நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/சமர்ப்பணம்
170. சமர்ப்பணம்
கவிஞர் பிரேமதாசன் ரொம்பவும் ‘சென்ஸிடிவ்’, ‘டச்சி’, ‘மூடி மேன்’ - என்றெல்லாம் பல விதமாக அவரைப் பற்றி அபிப்ராயங்கள். அன்பிற்காகவும், பிரியத்திற்காகவும் எதையும் செய்யக் கூடியவர் என்றும், அவரை நன்றாக அறிந்தவர்கள் கூறினார்கள். வேறு சிலர் ‘முசுடு’ என்றனர். காலத்தின் கண்ணாடியாகவும் புது யுகத்து இலக்கியப் பிரதிநிதியாகவும் விளங்கிய பிரேமதாசன் நாட்டு மக்களிடையே புகழ், பிராபல்யம், மரியாதை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருந்தார். அவரோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளப் பலர் தவித்தார்கள். ஓர் ஆட்டோகிராப் வாங்க மணிக் கணக்கில் காத்துக் கிடந்தார்கள். நேரில் கண்டு இரண்டு வார்த்தை பேசப் பலர் ஏங்கினார்கள்.
அந்தக் கோடையில் ஒரு பெரிய காவியம் எழுதுவதற்காகப் பிரேமதாசன் கூனூரில் ஒரு மாசம் போய்த் தங்கப் போவதாகத் தகவல் பரவியது. பத்திரிகைகளிலும் செய்தி வநதது.
அவ்வப்போது பிரேமதாசன் திரைப்படங்களுக்கும் பாடல்கள் இயற்றி வந்ததால், இந்தக் கூனூர் டிரிப் பற்றிய சேதி சினிமா வட்டாரத்திலும் கிசுகிசுவாகப் பரவியது. வியாபாரம், திரைப்படத் தயாரிப்பு, தியேட்டர்கள், எஸ்டேட், தொழில், கனரக இண்டஸ்ட்ரிஸ், மணி லெண்டிங் ஆகிய அனைத்திலும் ஈடுபட்டிருந்த ‘மிட்டாபுரம் ஃபேமிலி’ என்ற பணக்காரக் குடும்பம் கவிஞர் பிரேமதாசன் கூனூர் செல்லும் திட்டத்தைக் கேள்விப்பட்டுத் தங்கள் எஸ்டேட் பங்களாவிலேயே அவர் தங்கி எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டது. மிட்டாபுரம் குடும்பத்திற்கு விருந்தோம்பலிலும், உபசரிப்பதிலும் அப்படி ஒரு வெறி. யாரை உபசரிப்பது, எதற்காக உபசரிப்பது என்பதில் கூட அக்கறை இருந்தது என்று சொல்லி விட முடியாது. உபசரிக்க வேண்டும், பேர் வாங்க வேண்டும், அவ்வளவுதான்.
நகருக்கு வரும் கிரிக்கெட் வீரர் முதல், கிருமி நாசினிகளைப் பற்றிய நிபுணர் வரை, நாட்டியக் கலை மணி முதல் நாதஸ்வர வித்துவான் வரை யாரையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. ‘பப்ளிக் ரிலேஷன்ஸுக்காக’ இதைப் பிரமாதமாகச் செய்து வந்தார்கள் அந்தக் குடும்பத்தினர். நாலு பேர் தங்களைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டும் என்பதே அவர்கள் ஆசை.
எங்கோ லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலிருந்து வரும், வாயில் பெயர் நுழையாத ஒரு குத்துச் சண்டை வீரரானாலும், ஜிம்பாப்வேயிலிருந்து வரும் ஒரு கறுப்புப் பாடகரானாலும், மிட்டாபுரம் ‘கெஸ்ட் ஹவுஸில்’ தான் பார்க்கலாம்.தங்கள் விருந்தினர் ஊர் சுற்றிப் பார்க்க ஒரு ஏ.சி. செய்த பென்ஸ் கார், அவருக்குப் பிடித்த சமையல் என்றும் ஏற்பாடு செய்து விடுவார்கள். தங்கள் விருந்தினரைப் பார்க்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் கெஸ்ட் ஹவுசுக்குத் தேடி வரும் கூட்டமும், அவர் மிட்டாபுரம் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் வரும் ஒரு வரி அரை வரி நியூஸும், “மிட்டாபுரம், மிட்டாபுரம்தான் ஐயா! பாரி வள்ளல் மாதிரி யார் வந்தாலும் உபசரிக்கிறாங்க!” என்று ஜனங்கள் புகழும் பாமரப் புகழ்ச்சியுமே அவர்களுக்குப் போதுமானவை. வேறெதுவும் வேண்டாம்.
தங்களால் எந்தெந்த ஊர்களில் விருந்தினர்களை உபசரிக்க முடியுமோ, அந்தந்த ஊர்களில் இப்படி விருந்தினர்களை வேறு யாரும் போட்டி வள்ளல்கள் கொத்திக் கொண்டு போய் விடாமல் தடுத்துத் தங்களிடமே தங்க வைத்துக் கொள்வதிலும் மிட்டாபுரம் குடும்பத்தார் நிபுணத்துவமே பெற்றிருந்தார்கள். பழைய நாளில் ஜமீன்தாராக இருந்த அந்தக் குடும்பத்தின் முன்னோர், தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் தர்ம சத்திரங்களும், கட்டளைகளும் நடத்தியது போல், இப்போது கெஸ்ட் ஹவுசுகளை வைத்து உபசரித்து வந்தார்கள்.
அதற்காகக் கண்ட கண்ட குப்பன், சுப்பனை எல்லாம் உபசரித்து விட மாட்டார்கள். ஊர், உலகத்தில் பிரபலமானவர்களை மட்டுமே தேடி அழைத்து உபசரிப்பார்கள்.
கவர்ச்சி நடிகை கனககுமாரி ஊட்டியில் வெளிப்புறக் காட்சி படப்பிடிப்பிற்காகச் சென்றால் கூட மிட்டாபுரம் விருந்தினர் மாளிகை அவளை வரவேற்று உபசரிக்கும். கர்நாடக சங்கீத வித்வான் கானாம்ருத சக்ரவர்த்தி கந்தசாமி பாகவதர் வந்தாலும் மிட்டாபுரம் கெஸ்ட் ஹவுஸில் இதே உபசரிப்பைப் பெறலாம். பேதாபேதம் எதுவும் கிடையாது.
இதைக் கொண்டு மிட்டாபுரம் குடும்பத்தார் கனககுமாரியின் விசிறிகள் என்றோ, கானாம்ருத சக்கரவர்த்தியின் சங்கீத ரசிகர்கள் என்றோ நீங்கள் அவசரப்பட்டு அனுமானம் செய்து விட முடியாது. இரண்டிற்குமே அவர்களுக்கு நேரமில்லை. எந்த சிமெண்டிற்கு ஏஜென்சி எடுக்கலாம், எந்த இரும்பிற்கு டீலராகலாம், எந்தப் பெரிய ஊரில் இன்னும் சினிமா தியேட்டர் கட்ட இடமிருக்கிறது, எந்தப் புது இண்டஸ்ட்ரிக்கு லைசென்ஸ் பெறலாம் என்பன போன்றவற்றை யோசிக்கவே அவர்களுக்கு நேரமில்லை.
அவற்றைச் செய்வதற்கே ஐயாயிரம் - பத்தாயிரம் என்று சம்பளத்தை அள்ளிக் கொடுத்து நிபுணர்களை நியமித்திருந்தார்கள். அவர்கள் எப்போதோ கிரீஸ் போட்டு முதல் தரமான பால் பேரிங்குகளைப் பொருத்தி முடுக்கி விட்ட சக்கரங்கள் போல் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தனர். நேரடியாக அந்தக் குடும்பத்தார் விருந்துபசாரத்தில் இறங்காவிடினும், நாடு முழுவதும் அந்தக் குடும்பத்தாரிடம் பி.ஆர்.ஒக்களாகவும், லையஸான்களாகவும், ஹோஸ்டெஸ்களாகவும் (உபசரணை அழகிகள்) இருந்தவர்கள் அதை வெற்றிகரமாகச் செய்தனர். பேர் வாங்கிக் கொடுத்தனர்.‘மிட்டாபுரம்’ ஊழியர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தங்கள் விருந்தினராக வரும் ஒருவரை விமான நிலையத்தில் வரவேற்கிற பி.ஆர். ஓ. முதல் விருந்தினர் விடுதியிலுள்ள ஏவல் ஆள் வரை ஏதாவதொரு விதத்தில் எப்படியாவது விருந்தினர்களிடம் தங்கள் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திறனை அந்தக் குடும்பத்தினர் பெற்றிருந்தனர்.
மிட்டாபுரம் டிரைவர்கள் கூட இதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர். விமான நிலையத்திலிருந்து நகருக்குள் விருந்தாளியை அழைத்து வருகிற போதே சாலையில் திடீரென்று ஒரு விநாடி காரை ஸ்லோ செய்து, வலது பக்கமுள்ள ஓர் ஆறு மாடிக் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டி, “இது நம்ம முதலாளியோட பில்டிங்தாங்க... ஒரு இங்கிலீஷ் கம்பெனிக்காரன் இப்ப வாடகைக்கு இருக்கான்” என்பான் டிரைவர். அல்லது சம்பந்தமில்லாமல், “இப்ப முதலாளி ஊர்ல இல்லீங்க! மெர்க்காராவிலே புதுசா ஒரு நாலாயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் வாங்கியிருக்காரு. அங்கே போயிருக்காங்க” என்பான். இப்படி அடிக்கடிபெருமையாகச் சொல்லவும், போதிக்கவும் எல்லா மட்டத்திலும் பழக்கப்பட்டிருந்தனர். எல்லாரும் பயிற்றப்பட்டிருந்தனர்.
“மிட்டாபுரமா? அவங்களை எவனும் அசைச்சுக்க முடியாது! அவங்க கவர்மெண்ட் ஆஃப் இந்தியாவுக்குப் போட்டியா பாரலெல் டுரிஸம் ‘டிபார்மெண்ட்டே’ ரன் பண்றாங்க அப்பா” என்று ஜனங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு ஓர் அந்தஸ்து அவர்களுக்கு வந்திருந்தது. சமூக அந்தஸ்துள்ள விளையாட்டு வீரர், கலைஞர்கள், பிரமுகர்கள் ஆகிய பல துறையினரிடம் தங்களைப் பற்றிய இப்படிப் பேச்சுக்களை நன்கு பயிற்றப்பட்ட தங்கள் ஆட்கள் மூலமே பரப்ப, இந்த விருந்துபசாரங்களை அவர்கள் பொறுத்துக் கொண்டு செய்து வந்தனர். இன்றுவரை ‘மிட்டாபுரம்’ குடும்பத்தாரின் இந்த நிர்வாக யந்திரம் பழுதுபட்டதில்லை. இதில் ஐந்தாம் படைகளும், துரோகிகளும் தோன்றியதில்லை. விசுவாசம் தப்பியதில்லை. இது பக்காவான ஏற்பாடாக இருந்து வந்தது.
ஒரு டிரைவரையோ, சமையற்காரனையோ, விருந்தினர் புகழ்ந்தால், அவர்கள் உடனே ஜென்டிலாக “எல்லாம் முதலாளி ஏற்பாடுங்க! அவங்க பெருமையாலே அத்தனையும் ஒரு குறையுமில்லாமே நடக்குது. நாம் வெறும் கருவிதானுங்களே”என்று மறுத்து விட வேண்டும். இதை அனைவரும் செய்கிறார்களா இல்லையா என்பதைக் கவனிக்க அங்கங்கே முதலாளியின் ஒற்றர்கள் கூட இருந்தார்கள்.
“பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் செலவழி! கவலையில்லை. அதனால் கிடைக்கிற புகழும், பெருமையும், கித்தாப்பும் மிட்டாபுரம் குடும்பத்துக்குத்தான் போக வேண்டுமே ஒழிய, நடுவே யாரும் தட்டிப் பறிக்கக் கூடாது.” இதுதான் அங்கு நிலவிய தத்துவம்.
இந்தத் தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் அனைவரும் வேலை பார்த்தார்கள். முதலாளிக்கு முதுகு சொரியும் இந்த வேலையை நன்றாகவும் இதமாகவும் செய்கிறவர்களுக்கு விசேட கவனிப்பு, சலுகை, சம்பள உயர்வு எல்லாம் தாராளமாகவே கிடைத்தன.பொதுவாகவே மிட்டாபுரம் குடும்பம் பண விஷயத்தில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை. தாராளமாகவே கொடுத்தார்கள். பிடித்தவர்களுக்கு மேலும் தாராளம் காட்டினார்கள்.
“ஏழை யென்றொருவன் - மீதமாக
இங்கிருக்கும் வரையிலே
கோழையாக நாமிருந்தால் - ஒரு
கொடுமையாகு மல்லவோ
தோழனே எழுந்து நில் - இத்
துயர்துடைத்து நம்மவர்
வாழவேணும் போரிடு! இதில்
வர்க்கஞானம் தேறிடு!”
என்றெல்லாம் கவிதை எழுதியிருக்கும் பிரேமதாசனை மிட்டாபுரத்தாருக்குப் பிடிக்காதுதான். ஆனால், இதையெல்லாம் அவர்கள் படித்திருந்தால்தானே? “ஏழை எளியவர்களிடம் பேர் உள்ள கவிஞர். வளைத்துப் போட்டு உபசரிப்போம்” என்று முடிவு செய்தார்கள். உபசரிக்க ஆளனுப்பியும் வைத்தனர்.
கவிஞர்களைப் பற்றி அவர்கள் எதை எப்படிப் பாடியிருந்தாலும் - மது-மாது இரண்டிற்கும் வசப்படுகிறவர்கள் - என்று மிட்டாபுரத்தாருக்கு மொத்தையாக ஓர் அபிப்பிராயம் உண்டு. அனுமானம்தான். ஆனாலும் அது உயர்வாக இல்லை.
மிட்டாபுரம் பி.ஆர். ஓ. டிபார்ட்மெண்டின் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஓமனே என்ற பதினெட்டு வயது இளம் வாளிப்பைக் கோயம்புத்தூருக்கு இரண்டு ஏர்டிக்கெட்டுடன், பிரேமதாசனிடம் அனுப்பி வைத்தார்கள் அவர்கள்.
குமாரி ஓமனே பேரழகி. சிரித்தால் முத்து உதிரும். கிறங்க வைக்கிற சண்பகப்பூ மேனி, சதா எதையோ தேடித் துருவிக் கொண்டிருப்பது போல் பார்க்கும் கருவண்டுக் கண்கள். ஆடவும், ஆளவும் பிரியப்படும் செழிப்பான உடற்கட்டு அவளுடையது.
வாழ்வில் மிகவும் கட்டுப்பாடும், கொள்கையுமுள்ள கவிஞரான பிரேமதாசனே ஒரு கணம் ஓமனேயை எதிரே பார்த்ததும் திணறிப் போனார். பொது மாதிரி இவர்களைப் பிடித்து விட்டது. நீங்கள் யார்? என்ன எழுதியிருக்கிறீர்கள்? ஏன் மக்களால் ஓகோ என்று கொண்டாடப்படுகிறீர்கள் என்பதை எல்லாம் சிந்தித்து, அவரவர்கள் தராதரம் பார்த்து இவர்கள் உங்களையோ, பிறரையோ உபசரிப்பதில்லை. மக்கள் கொண்டாடுகிறவர்களை நாமும் கொண்டாடி விட வேண்டும் என்ற ஒரே குருட்டு நோக்கம்தான். உங்களுக்கும் புகழ் பெற்ற குத்துச் சண்டைவீரர் ஒருவருக்கும் இவர்களிடம் உபசரணையில் வித்தியாசம் இராது. இன்று நீங்கள். நாளை யாரோ ஒரு சாமியார். நாளன்றைக்கு ஒரு சங்கீத வித்வான். அடுத்த நாள் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். அதற்கு அடுத்த நாள் ஒரு நடிகர். அதற்கும் அடுத்த நாள் ஒரு கம்பெனி டைரக்டர் - என்று இந்த உபசரணைகள் தொடர்ந்து கொண்டே போகும். தங்களை மதிக்கவும், வியக்கவும், புகழவும்,கொண்டாடவும் மிட்டாபுரம் குடும்பம் தன்னிடம் தாராளமாயுள்ள அதிகப் பண வசதியை இப்படி எல்லாம் செலவழிக்கிறது. அவ்வளவுதான்” என்று ஓமனே உள்ளதைச் சொல்லிவிட்டாள்.
இதைக் கேட்டுக் கவிஞர் பிரேமதாசனுக்கு ஆத்திரமே வந்து விட்டது.
“இப்படி டம்பாச்சாரிகளிடம் நான் பலியாக முடியாது ஓமனே!” என்று கத்தினார் அவர். தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது போல் உணர்ந்து கொதித்தார் அவர்.
தன் கவிதைகள் - அவற்றின் சிறப்பு, பெருமை ஆகியவற்றைப் பற்றி ஒரு சிறிதும் அறியாத ஒரு பணக்காரனின் விருந்தாளியாகத் தான் மாட்டிக் கொண்டோம் என்று உணர்ந்த போது மனம் கொதித்தது. ஓமனே அவரைச் சமாதானப்படுத்தினாள்.
“கோபப்படாதீர்கள்! இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததால்தானே நான் உங்கள் இரசிகையாக முடிந்தது?”
“உன் முக தாட்சண்யம் தான் என்னைத் தடுக்கிறது, ஓமனே! இன்னும் சில நாட்களில் இந்தக் காவியம் முடிந்து விடும்! பிறகு இந்த மிட்டாபுரம் ஆட்களின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டேன். இப்போது இந்த உபசரிப்பைப் பெற்ற கடனைத் தீர்க்கப் புத்தகம் அச்சானதும் ஒரு பிரதியை மிட்டாபுரம் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப் போகிறேன். என் ஆட்டோகிராப்புடன் எனது காவியத்தின் முதல் பிரதியைப் பெற ஐயாயிரம், பத்தாயிரம் தந்து வணங்கி நிற்கக் காத்திருக்கிறார்கள். என் கவிகளின் அருமையை அறியாதவருக்கு முதல் பிரதியை நான் அனுப்புவது என் பெருந்தன்மை என்றுதான் கூற வேண்டும்.”
தொடர்ந்து நாட்கள் ஓடின. கூனூரில் வேலை முடிந்து, பிரேமதாசன் ஊர் திரும்பும் போது ஓமனேயும் திரும்பினாள்.
கவிஞர் பிரேமதாசன் எழுதிய புதுக் காவியத்தில் முதற் பிரதி கவியின் சொந்தக் கையெழுத்தில் ‘இதை எழுதுவதற்கான லெளகீக வசதிகளைச் செய்து கொடுத்த மிட்டாபுரம் குடும்பத்தாருக்கு’ என்று எழுதப்பட்டுக் கையொப்பத்துடன் வந்தது.
ஆனால், உள்ளே வலது கைப்பக்கம் மூன்றாம் பக்கத்தில் சமர்ப்பணம் என்ற தலைப்பின் கீழ் ஓமனே சிரித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பிரசுரித்து, “இந்தப் புன்முறுவலின் சொந்தக்காரிக்கு இக்காவியத்தைப் படைக்கிறேன்” - பிரேமதாசன் என்று கொட்டை எழுத்துகளில் அச்சிட்டிருந்தது. மிட்டாபுரத்தார் செய்த உதவிகள் பற்றி எங்குமே இல்லை.
புத்தகம் வந்து சேர்ந்த பதினைந்தாவது நிமிஷம் ‘பாஸ்’ கூப்பிடுவதாக ஓமனேயிடம் பியூன் வந்து சொன்னான்.
அவள் எதிர்பார்த்த அழைப்புத்தான். போய் நின்றாள். நிறுத்தி வைத்தே விசாரணை நடந்தது. சீஃப் பி.ஆர். ஓவும் கூட இருந்தார். புத்தகம் அவள் முன் பிரித்து எறிவது போல் போடப்பட்டது.“கம்பெனிக்கு அல்லது இந்த மிட்டாபுரம் ஃபேமிலிக்கு நல்ல பேர் வாங்கித் தர்றதுக்குத்தானே உன்னை மாதிரி ஹோஸ்டெஸ் எல்லாம் மாசச் சம்பளத்துக்கு வச்சிருக்கோம்?”
வீசி எறிந்த புத்தகத்தை எடுத்து ஒன்றிரண்டு பக்கங்களை விரித்த ஓமனேயின் விழிகள் வியப்பால் விரிந்தன.
“அவரா இப்படி எழுதிட்டாரு. நான் சொல்லி அவர் செய்யலே. சொல்லப் போனால் ரெண்டொரு வாட்டி ஜாடைமாடையா ‘மிட்டாபுரம் குடும்பத்தாருக்கு இந்நூல் சமர்ப்பணம்’னு எழுதுங்கன்னு கூட நான் சொல்லிப் பார்த்தேன்.”
“உன் படம் எப்படி அவருக்குக் கிடைச்சுது!”
“கேட்டார்! நானே பிரியப்பட்டுக் குடுத்தேன். கேக்கறப்போ எதுக்குன்னு அவரும் சொல்லலே... நானும் விசாரிக்கல்லே.”
“அதாவது மிட்டாபுரம் ஃபேமிலியை விட அவருக்கு நீ ரொம்ப நெருக்கம்னு உலகத்துக்குக் காமிச்சிக்கணும்னு உனக்கு ஆசை.”
“நிச்சயமா இல்லை.”
“பின்னே எப்பிடி இந்த மாதிரி நடந்தது?”
“ஒரு கவிஞரை இப்பிடி எழுது, அப்பிடி எழுதுன்னு யாரும் வற்புறுத்த முடியாதுன்னு அவரோட பழகினப்ப நான் புரிஞ்சுக்கிட்டேன்.”
“ஆல்ரைட்! நெள யூ கேன் கோ” பத்து நிமிஷத்தில் ஓமனேயின் டெர்மினேஷன் ஆர்டரும், மூன்று மாதச் சம்பளத்துக்கான செக்கும் அவள் மேஜையைத் தேடி வந்தன.
நோயாளித் தந்தையையும், வயதான தாயையும், பள்ளியில் படிக்கும் தங்கை, தம்பிகளையும் காப்பாற்ற இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்து அவளை வழி மறித்தது. பழைய நாளில் இப்படி நடந்திருந்தால், காலைக் கையைப் பிடித்து மன்றாடிக் கெஞ்சியிருப்பாள். கவிஞர் பிரேமதாசனோடு ஒரு மாத காலம் பழகி, அவர் கவிதைகளை இரசித்ததின் விளைவு - அவளுக்குள் அவளது உத்தியோகத்துக்குச் சிறிதும் ஒத்து வராத மானம் ரோஷம் எல்லாம் ஏற்பட்டிருந்தன. கண் கலங்கி நின்றாள். நேரே கவிஞர் பிரேமதாசனைச் சந்திக்கச் சென்றாள்.
“சிரிப்புச் சக்கரவர்த்தினியே! செளந்தரியப்பெட்டகமே வா!”-என்று உற்சாகமாக அவளை வரவேற்றார் கவிஞர்.
“ஏன் இப்படிச் செய்தீர்கள்?”
“எதைப் பற்றிக் கேட்கிறாய் ஓமனே?”
“புத்தகத்தில் என் படத்தைப் போட்டு- ‘இந்தப் புன்முறுவலின் சொந்தக்காரிக்குப் படையல்’ - என்று ஏன் எழுதினீர்கள்?”“எனக்குப் பிடித்தது, எழுதினேன். எந்தப் புன்னகை என் பேனாவுக்கு உல்லாசமும், உற்சாகமும் தந்ததோ அந்தப் புன்னகையை நான் கெளரவிப்பதை அதன் உரிமைக்காரி கூட தடுக்க முடியாது.”
“நீங்கள் ‘மிட்டாபுரம் வள்ளல்களுக்கு நன்றியுடன்’ என்று ஒரு வரி எழுதினால் கூடப் போதும் என்று நானே சொல்லியிருந்தேனே?”
“உன் முதலாளிக்குப் புத்தகம் அனுப்பியிருந்தேனே? கிடைத்ததா? பார்த்தாரா?”
“கிடைத்தது, பார்த்தார். உடனே என்னைக் கூப்பிட்டு, மூன்று மாதச் சம்பளத்தையும் கையில் கொடுத்து, வேலையைவிட்டுப் போகச் சொல்லியும் ஆயிற்று”
“சபாஷ்... ஒரு கவியின் வாக்குக்கு எத்தனை சக்தி பார்த்தாயா ஓமனே?”
“நான் தெருவில் அநாதையாக நிற்பதில் உங்களுக்கு ஏன் இத்தனை சந்தோஷம்?”
“அநாதையாவது ஒன்றாவது? புலம்பாதே இன்று முதல் - இந்த விநாடி முதல் நீ என் அந்தரங்கக் காரியதரிசியாகிறாய்.”
“சம்பளம்…”
“நான் சம்பாதிக்கும் புகழ், பொருள், சுகம், துக்கம், மகிழ்ச்சி, இன்னல் எல்லாவற்றிலுமே சரி பாதி உனக்கு.”
“அப்படிக் கூட ஓர் உத்தியோகம் உலகத்தில் உண்டா? என்ன?”
“உண்டு ஓமனே! உலகத்தின் மிக மிகப் பழைய உத்தியோகம் அது. ‘சகதர்மிணி’ என்பது அந்த உத்தியோகத்தின் பெயர். பெண் தோன்றிய போதே அவளுக்கென்று ஏற்பட்டு விட்ட உத்தியோகம் அது.”
சொல்லி விட்டு ஓமனேயை நெஞ்சாரத் தழுவினார் கவிஞர் பிரேமதாசர்.
“இதுதான் இந்த உத்தியோகத்திற்கு ஜாயினிங் ரிப்போட்டாக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள் ஓமனே.
(அமுதசுரபி, தீபாவளி மலர், 1987)