப் பின் தொடரும்படி சொல்லி விட்டு நிலாவழகனின் பங்களாவுக்குள் அழைத்துச் சென்றாள்.
பூஜையறை போல் தோன்றிய ஓர் அறையின் முகப்பில் அவளை நிறுத்தினாள். பூச்சரத்தால் அலங்கரித்திருந்த ஒரு மூதாட்டியின் படத்தைச் செல்லம்மாளுக்குக் காட்டினாள் ஆச்சி. செல்லம்மாள் பார்த்தாள். ஆச்சி அவளைக் கேட்டாள்.
“இவங்க யாரு தெரியுதில்லே?”
“காய்கறி மண்டிப் பக்கத்திலே, தெருமுனையிலே ஆப்பக்கடை வச்சிருந்தாங்க…”
“ஆமாம். நிலாவோட… ஆயா... இப்ப இல்லே… செத்திரிச்சு...”
“நான் இவங்களையே நேரில் பார்த்திருக்கேன் ஆச்சி”
“நாளைக்கிக் காலையில உன் மகளையும் கூட்டிக்கிட்டு வா... நிலா குளிச்சு முடிச்சதும் ஆயா படத்துக்குப் பூப்போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வச்சுக் கும்புடும். அப்போ பார்த்துச் சந்திச்சு, உனக்கு அந்த ஆயாவைத் தெரியும்கிறதையும் சொல்லி, வந்த காரியத்தைக் காதிலே போட்டுடு. உடனே பலிக்கும் செல்லம்மா! அந்த நேரம் ராசியான நேரம்.”
“அப்போ அவரைப் பார்க்க விடுவாளா ஆச்சி?”
“நீ இங்கே வந்து எங்கூடச் சமையலறையிலே அப்பளம் சப்ளை பண்ண வந்தவ மாதிரி இரு !நான் கொண்டு போய் விடறேன். கவலை வேணாம். அதெல்லாம் சரியா நடக்கும்.”
“என்னமோ ஆயிரம், ரெண்டாயிரம்னு பயமுறுத்தறாளே ஆச்சி!”
“பயமுறுத்தல் என்ன? நிஜமாக்கூட இருக்கலாம். நிலா சுபாவத்திலே நல்லவன். ஏழை எளியவங்கன்னா இரங்கறவன். அவனைச் சுத்தி ஒரு கூடை செங்கல்லும் பிடாரி. பணம் புடுங்காம உள்ளே போயிப் பார்க்கவே விட மாட்டாங்க செல்லம்மா.”
ஆச்சி சொன்னபடியே செய்வதாக ஒப்புக் கொண்டு திரும்பினாள் செல்லம்மாள். அவளுக்கு நம்பிக்கை வந்திருந்தது.
நகரின் கூட்டுறவுப் பால் பண்ணை ஆபீஸில் ஒரு டைப்பிஸ்ட் வேலை காலியாயிருந்தது. அந்தப் பால் பண்ணைக்கு அவன்தான் சேர்மன். அவன் ஒரு வார்த்தை சொன்னால் செல்லம்மாளின் பெண் மஞ்சுளாவிற்கு அந்த வேலை உடனே கிடைத்து விடும்.ஆச்சி சொன்னபடி அதிகாலையில் எழுந்திருந்து, மஞ்சுளாவை வீட்டில் இருப்பதற்குள் நல்ல புடவை ஒன்றைக் கட்டிக் கொள்ளச் சொல்லி, உடனழைத்துக் கொண்டு அப்பளக் கட்டு சகிதம் நிலாவழகன் வீ ட்டுக்குச் சென்றாள் செல்லம்மாள். பின்புறம் தோட்டத்து வழியாகச் சமையலறைக்குள் நுழைந்து காத்திருந்தாள். சமையற்கார ஆச்சி, செல்லம்மாளுக்கும், அவள் மகளுக்கும் காபி கொடுத்து உபசரித்தாள்.
எம்.எல்.ஏ. நிலாவழகன் அதிகாலையில் எழுந்து காரியங்களைக் கவனிக்கிற பழக்கமுடையவனாக இருந்தான். செல்லம்மாள் உள்ளே நுழைகிற போதே “நிலா குளிச்சிக்கிட்டிருக்கு” என்றாள் ஆச்சி.
“காபி எல்லாம் எனக்கும், மத்தவங்களுக்கும்தான். நிலா கேழ்வரகுக் கூழ்தான் காலையில் குடிக்கும்” என்று ஆச்சி செல்லம்மாளுக்குக் காபி கொடுக்கும் போது சொன்னாள். “அசல் சைவச் சாப்பாடு - பீடி, சிகரெட் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டான். மதுப் பழக்கமோ, மது அருந்துகிறவர்களின் பழக்கமோ அறவே ஆகாது. கிடையாது. வெளியே விளம்பரம் செய்யாத பக்தியும், இளகிய மனமும் உண்டு” என்று நிலாவழகனைப் பற்றிச் சமையற்கார ஆச்சி மேலும் கூறிய தகவல்கள் பரிமளம் பரப்பியிருந்த உண்மைகளோடு மாறுபட்டவையாயிருந்தன. ஆனால், ஆச்சி கூறியதுதான் நிஜமாயிருக்கும் போலிருந்தது. குளித்த ஈர வேஷ்டியோடும், இடுப்பில் கட்டிய துண்டோடும்,நெற்றியில் விபூதி, குங்குமத்தோடும் முதலில் விநாயகர், முருகன் படத்துக்கும் பிறகு தாயின் படத்துக்கும் பூப்போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துக் கும்பிட்டான் அவன். வெளியே அவனை ஒரு நாள், ஒரு விநாடி கூட இப்படி நெற்றியில் திருநீற்றுடன் செல்லம்மாள் பார்த்ததே இல்லை.
ஆச்சி இவர்களை அவன் முன் அழைத்துச் சென்றாள். அவன் தாயின் படத்தைக் கண்களை மூடித் தியானத்தோடு வணங்கி விட்டுத்த லை நிமிர்ந்து எதிரே பார்த்ததும், “இவங்க நம்ம வீட்டுக்கு அப்பளம் குடுக்கிறவங்க... உங்க ஆயாவைத் தெரியும்... தானே உழைச்சுக் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வச்சிருக்காங்க... ஏதோ பால் பண்ணை ஆபீஸ்ல ஒரு டைப்பிஸ்ட் வேலை இருக்காம்... தம்பி ஒரு வார்த்தை சொன்னா அது கெடைச்சிடும்கிறாங்க” என்று சமையற்கார ஆச்சியே அறிமுகம் செய்து விட்டாள். செல்லம்மாளும், மஞ்சுளாவும் அவனைக் கைகூப்பி வணங்கினார்கள். அவன் கடுகடுக்கவில்லை, மாறாக முகமலர்ந்தான்.
“ஆயாவை உங்களுக்கு நல்லாத் தெரியுமா?”
“தெரியுங்க... நான் உழைச்சு முன்னுக்கு வரணும்னு மறைமுகமாகக் கத்துண்டதே அவங்களைப் பார்த்துத்தான். அவங்க காய்கறி மண்டி முக்குலே...”
அவன் இடைமறித்துக் குறுக்கிட்டான்.
“ஒரு நிமிஷம் இருங்கம்மா, லெட்டர் தரேன். பால் பண்ணை ஆபிஸ் மானேஜரைப் பார்த்து சேர்மன் குடுத்தார்னு குடுங்க... உடனே ஆர்டர் குடுத்துடுவாங்க”இதைச் சொல்லி விட்டுச் செல்லம்மாளையும், மகளையும் ஏறிட்டுப் பார்த்தான் நிலவழகன். ஆச்சி அவர்கள் இருவரையும் சைகை மூலமே கூப்பிட்டு, சமையலறையில் மறுபடி உட்கார வைத்தாள்.
பத்து நிமிஷம் கழித்து ஆச்சி மறுபடியும் இவர்களைச் சமையலறையிலிருந்து கிளப்பி உட்புறம் அழைத்துச் சென்ற போது, நிலாவழகன் கையில் ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஒரு ரவிக்கைத் துண்டு, இரண்டு மஞ்சள் கிழங்கு எல்லாம் வைத்து ஏந்தியபடி நின்றிருந்தான். அதில் ஒரு கவரும் இருந்தது.
“இன்னைக்கி வெள்ளிக்கிழமை... எங்க ஆயா இருக்கிற வரை வெள்ளி தவறாமே யாராச்சும் ஒரு கன்னிப் பொண்ணுக்கு ஒரு ரூவா பணமும், பூவும் வெச்சுக் குடுக்கும். ஆயா பேரைச் சொல்லிக்கிட்டுக் காலங்காத்தாலே வந்திருக்கீங்க. உங்களை வெறுங்கையோட அனுப்புறது நல்லா இருக்காது... தங்கச்சியை வாங்கிக்கச் சொல்லுங்க...”
“கும்புட்டுட்டு வாங்கிக்கம்மா” என்று ஆச்சி மஞ்சுளாவின் காதருகே முணுமுணுத்தாள். தாம்பாளத்தில் சிபாரிசுக் கடிதத்தோடு, ஒரு நூறு ரூபாய் நோட்டும், ஒரு முழு ரூபாய் நாணயமுமாக நூற்றியொரு ரூபாய் வேறு இருப்பதைக் கண்டு பதறிய செல்லம்மாள் “இதெல்லாம் எதுக்குங்க? வேலை கிடைக்கிறதே ஒங்க ஆசீர்வாதம்தானே?” என்று தயங்கினாள்.
“இருக்கட்டும்மா, தங்கச்சிக்கி நல்ல சேலையா ஒண்ணு எடுத்துக் குடுத்து, வேலைக்கு அழைச்சிட்டுப் போங்க...”
ஆச்சி மறுக்காமல் அப்படியே தட்டை வாங்கிக் கொள்ளச் சொல்லி ஜாடை காட்டினாள். செல்லம்மாள், மஞ்சுளா இருவரும் அப்படியே செய்தனர்.
இருவரும் பலகாரம் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று ஆச்சி பிடிவாதம் பிடிக்கவே, மேலும் கால் மணி நேரம் ஆயிற்று,
அங்கிருந்து வெளியேறும் போது தற்செயலாக வீட்டு முகப்பிலே பார்த்தால், அங்கே நெற்றியில் விபூதி, குங்குமம் இல்லாமல், இடுப்பிலும், தோளிலும் பட்டை பட்டையாகக் கட்சிக் கரையிட்ட ஆடைகளோடும், முகத்தில் கடுகடுப்போடும் நிலாவழகன் யாரைப் பற்றியோ எதிரே இருந்தவர்களிடம் இரைந்து கொண்டிருந்தான்: - -
“அப்பிடியாசொல்றான்.அவன்? இன்னா தெனாவட்டு இருந்தா, அவன் அப்பிடிப் பேசணும்…? புக் பண்ணி ஆளை உள்ளத் தள்ளினால்தான் புத்தி வரும்பா அவனுக்கு!”
செல்லம்மாளுக்கு ஆச்சரியமாயிருந்தது. இந்த இரண்டு தோற்றங்களில் எது அசல், எது நிழல் என்பதைப் புரிந்துகொள்வது சிரமம்தான். அதிர்ஷ்டவசமாக நிழலைத் துரத்துகிற அனுபவமோ, கசப்போ தனக்கு ஏற்படாமல் ஆச்சி தன்னைக் காப்பாற்றியிருக்கிறாள் என்றே செல்லம்மர்ள் எண்ணினாள்.
(கலைமகள், தீபாவளி மலர், 1986)