நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/கேபினட் டெசிஷன்ஸ்

விக்கிமூலம் இலிருந்து

169. ‘கேபினட் டெசிஷன்ஸ்’[1]

லைமை செயலாளர் தண்டல் நாயகம் இ.ஆ.ப. கை கட்டி, வாய் பொத்தி, மெய் குழைந்து, முதுகு வணங்கி முதல்வர் முகஸ்துதிப் பிரியர் - மன்னிக்கவும் - டாக்டர் - தரணி காவலர் - முதல்வர் முகஸ்துதிப் பிரியரிடம் மறுபடியும் வினாவினார். பவ்யமாகத் தணிந்த குரலில்தான் வினாவினார்: “வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்குக் கேபினட் மீட்டிங் போடச் சொல்றீங்களே? அன்னிக்கு நீங்க மெளன விரதமாச்சே? எப்படி முடியும்?”

“அன்னிக்கே போட்டுடுங்க! பரவாயில்லே. நான் சமாளிச்சுப்பேன். நம்ம அமைச்சருங்க நான் ஜாடையில் சொன்னாலே புரிஞ்சுப்பாங்க. மீட்டிங் போட்டு ரொம்ப நாளாச்சி. கேபினட் அமைச்சருங்க யாருன்னு எனக்கே முகம் மறந்து கூடப் போச்சு. சந்திச்சு அத்தனை நாளாகுது.”

“மீட்டிங் முடிச்சப்புறம் பிரஸ்ஸுக்கு யார் ப்ரீஃப் பண்ணுவாங்க? சீஃப் செகரெட்டிரிங்கிற முறையிலே பாலிஸி மேட்டர்ஸ், கவர்மெண்ட் டெஸிஷன்ஸ், ஆக்ஷன் இது பற்றித்தான் நான் ப்ரீஃப் பண்ணலாம். உங்க உள் கட்சி விவகாரம் “புது மந்திரிகள் உண்டா? பதவி விலகல் இருக்குமா? புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுமா?”ங்கிற மாதிரிக் கேள்விக்கெல்லாம் எப்படி யார் பதில் சொல்வாங்க? நான் அதெல்லாம் சொல்றது நல்லாயிருக்காதே?”

“கேபினட்ல நம்பர் டூ யாரு? படு ஞாயிறு பம்மல் - பாவளவனார்தானே? அவர் பிரஸ்ஸுக்கு ஃப்ரீப் பண்ணிப்பாரு. என் ஜாடைக் குறிப்புக்கள் அவருக்குப் புரியும். சந்தேகம் வர்ர மாதிரி விவகாரங்களை நான் ஒரு துண்டுத்தாளிலே எழுதியே அவரிட்டக் காமிச்சிடுவேன்.”

“சரிங்க! அப்போ வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் கேபினட் மீட்டிங் மாண்புமிகு - முதல்வர் தலைமையில் நடக்கும்னு அமைச்சருங்களுக்கு விவரம் அனுப்பிடறேங்க.”

“செஞ்சுடுங்க.”

தண்டல் நாயகம் உடனே டாக்டர்-முதல்வரின் அறையிலிருந்து தம் அறைக்குத் திரும்பிக் காபினட் மீட்டிங் பற்றிய சுற்றறிக்கையை அனுப்ப ஆயத்தம் செய்தார்.

சட்டப்படி முதல்வர் மெளன விரதம் என்பதை சர்க்குலரில் டைப் செய்ய முடியாதாகையினால், ஒவ்வோர் அமைச்சராக ஃபோன் செய்து கூறினார்.

"அன்னிக்கு சி.எம்.மோட என்.எஸ்டே அதுனாலே நீங்கதான் அவரை ரொம்ப சிரமப்படுத்தாமே எல்லாம் குறிப்பறிஞ்சு நடந்துக்கணும்:

“அதென்னங்க என்.எஸ்?" “அதாவது நோ ஸ்பீச் அல்லது நான். ஸ்பீக்கிங் -எப்படி வேணா வச்சுக்கலாம்.” 'பேசாட்டி என்னங்க? அவர் தான்ங்க எங்க இதயதெய்வம். இறுதித் தெய்வம் - உறுதித் தெய்வம் - ஒரே தெய்வம் - உலகத் தெய்வம்.” என்று முடிக்காமல் சொற்பொழிவு போலத் தொடர்ந்த அமைச்சரை இடைமறித்து, “சார்! இது பப்ளிக் மீட்டிங் இல்லே. நீங்க சீஃப் செகாட்டரி கிட்டதான் இப்ப போன்ல பேசிக்கிட்டிருங்கீங்க” என்றார் தலைமைச் செயலாளர். ‘சாரி சார்! சி.எம். பேரை எடுத்தாலே பக்தி உணர்ச்சியிலே மெய்மறந்து பகுத்தறிவுக் கிளர்ச்சி பெற்று உணர்ச்சி வசப்பட்டுப் போயிடுது. அதான் இப்பிடி’ என்று அசடுவழிந்தார் அமைச்சர், த.செ. தொடர்ந்தார். “அதோட டாக்டர் - முதல்வர் விருப்பப்படி நீங்கதான் மீட்டிங் முடிஞ்சப்புறம் பிரஸ்ஸுக்கு எல்லாம் ப்ரீஃப் பண்ணனும்கிறாரு "அந்தத் தங்கத் தலைவனின் சங்கத் தமிழ் வாயினாலா அதைக் கூறினார்? என் பாக்கியமே பாக்கியம். அவர் தம் முகமண்டலத் திருக்குறிப்பை வைத்தே நான் யாவும் புரிந்து கொள்வேன்.”

சீ.செ.த. நாயகம் இ.ஆ.ப.வுக்கு அத்தனை மந்திரிகளிடமும் முதல்வரது மெளனவிரத நாளில் கேபினட் மீட்டிங் நடக்கப்போவதைச் சொல்லி முடிக்கக் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி ஆயிற்று. அதாவது முழுசாக 12 மணி நேரம் கழிந்துவிட்டது.

காரணம் ஒவ்வொரு காபினட் அமைச்சரும் - அந்தத் தகவலுக்கு நன்றி சொல்லி தரணி காவலர் - டாக்டர் முதல்வரின் சிறப்புக்களையும் அவருக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதையும் விவரித்து முடிக்க இருபது முதல் நாற்பதுவரை நிமிஷங்களை ஃபோனிலேயே எடுத்துக் கொண்டுவிட்டனர்.

மாண்புமிகு கூடுவிட்டுக் கூடுபாய்ந்தான் பட்டி ஆடுகாத்தான் என்றொரு அமைச்சர் - ட்ரைபல் வெல்ஃபேர் மந்திரி கேபினட் மீட்டிங் என்றதுமே “எந்தக் கேபினட்’ என்றார். - “என்னங்க இப்படிக் கேட்கிறீங்க” என்று த.செயலாளர் பதிலுக்கு உறுத்திக் கேட்டதும் “அதுக்கில்லே! நம்ம கேபினட்டா? மத்திய கேபினட்டான்னு சந்தேகம் வந்திருச்சு” என்றார்.

த.செ. அதிர்ச்சியடைந்தவராக, “மத்திய கேபினட்டுக்கு நீங்க எப்படிப் போக முடியும்?” என்று வினவினார்.

"ஏன் முடியாது? மத்தியில் ஆள்வோர் நம் சங்கத் தலைவர். சங்கத் தமிழ்க் காவலர் தரணி நாயகர் - உலக வள்ளல் தயவு இன்றி அங்கு ஆண்டிட இயலாது என்பதால்  சிறப்பு அழைப்பாக நம்மவரையும் அங்கே அழைத்திடலாமன்றோ?” என்று பதில் வந்தது. உடனே தலைமைச் செயலாளர் மயக்கம் போட்டு விழாமல் சமாளித்துக் கொண்டார். மாண்புமிகு காட்டினக் காப்புத்துறை (ட்ரைபல் வெல்ஃபேருக்கு அரசு மொழி பெயர்ப்பு) அமைச்சர் கூகூஆகாத்தான் தான் கடைசியாகத் தலைமைச் செயலாளர் போனில் பேசி முடித்த அமைச்சர், த.செ.க்கு வேர்த்து விறுவிறுத்துப் போயிற்று.

இதன் பின் ஸ்பெஷல் கூரியர் மூலம் எல்லா அமைச்சர் வீடுகளுக்கும் தகவல் அறிக்கையாக அனுப்பப்பட்டது. அன்று த.செ. தம் வீடு செல்லும்போது இரவு பதினோரு மணி.

ஒரு வழியாக வெள்ளிக்கிழமை விடிந்தது. காபினட் கூட்டத்துக்காக அமைச்சர்கள் வந்து விட்டார்கள். மணி பதினொன்றரை ஆகியும் தரணி காவலர் டாக்டர் மாண்புமிகு முதல்வர் வரவில்லை. முக்கியமான வேலையாக நித்யா ஸ்டுடியோவில் இருப்பதாகத் தகவல் வந்தது. விசாரித்ததில் குசல்ராஜ் நடித்த குடும்பத்து விபசாரி' என்ற படத்தை வீடியோவில் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது.

த.செ.மந்திரிகள் எல்லாரும் காத்திருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணியும் ஆகிவிட்டது. தரணி காவலர் - டாக்டர் - முதல்வர் வந்து சேர்ந்தார்.

தற்செயலாக அப்போது கேபினட் மீட்டிங் ஹாலில் ஒரு சுண்டெலி ஓடியது. உள்ளே நுழைந்த தரணி காவலர் கண்களில் அது பட்டதும் அவர் பாவளவனாரைப் பார்த்து அந்த எலியைச் சுட்டிக்காட்டி முகம் சுளித்தார். பாவளவனார் உடனே, அதைத் தமது தாளில் குறித்துக் கொண்டார்.

தசெஅஜெண்டாவை முதல்வரிடம் நீட்டினார்.

1. வறட்சி பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

2. உலக உப்பு விற்போர் சங்கத் தலைமை.

3.காபினட் ரிஷஃபில்

4. புதிய மாவட்டங்கள் புதிய பல்கலைக் கழகங்கள். .

இது மாதிரி இருந்தன.அவை, வாரியங்களை ஏற்படுத்தலாம். என்று மொட்டையாக ஒரு துண்டுத் தாளில் எழுதிப் படுஞாயிறிடம் நீட்டினார் தரணிகாவலர்.

முதல் அஜெண்டாவுக்கு இதுதான் பதில் போலும் என்று நினைத்துக் கொண்டார்கள். - அடுத்து மாண்புமிகு முதல்வர் பெரியவர் க.பொ.சி.யைப் பயன்படுத்தவும் என்று மற்றொருத்துண்டுத்தாளில் எடுத்து எழுதி நீட்டினார். மூன்றாவதாக எதுவும் எழுதாமல் ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டினார் தரணிகாவலர் நாலாவதாக நா.பா. Il – 38 மறுபடி ஒரு துண்டுத்தாளில் 161 - என்று எழுதிக் காட்டினார். 1330 என்றும் குறித்துக் கொடுத்தார்.

அதற்கு அப்புறம் புறப்பட்டுப் போய் விட்டார். வீடியோவில் மீதிப் படத்தையும் பார்க்கப் போக வேண்டியிருந்தது அவருக்கு.

அங்கிருந்து அவரை அழைத்துச் செல்வதற்குச் செவ்வாய் மண்டலத் தரணி காவலர் இரசிகர் மன்றத் தலைவர் விசிறிவித்தகனும் சந்திர மண்டலத் தரணி காவலர் மன்றத் தலைவர் ஜெயவந்தனாவும் காத்திருந்து அழைத்துச் சென்றனர்.

பகல் சாப்பாட்டுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக அமைச்சர் படுஞாயிறு பாவளவனார் கூறினார். அந்த வேளைக்குள் முதல்வர் டாக்டர் தரணி காவலரின் ஜாடைகளையும், சமிக்ஞைகளையும் அர்த்தப்படுத்திக் கொண்டு பிரஸ் பிரீஃபிங்கிற்குத் தான் தயாராகிவிடலாம் என்பது அவருடைய உத்தேசமாயிருந்தது. முதலில் தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டால் அப்புறம் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம் என்பதும் அவரது திட்டமாயிருந்தது இப்போது.

மாண்புமிகு டாக்டர் முதல்வர் தரணிகாவலர் செய்த ஜாடைகளையும், அனுப்பிய சமிக்ஞைகளையும், எழுதிக்காட்டிய குறிப்புக்களையும் கொண்டு பலவற்றைப் புரிந்து விளங்கிக் கொண்டு அமைச்சர் படுஞாயிறு பாவளவனார் பிற்பகலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

சாயங்கால ஹெட்லைனுக்கு ஏதாவது ‘ஹாட் நியூஸ்’ கிடைக்குமா என்றே காத்துக் கிடந்த பத்திரிகை நிருபர்கள் எல்லாருடைய ஏகோபித்த முதல் கேள்வியும் ஒரே தினுசாக இருந்தது.

"மந்திரிசபை மாற்றம் உண்டா”படுஞாயிறு இந்த முதல் கேள்வியிலேயே எரிச்சல் அடைந்தார். ஆனாலும் நிருபர்கள் விட்டுவிடவில்லை. அமைச்சரும் மசியவில்லை.

“உங்கள் கேள்விக்கு இறுதியில் வரலாம். தலைவர் - தரணிகாவலர் - சொன்ன முறைப்படி முதலில் எது, இரண்டாவது என்ன, மூன்றாவது என்ன என்று வரிசைப்படுத்தி வைத்துள்ளேன். அவற்றை நான் கூறியபடி குறித்துக்கொண்டு பின்பு உங்கள் கேள்விகளைக் கேட்டால் கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் காக்கப்படும் என நான் நம்ப முடியும்.”

“சரி” என்று நிருபர்கள் சம்மதித்துத் தொலைத்தார்கள். மாண்புமிகு படுஞாயிறு தொடங்கினார் :

“தரணி காவலர் மந்திரி சபைக் கூட்டம் நடக்கிற இடத்தில் நுழைந்ததுமே ஒரு சுண்டெலி குறுக்காக ஓடியதைக் கண்டு முகம் சுளித்தார்.

"விரைவில் அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுத்து, எலி ஒழிப்பு வாரியம்; பூனை வளர்ப்புவாரியம் ஆகிய இருபெரும் வாரியங்களைத்தலா நாலாயிரம் கோடி ரூபாய் செலவில் தரணி காவலர் அரசு தொடங்கும் என அறிவிக்கிறேன்.” எலிக்கும், பூனைக்கும் நாலாயிரம் கோடியா? எனப் பிரமித்து வாயைப் பிளந்தார் ஒரு நிருபர்.

இன்னொரு நிருபர் கிண்டலாக, “செகரெட்டேரியட்டில் காபினட் மீ ட்டிங் நடக்கிற அறையில் ஓடிய எலியைப் பார்த்து முதல்வருக்கு இந்த ஐடியா உதித்த காரணத்தால், இதில் பெரும் பகுதி செகரெட்டேரியட்டில் உள்ள திருட்டு எலிகளை ஒழிக்கவே பயன்படுத்தப்பெறும் என்று பொருள் கொள்ளலாமா?” என்று கேட்டார்.

"செகரெட்டேரியட்டில் எலிகளை விடப் பெருச்சாளிகளே அதிகம் இருப்பதால், முதல்வர், தனியாக இன்னொரு சிறப்பு வாரியமாகப் ‘பெருச்சாளி ஒழிப்பு வாரியம்’ ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாமா?” எனக் குறுக்கே புகுந்தார் மற்றொரு எதிர்க்கட்சிப் பத்திரிகைக்காரர்.

படுஞாயிறு பத்திரிகையாளர்களை அதிகம் விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே மேலும் கொதிப்படையாமல் - நிதானமாக மறுமொழி கூறினார். “அவசியம் ஏற்பட்டால், மாண்புமிகு டாக்டர், முதல்வர், தரணி காவலரின் அரசு அப்படிச் சில சிறப்பு வாரியங்களை ஏற்படுத்தவும் தயங்காது, மயங்காது, உறங்காது, துவளாது, தொய்யாது என்பதைத் தாழ்மையாக வேண்டி விரும்பித் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“எலிகளை ஒழிப்பதற்காகப் பூனைகளை வளர்க்கப் போய் பூனைகளின் தொல்லை அதிகமாகி விட்டால், அரசு அந்த நிலைமையை எதிர் கொள்ள எவ்வாறு செயல்படும் என்பதை அறியலாமா?”

“அப்படி ஒரு நிலைமை ஏற்படுமானால், மாண்புமிகு, டாக்டர் தரணி காவலரின் அரசு உடனே பூனைகளை ஒழிக்க ஒரு நாய் வளர்ப்பு வாரியம் தொடங்கத் தயங்காது.”

“தரணி காவலரின் அரசு எலிகள், பூனைகள் தவிர மக்களை வளர்க்க ஏதாவது செய்யுமா?”

“நாங்கள் வளர்வதிலிருந்தே மக்கள் வளர்வது தெரியவில்லையா?”

“எலி ஒழிப்பு வாரியத்தின் தலைவர் பதவியையாவது, கலம்பகச் செல்வர் க.பொ.சிக்குக் கொடுப்பார்களா என்பதை அறியலாமா?”

“பூனை வளர்ப்பு வாரியத்தின் தலைவர் யார்?”

“இரண்டு வாரியங்களுக்குமான தலைவர் பதவிகளை உரிய வேளையில் ஊரறிய, உலகறிய, நாடறிய - நல்லவர்கள் அறியத் தரணி காவலர் அவர்கள் அறிவிப்பார் என்பதைப் பணிவோடு, கனிவோடு, செறிவோடு இறுதியாக அறுதியாக, உறுதியாக, மறதியாக அறிவோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.”

“நீண்ட காலமாகப் பதவியின்றித் தவிக்கும் கலம்பகச் செல்வர்…”

“மாண்புமிகுடாக்டர் முதல்வர், தரணி காவலர் அவர்கள் விருப்பப்படி க.பொ.சி. அவர்களின் நன்றி விசுவாசங்களைப் பாராட்டும் முகமாக, அவரை நன்றியின் அடையாளமாகத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் கருதுகின்ற உப்பு- அதாவது உலக உப்பு விற்போர் சங்கத்தின் தலைவராகப் போடும் எண்ணம் மாண்புமிகு முதல்வருக்கு இருப்பதாகத் தெரிய வருகிறது.”

“நன்றியின் சின்னமாகக் கருதப்படும் நாய் வளர்ப்பு வாரியத்திற்குத் தலைவராகவே க.பொ.சி. அவர்களைக் கடமையாற்றச் செய்யலாமே?”

“தரணி காவலர் அவர்கள் விரும்புகிற பட்சத்தில இரு பெரும் பதவிகளையுமே அவர் கலம்பகச் செல்வருக்கு அளிக்கத் தயங்க மாட்டார் என்று சொல்லுவேன்.”

“உங்கள் கட்சி இளைஞர்கள் பலர் பதவிகள் இன்றிப் பரிதவித்திருக்கையில், 97 வயது க.பொ.சிக்குத் திரும்பத் திரும்பப் பதவிகளை அளிப்பது கட்சி மட்டத்தில் கசப்பை ஏற்படுத்தாதா? வெறுப்பை வளர்க்காதா?”

'கசப்பு ஒழிப்பு வாரியம் என்ற ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மாண்புமிகு முதல்வர் டாக்டர் தரணி காவலர் அதைச் சமாளிக்க முடியும் என்பதில் யாரும் ஐயப்பட இடமில்லை. ஐயப்பட்டால் அவன் நரகத்துக்குப் போவான் என நம்பும் பகுத்தறிவாளர்களிலே நான் முதலாமவனாக இருப்பேன்.”

“மந்திரி சபை மாற்றம் பற்றி…?”

“முதல்வர் டாக்டர் மாண்புமிகு தரணி காவலர் பரணி பாடும் தம் வலக்கரத்தைத் தூக்கி ஐந்து விரல்களையும் காட்டி இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மந்திரிசபை மாற்றம் எதுவும் இல்லை என்பதை அழுத்தமாகத் தெரிவித்தார்.”

“அது எப்படி? ஒருவேளை ஊழல் புரிந்த ஐந்து மந்திரிகளைக் கட்சியிலும், ஆட்சியிலுமிருந்து தூக்கி எறிவேன் என்ற அர்த்தத்தில் கூட அவர் ஐந்து விரல்களைக் காட்டியிருக்கலாம்” என்று இடைமறித்த ஒரு குறும்புக்கார நிருபர் ஆரம்பித்தார்.

“அதெல்லாம் இல்லை. இன்னும் ஐந்து நிமிஷம்தான் என்னால் இந்தக் கூட்டத்தில் இருக்க முடியும். அதன்பின் ‘வீடியோ’வில் ‘தேடிய குமரி’ படம் பார்க்கப் போக வேண்டும் என்ற அர்த்தத்திலும் கூறி இருக்க முடியும்” என்றார் எதிர்க்கட்சிப் பத்திரிகை நிருபர்.

இதைக் கேட்ட உடனே மாண்புமிகு படுஞாயிறுக்கு சினம் மூண்டு விட்டது.

“எம் தங்கத்தலைவன் - சங்கத் தமிழ் மகன் - சிங்கக் குருளைகளின் சீரிய மன்னன் - வீரிய வேந்தன் ஆரியப்படை கடந்தோன் எதைக் கூறினாலும், எப்படிக் கூறினாலும் அதை ஏற்க நான் சித்தமாய் இருப்பேன் என்பதையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். பதவி நீக்கப்படுகிற ஐந்து பேரில் முதல் நபராக நானே இருந்தாலும், தலை வணங்கித் தாள் பணிந்து, அதனைக் கனிவோடு பாதங்களில் விழுந்து ஏற்பேன் என்பதைத் துணிவோடு உங்கள் முன்னே தெரிவித்துக் கொள்கிறேன்.”

அந்த நிருபரின் கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்ட அமைச்சர் ‘ஊழல் மந்திரிகள் ஐவர்’ என்று சொன்னதுமே, அவர் தன்னைத்தான் குறிப்பிடுவதாக எரிச்சலடைந்து குரலை உயர்த்தினார். பதவி நீக்கம் என்றதுமே அமைச்சரின் குரல் ஓங்கி உயர்ந்தது. அதே சமயம் பேசிய சொற்களில் ஒரு வகைச் செயற்கைப் பணிவும் காட்டப்பட்டது.

“இந்தப் பதவி அந்தத் தலைவன் தயவிலே கிடைத்த பிச்சை. கொடுத்ததெல்லாம் கொடுத்தவனுக்கு எடுக்க விரும்பியதை, என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளத் தாராளமாக உரிமை உண்டு. தரணி காவலர் பரணி பாடும் அணியிலே ஒரு கடைக்கோடித் தொண்டனாக வாழ்ந்து என் மீதி நாட்களைச் செலவிடுவேன் என்று குன்றாத, குலையாத உலையாத - அசையாத - அரளாத ஆடாத, ஓடாத - விசுவாசத்துடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உறுதியுடன் கூறிக் கொள்ள உரிமை பெறுகிறேன் என்பதை…”

மந்திரியை அடுத்த வாக்கியத்துக்கு நகர்த்த விரும்பிய ஆங்கிலப் பத்திரிகைநிருபர் ஒருவர் புல்டோஸர் போல் குறுக்கே பாய்ந்து ‘கபால்’ என்று அவர் சொற்களை அமுக்கினார். “புதிய பல்கலைக் கழகங்கள் - புதிய மாவட்டங்கள், ஏதேனும் அறிவிக்கப்படுமா?”

இக்கேள்வி அமைச்சரை நிதானமான நிலைக்குக் கொண்டு வந்தது, ‘மந்திரி சபை மாற்றம்-ஊழல் மந்திரிகள் ஐவர் நீக்கம்’ - என்பதை எல்லாம் விட்டு ‘சப்ஜெக்ட்’ வேறு திசைக்குத் திரும்பியதே, அந்த வேளையில் அமைச்சருக்கு ஆறுதலாக இருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தார். பி.எ. ஒரு டம்ளரில் சுடச்சுட அமைச்சருக்கும் - நிருபர்களுக்கும் காபி வழங்கினார். எல்லாருமே காபி குடித்து முடிக்கப் பதினைந்து நிமிஷங்கள் ஆயின. மறுபடி மாண்புமிகு அமைச்சர் மூடில் வந்து ‘செட்டில்’ ஆனார். “புதிய மாவட்டம் நிச்சயமாக உண்டு. 161 புதிய மாவட்டங்களை ஏற்படுத்திப் பல மறந்துபோன பெயர்களைச் சூட்டி மகிழ்விக்கும் மாபெரும் புரட்சியைத் தரணி காவலர் டாக்டர் முதல்வர் மாண்புமிகு தங்கத் தலைவர் அரசு சாதிக்க இருக்கிறது.”

“ஐயையோ! 161 மாவட்டமா? திடீர்னு கலெக்டர்ப் பஞ்சம் வந்துடுமே? நூற்றுக்குமேலே கலெக்டர்கள் கிடைப்பாங்களா?”

“மாறாக - வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் நடுவண் அரசின் புதிய எழுபதம்சத் திட்டத்தில், அறுபதாவது திட்டத்தை எங்கள் தரணி காவலர் அரசு இப்படிப் புதுப் புது மாவட்டங்களை ஏற்படுத்தித் தருவதன் மூலம் நிறைவேற்றுவது நிருபருக்குப் புரிய வேண்டும். எம் அரசு பல கலெக்டர்களுக்கு வேலை தரும் என்பதே உண்மை. மேலும் மறைந்த மேதைகள், இறந்த தலைவர்கள் - மறந்த பெரியோர்கள் - சிறந்த சான்றோர்கள் பெயர்களைச் சூட்ட வாய்ப்பளிக்க வேண்டாமா? அத்தகு நல்லெண்ணத்தை உட்கொண்டே எம் தங்கத் தலைவன் - இத்தகு திட்டத்தை இதயத்தில் கொண்டுள்ளதை அறிய வேண்டும்.”

“ஒவ்வொரு பட்டி, தொட்டியும் ஒரு மாவட்டம் ஆயிடுங்களே...?”

“இதற்கு முந்திய இருட்டடிப்பு ஆட்சியிலே கஞ்சத்தனமாக ஏழே ஏழு மாவட்டங்கள்தான் இருந்தன. எம் தலைவர், தங்கத் தலைவர் தரணி காவலர் - புரளியை வென்ற புரட்சி மன்னன் ஆட்சிக் கட்டிலில் (கட்டில் என்பது இங்கு படுக்கையைக் குறிக்காது) அமர்ந்த பின்பே 154 புதிய மாவட்டங்கள் உருவாகவும் வழி பிறந்தது.”

“புதிய மாவட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதில் கலம்பகச் செல்வர் நாமம் பரிசீலிக்கப்படுகிறதா?”

“மாண்புமிகு டாக்டர் முதல்வர் தரணி காவலர் கருத்துப்படி காலஞ்சென்ற பெரியோர் தவிர வாழும் பெரியோர் யாரையும் மாவட்டத்தின் பெயர் ஆக்குவதில்லை எனப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”

“காலஞ்சென்ற என்ற தொடருக்கு வயது முதிர்ந்த என்பதாகவும் ஒரு பொருள் கொள்ள வழி இருக்கிறதாக அரசு வார்த்தை வார்ப்படப் பட்டறை இயக்க-இயக்குநர் டாக்டர் கவ்வை கஜராஜன் ஒரு சொற்பொழிவில் கூறியுள்ளபடி பார்த்தால் கலம்பகச் செல்வர் க.பொ.சி.யின் பெயரையும் மாவட்டத்துக்குச் சூட்ட இடம் உண்டு எனத் தெரிகிறதே...?”

“சொற்பொழிவில் சொல்வது எல்லாம் அதிகாரப்பூர்வ அரசு ஆணை ஆகிவிடாது.”

“மேற்படி வார்த்தை வார்ப்படப் பட்டறை இயக்க இயக்குநர் பட்டிமன்றம் – பாட்டி மன்றம் - கவியரங்கம் - கருத்தரங்கம் – வழக்காடு மன்றம் ஆகிய மேடை களிலேயே முழு நேரமும் கழிந்து விடுவதால் அரசு ஆணையாக எதை அறிவிக்கிறார், சொற்பொழிவாக எதைப் பேசுகிறார் என்பதை எல்லாம் பிரித்துப் பார்க்க முடியவில்லையே?”

“யார் எதைச் சொன்னாலும் ‘காலஞ் சென்ற’ என்ற தொடருக்குத் தரணி காவலர் மாண்புமிகு டாக்டர் மெளன விரதம் முடித்த பின் என்ன விளக்கம் சொல்கிறாரோ, அதுவே சரியானதாயிருக்கும் என்பதைப் பணிவுடன் கூறிக் கொள்ள விரும்பிச் சொல்லும் அதே வேளையில்…”

“சரிங்க! இந்தப் புதிய பல்கலைக் கழகங்கள் விஷயம்…?”

“தாய் மேல் ஆணையாகத் தமிழ் மேல் ஆணையாகத் திருக்குறளை நினைவூட்டும் வகையில் ஆயிரத்து முந்நூற்று முப்பது புதிய பல்கலைக் கழகங்களை நடப்பு ஆண்டில் புதிதாகத் தொடங்க இருக்கிறார் தரணி காவலர். இது மக்களுக்குப் பொங்கல் பரிசாக அமையும்.”

“என்னங்க இது? புதிய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை புதிய மாவட்டங்களைத் துரக்கிச் சாப்பிட்டுடும் போலிருக்கே?”

“ஆம்! புதிய பல்கலைக்கழகங்கள் என்று நாங்கள் ஆரம்பித்ததுமே, தரணி காவலர் ஒண்ணே முக்கால் விரலை மடக்கிக் காட்டி, அதாவது ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் - குறிப்பாக ஒண்ணே முக்கால் அடியில் பாட்டுப் பாடிய குறளில் உள்ளது போல் 1330 பல்கலைக் கழகங்கள் என்பதைப் புலப்படுத்தினார். தரணி காவலர் மாண்புமிகு டாக்டரின் தமிழ்ப் புலமையைக் குறைத்து மதிப்பிடும் குள்ளநரிகள் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பாவது தங்கள் குறுமதியினைத் தவிர்த்திடுதல் நலம் பயக்கும் என வேண்டி விரும்பி மன்றாடி…”

“மானாவாரியாகப் பல்கலைக் கழகங்கள் உண்டாக்கப்படுவதன் நோக்கம்...?”

“புதிய மாவட்டங்கள், புதிய பல்கலைக் கழங்கள் அனைத்துமே வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் நடுவண் அரசின்...”

“புதிய பல்கலைக் கழகங்களில் ஒன்றிற்காவது கலம்பகச் செல்வரின் பெயர் சூட்டப்படுமா?”

“ஆயிரத்து முந்நூற்று முப்பது பல்கலைக் கழகங்களுக்குப் பெயரிடுகையில், கொடுத்துச் சிவந்த எம் தலைவனின் பொற்கரம் - ஒரு பெயரை எப்படி எங்கு சூட்ட முடியும் - சூட்ட வேண்டும் என்பதை நன்கு அறியும்.”

“ஒரு ஜில்லாவுக்கு அஞ்சாறு யூனிவர்ஸிடி வீதம் போட்டாலும் மிச்சமிருக்கும் போலிருக்கே சார்!”

“அப்படி ஒரு பற்றாக்குறைப் பிரச்னை எழுமானால், தங்கத் தலைவர் தரணி காவலரின் அரசு அதை எப்படிச் சமாளிப்பது என்பதை அறிந்தே இருக்கிறது. மாவட்டங்களின் எண்ணிக்கையை விடப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறதே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையைப் போல் மாவட்டங்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக உயர்த்த இந்த அரசு ஒரு சிறிதும் தயங்காது என்பதை இந்தச் சிக்கலான நேரத்தில் தன்மானத் தலைவர் சன்மானமாகத் தந்த துணிவின் பேரால் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

“பல்கலைக்கழகத்திற்குப் பெயராக சூட்டாவிடிலும், க.பொ.சி.யை ஒரு துணை வேந்தராகவாவது நியமிக்க அரசு முன் வருமா?”

“முட்டைக் கானல் மலையில் அரசு தொடங்க இருக்கும் ‘தள்ளாடும் முதியோர்களுக்கான தண்டமிழ்ப் பல்கலைக் கழக’த்திற்குக் கலம்பகச் செல்வரைத் துணைவேந்தராக நியமிக்கத் தரணி காவலர் அரசு யோசித்து வருவதை இங்கு நான் பணிவுடன் சொல்லிவிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

மந்திரியாகப் பிரஸ் ப்ரீஃபிங்கை முடித்து விடை கொடுக்க மாட்டார் என்பது போல் தோன்றவே, நிருபர்கள் தாங்களே ஒவ்வொருவராக மெல்ல மெல்லக் கழற்றிக் கொள்ளத் தலைப்பட்டார்கள்.

அன்றைய மாலைப் பத்திரிகைகளிலும், மறுநாள் காலைத் தினசரிகளிலும் மந்திரிசபை முடிவுகள் பற்றி ஒரே ‘பிளாஷ்’ மயம்.

- புதிதாக 1330 பல்கலைக்கழகங்கள்-161 புதிய மாவட்டங்கள் –

தள்ளாடும் பல்கலைக்கழகத் தலைவர் பதவி கலம்பகச் செல்வருக்கு – ‘எலிகளை ஒழிக்கப் புது வாரியம்’ ‘கசப்பை ஒழிக்க இனிப்பு வாரியம்’ என்று தலைப்புக்கள் தடபுடல் பட்டன. கவர்னர் பத்திரிகைகளைப் படித்து விட்டு அதிர்ச்சியடைந்தார். ‘மத்திய அரசுக்கு ரிப்போர்ட் பறந்தது. எந்த வாரியம் வேண்டுமானால் வைக்கட்டும் - நமக்குச் சலாம் போடுகிறவரை சும்மா இருப்போம்’ என நடுவண் அரசு கண்டு கொள்ளவில்லை. பேசாமல் சிரித்து விட்டுச் சும்மா இருந்து விட்டனர்.

மறுநாள் சனிக்கிழமை முதல்வர் தரணி காவலர் மாண்புமிகு டாக்டரின் மெளன விரதம் முடிந்ததும், சில நிருபர்கள் அவரது கிருஷ்ணாவரம் தோட்டத்திற்குச் சென்று அவரை அரும்பாடுபட்டு முயன்று சந்தித்தனர். காலை எட்டு மணிக்கு அங்கே போன நிருபர்கள் மாலை இரண்டரை மணி வரை காத்திருந்து இரண்டே முக்கால் மணிக்கு மாண்புமிகு தரணி காவலரைச் சந்தித்தனர்.

‘கிஸ்கோ-காந்தி’ என்கிற பாவாடை தாவாணி அணிந்த பருவத்துக் கவர்ச்சிக் குழந்தையுடன் தீவிரமாகக் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த தரணி காவலர் அவசரமாக அதை ஒத்தி வைத்து விட்டு வந்து, நிருபர்களைச் சந்தித்தார்.

“கேபினட் டெசிஷன்ஸ் எல்லாம் ரொம்ப டிராஸ்டிக்காக இருக்கே/..?”

“கேபினட்டா? அப்பிடி மீட்டிங் எதுவுமே நடக்கலீங்களே?”

நிருபர்கள் ஒரேயடியாக ‘ஷாக்’ அடைந்து,

“அமைச்சர் படுஞாயிறு பாவளவனார்…”

“அதெல்லாம் பெரிசா ஒண்ணும் பொருட்படுத்தாதீங்க. கொஞ்ச நாளா அவரு ‘மெண்டல்’ ஆயிட்டாரு.”

“அப்பிடியே போட்டுக்கலாங்களா?”

“முதல்வர் வருத்தம்னும் சேர்த்துப் போட்டுக்குங்க. விரைவில் படு ஞாயிறு மூளைச் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவார். முதல்வர் அதற்கான ஏற்பாடுகளில் முனைந்துள்ளார்னும் போட்டுக்குங்க.”

அடுத்தடுத்து இரண்டு மாலை வேளைகளில் ‘ப்ளாஷ்’ கிடைத்ததில் நிருபர்களுக்கு ஒரே குஷி,

“அதிர்ச்சி தரும் செய்தி. கேபினட் கூட்டமே நடக்கவில்லை. முதல்வர் தகவல். அமைச்சர் படுஞாயிறு மூளைச் சிகிச்சைக்காக அரசு செலவில் அமெரிக்கா செல்கிறார்” என்று மாலைத் தினசரிகள் தடபுடல் பட்டன. ஒரே ஒரு நிருபர் மட்டும் இதுபற்றிப் படுஞாயிறுவின் ரியாக்‌ஷன் என்ன என்று அறிவதற்காக அவருக்கு ஃபோன் செய்தார். முதல்வர் கூறிய கேபினட் கூட்டமே நடக்கவில்லை என்பது பற்றி அவரது ரியாக்‌ஷனைக் கேட்டார்.

“டாக்டர் முதல்வர் மாண்புமிகு தரணி காவலர் எது புகன்றாலும், அதுதான் உண்மையாக இருக்கும் என்பதைப் பணிவுடனும், பவ்யத்துடனும், கண்ணியத்துடனும், கடமையுடனும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர்தாங்க என் இதய தெய்வம், தன்மானத் தந்தையின் நாத்திக இயக்கத்திலே வளர்ந்து, உரமேறி இதயதெய்வத்தின் அருளிலே வழிபட்டுக் கிளர்த்து. அந்தத் தங்கத் தலைவனின் பொன்னார் திருவடிகளே சரணமென்று புகலடைந்து விழுந்து கிடக்கும் இந்த ஏழைத் திருத் தொண்டனின் எளிய சொற்கள் என்னவென்றால் அவர் புகல்வதே மெய். அவரே எங்கள் இதய தெய்வம் இறுதித் தெய்வம் - உறுதித் தெய்வம் - ஒரே தெய்வம் - உலகத் தெய்வம் - ஒப்பற்ற தெய்வம்…”

- உரையாடலை அமைச்சர் இன்னும் முடிக்கவில்லை. ஃபோனில் அவரைக் கூப்பிட்டிருந்த நிருபர் அலுப்படைந்து போய் ‘கட்’ செய்து விட்டார். இந்த விநாடி வரை மாண்புமிகு முதல்வர் டாக்டர் தரணி காவலர் அடுத்துக் கூறிய படுஞாயிறு பற்றிய உண்மையில் சந்தேகமிருந்தாலும், இப்போது அந்தச் சந்தேகம் இந்த விநாடி தீர்ந்து விட்டாற் போலிருந்தது. படுஞாயிற்றின் மூளை பற்றி நிருபருக்கே சந்தேகமாகி விட்டிருந்தது.

மாண்புமிகு டாக்டர் முதல்வர் தரணி காவலர் கூறியபடி படுஞாயிறு திச்சயமாக ‘மெண்டல்’ ஆகி விட்டதாகவே நிருபருக்குத் தோன்றியது இப்போது.

மறுநாள் கவர்னரும், சீஃப்செகரெட்டரியும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“என்னங்க ஒரே குழப்பமா இருக்கு? யார் மெண்டல்? யார் தெளிவா இருக்காங்கன்னே புரியலியே!”

“உஷ்! ஒண்ணும் மூச்சு விடாதீங்க! நமக்கு எதுக்கு வீண் வம்பு? ஏதாவது பேசினோம்னா நம்மையும் ‘மெண்டல்’னு சொல்லிடப்போறாங்க?”

இந்தப் பயம் வந்தவுடன் பேசாமல் இருவருமே அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டு, அவரவர்களுடைய வீடியோவில் சினிமாப் பார்த்துப் பொழுது போக்கச் சென்றார்கள்.

(தீபம், தீபாவளி மலர், 1987)
  1. இது, கடல் கொண்ட லெமூரியாவில் இருந்த ஒரு தமிழ் மந்திரி சபை பற்றிய கற்பனை.