நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/இங்கிதம்
168. இங்கிதம்
சேர்மன் அந்த வயதில் எவ்வளவுக்கு எவ்வளவு கலகலப்பாகவும், ஜோவியலாகவும், சுமுகமாகவும் பழகினாரோ அவ்வளவுக்கு நேர்மாறாய் முசுடாகவும், முன் கோபியாகவும், கடுகடுப்பாகவும் இருந்தார் எம்.டி. இவர்தான் சேர்மனின் பிள்ளை என்பதைக் கூட நம்ப முடியாமல் இருந்தது. குணங்களில் அப்பாவும், பிள்ளையும் நேர் மாறாக இருந்தார்கள். அவர் வட துருவம் என்றால், இவர் தென் துருவமாக இருந்தார்.
ஆறாவது மாடியில் இருந்த கம்பெனி நிர்வாக அலுவலகத்துக்குப் போக எம்.டி. லிஃப்ட்டில் வந்து நிற்கும் போது அந்த ஒரு ட்ரிப் மட்டும் பன்னிரண்டு பேர் ஒரே சமயத்தில் ஏற முடிந்த அந்த லிஃப்டில் எம்.டி. ஒருவர்தான் அனுமதிக்கப்படுவார். அப்படி லிஃப்ட் ஆப்பரேடரிடம் உத்தரவே இடப்பட்டிருந்தது. மூடி மேன், கோபக்காரர், முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது என்று பெயரெடுத்திருந்தார் எம்.டி.
ஆனால், பெரியவர் என்று ஊழியர்கள் பிரியமாக அழைக்கும் சேர்மன் லிஃப்டில் போகும் போது இன்னும் பதினொரு பேரை உடன் ஏற்றிக் கொள்ளச் சொல்லியும், அவரவர்கள் இறங்க வேண்டிய ஃப்ளோரில் அவரவர்களை விடச் சொல்லியும் தாமே வலிய முன் வந்து லிஃப்ட் ஆப்பரேட்டரை வற்புறுத்துவார். மற்றவர்களிடம் ஜோக் அடிப்பார். க்ஷேம லாபங்களை விசாரிப்பார். புதிதாகக் கல்யாணமான ஓர் இளைஞனிடம், “என்னப்பா! வருஷம் ரெண்டாச்சு? புரொக்க்ஷனே ஸ்டார்ட் ஆகாமே, ஒரு பார்ட்னர்ஷிப் கம்பெனியா?” என்று கேட்டு லிஃப்டையே கலகலக்கச் செய்வார். கம்பெனி ஊழியர்களைத் தட்டிக் கொடுப்பார். சிலரிடம் கை போட்டுக் குலாவுவார். சகஜமாகப் பழகுவார்.
“இந்த ஆபீஸ்லே எம்.டி. சேர்மன் முதல் எல்லாரும் மேலே போறதுக்கும் கீழே இறங்கறதுக்கும் இந்த லிஃப்ட் ஆப்பரேட்டர் சங்கரன் தான் காரணம்பா?” என்று கிண்டலில் இறங்கி லிஃப்ட் மேனை வம்புக்கு இழுப்பார். -
நேர் மாறாக சின்னவரோ யாரோடும் பேசவே மாட்டார். லிஃப்ட்ஆப்பரேட்டர், குமாஸ்தாக்கள், கீழ் நிலை ஊழியர்களிடம் பெரும்பாலும் சைகைகளைக் கொண்டே வேலை வாங்குவார். முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. ஹ்யூமர் ப்ரூஃப் மூஞ்சி. தான் சிரிக்காததோடு, சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிற இரண்டு பேரை எதிரில் பார்த்தாலே பிடிக்காது அவருக்கு உடனே தாங்க முடியாத எரிச்சல் வந்து விடும்.அவர் சினிக் ஆனதற்குப் பலர் பலவிதமான காரணங்களைச் சொன்னார்கள். சிறு வயதிலேயே கல்யாணமாகிச் சிறு வயதிலேயே மனைவியைப் பறி கொடுத்து விட்டு, அப்புறம் திருமணமே செய்து கொள்ளாமல், தனிக்கட்டையாகவே காலந் தள்ளினார் எம்டி அதுதான் காரணம் என்றார்கள். அவர் மனைவியை இழந்து தனிக்கட்டை ஆனதிலிருந்தே இப்படித்தான் முசுடாகி விட்டார் என்றார்கள். இரண்டாந்தாரம் கட்டிக் கொண்டால் குணமாகி விடும் என்று யோசனையும் சொன்னார்கள். ‘இண்டராவர்ட்’ என்று வேறு சிலர் குறை கூறினார்கள்.
பெரியவர் - சேர்மன் ராஜசேகர முதலியார் எழுபது வயதிலும் சஃபாரியில் மாப்பிள்ளை போல ஆபீஸ் வந்தார். மாலையில் கிளப்புக்குப் போனார். பலர் மெச்சும்படி கச்சிதமாகக் காக்டெயில் மிக்ஸ் பண்ணினார். சிரிக்கச் சிரிக்கப்பேசினார். ரம்மி ஆடினார். டென்னிஸ் விளையாடினார், பெண்களிடம் கூச்சமில்லாமல் கலகல என்று பழகினார்.
சின்னவர் சந்திரசேகர் முகவாயில் தேன் கூடு கட்டின மாதிரிக் குறுந்தாடி, சிரிக்கவே மறந்து போய் விட்ட உதடுகள், சிரிக்கிறவர்களைச் சகித்துக் கொள்ளவே முடியாத கடுமை. ஆபீஸ் விட்டால் வீடு, வீட்டை விட்டால் லைப்ரரி. வேறு நண்பர்களோ, கிளப்புக்குப் போய் பழகுவதோ கிடையாது. வீட்டில் ஆள் உயரத்துக்குக் கம்பீரமாக வளர்ந்த இரண்டு ‘கிரேட் டேன்’ நாய்களைப் போஷித்தல் சந்திரசேகருக்குப் பிடித்த ஒரே பொழுது போக்கு மற்றபடி படு சீரியஸ், படு கடுமை, படு தனிமை.
‘சேகர் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரவு செலவு செய்தது. கன்ஸ்யூமர் அயிட்டங்கள் முதல் மருந்துகள் வரை பலவற்றைத் தயாரித் தார்கள். சிலவற்றுக்கு மாநில அளவில் ஏஜென்ஸி எடுத்திருந்தார்கள். எல்லாமாய்ச் சேர்ந்து லாபம் கொழித்தது. தொழில் வளர்ந்தது.
ஆறு மாடிகளில் கிரவுண்ட்ஃப்ளோரும், ஃபர்ஸ்ட்ஃப்ளோரும் தவிர மற்ற நான்கு மாடிகளிலும் அலுவலக ஊழியர்கள், கெமிக்கல் என்ஜினியர்கள், சேல்ஸ் மானேஜர்கள், பர்ச்சேஸ் ஆபீஸர், ப்ராஜெக்ட் ரிஸர்ச் இலாகா, ஃபைனான்ஸ் மானேஜர், எம்.டி, சேர்மன், முக மலர்ச்சியுள்ள அழகிய துறுதுறுப்பான இளம் பெண்களான ஸ்டெனோ கம் டைப்பிஸ்டுகள் என்று நிரம்பியிருந்தார்கள். ஆயிரம் பேருக்கு மேல் இருந்த ஊழியர்கள் யார் யார் என்ன போக்கு, எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் சேர்மனுக்கு அத்துபடி. ஒன்றையுமே கவனிக்காதவர் போல் கவனித்துப் பலரிடம் சகஜமாகப் பேசியே விஷயங்களைக் கிரகித்துக் கொள்வார் சேர்மன் ராஜசேகர முதலியார். நடுவாக வந்து போனாலும், ஆபீஸில் எந்த மூலையில் என்ன நடக்கிறது என்பது அத்துபடி அவருக்கு.
ஒரு நாள் லிஃப்டில் உடன் வந்த ரவீந்திரன் என்ற இளம் கெமிக்கல் என்ஜினியரிடம் “என்னப்பா! உன் ஃப்ராஜெக்ட் ரிப்போர்ட் எப்பக் கிடைக்கும்? கிடைச்சா உடனே ஒரு தேதி முடிவு பண்ணி நல்ல முகூர்த்தமாய்ப் பார்த்து எல்லாம் செய்துடலாம்” என்றார் பெரியவர். அவன் பவ்யமாகப் பதில் சொன்னான்.
“கெமிக்கல் போர்ஷன் ஆப் த ரிப்போர்ட் இஸ் வித் மீ சார், எக்ஸ்பெக்டிங் அதர் அயிட்டம்ஸ் ப்ரம் த ரெஸ்பெக்டிவ் டிபார்ட்மெண்ட்ஸ்.”“அட நீ ஒண்ணு! நான் கேட்டது கம்பெனி ப்ராஜெக்ட்ரிப்போட் இல்லேப்பா. உனக்கும் ஸ்டெனோ மிஸ், மல்லிகாவுக்கும் காதல்னு கேள்விப்பட்டேனே. அதைப் பத்தித்தான் விசாரிச்சேன்! எப்ப முகூர்த்தம் வெச்சுக்கலாம்?”
இதைக் கேட்டு அவன் நாணினான்.முகம் சிவந்தது. “ஜமாச்சுடலாம்! சீக்கிரம் ஒரு முடிவு பண்ணு. மல்லிகா ரொம்ப ஸ்மார்ட் கேள். யூ.ஆர் லக்கி.”
இதே காதலைச் சின்னவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை அறிய அடுத்த நாளே மற்றொரு நிகழ்ச்சி நடந்தது.
அன்று ஏதோ ஒரு முக்கியமான லெட்டர் டிக்டேட் செய்து அவசரமாக டைப் ஆகி, டெல்லிக்கு அனுப்ப வேண்டியிருந்தது.
எம்.டி சந்திரசேகர் ஸ்டெனோ மல்லிகாவுக்காகக் காலிங்பெல்லை அமுக்கினார். பிரயோசனமில்லை. டெலிபோனை எடுத்தார். கீ போர்ட்டில் ஆளே இல்லை. கடிகாரத்தைப் பார்த்தார். பகல் ஒன்றே கால் மணி. அந்த ஆபீஸில் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை லஞ்ச் இண்டர்வெல். லெட்டரோ படு அவசரமான விஷயம். அவரே எழுந்து ஏ.சி. அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தால், ஸ்டெனோ மல்லிகா அவள் நாற்காலியில் இல்லை. கெமிக்கல் என்ஜினியர் ரவீந்திரனின் டேபிளில் எதிரெதிரே அமர்ந்து மல்லிகா சிரிப்பும் கும்மாளமுமாகப் பகல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையே ஒரே காதல் கிளுகிளுப்பு. இந்த உலக நினைவே இல்லை அவர்களுக்கு.
ஏதோ ஒரு கோபத்தில் ஆத்திரமும், எரிச்சலுமாகத் தூண்டப்பட்டு நேரே அங்கே போய் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “இதென்ன? ஆபீஸா, சினிமாக் கொட்டகையா? வர வர இங்கே யாருக்கும் விவஸ்தையே கிடையாது. அரைமணி நேரமாக் காலிங்பெல்லை அமுக்கிக்கிட்டிருக்கிறேன். கேள்வி முறை இல்லையா? உன் டேபிளிலேயே உட்கார்ந்து சாப்பிட்டாக் குடியா முழுகிடும்?” என்று மல்லிகாவைப் பார்த்துக் கூப்பாடு போட்டார் எம்.டி.
“சாரி சார்! மன்னிக்கணும்” என்று வாரிச் சுருட்டிக் கொண்டு பதறிப் போய் எழுந்திருந்தாள் மல்லிகா. ரவீந்திரனும் எழுந்திருந்தான். ஆனால், எதுவும் பேசவில்லை. அவனுக்கு உள்ளூர ஒரே எரிச்சல்,
“உடனே அறைக்கு வந்து பார் ஒரு அவசர லெட்டர். டிக்டேட் பண்ணி டைப் ஆகிப் போகணும்!” மல்லிகாவை நோக்கி இரைந்து விட்டு உள்ளே திரும்பினார் எம்.டி.சந்திரசேகர். மல்லிகா பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து எம்.டி. ரூமுக்கு ஒடுவதற்குப் பறந்தாள்.
அவர் தலை ஏ.சி. அறைக்குள் மறைந்ததும், ரவீந்திரன் அவளிடம் சொன்னான். “முதலில் பதறாமல், சாப்பிட்டு முடி. நீ போகக் கூடாது. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத மனுஷன், லஞ்ச் டயத்துலே யார் எங்க உட்கார்ந்து சாப்பிட்டால், இவருக்கு என்ன? காட்டு மிராண்டி மாதிரி வந்து கத்திட்டுப் போறதைப் பாரு”“அந்த மனுஷன் சுபாவம் அவ்வளவுதான்! நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும் ரவி! அஞ்சே நிமிஷத்திலே அந்த வேலையை முடிச்சுக் குடுத்துட்டு வந்துடறேன்.”
“மல்லிகா... நான் வெளையாட்டுக்குச் சொல்லலே. சீரியஸ்ஸாவே சொல்றேன். என் மேல் ஆணையா இப்ப நீ போகக் கூடாது. லஞ்ச் டயம் முடியற வரை நீ இங்கே பேசிண்டுதான் இருக்கணும்.”
ரவீந்திரனின் குரல் கடுமையாயிருந்தது. மல்லிகா கெஞ்சிப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக அவள் லஞ்ச் டயம் முடிகிற வரை எம்டி ரூமுக்குப் போகக் கூடாது என்று அவளைத் தடுத்தான்.
மணி ஒன்றே முக்கால். எம்டியின் அட்டெண்டர் வந்து அவளை மறுபடி எம்.டி. அவசரமாய்க் கூப்பிடுவதாகச் சொன்னான்.
அவள் கெஞ்சுகிற பாவனையில் ரவீந்திரன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “ரெண்டு மணிக்கு வருவாங்கன்னு போய்ச் சொல்லுப்பா. இன்னும் கால் மணி நேரம்தானே இருக்கு…” என்று அட்டெண்டரிடம் ரவீந்திரனே அவளுக்காகப் பதில் சொல்லி அனுப்பினான்.
அதன் பிறகு யாரும் அவளைக் கூப்பிட வரவில்லை. சரியாக இரண்டு மணிக்கு ரவீந்திரனின் மேஜையிலிருந்து அவள் தன் இருக்கைக்குப் போய்ச் சுருக்கெழுத்துப் பேடும், பென்ஸிலுமாக எம்.டி. அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே வேறு ஒரு டைப்பிஸ்ட் எம்.டி.யின் டிக்டேஷனை சுருக்கெழுத்தில் நின்றபடியே குறித்துக் கொண்டிருந்தாள்.
அவளை உள்ளே பார்த்ததும் எம்.டி. சீறினார். “இப்போ உன்னை யாரும் இங்கே கூப்பிடலியே? போய் யாராவது சிரித்துப் பேசி அரட்டை அடிக்க ஆளு கிடைச்சாப்பேசிட்டிருக்கலாமே? ஆபீஸ் வேலையா முக்கியம்?”
இதைக் கேட்டு அவள் துணுக்குற்றாள். நெஞ்சம் வேகமாக அடித்துக் கொண்டது. பதற்றத்தோடு ஸீட்டுக்குத் திரும்பி வந்ததும், அழுது விடுவாள் போலிருந்தது.
சுற்றி இருந்த எல்லோரும் அவளையே பார்த்தனர். பதினைந்து நிமிஷத்தில் எம்.டி. ரூமிலிருந்து அட்டெண்டர் அவள் ஸீட்டுக்குத் தேடி வந்து ஒரு கவரை அவளிடம் கொடுத்துக் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு போனான். பிரித்தால், அது ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்,’க்ராஸ் நெக்லிஜன்ஸ், இன்ஸ்பார்டினேஷன், காரணமாக அவளை ஏன் வேலையிலிருந்து நீக்கக்கூடாது?’ என்று கேட்டிருந்தது. அவள் அதை எடுத்துக் கொண்டு கண்களில் நீர் தளும்ப ரவீந்திரனின் மேஜைக்குப் போனாள். அவனிடம் நடுங்கும் கைகளால் அதை நீட்டினாள்.
அதை வாங்கிப் படித்த அவன், அவளைப் பார்த்துப் புன்னகை பூத்தான், கேட்டான்:
“இவர்கள் என்ன நீக்குவது? நாமே விட்டுவிட்டால் போச்சு…”சொல்லிக் கொண்டே இருவருமே இந்த ஆபீஸிலிருந்து ராஜிநாமா செய்வதாகக் கூட்டுக் கடிதமாக ஒரு லெட்டர் டைப் செய்தான் ரவீந்திரன். முதலில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு அவளிடம் நீட்டினான்.
அதை அவள் படித்துப் பார்த்து விட்டு, “சேர்மனுக்கு அட்ரஸ் பண்ணியிருக்கீங்களே? ரெஸிக்னேஷன் லெட்டர் எம்.டி.க்கு அல்லது பெர்ஸனல் மேனேஜருக்குன்னு அட்ரஸ் பண்ணணும்?” என்று கேட்டாள்.
“காரணத்தோடு வேணும்னுதான் சேர்மனுக்கு அட்ரஸ் பண்ணியிருக்கேன். நீ முதல்லே கையெழுத்தைப் போடு. சேர்மன் வெளியில் போறதுக்குள்ளே அவரையே பார்த்து நேரில் குடுத்துடணும்”
அவள் கையெழுத்தைப் போட்டாள். ரவீந்திரன் உடனே தன் மேஜையிலிருந்த ஃபோனை எடுத்து ஆப்பரேட்டரிடம் சேர்மனுக்குக் கனெக்ஷன் கேட்டான். கனெக்ஷன் கிடைத்தது.
“சார் குட்மார்னிங். நான் ரவி பேசறேன். நானும் மல்லிகாவும் உங்களை ஒரு நிமிஷம் நேர்ல பார்க்கணும்…”
“பேஷாப் பார்க்கலாம். உடனே வாங்க. நான் அன்னிக்குக் கேட்ட பிராஜக்ட் ரிப்போர்ட் தயாராயிரிச்சின்னு நினைக்கிறேன். எப்ப முகூர்த்தம்? என்னிக்கிக் கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க?”
உற்சாகமாகப் பேசினார் சேர்மன். மல்லிகாவையும் அழைத்துக் கொண்டு உடனே சேர்மனைப் பார்க்கச் சென்றான் ரவீந்திரன்.
அந்த அறைக்குள் நுழைந்ததுமே, அவனைப் பாசத்தோடு தோளில் தட்டிக் கொடுத்து எழுந்து வந்து வரவேற்று அமரச் சொன்னார் சேர்மன்.
“வாம்மா! நீயும் உட்காரு!” மல்லிகாவையும் குஷியாக வரவேற்றார். “எப்பக் கல்யாணம்?”
அவர்கள் இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் கூச்சத்தோடு பார்த்துக் கொண்டனர்.
ஒரு நிமிஷ இடைவெளிக்குப் பின்,”எங்களை மன்னிக்கணும். இதை உங்க கிட்ட நேரில் குடுத்துட்டுப் போலாம்னுதான் ரெண்டு பேரும் வந்தோம்” - என்று ராஜிநாமாக் கடிதம் இருந்த உறையை ரவி அவரிடம் நீட்டினான். வாங்கிப் பிரித்துப் படித்த அவர் கோபத்தோடு,
“வாட் நான்ஸென்ஸ்... என்னது இதெல்லாம்?”
“இல்லே! கெளரவமா விலகிக்கலாம்னு பார்க்கிறோம்! அதான் நாங்களே ரிஸிக்னேஷன் எழுதி எடுத்துட்டு வந்தோம்?”
“ரவீ! வாட் இஸ் ராங் வித் யூ மை பாய்! கமான் டெல் மீ த ரீஸன்…”
ரவீந்திரன், மல்லிகா இருவருமே தயங்கினர். மணியை அமுக்கி அட்டெண்டரை வரவழைத்து, மூணு கப் காபிக்கு ஆர்டர் செய்தார் சேர்மன்.“தா பாரு, காபி பிரமாதமா இருக்கணும். புதுசாக் கல்யாணம் ஆன பொண்ணு, மாப்பிள்ளையை உபசாரம் பண்ற மாதிரி காபி… ஆமா...” என்று வழக்கம் போல அட்டகாசமாக ஆர்டர் செய்தார்.
“இவன் கிடக்கிறான். இப்படித்தான் கல்லுளி மங்கன் மாதிரிப் பேசாமல் இருப்பான். நீ சொல்லும்மா! என்ன காரணத்தாலே ரெண்டு பேரும் இங்கே வேலையை விட றீங்க?” என்று சேர்மன் மல்லிகாவைக் கேட்டார். அவள் தயங்கித் தயங்கித் தன்னிடம் அளிக்கப்பட்ட ஷோ காஸ் நோட்டீஸை எடுத்து நீட்டினாள்.
அவர் வாங்கிப் படித்தார்.”எதனால் இப்படி நடந்ததும்மா?”
அவள் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். பாதியில் உணர்ச்சி வசப்பட்டுக் குரல் உடைந்து அழுகையாகிவிடுமோ என்ற நிலைக்கு அவள் வந்ததும், மீதத்தை அவன் தொடர்ந்து சொன்னான்.
சேர்மன் பொறுமையாகக் கேட்டார். காபி வந்தது. அவர்களைப் பருகச் சொல்லி உபசரித்தபடியே தாமும் பருகினார். சிறிதுநேர மெளனத்துக்குப்பின், “நீங்க சொல்றது நிஜமா இருந்தால் தப்பு எம்.டி.மேலேதான். லஞ்ச் இண்ட்டர்வெல்லே நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுப் பேசிட்டிருந்தா இவனுக்கென்ன வந்தது? இட் இஸ் நன் ஆஃப் ஹிஸ் பிஸினஸ்…” என்று உறுதியான குரலில் பதில் சொன்னார்.
தன் அருகே இருந்த ஃபோனை எடுத்து, “எம்.டி.க்குப் போடுப்பா” என்று ஆப்பரேட்டரை வேண்டினார் சேர்மன்.
லயனில் எம்.டி வந்திருக்க வேண்டும்.”சந்தர்! தமிழ்லே இங்கிதம்னு ஒரு வார்த்தை இருக்கே, அது உனக்குத் தெரியுமா?”
“- - - - -“
“நீ அவசியம் தெரிஞ்சுக்கணும்பா. ஒரு வேளை எது இங்கிதம்கிறதைத் தெரிஞ்சுக்கிற ஆசை உனக்கு இல்லைன்னாலும் எதெது இங்கிதக் குறைவுங்கிறதையாவது நீ அவசியமாகத் தெரிஞ்சுக்கிட்டாகணும்.”
“- - - - -“
“சிரிச்சுப் பேசற ரெண்டு பேரைப் பார்த்துப் பொறுக்க முடியாமே வயித்தெரிச்சல் படறதும், வயித்தெரிச்சல் பட்டுத் தவிக்கிற ரெண்டு பேரைப் பார்த்து சிரிக்கிறதும்தான் உலகத்திலேயே தலைசிறந்த இங்கிதக் குறைவான காரியங்கள்.”
“- - - - -“
“இதிலே முதல் ரக இங்கிதக் குறைவை உங்கிட்ட நான் அடிக்கடி பார்க்கிறேன். இன்னிக்குக் கூடமல்லிகா விஷயத்திலே அதே தப்பை நீ பண்ணியிருக்கே…”
“- - - - -“
“நோ...நோ... நான் ஒத்துக்க முடியாது. உன்னாலே ஒரு பிரமாதமான எதிர்காலமுள்ள இளம் கெமிக்கல் என்ஜினியரையும், படு ஸ்மார்ட்டான ஒரு ஸ்டெனோவையும், நான் இழக்க முடியாது. நீ ஒரு பத்து நிமிஷம் கழிச்சு இங்கே வந்து என்னைப் பாரு. நேரே பேசலாம்.”
சேர்மன் ஃபோனை வைத்தார். பின்பு அவர்கள் கொடுத்த கூட்டு ராஜிநாமாக் கடிதத்தையும், ஷோகாஸ் நோட்டீஸையும் அவர்கள் இருவர் முன்னிலையிலுமே கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டுச் சொன்னார்.
“இந்த ராஜிநாமாவை நான் ஏத்துக்கலே ரவி! உன்னையும், மல்லிகாவையும் இந்த இன்ஸ்டிடியூஷன் இழக்கத் தயாராயில்லே. தயவுசெய்து இந்த வயசானவனின் வார்த்தைக்கு மரியாதை குடுங்க, போய் நீங்க ரெண்டு பேரும் யாராவது ஒருத்தரோட ஸீட்லே சேர்ந்தாப்ல இருங்க. ப்ளீஸ்…”
அவர்கள் இருவருக்கும் அவர் ஏன் அப்படி வேண்டுகிறார் என்று புரியா விட்டாலும், அதை மறுக்கத் தோன்றவில்லை. இருவரும் திரும்பி வந்து ரவீந்திரனின் ஸீட்டில் எதிரும் புதிருமாக அமர்ந்தனர், காத்திருந்தனர்.
பத்து நிமிஷத்தில் எம்.டி. புறப்பட்டுச் சேர்மன் அறைக்குள் செல்வதை, இருந்த இடத்திலிருந்தே ரவீந்திரனும், மல்லிகாவும் காண முடிந்தது.
மாலை மணி நான்கு நாலரை, ஐந்து. என்று நேரம் வளர்ந்தது. ஆபீஸ் நேரம் முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போயாயிற்று. ரவீந்திரனும், மல்லிகாவும் மட்டும் தனியாகக் கொட்டக் கொட்ட உட்கார்ந்திருந்தனர். சேர்மன் அறைக்குள் போன எம்.டி. இன்னும் திரும்பவில்லை.
மாலை ஐந்தே கால் மணிக்குச் சேர்மனின் அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் எம்.டி. நேரே அம்பு போல அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து, “ஐயாம் சாரி! நீங்க ரெண்டு பேரும் பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிக்கணும். இங்கேயே கன்டின்யூ பண்ணணும்” என்றார். பிறகு தன் அறைக்குச் சென்றார்.
வீடு திரும்ப லிஃப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, “நம்ப சேர்மனோட பெரிய அஸெட் என்ன தெரியுமா?” என்று மல்லிகாவைக் கேட்டான் ரவீந்திரன். மல்லிகா ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
“நானே சொல்லிடட்டுமா?”
“சொல்லுங்களேன்…”
“அவரோட இந்த இங்கிதம்தான் அவர்கிட்ட இருக்கிற மிகப் பெரிய சொத்து.”
“சரி! அஸெட் என்னன்னு சொல்லியாச்சு. லயபிலிட்டி எதுன்னும் நீங்களே சொல்லிடுங்க.”
“அது உனக்கே தெரியும். லயபிலிட்டிதான் சற்று முன் நம்மிடம் தேடி வந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டதே!”
இதைக் கேட்டுமல்லிகா சிரித்தாள்.
(அமுதசுரபி, ஜனவரி, 1987)