நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/தொண்டு நிலையைத் ‘தூ’ எனத் தள்ளி

விக்கிமூலம் இலிருந்து

167. தொண்டு நிலைமையைத் 'தூ' எனத் தள்ளி

”’வெட்டவெளியே உலகம் என்றிருப்பார்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்?’ என்று தாயுமானவர் சொன்ன மாதிரி” - குப்புசாமி காரில் உடன் வந்து கொண்டிருந்தவரிடம் ஏதோ கூறிய போது டிரைவர் குறுக்கிட்டுத் திருத்தினான்.

“அது தாயுமானவர் பாட்டு இல்லீங்க. சித்தர் பாடல் - குதம்பைச் சித்தர் எழுதினது.”

“நீ வண்டியைப் பார்த்து ஓட்டுப்பா.” குப்புசாமி அவனைக் கோபித்துக் கடிந்து கொண்டார். அதில் இரட்டைக் கோபமும், இரண்டு மடங்கு கடிந்து கொள்ளுதலும் இருந்தன. மாதச் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒரு காரோட்டி உள்ளே அமர்ந்திருப்பவர்களின் பேச்சில் கவனம் செலுத்திக் கலந்து கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பும், தனக்குச் சம்பளம் கொடுக்கிற முதலாளியின் தவறுகளைத் திருத்தத் தொழிலாளிக்கு உரிமையில்லை என்ற இன்னொரு கண்டிப்பும் பிரிக்க முடியாமல் இணைந்திருந்தன. அந்தக் குரலில் கண்டிப்பை விடக் கோபமே அதிகம் இருந்தது.

கண்ணப்பன் தமிழ்ப் புலவருக்குப் படித்து விட்டு அந்தப் படிப்புக்கான வேலை கிடைக்காமல், எப்போதோ பொழுதுபோக்காகக் கற்றுக் கொண்ட ‘கார் டிரைவிங்’ ஒரு வேலையைத் தேடித் தர, அதை ஏற்றுச் செயலாற்றி வந்தான். “புலவருக்குப் படித்தேன், வேலை கிடைக்கவில்லை. ஓட்டுனராக வந்தேன்” - என்று அவன் யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை. வேலைக்கு முயன்ற போது இரண்டொரு நபர்களிடத்தில் அப்படிச் சொல்லி, அதனால் கிடைக்க இருந்த வேலை கிடைக்காமல் போய்விட்டது. ‘படித்தவன் உடம்பு வணங்கி ஓடியாடி வேலை செய்ய மாட்டான்’ என்ற அபிப்பிராயம் இருந்ததுதான் காரணம். இதிலிருந்து அவன் தெரிந்து கொண்ட உண்மை புலவருக்குப் படித்திருப்பதைச் சொன்னால் கிடைக்கிற டிரைவர் வேலை கூடக் கிடைக்காமற் போய்விடும் என்பதுதான். ஆகவே, அதை யாரிடமும் கூறுவதைத் தவிர்த்தான்.

சென்னையில் கால் ஊன்றிக் கொள்ள வேண்டுமானால், ஒரு வேலை வேண்டும். வதவதவென்று எம்.ஏக்களும், பிஎச்டிகளும் மலிந்து கிடக்கிற ஊரில் வெறும் புலவர் பட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேலைக்கு அலைவதில் பல சிரமங்கள் இருந்தன. படித்துப் பட்டம் பெற்று விட்டு டிரைவர் வேலையா பார்ப்பது என்று கண்ணப்பன் ஆரம்பத்தில் கூசிக் குறுகினாலும், மீன மேஷம் பார்க்காமல் கிடைத்த வேலையைத் துணிந்து ஒப்புக் கொண்டான். பெரும்பாலும் மாலை நேரங்களில் - இரவில் தெரிந்த இலக்கிய நண்பர்கள் மூலம் பட்டிமன்றம், கவியரங்கங்களுக்கு ஒப்புக் கொண்டான் கண்ணப்பன். பகலில் டிரைவர் வேலை காரணமாக இழக்க நேர்ந்த பெருமிதத்தை இரவில் கிடைத்த கைதட்டல்களும், பாராட்டுக்களும், புகழாரங்களும் மீட்டுக் கொடுத்தன. ஓரளவு காம்பன்ஸேட் செய்தன.

'ஸ்வஸ்திக் ஸ்டீல் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' - தொழிற்சாலை எண்ணுாருக்கும் திருவொற்றியூருக்கும் இடையே இருந்தது. அதன் உரிமையாளர் குப்புசாமிக்கு இராயப்பேட்டை பாலாஜி நகரில் வீடு, கண்ணப்பன் காலை எட்டு மணிக்கு வர வேண்டும், மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்குப் போய்விடலாம். ஐநூறு ரூபாய் சம்பளம், தினசரி பேட்டா பத்து ரூபாய். காலை எட்டு மணிக்கு முன்னாலோ மாலை ஐந்துமணிக்குப்பின்போ வேலை செய்யவேண்டியிருந்தால் இன்னொரு பத்து ரூபாய் அதிகம் கிடைக்கும். தொழில் ரீதியாகக் குப்புசாமிக்குப் பல வெளியூர் இரும்பு வியாபாரிகளும்,தொழிலதிபர்களும் பழக்கம்.அவர்கள் விருந்தினர்களாகச் சென்னை வரவும் போகவுமாக இருப்பார்கள். அப்போதெல்லாம் அவர்களை விமான நிலையத்திலோ, இரயில் நிலையத்திலோ சென்று அழைத்து வரவும், கொண்டு போய்விடவும் வேண்டியிருக்கும்.அவர்களில் சிலர் ஐந்து,பத்து அதிகமாகப் போனால் பதினைந்து, இருபது என்று இனாம் கொடுப்பார்கள். முதலில் இப்படி இனாம்களை வாங்கத் தயங்கவும், கூசவும் செய்தான் கண்ணப்பன். ஆனால், நாளாக நாளாக அந்தத் தயக்கமும், கூச்சமும் அவனிடமிருந்து கழன்று போயின. கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் அவர்களுக்கு இது ஒரு கொசுக்கடி மாதிரி. தான் வாங்காததால் அவர்களுக்கும் லாபமில்லை, தனக்கும் லாபமில்லை என்பது புரிந்தது. வாங்கிக் கொள்ளலானான். டிரைவர் என்ற முறையில் இப்படியும் அப்படியுமாகச் சராசரி மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தது கண்ணப்பனுக்கு ஸ்டீல் கம்பெனி டிரைவர் என்று நியமனமாகி இருந்ததால் வருஷத்துக்கு இரண்டு போனஸ் வேறு வந்தது. ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ் - டிரைவர் என்று எம்பிராய்டரி செய்த மூன்று செட் யூனிஃபாரம் வேறு தந்தார்கள். ஊருக்குச் சுளையாக ஐநூறு ரூபாய் அனுப்ப முடிந்தது. அவனது செலவுகளுக்கும் தாராளமாக இருந்தது.

ஆனாலும் கண்ணப்பனுக்கு அந்த வேலையின் மேல் மனத்தாங்கல்களும், கோபங்களும், ஆற்றாமைகளும் இருந்தன. வேலையைப் பற்றி வெளிப்படையாகத் தன்னை 'டிரைவர் என்று சொல்லிக் கொள்ளத் தயங்கினான் அவன்.

ஒவ்வொரு நாளும் காலையில் தினசரி முதல் வேலை, முதலாளியின் இரண்டாவது மகள் பிரியதர்சினி என்ற பிரியாவைக் கல்லூரியில் கொண்டு போய்விட வேண்டும். மரியாதை பிரச்சனை அங்கேதான் ஆரம்பமாகியது. சொன்னால் எங்கே வேலைக்குச் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ என்று புலவர் படிப்பு, பட்டிமன்றம், கவியரங்கம் இவற்றை எல்லாம் அவர்களிடம் சொல்லவில்லை அவன். சொல்லாததால் எல்லா டிரைவரையும் போல அவனையும் ஒரு டிரைவராகவே நடத்தினார்கள் அவர்கள்.

"டிரைவர் காரை எடு காலேஜூக்கு நேரமாச்சு” - என்று அவன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் முதல் குரலாகப் பிரியாவின் குரல்தான் அவனுக்குக் கட்டளை இட்டது. 'டிரைவர்' என்ற அதட்டலான அதிகார தோரணையிலான அந்த இளம்  பெண் குரல் அவனுள் எரிச்சலூட்டியது. ஒர் உறுத்தலான தன்மான உணர்வு தூண்டிவிட உடனே, "என் பெயர் கண்ணப்பன் அம்மா” என்று மிகவும் சாதுரியமாகத் தன்னை டிரைவர் என அவள் விளிப்பது தனக்கு விருப்பமில்லாததைப் புலப்படுத்தியும் பார்த்தாயிற்று. அவள் அதை எல்லாம் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. மறுபடியும் 'டிரைவர்' என்றுதான் கூப்பிட்டாள். சில வேளைகளில் அது, "ஏய்! டிரைவர்' என்று கூட மாறிற்று.

அங்கே வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ குப்புசாமியிடம், “பிரியாவைக் காலேஜிலே கொண்டு போய் விட்டு விட்டு வரேங்க” என்றும், “பிரியா அஞ்சுமணிக்கு யாரோ சிநேகிதி வீட்டுக்குப் போகக் கார் வேணும்னு சொல்லிச்சு” என்றும் இரண்டொரு முறை பேசியிருந்தான் கண்ணப்பன்.அடுத்தநாள் காலையில் அவன் வேலைக்கு வந்ததுமே, “நீ வந்ததும் ஐயா உடனே பார்க்கச் சொன்னாரு” என்று பங்களா வாட்ச்மேன் கண்ணப்பனிடம் கூறினான்.

அவன் உடனே முதலாளி குப்புசாமியைப் பார்க்க உள்ளே சென்றான்.அவர் முன் ஹாலில் ஊஞ்சலில் உட்கார்ந்து காலைத் தினசரியில் மூழ்கியிருந்தார். அருகே இருந்த சோபாவில் திருமதி. குப்புசாமி தமிழ்ப் பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள்தான் அவன் உள்ளே நுழைந்ததை முதலில் பார்த்தாள். என்ன காரணத்தாலே அவனைப் பார்த்ததும் அவள் முகமே மேலும் கடுமையானாற் போல் இருந்தது. குப்புசாமி பேப்பர் படித்து முடிக்கிறவரை அவன் கால் கடுக்க நிற்க வேண்டியிருந்தது.

துணிந்து ஒரு தடவை “சார்.” என்று அவன் கூப்பிட்டும் அவர் பேப்பரிலிருந்து கவனத்தைக் கலைக்காமலே"கொஞ்சம் இரு.வரேன்” என்றார். இனி அவன் போகவும் முடியாது. உட்காரவும் கூடாது. நின்றே ஆக வேண்டும். நின்றான். எரிச்சலோடு நின்றான். கால் கடுக்க நின்றான்.

கால் மணி கழித்து அவர் பேப்பரை மடித்து வைத்துவிட்டு அவன் பக்கமாகத் திரும்பினார். "உன்னை வேண்டுமென்றுதான் காத்து நிற்கச் செய்தேன்” என்று கடுப்பைக் காட்டியது அவர் பார்வை.

"நீ என்னவோ உன் வீட்டு வேலைக்காரியைக் கூப்பிடற மாதிரிப் பிரியா வந்தா போனா'ன்னு பேர் சொல்லிப் பேசறியாம். பிரியா என் மகள். அதாவது உன் பாஸோடே பொண்ணு. இனிமே மரியாதையா லட்சணமா, சின்னம்மா காலேஜ் போகணும்','சின்னம்மாவுக்கு வண்டிவேனுமாம்'னெல்லாம் சொல்லணுமே ஒழியப் பேரைச் சொல்லி நீ பேசக்கூடாது, புரிஞ்சுக்கோ! உனக்கு வயசும் அனுபவமும் பத்தாது. இளம் பிராயம், இந்த வேலையிலே எல்லாம் மரியாதைதான் முக்கியம்ப்பா' என்றார் குப்புசாமி.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போய் நின்றான். அதிர்ச்சி யாகவுமிருந்தது.

"என்னப்பாது.? நான் கேட்கிறேன். பதில் பேசாமல் கல்லுளி மங்கன் மாதிரி நிற்கிறே?” எந்தப் படிப்பறிவும் இல்லாத ஒரு சாதாரணக் கார் டிரைவராயிருந்தால், சரிங்க. இனிமே அப்படியே செய்யறேன்’ என்று அவனும் இசைந்திருப்பான். புலவருக்குப் படித்து ஒருமை, பன்மை, மரியாதை எல்லாம் தெரிந்தவனாக இருந்த காரணத்தால் அவர் கூறியதை அப்படியே ஏற்றுப் பணிந்துவிடாமல் கருத்து வேறுபடும் உரிமை தனக்கு இருப்பதை உணர்ந்தான் கண்ணப்பன். மெல்ல விவாதிக்கத் தொடங்கினான்.

“பேர் சொல்றதினாலே மரியாதை இல்லைன்னு ஆயுடாதுங்க. இராமன், கிருஷ்ணன்னு கடவுளைக் கூடப் பேர் சொல்லிதான் வணங்கறோம். காந்தி,நேருன்னு பெரிய பெரிய தலைவருங்களைக் கூடப் பேர் சொல்லித்தான் குறிப்பிடறோம்.”

“இந்தாப்பா நிறுத்திக்க! உன் அதிகப்பிரசங்கம்லாம் வேணாம். பேர் சொல்லப்படாதுன்னாக் கேட்டுக்க விளக்கம்லாம் தேவையில்லை. பிடிக்காட்டி இப்பவே வேலையை விட்டு நின்னுக்க”

இதைக் கூறும்போது அவர் குரல் மிகவும் கறாராகவும் கடுமையாகவும் இருந்தது. அவன் பதில் சொல்லாமல் வேலையைக் கவனிக்கச் சென்றான். ஆனால், மனதுக்குள் அந்த வேலைக்குப் பதில் வேறு ஏதாவது வேலை தேடிக் கொண்டு சொல்லாமலே விட்டு விலகி விடுவது என்று தீர்மானம் செய்து கொண்டான் கண்ணப்பன். தன்னை அவர்கள் மரியாதை இன்றி ‘ஏய் டிரைவர்’ என்று கூப்பிடுவதைத் தான் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம். தான் அவர்களைப் பேர் சொல்லிக் கூப்பிடுவது மட்டும் மரியாதைக் குறைவாம். இது அவனது புலமைக்கும், சுயமரியாதைக்கும் ஒரு சவாலாக இருந்தது. பல பட்டிமன்றங்களில் அவன் ஆவேசமாகவும், உணர்ச்சி மயமாகவும் முழங்கும் ஒரு பாட்டு,

‘புல்லடிமைத் தொழில் பேணிப் பண்டு
போயின நாட்களுக்கு இனி மனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் 'து' என்று தள்ளி'

என்ற பாரதியார் பாட்டுத்தான். அவமானகரமான இந்தத் தொண்டு நிலை மையைத் ‘தூ’ என்று தள்ளிவிட வேண்டும் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று வேலைக்குப் போகாமல் அவர்களைக் கழுத்தறுத்துவிட வேண்டும் என்று எண்ணினான் அவன். ‘நாளையிலிருந்து வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு நின்றால் அவர்கள் வேறு ஆள் ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.அப்படிமுடியாமல் டிரைவருக்கு நிறைய வேலைகள் உள்ள ஒரு தினத்தில் திடுதிப்பென்று போகாமல் இருந்துவிட நினைத்தான் கண்ணப்பன்.

அன்றைக்கு மறுநாளேகூட அப்படிநிறைய வேலைகள் இருந்தன. கண்ணப்பனின் அதிர்ஷ்டமோ அல்லது நல்ல வேளையோ அன்று மாலையே தற்செயலாக ஒரு வாய்ப்பு வந்தது. ஒரிடத்தில் வேலை இருப்பதாகக் கேள்விப்பட்டான் அவன். மாம்பலத்தில் அடகுக்கடை வைத்திருந்த ஒரு மார்வாரியிடம் டிரைவர் வேலை இருப்பதாகத் தெரிய வந்து விசாரிக்கச் சென்றான். அவன் போனபோது கடையில் மார்வாரியின் மகன்தான் இருந்தான். பெரிய சேட் இல்லை. "டிரைவர் நம்பள்கி வேணாம், நம்ப ஃபாதர் ஸிக் ஆசாமி. அவருக்குத்தான் வேணும். டெய்லி காலம்பரவும், சாயங்காலமும் பீச்ல நடக்கணும். அதனாலே பீச்சுக்கும் காரிலே போகனும், டாக்டர் வீட்டுக்கு வாரத்துல ஒரு தரமும், வெள்ளிக் கிழமை கோயிலுக்கும்போகணும். வேற வேலை கிடையாது” என்றான்மார்வாரியின் மகன். நிறைய நேரம் மிஞ்சும் போலிருந்தது. படிக்கலாம், எழுதலாம், பட்டிமன்றம், கவியரங்கங்களுக்குப் போகலாம். சம்பளத்தைப் பற்றி விசாரித்தபோது “ஐநூறு ரூபாய்க்கு மேல் ஒரு பைசாக்கூடத் தர முடியாது” என்றான் மார்வாரியின் மகன்.

"உனக்கு வேலையே இல்லை. காலம்பர ஃபாதரோட பீச் வாக்கிங்குக்காக ஒட்டிட்டுப் போனப்புறம் வீட்டில கொண்டாந்து வுட்டியானா மறுபடி நீ ஈவினிங் ஃபைவ் தர்ட்டிக்கி வந்தாப் போறும் மழை நாளுங்கள்ளே அதுகூட இருக்காது” என்றான் சேட்டின் பிள்ளை.

“மாதம் அறுநூறாவது இல்லாட்டி மெட்ராஸ்ல எப்பிடிக் காலந்தள்ள முடியும்? இப்ப நான் இருக்கிற எடத்துல கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேலே வருது” என்று வாதிட்டான் கண்ணப்பன்.

“கம்பெனிகளிலே எவ்வளவு வேணும்னாத் தரலாம்! நம்பளைப் போலப் பாக்கெட்டுல இருந்து குடுக்கிறவங்களுக்கு கட்டாதுப்பா!”

“ஐந்நூத்தி அம்பதாவது இல்லாட்டி எனக்குக் கட்டாது சேட்”

“எதுக்கும் நீ நம்ப ஃபாதரைப் போய்ப் பாரு. அவருக்குப் பிடிச்சா எனக்குச் சம்மதம்.”

“அவரை எங்க பார்க்கிறது?” பகவந்தம் குப்தா தெருவில் வீட்டு விலாசத்தை எழுதிக் கொடுத்தான் சேட்

கண்ணப்பன் அந்த விலாசத்தை வாங்கிக் கொண்டு போய்ப் பார்த்தான். பெரிய சேட்டுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். நோயாளியாகத் தோன்றினார்.

“எங்கிட்ட வேலை கொறைவு, அம்பது ரூப்யாகூடக் குடுக்கிறது. பெரிய விஷயம் இல்லே. நம்பள்கி சம்மதம். ஆனா மனசுக்குப் பிடிச்ச மாதிரி நீ நடந்துக்கணும். பெட்ரோல் விற்கிற விலையில காரை வெளியே எடுக்க முடியிறதே இல்லே. கார் ஒட்டாதபோது மத்த வேலைகளைச் செய்யனும்” என்றார் பெரிய சேட்.

எப்படியாவது ஸ்வஸ்திக் ஸ்டீல் அதிபர் குப்புசாமியையும் அவரது மகள் பிரியாவையும் பழி வாங்கிவிட்டால் போதும் என்றிருந்தது அவனுக்கு ஒரு சம வயதுக்கும் குறைவான இளம் பெண்ணைச் செயற்கையான மரியாதையுடன் ‘சின்னம்மா’ என்றழைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. மறுநாள் காலை ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸின் விருந்தினராகப் பெங்களுர் ஃப்ளைட்டில் வர இருக்கிற ஒரு வியாபாரியைக் காலை ஏழரை மணிக்கே மீனம்பாக்கம் போய் அழைத்து வர வேண்டும். அவன் மறுநாள் போகவே போவதில்லை. திண்டாடட்டும். அப்பொழுது தான் புத்தி வரும் அவர்களுக்கு காலையில் வேலைக்கு வருவதாகச் சேட்டிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

“கண்ணப்பன்! நிம்பள் பேரு நம்பள்கி ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார் பெரிய சேட் அவர் ‘டிரைவர்’ என்று தன்னைக் கூப்பிடாமல் பெயரைச் சொல்லியே 'கண்ணப்பன்’ என்று கூப்பிட்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ் அதிபர் வீட்டில் அவமானப்படுத்திய மாதிரி இனி அவனை இங்கே யாரும் ‘ஏய் டிரைவர்’ என்று கூப்பிடமாட்டார்கள். சம்பளம் குறைவுதான். அதனால் பரவாயில்லை. நிறைய நேரம் மீதமிருக்கிறது. முடிந்தால் மாலைக் கல்லூரிகளில் அல்லது கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸில் சேர்ந்து எம்.ஏ. படிக்கலாம். எம்.ஏ. முடித்துவிட்டால் வேலை நிச்சயம் கிடைக்கும். அப்புறம் டிரைவர் வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணினான் கண்ணப்பன். எல்லாம் நினைக்கச் சுகமாயிருந்தது.

உடம்பிலேயே டிரைவர் என்றும் அடிமை என்றும் போர்டு எழுதித் தொங்க விட்டுக் கொண்ட மாதிரி ‘ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ்’ என்று காக்கி உடுப்பில் தோள் பட்டையில் எம்பிராய்டரி செய்த யூனிஃபாரத்தை நாளை முதல் அவன் சுமக்க வேண்டியதில்லை. அந்தக் காக்கி உடையில் 'டிரைவர்' என்று வேறு சிவப்பு நூலில் எழுத்துக்கள் இருந்தன.

அவனை மிக மிகக் கூசச் செய்த விஷயம் இதுதான். மாலை சீக்கிரமே வேலை முடிந்து அவன் பட்டிமன்றம், கவியரங்கம் எதற்காவது போக வேண்டுமானாலும் அந்தக் காக்கி உடைகளை மாற்றாமல் போக முடியாது. காக்கி உடைகளைத் தவிர்த்து அவன் இஷ்டம் போல் உடுத்திக் கொள்ள முயன்றதைக் குப்புசாமி தடுத்தார். இனிமேல் சேட்டிடம் அந்த அவஸ்தை எல்லாம் கிடையாது. டீ ஷர்ட், ஸ்போர்ட்ஸ் பனியன், வேஷ்டி ஜிப்பா என்று அவன் எதை அணிந்தாலும் அவர் மறுக்கமாட்டார். சுதந்திர மாயிருக்கலாம்; சுதந்திரமாகப் பழகலாம். மாலை 5 மணிக்கு மேல் கடற்கரையிலிருந்து திரும்பியதும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். அவன் ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸி லிருந்து விலகிச் சேட்டிடம் வேலைக்குச் சேர்ந்த பின் நிறைய இலக்கியக் கூட்டங்களுக்குப் பேசப் போக முடிந்தது. நிறையப் பட்டிமன்றங்களில் பேசவும், கவியரங்கங்களில் பாடவும் முடிந்தது. கை தட்டலும் கொஞ்சம் பணமும்கூடக் கிடைத்தன.

‘அடிமைத்தனங்களில் மிக மிக மோசமானது கருத்தடிமைப் படுதலா, செயலடிமைப்படுதலா?’ - என்ற தலைப்பிலான ஒரு பட்டிமன்றத்தில் செயலடிமைப் படுதலே மோசமானது என்னும் கட்சித் தலைமையை ஏற்று அவன் விவாதிக்கும் போது,

‘தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூ என்று தள்ளி’
என்று பாரதி பாட்டை மேற்கோள் கூறுகையில் 'தூ' என்னும் சமயத்தில் மேடைக்கருகே உணர்ச்சிவசப்பட்டுக்காறித்துப்பியே விட்டான். ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ் அதிபரை நினைத்துத்தான் காறித் துப்பினான். கூட்டம் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தது. விவாத முடிவில் அவன் கட்சி வெற்றியும் பெற்றது. அவன் தமிழ்ப் புலவர் என்பதாலோ, பட்டிமன்றம் பேசப்போகிறான் என்பதாலோ சேட் ஒரு சிறிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதெல்லாம் அவனுக்குப் பிடித்திருந்தது.

புது இடத்தில் வேலையே இல்லை. போன ஒரு வாரத்திற்கப்புறம் ஒருநாள் சேட் அவனைக் கூப்பிட்டு, “என்னை உன் அப்பா மாதிரி நினைத்துக் கொள். தப்பாக நினைக்காதே! எனக்கு வாத சரீரம். ஒரு வருஷம் இந்த எண்ணெயை அழுத்தித் தேய்த்து மாலீஷ் போட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும் என்று கோட்டக்கல் வைத்தியர் கூறியிருக்கிறார். நீ தான் சிரமம் பார்க்காமல் சூடு பறக்க அழுத்தித் தேய்த்துவிடவேண்டும்” என்று ஒரு பாட்டில் ‘வாத வேங்கைத்’ தைலத்தை அவனிடம் நீட்டிவிட்டு உடம்பில் துண்டுடன் முன் குறுணி அரிசிப் பிள்ளையார் மாதிரி மணைப்பலகையைப் போட்டு உட்கார்ந்துவிட்டார்.அவர் என்ன சொல்கிறார் எனப் புரிந்ததும் அவனுக்கு அதிர்ச்சி. கோபத்தோடு கண்ணப்பன் தயங்கினான். மாட்டேனென்று மறுத்து விடலாமா என எண்ணினான். இந்த வேலையையும் விட்டுவிட்டால் சோற்றுக்குத் திண்டாட வேண்டுமே என்று பயமாகவும் இருந்தது. சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று நின்று விட்டதால் பழைய ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸிலும் இனி முகத்தைக் காட்ட முடியாது. வேறு வழியின்றித் தொந்திக் கணபதியாகத் திறந்த மேனியோடு உட்கார்ந்துவிட்ட சேட்டுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தான்.

அந்த வயதிலும் மேட்லி ரோட்டில் சேட் ஒரு சின்ன வீடு வைத்திருந்தார். எப்போதாவது சேட்டோடு அங்கே போனால் அவள் ஹோட்டலுக்குக் காபி, டிபன் வாங்கி வா, பட்டுப் புடவையை இஸ்திரி போட்டு வாங்கி வா என்று வேலை ஏவினாள். கஷ்டமாயிருந்தது. கர்மமே என்று தலையிலடித்துக் கொண்டு எல்லாம் செய்துத் தொலைக்க வேண்டியிருந்தது.

'கண்ணப்பா! நீ என் பிள்ளை மாதிரி' - என்று பிரியமாக அழைத்தே அவனைக் கொன்றார் சேட் ‘உன் பிள்ளைகூட இதெல்லாம் செய்யமாட்டான்’ - என்று மனசுக்குள் கறுவிக்கொள்வான் கண்ணப்பன். இதற்குப் பழைய ஸ்வஸ்திக் ஸ்டீல்லே தேவலை என்றுகூடத் தோன்றியது. அவர்கள் அவமானப்படுத்தாமல் கறாராகச் சம்பளம் கொடுத்தார்கள். சேட்டோ மரியாதையாகவும், பிரியமாகவும் வதைத்தான். பேசாமல் ஒரு வேலையும் வேண்டாமென்று ஊருக்கே திரும்பப் போய்விடலாம் என்றால் ஊரில் சோற்றுக்குத் திண்டாட வேண்டியிருக்கும். மாலை நேரப் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், கை தட்டல்கள் எதுவுமே ஊரில் கிடைக்காது. அதனால் ஊர் திரும்ப மனசு வரவில்லை. சென்னை அவனை விட மறுத்தது. ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்தது. அழகுத் தென்றலான இளம் பிரியாவை உட்கார வைத்துக் காரில் காலேஜிக்குக் கொண்டு போய்விட முடிந்தது. புதுப்புது மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. பழக முடிந்தது. டிரைவர் என்கிற முறையில் நிறையச் சவாரிகள் இருந்தன. உற்சாகமாக வேலை இருந்தது. டல் அடிக்கவில்லை.

இங்கே சேட் வீட்டிலோ, சேட்டின் நீர்யானை போன்ற உருவத்தையும் அவனது வைப்பாட்டியின் குண்டுமூஞ்சியையும் வட்டி எண்ணி எண்ணியே தேய்ந்து போய் நறுங்கலான சின்ன சேட்டையும்தான் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தது. பெட்ரோல் விலை ஏற ஏறக் காரை வெளியில் எடுப்பதே குறைந்து போயிற்று. ‘வாத வேங்கை எண்ணெய் தேய்த்துப் பிடித்துவிட, கடைக்குப் போய் காய்கறி வாங்கிவர, சின்ன வீட்டுக்குப் பட்டுப் புடவை அயர்ன் பண்ணிவர என்று டிரைவர் வேலை தவிர வேறு வேலைகளையே கண்ணப்பன் செய்ய வேண்டியிருந்தது. எல்லாவற்றிலும் ஒரே திருப்தி அவனை யாரும் டிரைவர் என்றோ ‘ஏய் டிரைவர்’ என்றோ கூப்பிடுவதில்லை. கம்பெனி பேர் போட்டு டிரைவர் என எழுதிய காக்கி யூனிஃபாரம் அணியும்படி வற்புறுத்தவில்லை. ஜிப்பா வேஷ்டியோடு, டி ஷர்ட் பேண்டோடு எப்படி வேண்டுமானாலும் இஷ்டம் போல மைனராகச் சுற்ற முடிந்தது. சென்னைக்கு வந்த புதிதில் இருந்த அவ்வளவு முனை மழுங்காத ரோஷமும், சுயமரியாதையும் இப்போது அவனிடமும் இல்லை. அவனுக்குச் சென்னையும், சென்னைக்கு அவனும் பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். எம்.ஏ. படிக்கிற இலட்சியமும் ஈடேறவில்லை. மாதத்தில் பத்து பட்டி மன்றமும், இருபது கவியரங்கங்களும் கிடைத்தன. பழைய ஆவேசமும் மட்டுப் பட்டுத் தேய்ந்து பாமர நகைச்சுவை அவன் பேச்சில் அதிகம் தலைக்காட்ட ஆரம்பித்திருந்தது. கூட்டங்கள் மூலம் கொஞ்சம் பணமும் வந்தது. பெரிய சேட் ஒரு வருஷத்திலேயே அவன் சம்பளத்தை ஐம்பது ரூபாய் கூட்டி அறுநூறு ரூபாயாக உயர்த்தியிருந்தார். பெட்ரோல் விலை ஏறவே காலை, மாலை இரண்டு வேளையும் வேங்கட நாராயணா ரோடு பார்க் ஒன்றிலேயே தமது வாக்கிங்கை முடித்துக் கொள்ளப் பழகியிருந்தார் சேட் எப்போதாவது டாக்டரிடம் மெடிகல் செக்அப், கோயில், குளம், மிண்ட் தெருவில் உறவினர் வீட்டுக் கல்யாணம் என்று போக மட்டும் காரை வெளியே எடுத்தார்.

கண்ணப்பன் சேட்டை உட்கார்த்தி வழக்கம் போல் எண்ணெய் தேய்த்து விட்டான். சின்ன வீட்டுக்குப் பட்டுப் புடவை அயர்ன் பண்ணிக் கொண்டு வந்து தந்தான். ரங்கநாதன் தெருவுக்குப் போய் சேட் வீட்டுக்குப் புதினா, பச்சைக் காய்கறி எல்லாம் வாங்கி வந்தான். மாலை வேளைகளில் பட்டிமன்றம் பேசினான். கைதட்டல் வாங்கினான். கொஞ்சம் பணமும் பண்ணினான்.

ஒருசமயம் தற்செயலாகத் தெருவில் சந்தித்த ஒரு ரசிகர், “உங்க பேச்சிலேயே

எனக்கு ரொம்பப் பிடிக்கிற இடம் உணர்ச்சி கொந்தளிக்கும் சுதந்திர ஆவேசத்தோடு குரலை உச்சஸ்தாயியில் கொண்டு போய்,

புல்லடிமைத் தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக்கு இனி மனம் நாணித
தொல்லைகள் இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூ என்று தள்ளி

- ன்னு நீங்க பாரதியார் பாட்டைச் சொல்லுவீங்களே அந்த இடம்தான். முன்பெல்லாம் அடிக்கடி அந்தப் பாட்டை ரிபீட் பண்ணுவீங்க. ஆனா இப்பல்லாம் வர வர அந்தப் பாட்டையே சொல்றதில்லே நீங்க. ஏன்?” என்று கேட்டார். அவரிடம் அப்போது அதற்கு என்ன பதில் சொல்வதென்று ஒரிரு வினாடிகள் தயங்கி, “சொல்லாமல் என்ன? அதற்கு அவசியமிருந்திருக்காது. அதனாலே சொல்லாம விட்டிருப்பேன்’ என்று மழுப்பினான் கண்ணப்பன். வெளியே அப்படிப் பதில் சொல்லியிருந்தாலும் உள்ளே அவரது கேள்வி அவனுடைய மனத்திற்குள் கிளப்பி விட்டிருந்த சலனம் மிக மிகப் பெரியதாயிருந்தது. அவர் கேள்வி அவனை ஒர் உலுக்கு உலுக்கியிருந்தது.

முன்பு ஒரு காலத்தில் அவனது உணர்வுகளும் அந்தப் பாட்டின் அர்த்தமும் ஒன்றிப் போய்ப் பின்னிப் பிணைந்திருந்தன. இன்றும் அந்தப் பாட்டும், அதன் அர்த்தமும் சுதந்திரத் தன்மான ஆவேசம் நிறைந்துதான் இருந்தன. ஆனால் அவனிடமோ அவன் பிழைப்பிலோ அந்த ஆவேசங்கள் இல்லாமல் அடிபட்டுத் தேய்ந்து போயிருந்தன. பஞ்சம் பிழைக்க வந்த ஆண்டி போல் ஆகியிருந்தான் அவன். ஜனங்கள் அவனை நகைச்சுவைப் பேச்சாளன் என்றார்கள் கைதட்டினார்கள். அவன் எது சொன்னாலும் சிரித்தார்கள். ஆர்ப்பரித்தார்கள்.

அப்படி அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்கள் என்று புரியாமல் சமயங்களில் அவன் உள்ளுர அழுதான்.தானே மெல்ல மெல்லச் சிரிப்புக் கிடமாகிக் கேலிப் பொருளாகிப் போனாற் போல உள்ளுற நலிந்து நாணிக் கூசிக் குறுகினான். ஆனால், பாவம்! மக்களுக்குத்தான் அது தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. (அமுதசுரபி, தீபாவளி மலர் - 1986)