நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/நினைவின் மறுபுறம்
91. நினைவின் மறுபுறம்
திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்தக் கூட்ட முடிவில் அங்கு எதிரே சந்தித்தவர்கள் அத்தனை பேரும் அலட்சியமாகப் பார்ப்பதற்குத் தான் ஒருத்தியே பாத்திரமாகி விட்டாற் போல் தோன்றியது அவளுக்கு வாழ்க்கையின் பல்லாயிரம் நுணுக்கங்களை வாய் திறந்து பேசுவது போல் அமைதியாகக் கூர்ந்து நோக்கும் அவனுடைய கண்கள், சிரிப்பு உறங்கும் ஏளனமான பார்வை, வலக்கையைத் தாமரைப் பூப் போல மேலே உயர்த்தி ஆள் காட்டி விரலை ஆட்டி ஆட்டிப் பேசும் ஆணித்தரமான பேச்சு, ‘மைக்’கிற்கு முன் சிங்கம் போல் வந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்ற தோற்றம் எல்லாம் மொத்தமாகச் சேர்ந்து அவளைத் தலை குனியச் செய்துவிட்டன. ஆமாம்! அவன் தலை நிமிர்ந்தபோது அவள் தலை குனிந்தாள்.
“கல்லூரி மன்றத்தின் பாரதி விழாக் கருத்தரங்கத்திலே கவியரசர் பாரதி பெண்மையை மட்டுமே போற்றிப் புகழ்ந்திருப்பதாக இது வரை கீச்சுக் குரலிலே பேச்சும் பாட்டுமாக முழங்கிய எதிர்க் கட்சித் தலைவி தோழியர் செங்கமலம் - அதாவது அவருடைய பெயரின் முதலெழுத்துக்களையும் விட்டுவிடாமற் சொல்வதாக இருந்தால் கொசு. செங்கமலம் என்ற கொசு செங்கமலம்…”
அவ்வளவுதான்! அவனை மேலே பேச விடாமல் ஆடிடோரியத்தில் நிரம்பி வழிந்த மாணவ மாணவிகளின் கூட்டத்தில் கைதட்டலும் சிரிப்பும் அலையலையாகப் பொங்கின. ஹியர்! ஹியர்! என்று மாணவர்களின் உற்சாகக் குரல்கள், சபாஷ் முழக்கங்கள், ‘டேய் தண்டபாணி வெளுத்து வாங்குகிறான் பாருடா!’ என்று அவன் பெயரைச் சொல்லி வியக்கும் பாராட்டுக்கள் எல்லாம் மொத்தமாக எழுந்து அடங்கின. பாரதியார் பெண்மையைப் போற்றிப் புகழ்ந்திருப்பதாக விவாதித்த பெண்களின் கட்சிக்குத் தலைவியாகிய கொ.சு.செங்கமலம் என்ற மாணவியை அடுத்துப் பாரதி ஆண்மையைப் போற்றிப் புகழ்ந்திருப்பதாகப் பேச இருந்த மாணவர்களின் எதிர்க் கட்சிக்குத் தலைவரான தண்டபாணி பேசத் தொடங்கிய போதுதான் இத்தனை அமர்க்களமும் நிகழ்ந்தது. சிரிக்கச் சிரிக்கக் குத்திக் காட்டிப் பேசினான் அவன். தண்டபாணியின் பேச்சைக் கேட்ட பின்பு செங்கமலத்திற்கு நாடி தளர்ந்து விட்டது. அவளுக்குப் பின் அவள் கட்சியில் நின்று விவாதித்த ஒவ்வொரு பெண்ணும் நன்றாக உளறிக் கொட்டினார்கள். முடிவில் இரண்டு கட்சிக்கும் தலைவர்கள் என்ற முறையில் கொ.சு. செங்கமலமும் தண்டபாணியும் தங்கள் கட்சிக் காரர்கள் பேசிய விவாதத்தை எல்லாம் தொகுத்துரைத்து முடிவுரை வழங்கிய பின், தலைமை வகித்த தமிழ்த் துறைத் தலைவர். தா.கா. கரியமாணிக்கனார் தீர்ப்புச் சொன்ன போது செங்கமலத்தின் குனிந்த தலை நிமிராமல் போய் விட்டது.‘உண்மையிலேயே மகாகவி பாரதியார் பெண்களைத்தான் அதாவது . பெண்மையைத்தான் - அதிகம் போற்றிப் புகழ்ந்திருப்பதாக யான் கருதுகிறேன். ஆயினும் இந்தக் கருத்தரங்கத்திலே ஆண்மையைப் போற்றிப் புகழ்ந்திருப்பதாக வாதிட்ட மாணவர்களே மிக நன்றாகப் பேசினார்கள். அவர்களுடைய விவாதத் திறனையும்,பேச்சுத் திறனையும் மதித்து நான் அவர்கள் பக்கமே தீர்ப்பு வழங்குகிறேன் என்று முடித்துவிட்டார்.தலைவர். செங்கமலத்திற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்ப்பதற்கே பிடிக்கவில்லை. எழுந்திருந்து ஒடிப் போய் ஹாஸ்டல் அறையில் கதவைத் தாழிட்டுக் கொண்டு அழுது தீர்க்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அப்படி எல்லாரும் காண எழுந்து ஒட முடியுமா? ஓடினால் சிரிக்க மாட்டார்களா? தோழிகளோடு எழுந்து நடந்தாள் அவள். குனிந்த தலை நிமிராமல் போய்க் கொண்டிருந்தவளை ஓடி வந்து வம்புக்கு இழுத்தான் ஒரு மாணவன்; “ஹார்ட்டி கண்டலன்ஸஸ் மேடம்” என்று செவிகளில் மிக ஏளனமாக வந்து ஒலித்தது அந்தக் குரல். அறைக்குத் திரும்பி வந்ததும் தோழிகள் ஒவ்வொருத்தியாக அவளுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினார்கள்.
“என்ன இருந்தாலும் நீ இத்தனை ‘ஸென்ஸிடிவ்’வா இருக்கப்படாதுடீம்மா! இதென்ன தோல்வி? ஏதோ விளையாட்டாகத்தானே விவாதம் செய்தோம்? அந்தத் தண்டம் (தண்டபாணியின் பெயருக்கு மாணவிகள் கண்டுபிடித்திருந்த சுருக்கம் இது) இருக்கிறானே, அவன் ஒருத்தன் பேசினதாலேதான் அந்தக் கட்சி உருப்பட்டது.அவன் மட்டும் இல்லாமற் போயிருந்தால் அத்தனை மாணவர்களும் தலையிலே துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான்!”
“ஆனாலும் இது பெரிய அநியாயம்டீ செங்கமலம்! ஏதோ நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு உன்னைக் ‘கொசு செங்கமலம்’ என்று அந்த தண்டம் கூறியதும் அதைக் கேட்டு அத்தனை தடியர்களும் சிரித்துக் கைதட்டி ஆரவாரம் செய்ததும் கொஞ்சங்கூட நன்றாயில்லை.”
தோழிகள் ஒவ்வொருத்தியாக அரற்றிக் கொண்டிருந்தார்கள். கட்சியும் கருத்தும் தோற்பதற்கு முன்பே செங்கமலம் தோற்றுப்போய்விட்ட இரகசியத்தை அங்கு ஒருத்தியும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தண்டபாணியின் அந்தக் கூரிய கண்கள், சிரிப்பு உறங்கும் ஏளனமான பார்வை, இப்போது இந்த இடத்துக்கு நான்தான் ராஜா என்பதுபோல் மேடையில் வந்து நின்ற தோற்றம் எல்லாம் செங்கமலத்தின் கண்களுக்குள் இருந்தன. அச்சு மாறாமல் அப்படியே இருந்தன.
அன்று இரவு செங்கமலம் தோழிகளுடன் கல்லூரி உணவு விடுதிக்குச் சாப்பிடப் போகவில்லை. அந்த அறையிலேயே அடைந்து கிடந்து எதையாவது நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு ஹாஸ்டல் பணிப் பெண்ணிடம் சொல்லி ஒரு கிண்ணம்பால் மட்டும் வரவழைத்துப்பருகினாள்.தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளைத் தண்டபாணியின் நினைவு ஆண்டு கொண்டிருந்தது; கொ.சு.செங்கமலம் என்ற கொசு செங்கமலமாமே? ‘எத்தனை திமிரும் துணிவும் இருந்தால் அவ்வளவு பெரிய கூட்டத்தில் எனக்கு முன்பே என்னைப் பற்றிக் கேலி செய்து சிரிக்க முடியும்?’ என்ற நினைத்தபோது உள்ளங்கையையும் புறங்கையையும் போல் ஒரே நினைவின் இரண்டு பக்கங்களாக அவனுடைய திமிர் என்ற ஒற்றை ஞாபகத்தைப் பொருளாக வைத்துக் கொண்டு அவளுள் வெறுப்பும் எழுந்தது. அன்பும் மலர்ந்தது. அந்த முரட்டுத்தனத்துக்காகவே அவனை வெறுக்கவேண்டும் போலவும் இருந்தது. அதற்காகவே அவனைக் காதலிக்க வேண்டும் போலவும் இருந்தது.
சீனியர் மாணவனான தண்டபாணியைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருந்தாள். ஓயாமல் சிகரெட் பிடிப்பானாம். வகுப்பு அறைகளில் கூட சில ஆசிரியர்களை அழ அழவைத்திருக்கிறானாம்.அது ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரியாதலால் அங்கே சில பெண் விரிவுரையாளர்களும் உண்டு. ஒருநாள் புதிதாக வந்திருந்த ஒரு பெண் விரிவுரையாளரின் வகுப்பில் தண்டபாணி சிகரெட் பற்ற வைத்ததாகப் பிரின்ஸிபாலிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அவன் அப்படிச் செய்ததும் உண்மை. ஆனாலும் பிரின்ஸிபால் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்தபோது அந்த வகுப்பின் எல்லா மாணவர்களும் ‘தண்டாபாணி வகுப்பில் சிகரெட்டைக் கையால் தொடக்கூட இல்லை’ என்று உறுதி கூறினார்கள். அவனை விட்டுக் கொடுக்காமல் காப்பதில் சக மானவர்களுக்குள் அவ்வளவு ஒற்றுமை. குற்றச் சாட்டுக்களுக்காக அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு விழாக் கொண்டாடலாமென்றால் இரண்டு பொன் விழாக் கொண்டாடமுடிந்த அவ்வளவு குற்றச்சாட்டுகள் தண்டபாணியின்மேல் இருந்தன. அவன் எதிலாவது எப்போதாவது வகையாக மாட்டிக் கொண்டால் உடனே அவனை ‘டிஸ்மிஸ்’ செய்து காலேஜிலிருந்து வெளியே அனுப்புவதற்குத் தயாராக இருந்தார் பிரின்ஸிபால். கல்லூரியிலேயே தலை சிறந்த பேச்சாளன்; நன்றாகப் பாடுவான்; கல்லூரி ஆண்டு மலரில் அவனுடைய சிறந்த கட்டுரைகளும் கவிதைகளும் நிரம்பியிருக்கும். இருந்தாலும் இத்தனை சாமர்த்தியங்கள் சேர்ந்தும் கல்லூரியில் மாணவிகளிடமும் ஆசிரியர்களிடமும் அவன் காலிப் பயலாகவும் சண்டியாகவுந்தான் பெயரெடுத்திருந்தான்.
வலக்கண் புருவத்தின் மேலே கறுப்புத் திராட்சைக் குலை சரிந்ததுபோல் சரிந்துவிழும் கிராப்பும், அந்த முகமும், அரும்பு மீசையும், ‘எவனாயிருந்தால் எனக்கென்ன? நான்தான் ராஜா’ என்பது போல் சிரிக்கும் அந்தச் சிரிப்பும், ஆட்களை அடிமைப்பட வைக்கிற அந்தக் குரலும் இயற்கையாக வரும் அந்த நகைச்சுவையும் ஞாபகம் வந்து ஞாபகம் வந்து செங்கமலத்தைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தன. இப்படி அவள் தூங்காமல் தவித்துச் கொண்டிருந்த நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார்கள். எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தால் கல்லூரி விடுதிப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தாள்.
“யாரோ உங்க ஹைஸ்கூல் காலத்துத் தோழியாம்! உங்களோட போன்லே பேசணுமாம்” “ஹைஸ்கூல் தோழியா? நல்ல ஹைஸ்கூல் தோழி வந்தாள்! இராத்திரி பத்து மணிக்கு மேலேயா இவளுக்கு என் ஞாபகம் வர வேனும்?” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிக் கொண்டே டெலிபோன் இருக்கிற இடத்தை நோக்கி நடந்தாள் செங்கமலம். போய் டெலிபோனைக் கையிலெடுத்து ‘யார்? செங்கமலம் பேசுகிறேன்’ என்று பேச்சைஆரம்பித்தால் எதிர்ப்பக்கத்திலிருந்து ஒரு விநாடி குரலே இல்லை. அடுத்த விநாடி ஆண்குரல்-அந்தத்“” தடியன் தண்டபாணியின் குரல் ஒலித்தது.
“நான்தான் தண்டபாணி பேசுகிறேன். முதலிலே யாரோ வேலைக்காரி டெலிபோனை எடுத்தாள். அல்லியரசாணிக் கோட்டை மாதிரி இருக்கிற உங்கள் லேடீஸ் ஹாஸ்டலிலே இராத்திரி பத்து மணிக்கு மேலே நான் ஆண் குரலிலே பேசினால் விடுவார்களா? அதனாலே ஒரு தந்திரம் பண்ணினேன். குரலைப் பெண்கள் பேசுகிற மாதிரி மாற்றிக் கொண்டு உன் ஹை ஸ்கூல் காலத்துத் தோழியாக மாறி உன்னோடு உடனே பேசியாக வேண்டுமென்றேன்.”
“நான்ஸென்ஸ், வெட்கமாயில்லை. உங்களுக்கு?” என்று கடுமையாகக் கேட்டுவிட்டு எதிர்ப்பக்கத்தில் காது உடைவதுபோல் கேட்கும்படி டெலிபோனை ‘ணங்’ கென்று வைத்துவிட நினைத்தாள் அவள். ஆனால் அப்படி மூஞ்சியில் அடித்தாற்போல் வைத்துவிடவும் மனம் வரவில்லை.இந்த அர்த்தராத்திரி வேளையில் அவன் தனக்கு எதற்காக டெலிபோன் செய்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலவும் ஆசையாக இருந்தது.பக்கத்தில் கூட யாரும் இல்லை. விடுதிப் பணிப்பெண் வேறு எங்கோ போயிருந்தாள். செங்கமலமும், டெலிபோனும் அந்த இடத்தில் போனுக்காக எரிந்துகொண்டிருந்தமங்கலான மின்சார விளக்கும் இரவும் அமைதியும் தவிர அந்தப் பிரதேசம் தனிமையாக இருந்தது.
டெலிபோனில் எதிர்ப்புறமிருந்து குரல் குழைந்தது. “நான் பேசுகிறது பிடிக்கவில்லை போலிருக்கிறதே!”
“பேசுவதற்கு இன்னும் என்ன மீதம் வைத்திருக்கிறீர்கள்? அதுதான் பேச வேண்டியதை எல்லாம் சாயங்காலம் கூட்டத்தில் பேசிவிட்டீர்களே!”
“அதெல்லாம் சும்மா தமாஷ். ஏதோ கூட்டத்திற்குச் சிரிப்பு மூட்ட வேணும் என்பதற்காகச் சொன்னதை எல்லாம் பெரிதாக நினைத்து மனசிலே வைக்கக் கூடாது. நானே கூட்டம் முடிந்ததும் உன்னைப் பார்த்து மன்னிப்புக் கேட்க நினைத்திருந்தேன். நீ விடுவிடென்று புறப்பட்டுப் போய்விட்டாய்.”
“உங்களுக்கென்ன?ஜெயித்த கட்சிக்காரர்கள் எதை வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் இப்போது மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம்.”
“தப்பு உண்மையிலேயே நீதான் ஜயித்த கட்சிக்காரி, நீல நிறத்தில் வெள்ளைக் பூப்போட்ட வாயில் புடவையோடு மேகத்தைச் சுற்றிக்கெண்டு மின்னல் வந்து நின்ற மாதிரி நீ மேடையில் நின்று பேசியபோது நான் முதலில் உன்னுடைய அழகுக்குத் தோற்றுப்போனேன் என்ற இரகசியம் உனக்குத் தெரியுமோ செங்கமலம்? உன்னுடைய அழகுக்குத் தோற்றபின்பு அந்த இரகசியத் தோல்வியினால் நான் பெற்ற விழிப்புதான் பேச்சில் எனக்கு முழு வெற்றியைக் கொடுத்தது. கேலி செய்தால்கூட அந்தக் கேலி உன்னைப் பற்றியதாயிருக்கிறது என்ற பெருமிதத்தினால் தான் கம்பீரமாக நிமிர்ந்து நின்று பேசினேனாக்கும்.”
“செய்வதையும் செய்துவிட்டு இப்போது அதற்கு இப்படி ஒரு விளக்கமா?”
“இன்று நீ எவ்வளவு அழகாகக் காட்சியளித்தாய் என்று நினைத்து நினைத்து அந்த நினைப்பின் ஏக்கத்திலேயே சிறிது நேரத்திற்கு முன் நான் ஒரு கவிதை இயற்றியிருக்கிறேன், செங்கமலம் அதைப் பாடிக் காட்டுவதற்குத்தான் இந்த அகால வேளையில் உன்னை டெலிபோனில் கூப்பிட்டேன்.”
“நான்ஸென்ஸ்: வெட்கமாயில்லை, உங்களுக்கு”
இப்போதும் இப்படிச் சொல்லிச் சீற்றத்தோடு டெலிபோனை வைக்க நினைத்து அவளால் அப்படிச் செய்ய முடியாமல் போய்விட்டது. காரணம்? அந்தக் கவிதையில் அவன் என்ன தான் பாடியிருப்பான் என்று அறிந்து கொள்ளும் ஆவல் செங்கமலத்தைத் தடுத்தது.
“கவிதை மிக அழகாக வாய்திருக்கிறது செங்கமலம்! அதை இப்போதே உன்னிடம் பாடிக் காட்டாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது!”
“நீங்கள் கடைசியாகச் சொன்னது உங்களுக்கு இனிமேல்தான் பிடிக்க வேண்டுமா என்ன?”
“இல்லை! உன்னைப் பார்த்த முதல் விநாடியிலிருந்தே பிடித்துவிட்டது, செங்கமலம் பாட்டைப் படிக்கிறேன், கேள்!”
செங்கமலம் அவனுக்குப் பதில் சொல்லுவதற்குள் விடுதிப் பணிப்பெண் அருகே வந்துவிட்டாள்.
“என்னம்மா இது? முக்கால் மணி நேரமாக டெலிபோனைக் கீழே வைக்காமல் பேசிக் கொண்டேயிருக்கீங்களே! ஹை ஸ்கூலிலே விட்டுப் பிரிஞ்சப்புறம் நீங்களும் உங்க தோழியுமா பரஸ்பரம் வாழ்க்கை வரலாற்றையே போனிலே பேசிடுவீங்க போலிருக்கே!” என்று கேட்டுச் சிரித்தாள் அந்தப் பணிப்பெண். செங்கமலத்தின் நிலை தர்மசங்கடமாகிவிட்டது. டெலிபோனில் எதிர்ப்புறமிருந்து பேசுகிறவருடைய குரல் ரீஸீவரையும் மீறி வெளியே கேட்க முடிந்த அளவு அருகில் வந்து நிற்கிறாள் விடுதிப் பணிப்பெண். தண்டபாணியோ டெலிபோனில் கவிதை பாட ஆரம்பித்துவிட்டான்.
“கருமேகக் காட்டினிலே - நீ ஒர்
கனக மின்னலம்டீ!...”
பணிப் பெண்ணைத் தன் பக்கத்தில் நிற்க விடாமல் செய்வதற்காகக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்பது போல் ஜாடை காட்டினாள் செங்கமலம் பணிப்பெண் தண்ணிர் கொண்டு வருவதற்காகப் போனாள்.அவள் தலைமறைந்ததோ இல்லையோ, செங்கமலம் டெலிபோனில் சீறினாள். இல்லை; சீறுவதுபோல் ஆரம்பித்துச் சாதாரணமாகவே பேசினாள். “மிஸ்டர் தண்டபாணி உங்களைத்தானே? ஹல்லோ! பாடுவதை நிறுத்துங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. உங்களுடைய அருமைக் கவிதையை அழகாக ஒரு தாளில் எழுதிக் கண்ணாடிச் சட்டம் போட்டு வேண்டுமானால் கொடுங்கள்; படித்துக் கொள்கிறேன். இப்படி அர்த்த ராத்திரியில் உயிரை வாங்காதீர்கள்” என்று கடுமையாக நினைத்துச் சொல்லாக வெளிவரும்போது நினைப்பிலிருந்த கடுமை சரிபாதி தவிர்ந்துபோய்ச் சமாதானமாகப் பேசுவது போலவே அவனிடம் பேசி டெலிபோன் ரீஸிவரை வைத்தாள் செங்கமலம். இப்போதும் எந்தக் காரணத்துக்காக அவனை வெறுக்க வேண்டுமென்று தோன்றியதோ அதே காரணத்துக்காகவே அவனைக் காதலிக்க வேண்டும் போலவும் தோன்றியது அவளுக்கு.
அறைக்குத் திரும்பிப் போகும்போது ‘கருமேகக் காட்டினிலே நீ ஓர் - கனக மின்னலடீ’ என்று மெல்ல முணுமுணுப்பதுபோல் தனக்குத் தானே சொல்லிப் பார்த்துக் ரெகண்டாள் அவள்.‘மின்னலடி என்று அடிபோட்டுப் பாடியிருக்கிறானே! இந்த முரடனுக்கு எத்தனை துணிச்சல்’ என்று எண்ணிய போது எரிச்சலாகவும் இருந்தது. அடுத்த கணமே அப்படிப் பாடியிருப்பதிலுள்ள முரட்டுத்தனத்தையே எதற்காகவோ இரசிக்க வேண்டும் போலவும் இருந்தது. செங்கமலம் அன்றிரவு படுக்கையில் படுத்துப் போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கினாள் என்பதற்குப் பதில் நளினமான நினைவுகளையே போர்த்துக் கொண்டு தூங்கினாள் என்று வருணிப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை அவள் சொன்னபடியே செய்துவிட்டான் தண்டபாணி, முதல் பாடவேளையின்போது வெளிவராந்தாவின் பக்கமாக நடந்து தண்ணீர் குடிக்கப் போய்க் கொண்டிருந்த செங்கமலத்தைக் கைத் தட்டிக் கூப்பிட்டு, “இந்தா, நீ சொன்னபடியே செய்துவிட்டேன்!” என்று படம் போல் சட்டமிட்டுக் காகிதத்தில் கட்டிய ஒரு பொட்டலத்தை அவளிடம் நீட்டினாள். தண்டபாணி அதை அவளிடம் கொடுக்கும் போது அவனோடு அரட்டையிலும் விடலைத்தனத்திலும் பெயர் பெற்ற இரண்டு மூன்று மாணவர்களும் சிரித்தபடி கூட நின்றார்கள். மின்னல் மின்னுகிற நேரத்தில் அதை அவள் கையில் கொடுத்துவிட்டு அவன் போய்விட்டான். அதைக் கையில் வைத்துக் கொண்டு வகுப்புக்குள்ளும் போக முடியாமல் வெளியிலேயும் போக முடியாமல் செங்கமலம் திண்டாடினாள்.ஒரு முழு ‘புல்ஸ்கேப்’ தாளைக் கண்ணாடிச் சட்டம் போட்டால் எவ்வளவு பெரிதாயிருக்குமோ அவ்வளவு பெரிதாயிருந்த அந்தப்படத்தை எடுத்துக் கொண்டு வகுப்புக்குள் போனால் மானம் போய்விடும். ஹாஸ்டலுக்குப் போய் வைத்துவிட்டு வரலாமென்றால் வகுப்பில் அதற்குள் பாடம் ஆரம்பமாகிவிடும்.
தன்னை அவமானப்படுத்துவதற்காகவே சக மாணவர்களை ஜமா சேர்த்துக் கொண்டு வந்து தண்டபாணி அதை அங்கே தன்னிடம் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு தன்னிடம் கொண்டு வந்து கொடுப்பதற்கு முன் தண்டபாணி அதை உடன் இருந்த மாணவர்களிடமும் படித்துக் காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டு வந்திருப்பானோ என்று நினைத்தபோது அவளால் தன் ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை. வகுப்புக்குப் போகாவிட்டாலும் பரவாயில்லை. முதலில் இவனுடைய கொட்டத்தை ஒடுக்கிவிட்டுத்தான் மறுவேலை. இப்படி நினைத்தபோது தண்டபாணி என்ற இரசிகனை அவள் மறந்து போனாள். தண்டபாணி என்ற காலிப்பயல்தான் அப்போது அவளுக்கு நினைவிருந்தான்.கையில் அந்தப் படத்தோடு நேரே ஹாஸ்டலுக்குப் போய் அறைக் கதவைத் திறந்து அதைப் படித்தால் என்ன என்று ஒரே ஒரு கணம் ஒரு சிறு எண்ணம் மனத்தின் ஒரு மூலையில் முளைத்து அங்கே மூண்டிருந்த ஆத்திரத்தை எதிர்த்து வளர முடியாமல் அங்கேயே கருகிவிட்டது.
அந்தப் படத்தோடு புயல் புகுந்ததுபோல் பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்துவிட்டாள் செங்கமலம். பிரின்ஸ்பால் நிமிர்ந்து பார்த்தபோது கண்களில் நீர் முட்டி அழுதுவிடுவது போன்ற கோலத்தில் செங்கமலம் நின்றாள்.
படத்தைப் பிரித்துக் கொடுத்து விவரத்தையும் கூறியபோது பிரின்ஸிபால் எரிமலையாக மாறிவிட்டார்.
“நீ அழாதேம்மா! அந்தப் போக்கிரி தண்டபாணியை டிஸ்மிஸ் செய்து தீர்த்துக் கட்டி வெளியே அனுப்ப நானே சரியான குற்றச்சாட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். இது போதும் எனக்கு, நீ போய் நிம்மதியாக வகுப்பில் உட்கார், நான் பார்த்துக் கொள்கிறேன். பயல் இன்றோடு தொலைந்தான்” என்று சொல்லிச் செங்கமலத்தைச் சமாதானப்படுத்தி அனுப்பினார் பிரின்ஸிபால்.
நன்றாகப் பழிவாங்கிவிட்ட திருப்தியோடு அவள் திரும்பவும் வகுப்புக்குள் வந்து உட்கார்ந்தபோது, "என்னடி, அழுதாயா? கண்னெல்லாம் சிவந்திருக்கிறதே!” என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் கேட்டாள். செங்கமலம் அவளுக்குச் சரியாகப் பதில் கூறாமல் மழுப்பிவிட்டாள். நேரமாக ஆகச் செங்கமலத்துக்கு வகுப்பில் இருப்புக் கொள்ளவில்லை. தான் செய்த காரியம் சரிதான் என்று திருப்தியாகவும் இருந்தது. ‘அநியாயமாக ஒரு தீரனைக் காலை ஒடித்து அனுப்பப் போகிறாய் நீ’ என்று அவளுடைய மனச்சாட்சியே அவளை எதிர்த்துக் கேட்டதற்குத் ‘தான் செய்தது சரியல்ல’ என்று அதிருப்தியாகவும் இருந்தது. நிம்மதியின்றித் தவித்தாள் அவள். அங்கிருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அரைநாள் லீவு சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பிவிட்டாள் செங்கமலம் இடைவேளையின் போது ஹாஸ்டலுக்குச் சாப்பிட வந்திருந்த தோழி ஒருத்தி அவளுடைய அறையைத் தேடி வந்து சில விவரங்களைக் கூறி விட்டுப் போனாள்.
“நீ ஒன்றும் சொல்லாவிட்டாலும் தானாக எல்லாம் தெரிந்து விட்டதடி செங்கமலம். பிரின்ஸிபால் சாயங்காலம் மூன்று மணிக்கு அந்தத் ‘தண்டத்தைத்’ தமது அறைக்கு வந்து தம்மைப் பார்க்கச் சொல்லியிருக்கின்றாராம். காலேஜ் பூராவும் இதே பேச்சுத்தான். அநேகமாகக் காலேஜிலிருந்தே டிஸ்மிஸ் செய்துவிடுவார்களாம். ஆனால் அவன் என்னவோ சிறிதுகூடக் கவலைப்படாமல் வழக்கம்போல் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருக்கிறான். இன்னொன்றுகூடக் கேள்விப்பட்டேன். அவன் உன்னிடம் கொடுத்தானே அந்தக்கண்ணாடிச் சட்டத்துக்குள் எழுதி வைத்திருக்கிற கவிதையில் அவனுடைய கையெழுத்தே இல்லையாமே? எழுத்து அச்சுக் குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக யாரோ சிநேகிதனை விட்டு வெறும் கவிதையை மட்டும் காப்பி பண்ணச் சொல்லி அதை அப்படியே சட்டம் போட்டு உன்னிடம் கொடுத்துவிட்டானாம். அதனால் பிரின்ஸிபால் தன்னைக் கூப்பிட்டு விசாரிக்கும் போது. இதை நான் எழுதவுமில்லை. கொடுக்கவும் இல்லை என்று ஒரேயடியாகப் புளுகிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாமென்றுதான் அவன் சிறிதும் கவலைப்படாமல் சிரித்துப்பேசிக் கொண்டிருக்கிறான் என்றும் ஒரு வதந்தி நிலவுகிறது. அவன் அப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையடியம்மா! எமகாதகனாச்சே?” என்று தோழி சொல்லிக் கொண்டே வந்தபோது அவள் கடைசியாகக் கூறிய வதந்தியைக் கேட்டுச் செங்கமலத்துக்கே ஆறதலாக இருந்தது. பெண்ணையும் சபலத்தையும் ஒரே மூலப் பொருளிலிருந்துதான் செய்திருக்கிறார்கள்’ என்ற வாக்கியத்துக்கு அப்போது பிரத்தியட்ச உதாரணமாக இருந்தாள் செங்கமலம். ஏதோ ஒர் ஆத்திரத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வெறியோடு அந்தப் படத்தையும் அதில் அடங்கியிருந்த கவிதையையும் அதைப் படித்துப் பார்க்காமலே பிரின்ஸிபாலிடம் கொண்டுபோய்க் கொடுத்துப் புகார் செய்துவிட்டு வந்திருந்தாலும், இப்போது அவள் மனம் கிடந்து தவித்தது. தாறுமாறாக ஏதேனும் நடந்து தண்டபாணி அந்தக் கல்லூரியை விட்டு வெளியேறும்படி ஆகிவிடக் கூடாதே என்று புழுவாகத் துடித்தது அவள் அந்தரங்கம்! செங்கமலம் தன்னைத் தேடி வந்த தோழியைக் கேட்டாள். "நிஜ மாகவா அப்படிப்பேசிக் கொள்கிறார்கள்? அதில் அவர் கையெழுத்தே கிடையாதா?”
“ஏன்? உனக்குத் தெரியாதா? நீ அதைப் படித்தே பார்க்கவில்லையா, செங்கமலம்?”
“இல்லை! அப்படியே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டேன்.”
“எப்படிக் கொடுத்திருந்தால் என்னடீ? அவன் அதிருஷ்டக்காரன்! அவனை இந்தப் பழியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்பதற்காக இந்தக் கல்லூரியிலேயே இன்னும் யாராவது ஒரு மாணவன்,'தண்டபாணிக்கு ஒரு பாவமும் தெரியாது. அந்தக் கவிதையை எழுதியவன் நான்தான் ஸார்’ என்று குற்றத்தைத் தன் தலையில் ஏற்றுக்கொண்டு தியாகம் செய்தால்கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. மாணவர்கள் மத்தியிலே அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது அவனுக்கு அவன் ‘டிஸ்மிஸ்’ ஆனாலோ நாளைக்குக் காலையிலேயே அத்தனை மாணவர்களும் வேலை நிறுத்தம் அது இது என்று கலகம் பண்ணக்கூட ஆரம்பித்து விடுவார்கள். இப்போதே கல்லூரியில் அத்தனை மாணவர்களும் உன் தலையை உருட்டுகிறார்கள். ‘எல்லாம் அந்தக் கிளியோபாட்ராவின் வேலை’ என்று என் காதில் கேட்கும்படியாகவே ஒருத்தன் உன்னைப் பற்றிச் சொல்லிக் கறுவிக் கொண்டு போனான்.”
செங்கமலம் யோசித்தாள். கருமேகக் காட்டினிலே நீ ஓர் கனக மின்னலடி என்று அந்த முரடனின் இனிய குரல் இன்னும் அவள் செவிகளில் ஒலிப்பது போலிருந்தது. திரும்பிப் போய்ப் பிரின்ஸிபாலைச் சந்தித்துத் தானே தன்னுடைய புகாரையும் அந்தக் கவிதையையும் வாபஸ் வாங்கிக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று நினைத்து, "அப்படிச் செய்வதும் இனிமேல் சாத்தியமில்லையே” என ஆற்றாமையோடு மனம் புழுங்கினாள் அவள்.“எப்படியும் அவன் தப்பித்துக் கொள்வான் அல்லது யாராவது ஒரு மாணவன் பழியைத் தான் ஏற்றுக் கொண்டு அவனைத் தப்பச் செய்து விடுவான்” என்று வந்திருந்த தோழி உறுதியாகச் சொன்னாள்.
மூன்று மணிக்கு விசாரணையின்போது பிரின்ஸிபால் அவளையும் கூப்பிட்டனுப்பிவிட்டார்.பிரின்ஸிபால் அறை வாசலில் கல்லூரி மாணவ மாணவிகள் திருவிழாக் கூட்டம் போல் கூடிவிட்டார்கள்.
உள்ளே பிரின்ஸிபால், வைஸ் பிரின்ஸிபால், தண்டபாணி, செங்கமலம்-நான்கு பேருமே இருந்தனர். பிரின்ஸிபாலின் மேஜைமேல் முத்து முத்தாக இண்டியன் இங்கி’ல் எழுதிச் சட்டம் போட்ட அந்தக் கவிதையும் இருந்தது. செங்கமலம் அதற்கு மிக அருகில் அதைப் படிக்க முடிந்த தொலைவில் தான் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. இன்னொரு பக்கம், வைஸ் பிரின்ஸிபாலின் மேஜைக்கு நேரே குற்றவாளியாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்த தண்டபாணியோ, ஸ்லாக் ஷர்ட்டின் காலரைக் கடித்தபடி குறும்புச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்தால் குற்றவாளி நிற்கிற மாதிரி பாவனையே இல்லை. மத்தியானம் இடைவேளையின்போதுதான் புதிதாக மாற்றிக் கொண்டு வந்த மாதிரி புதுப் பாண்ட், புது ஸ்லாக், அலை அலையாக வகிடெடுத்து வாரிய கிராப். சிரிப்பு உறங்கும் ஏளனமான பார்வை, ராஜா நிற்பது போல் கம்பீரம் - எல்லாம் வழக்கம் போலவே இருந்தன. பிரின்ஸிபாலும் வைஸ் பிரின்ஸிபாலுந்தாம் அவனுக்கு முன்னால் குற்றவாளிகள் உட்கார்ந்திருப்பதுபோல் பயந்துபோய் உட்கார்ந்திருந்தனர். அவன் நின்ற நிலை செங்கமலத்துக்கும் பெருமையாயிருந்தது. ராஜா! நீங்கள் எப்படியும் தப்பித்துக் கொண்டு விடுவீர்கள்’ என்று அப்போது அவனை நினைத்துத்தான் கண் கலங்கிக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் அவள் அவனை நினைத்துக் கண் கலங்குகிறாள் என்பது அங்கே யாருக்குப் புரியப் போகிறது?
விசாரணை ஆரம்பமாயிற்று. பிரின்ஸிபாலின் இடிமுழக்கக் குரலின் ஒலி கணிரென்று ஒலிக்க ஆரம்பித்தது. "மிஸ்டர் தண்டபாணி!”
“யெஸ் ஸார்.”
“நான் கேட்கப் போகிற கேள்விக்குப்பதில் சொல்.”
“சரி ஸார். சொல்கிறேன்.”
“இந்தக் கவிதையை நீயே எழுதிச் சட்டம் போட்டுச் செங்கமலத்திடம் இன்று காலை நீ நேரில் கொடுத்தாய் அல்லவா?”
“சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நானே எழுதி நானே கடைக்குப் போய் நானே பக்கத்திலிருந்து சட்டம் போட்டுக் கட்டிக் கொண்டு வந்து இவளிடம் கொடுத்தேன் ஸார். அப்புறம்” அவன் பதிலைக் கேட்டுச் செங்கமலம் அப்படியே அயர்ந்து போனாள்! அவளுக்குத் தலை சுற்றியது. அவள் நினைத்ததற்கு நேர்மாறாக எல்லாம் முடிந்துவிட்டது.
“ஆல் ரைட்! நீங்கள் ரெண்டு பேரும் போகலாம்.”
எல்லாம் சுருக்கமாக முடிந்துவிட்டது. தண்டபாணி சிரித்துக் கொண்டே போய்விட்டான்.
மறுநாள் தண்டபாணியை ‘டிஸ்மிஸ்’ செய்துவிட்டதாகக் காலேஜ் விளம்பரப் பலகையில் அறிக்கை தொங்கியது. செங்கமலம் அன்று கல்லூரி வகுப்புக்கே போகவில்லை. காலையிலிருந்து ஒரே தலைவலியும் ஜூரமுமாகப் படுத்திருந்தாள்.
பகல் பன்னிரண்டரை மணிக்கு விடுதிப் பணிப்பெண் வந்து, “நேற்று இராத்திரி கூப்பிட்டார்களே, அதே ஹைஸ்கூல் தோழி உங்களோடு பேச வேண்டுமென்று டெலிபோனிலே கூப்பிடுகிறார்கள் அம்மா. உங்களுக்கு உடம்பு சரியில்லையென்று சொல்லிவிடட்டுமா? நீங்களே வந்து பேசப்போகிறீர்களா?” என்று கேட்டாள்.
செங்கமலம் போர்வையை உதறிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து ஓடினாள்.
“செங்கமலம் பேசுகிறேன்.”
“கருமேகக் காட்டினிலே... நீ ஒர் கனக மின்னலடீ...” என்று எதிர்ப்புறத்திலிருந்து பாட்டுக் கேட்டது.
செங்கமலம் டெலிபோனில் அழுதே விட்டாள்; "நீங்கள் அதை ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது. அதில்தான் உங்கள் கையெழுத்தே இல்லையே! நான்தான் ஏதோ ஆத்திரத்தில் புத்தி கெட்டுப்போய் அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டேனென்றால் நீங்களுமா அப்படி உண்மையைச் சொல்ல வேணும்?”
“பொய் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் செங்கமலம். ஆனால் அந்தப் பாழாய்ப் போன காலேஜிலே ஐயா ஒருத்தரைத் தவிர வேறே எந்த முட்டாளுக்கும் அத்தனை அழகாகக் கவிதை எழுதத் தெரியாதே, நீ என்ன நினைக்கிறே?”
செங்கமலம் டெலிபோனைக் கீழே வைத்தபோது அவள் கண்களிலிருந்து மளமளவென்று நீர் பெருகியது. எதற்காக அவனை வெறுக்க வேண்டுமென்று தோன்றியதோ, அதற்காகவே அவனைக் காதலிக்க வேண்டும் போலவும் தோன்றியது அவளுக்கு. ஆனால் இனிமேல் அப்படித் தோன்றித்தான் என்ன பிரயோசனம்? (கலைமகள், தீபாவளி மலர், 1963)