நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஸெக்ஸ் அப்பீல்
92. ‘ஸெக்ஸ் அப்பீல்’
‘அறவிளக்கு’ பத்திரிகை மிகவும் கெளரவமான குடும்பப் பத்திரிகை என்று பெயர் பெற்று, அந்தக் கண்ணியமான பெயரைக் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் ‘தமிழ்நாட்டு ஆஸ்தீகப்’ பெருமக்களிடமும் ‘உயர்ந்த’ குடும்பப் பெண் மக்களிடமும் நிலைத்த விதத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. அதன் ஆசிரியர் உயர்திருவாளர் சிவகாமிநாதன் அவர்கள் ‘கெளரவமான குடும்பப் பத்திரிகை என்பதற்கு ஏதாவது இலக்கணம் வேண்டுமானால் நாங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிற ‘அறவிளக்கு’ மாத இதழைப் பாருங்கள்; கெளரவத்துக்கும் கண்ணியத்துக்கும் எடுத்துக்காட்டாக அதை நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம்; ‘அறவிளக்கி’ல் வருகிற எந்தக் கதையைப் பற்றியும் ,நீங்கள் உங்கள் தாயுடனும், சகோதரியுடனும் கூடத் தாராளமாகப் படித்துப் பேசி விவாதிக்க முடியும்; உங்கள் தாயுடனோ, சகோதரியுடனோ நீங்கள் பேசி விவாதிக்கக் கூசுகிற எந்த விஷயத்தையும் நாங்கள் ‘அறவிளக்கி’ல் வெளியிடுவதேயில்லை’ என்று அடிக்கடி (தற்)பெருமையோடு சொல்லிக் கொள்வார். நெற்றியில் பட்டை பட்டையாகத் திருநீறு பூசி அதன் நடுவே குங்குமத் திலகமும் இலங்க, அறையில் கச்சம் கட்டிய கோலமும், வங்காளிகளைப் போல் ஜிப்பாவின் மேல் யோக வேஷ்டியாக அங்கவஸ்திரத்தை வலது தோளுக்கும் இடது இடுப்புக்குமாய்க் குறுக்கே போர்த்திய தோற்றத்தில் ‘அறவிளக்கு’ ஆசிரியரை நீங்கள் நேரில் சந்தித்தீர்களானால், அப்படியே அயர்ந்து போவீர்கள். அவரோடு போனால் போகிறதென்று ஒரு பத்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தீர்களோ இன்னும் நிச்சயமாய் அயர்ந்து போவீர்கள்! ‘காதல்’ என்கிற தமிழ் வார்த்தையே ‘சீப்’ (மட்டம்) என்பார் அவர்.
“வர வர ரைட்டர்ஸ் எல்லாம் ‘அஃப்ஸீனா’ (ஆபாசமாக) எழுதறதுன்னே கங்கணம் கட்டிண்டிருக்கா போலத் தோண்றது... பல புதுப் பத்திரிகைகள் எல்லாம் ‘ஸெக்ஸ் அப்பீலா’ப் படம் போட்டுச் சின்னஞ்சிறுசுகளைக் குட்டிச் சுவராக்கறதுக்குன்னே தலையெடுத்திருக்கு... பொது இடத்திலே கையிலே வச்சுண்டு பிரிச்சுப் படிக்கறதுக்குக் கூசணுங்கிற மாதிரி எல்லாம் படம் வரைய ஆரம்பிச்சுட்டா… ‘அறவிளக்கிலே’ நாங்க இந்த ‘ஸ்டண்ட்’ எல்லாம் பண்றதில்லே. நம்ம தர்மம் என்ன? பக்தி என்ன? எல்லாத்தையும் காத்திலே பறக்க விட்டுப் பிட்டு... மத்தவாளைப் போல ‘சீப்பா’ எறங்குறதுக்கு நான் ஆசைப்படலே…” என்பார்.
‘நம்ம ஜனங்களுக்கு நோபிள் அவுட் லுக்கே’ இல்லாமப் போயிடுத்து ஸார்! பாருங்கோ… இந்தப் பத்திரிகையிலே இதோ… அட்டையிலே ஒரு பெண்ணைப் போட்டிருக்கானே;... பானை பானையா... ரெண்டு மார்பைப் போட்டிருக்கான்... இப்பிடி நீரும் நானும். பார்க்கற உலகத்திலே யாருக்கு சுவாமி இருக்கு? வேணும்னே... ‘ஸெக்ஸ் அப்பிலு’காகத்தானே. இதெல்லாம் பண்றான்?
“கசங்காத மொட்டு, மஞ்சத்திலே ஒரு சிங்காரி, கணவனின் காதலி, மனைவியின் காதலன் என்றெல்லாம் பெயர் வைத்துப் புத்தகங்கள் போட்டு விற்கறா. இப்படியே போயிட்டிருந்துதோ, பிஞ்சு மனசுகள்... பாழாய்ப் போயிடும்...”
இப்படியெல்லாம் பேசுவதையோ, குறைப்பட்டுக் கொள்வதையோ, கேட்டு அறவிளக்கு ஆசிரியர் ஆசிரியர் நாதன் அவர்களை ‘ஒழுக்கச் சீலர்’ என்றோ, கடுமையான ‘டிஸிப்ளினேரியன்’ என்றோ தீர்மானமாகச் சொல்லிவிட முடியாது. 'யார் யாருக்கு எது எது பற்றாக்குறையோ அதைப் பற்றி மிகவும் வற்புறுத்திப் பேசிக் கொண்டிருப்பார்கள்’ என்பது போலத் தம் சொந்தப் பலவீனத்தை மறைத்துக் கொள்ளவும்கூட அவர் இப்படி வாய் ஒயாமல் அரற்றிக் கொண்டிருக்கலாம். இந்த நாட்டின் எல்லா முதலாளித்துவப் பத்திரிகைகளையும் போல் அறவிளக்கும் ‘புராக்ரஸி’ (அதிகார வர்க்கத்தின்) ஆட்சியில் சிக்கிக் கொண்டிருந்த ஒர் இரண்டுங்கெட்டான் பத்திரிகைதான். அந்தப் பத்திரிகையின் முதலாளிக்கு எத்தனையோ கம்பெனிகள். ஒர் உரத் தயாரிப்புக் கம்பெனி, இரண்டு பஞ்சாலைகள், ஒரு சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை இவ்வளவோடு தர்மத்தையும் காப்பதற்காக, அவர் ‘அறவிளக்கை’ நடத்திக் கொண்டிருந்தார். அந்த முதலாளியின் தொழில் நிறுவனங்களில் அவர் மானேஜிங் டைரக்டர். அவருடைய மச்சினன் ஒரு டைரக்டர், தம்பி எக்ஸிகியூடிவ் டைரக்டர், மாப்பிள்ளை ஒரு டைரக்டர், கடைசியாக அவருடைய அத்தை பிள்ளை ஒரு டைரக்டர். பத்திரிகை நிர்வாகமும் அதேமாதிரித் தான் நடைபெற்றுவந்தது.சிவகாமிநாதன் அதற்கு நிர்வாக ஆசிரியர்.முதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடாமல் ‘அறவிளக்கை’ ஒட்டிக் கொண்டு போகிற தந்திரம் அவர் ஒருவருக்குத்தான் தெரிந்திருந்தது என்பதாலோ, அல்லது யாராவது செய்ய வேண்டிய காரியத்தை அவர்தான் செய்து தொலைக்கட்டுமே என்ற அலட்சிய மனப்பான்மையினாலோ பத்திரிகையை அவரிடம் விட்டிருந்தார்கள். ‘குடும்பப் பத்திரிகை’ என்று அதன் கண்ணியத்தையும், கெளரவத்தையும் நிலைநாட்டுவதற்காகச் சிவகாமிநாதன் அதைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டு வந்த பெயரை உள்ளுர்க் ‘கிரிடிக்’குகளும், குறும்பர்களுமாகிய சிலர் மச்சினன், மாப்பிள்ளை, தம்பி, ஆகிய குடும்ப உறுப்பினர்களே நிர்வாகம் செய்யும் பத்திரிகை என்று விநோத வியாக்கியானம் செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ‘சிவகாமிநாதன்’ ஒரு மாதிரி மனிதர். ‘ஸ்நாபெரி’ (தன்னைத்தானே பகட்டாக உயர்த்திப் பேசிக் கொள்ளுதல்) என்பார்களே, அந்தக் குணம் அல்லது குற்றம் அவரிடம் உண்டு. தம்மைச் சமூகமும் மற்றவர்களும் நிஜமாகவே ஒரு கெளரவமான மனிதனாகவோ, ஆஸ்திகனாகவோ, கர்மசீலனாகவோ, மதிக்கிறார்களோ, இல்லையோ என்ற பயத்தின் காரணாகவே அவர் இப்படிப் பேசிக் கொண்டு நான் ஒரு கெளரவமான மனிதன்தான் என்பதை நிரூபித்துக் கொள்ள முயல்கிறாரோ என்று எனக்குள் ஒரு சந்தேகம் உண்டு. ஒருநாள் இந்த சிவகாமிநாதனுக்கும், எனக்கும் ‘ஆபாசம் என்பது என்ன?’ என்ற கேள்வியை மையமாக வைத்துக் காரசாரமானதொரு விவாதம் எழுந்தது. “எந்த உணர்ச்சியாயிருந்தாலும் சரி, அந்த உணர்ச்சியைப் பற்றிப் பரிபூரணமாகச் சொல்லவோ எழுதவோ தெரியாமல் அரைகுறையாகச் சொல்வதுதான் ஆபாசம். பரிபூரணமான ‘காதல்’ என்பது இலக்கிய குணம். அதைப் பரிபூரணமாகச் சொல்லத் தெரியாததுதான் ஆபாசம். நிச்சயமாக ஆபாசமாயிருப்பது எதுவோ அதில் அழகு இருக்க முடியாது. அதைப் போலவே நிச்சயமாக அழகாயில்லாதது எதுவோ அது ஆபாசமாகத்தானிருக்க முடியும். பெண்ணின் படத்தை வரைந்தால் அழகிய மார்புகளையும் சேர்த்துதான் வரைய முடியும் பெண்ணுக்கு அழகு இருப்பதுதான் இலட்சணம்.அழகில்லாததுதான் ஆபாசம். பெண்ணின் படத்தை அழகாக வரைவதே ஆபாசம் என்று ‘அறவிளக்கு’ பத்திரிகை ஆசிரியராகிய நீங்கள் நினைக்கிறீர்கள்! ஒர் அழகிய பெண்ணின் படத்தை அழகாகவும், எடுப்பாகவும், வரையாமலிருந்தால்தான் ஆபாசமென்று நான் வாதிடுகிறேன்.”
“நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் எல்லாப் பத்திரிகைகளையும் நிர்வாணப் பத்திரிகைகளாக மாற்றினால்தான் அழகு என்று ஆகும்!” .
இப்படி உடனே என் மேல் சீறினார் சிவகாமிநாதன். நானும் அவரைச் கம்மாவிடவில்லை.
“அப்படியில்லை மிஸ்டர் சிவகாமிநாதன்! ‘செக்ஸ் அப்பீல்’ என்கிற அம்சத்தை உங்களைவிட அதிகமாக வெறுக்கிறவன் நான். படத்தின் போலி அழகையும், நியாயத்தை மீறிய கவர்ச்சியையும் சாதனங்களாக ஆக்கிக் கொண்டு சிந்தனை இயக்கமாகிய பத்திரிகைகள் விற்பனைக்குப் போட்டியிடுவது எனக்கும் பிடிக்கவில்லை. ஒரு நோக்கமும் இல்லாமே ஒரு பெண் ஒர் ஆணைப் பலவீனப்படுத்துகிற கோணத்தில் தன் அழகை ஆபாசமாகக் காண்பித்துக் கொண்டிருக்கிறாற்போல் படம் வரைவதை விபச்சாரத்தைக் காட்டிலும் மட்டான தொழிலாக நான் நினைக்கிறேன். நிறைய விற்கிற எல்லாப் பத்திரிகைகளுமே இந்தக் காரியத்தை ஒரளவு செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒன்றை நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும். அழகிற்கும் ஆபாசத்திற்கும் உள்ள நுணுக்கமான வித்தியாசமே கடிகாரத்தில் சிறிய முள் ஒடுவதற்கும் பெரிய முள் ஒடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்! நிதானத்தை மீறினால் ஆபாசம்! அதுவே நிதானத்தோடு தான் நிற்கிற எல்லையிலே நின்றால் அழகு. உலகில் அழகு ஆபாசம் என்ற முரண்பட்ட விளைவுகள் இரண்டிற்கும் ஒரே விதமான பொருள்கள்தான் பெரும்பாலும் காரணமாயிருக்கின்றன. அழகின் எல்லையில்தான் ஆபாசம் தொடங்க இருக்கிறது. அழகு எல்லை மீறினால்தான் ஆபாசம். காதல் தன்மை அமையாத முழுமையாக அமையாத ஒரு காதல் கதையுங்கூட ஆபாசம்தான். பக்தித்தன்மை முழுதும் அமையாத அரைகுறை பக்தியும் ஆபாசம்தான் ‘காதல்’ என்ற உணர்வைப் பற்றி எழுதுவதே மட்டமென்று நீங்கள் கருதுவதாயிருந்தால் காளிதாஸ்னிலிருந்து பாரதியார் வரை காதலைப் பற்றி எழுதியிருப்பவர்கள் எல்லாம் ஆபாசமாகத்தான் எழுதியிருக்கிறார்கள் என்று கொள்கிறீர்கள் ‘ஸெக்ஸ்’ ஒன்று மட்டுமே ஆபாசமில்லை. ஸெக்ஸ் அப்பீல்தான் ஆபாசம். ஆபாசங்கள் எத்தனையோ விதத்தில் பெருகியிருக்கின்றன! உங்களுடைய ‘அறவிளக்கு’ பத்திரிகையில் ஒரு பரம பக்தர் பாகவதபுராணத்தைப் பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறாரே, அந்தப் பக்திக் கட்டுரைத் தொடரில் போன வாரம் கிருஷ்ணன் ஜல க்ரீடை செய்ததைப் பற்றி எழுதுகிற இடத்தில் கோபிகாஸ்திரிகளுடைய தனபாரங்கள் பருத்த செவ்விள நீர்க் காய்களைப் போலிருந்ததாகவும், அவற்றின் நுனியில் பவழ மொட்டுக்களைப் போல் காம்புகள் இருந்ததாகவும் அரைப் பக்கத்துக்கு மேல் அந்த விஷயத்தையே வருணித்துத் தள்ளியிருக்கிறார். வருணிப்பதைத் தவறென்று சொல்லவில்லை. அழகாகவும், நயமாகவும் வருணிக்கத் தெரியாததால் கொச்சையாக, நடுவார்ந்தரமாக வருணித்து, அந்த வருணைனையோ ஆபாசமாகப் பண்ணியிருக்கிறார். அது ‘ஸெக்ஸ் அப்பில்’ இல்லையா?
“பகவத் விஷயம்! அதைப் பற்றி எல்லாம் குறை சொல்லி இப்படி நீங்கள் நாஸ்திகவாதம் பேசினால் என்ன பண்ணுகிறது?”
“இருக்கலாம்! ஆனால் பகவத் விஷயத்தை நயமாக எடுத்துச் சொல்வதற்கும் ஒரு மனப்பக்குவம் வேண்டும். உங்கள் பத்திரிகையில் ‘பகவத் விஷயம்’ எழுதுகிறவருக்கு அது இல்லை.”
“ஆனால் நாங்க கண்டபடி ஆபாசமாகப் படமே போடறதில்லை. கெளரவமான படங்களாகத்தான் போடுறோம்.”
“நிச்சயமாக இல்லை! நீங்கள்தான் ஆபாசமாகப் படம் போடுவதில் முன் நிற்கிறீர்கள்! மற்றவர்கள் ஆபாசமாகப் படம் போடுவதாகச் சொல்லிக் கொண்டே அப்படிப் போடுகிறார்கள்! நீங்களோ கெளரவமாகப் படம் போடுவதாகச் சொல்லிக் கொண்டே ஆபாசமாகப் படம் போடுகிறீர்கள்! உங்கள் பத்திரிகையில் படமாக வருகிற பெண்கள் எல்லாம் ‘பெண்கள்’ என்று சுட்டிக் காட்டப்படுவதற்குரிய முக்கியமான அடையாளங்கள்கூட இல்லாமல் பேடிகளைப் போல் காட்சியளிக்கிறார்கள். இதுதான் நிஜமான ஆபாசம் என்று நான் சொல்லுகிறேன். உங்களைப் போல் பெண்களையும், அழகையும், காதலையும், வெறுக்கிற பத்திரிகைகளும்கூட ஆபாசம்தான்! பெண்களின் மார்பைப் பெரிதாகப் போடுவதனாலும் அசட்டுக் காதல் கதைகளை மட்டுமே அரைகுறையாக எழுதுவதனாலும், விற்பனையைப் பெருக்கிக் கொள்கிற பத்திரிகைகள் எவ்வளவு அதிக ஆபாசமாக நடக்கின்றனவோ அதே அளவு ஆபாசத்தோடுதான் வேறொரு விதத்தில் அசிங்கமாகி மாறுபட்டு நிற்கிறீர்கள் நீங்கள்! ‘அழகு’ என்ற எல்லைப் புள்ளியின் ஒருபுறம் நீங்களும், மற்றொருபுறம் அவர்களுமாக அதை நெருங்க முடியாமல் விலகி நிற்கிறீர்கள் என்றுதான் நான் சொல்வேன். உங்களைவிடப் படமே போடாமல் விஷயங்களை மட்டும் வெளியிடுகிற பத்திரிகைகள் எவ்வளவோ தேவலை, அவற்றில் நிச்சயமாக எந்த ஆபாசமும் கிடையாது. இயற்கையில் அழகாக இருக்கிற ஒரு பெண் அழகாகத் தோன்றுவது ஆபாசமில்லை. அழகில்லாத ஒரு பெண் தன்னைப் பெரிய அழகியாக நிரூபித்துக் கொள்ள முயன்று பகட்டுவது தான் ஆபாசம். இனஅழகு தவறில்லை! இனக் கவர்ச்சிக்கு முயல்வதுதான் தவறு!” என்று அடித்து கூறினேன் நான். “குடும்பப் பெண்களும், இளம் பிள்ளைகளும் குட்டிச்சுவராய்ப் போகத்தான் நீங்கள் இந்த வழி சொல்லுகிறீர்கள்.”
“ஒய்! பிதற்றாதீர்! நீர் சொல்லுகிற அந்த உயர்குடும்பத்துப் பெண்கள்தான் சுவாமி இத்தனை ஆபாசமான தோற்றங்களையும், அசிங்கமான அலங்கார முறைகளையும் கண்டுபிடித்து வளர்த்துப் பத்திரிகைப் படங்கள் வரைக்கும் ‘ஃபேஷன்’களாக அவற்றை அனுப்பியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அவர்களுடைய மானத்தைக் காப்பாத்தறத்துக்காகத்தான் நீர் மார்பில்லாத பேடிப் பெண்ணையும், மயக்கும் தன்மையில்லாத மங்கை நல்லாரையும் படமாக வரைவதாகப் பெருமைப்பட்டிருக்கிறீர்! கூலிக்காரக் குப்பனுடைய மனைவியும் சம்மட்டி அடிக்கிற சன்னாசியின் மகளும் அழகாயிருந்தால்கூட அப்படித் தாங்கள் அழகாயிருக்கிறோம் என்கிற உண்மையையே மறந்து அதை நிரூபிக்கவும் ஆசைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உம்முடைய மைலாப்பூர், மாம்பலம் அழகிகளும், அம்மாமிகளுமோ? பிரேஸியர்ஸ். ஃபோம் ரப்பர் திணித்த ப்ரேஸியர்ஸ் என்று விதம் விதமாக வாங்கிக் கட்டிக்கறதும், நாளுக்கொரு ‘ஹேர் ஸ்டைல்’ மாத்திக் கொண்டை போட்டுக்கறதுமாகத் தங்கள் அழகை - அல்ல - ஆபாசத்தை நிரூபித்துக் கொள்ள நாளும் முயலுகிறார்கள். நீர் என்னடான்னா, அவாளோட கெளரவத்தைக் காப்பாத்தறதாகச் சொல்லிக்கிறீர்! உம்ம அறவிளக்கிலே வருகிற பெண்களின் படத்தைப் பார்த்துக் கெட்டுப் போகாதவாள் எல்லாம்கூட அதைப் படித்துக் கொண்டிருக்கிற உயர் குடும்பப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்து நிச்சயமாகக் கெட்டுப் போக முடியுமே ஐயா?”
“... என்னமோ ஸார்! உங்க வாதமே புதுமையாயிருக்கு. நான் என்ன பதில் சொல்றதுன்னே நேக்குப் புரியலே...”
“ஏன் புரியப் போகிறது? ஆண்மையும் ஒரு கம்பீரமான குணம் பெண்மையும் ஒரு கம்பீரமான குணம். பேடிமை - அலித்தன்மை இருக்கே... அது குணத்திலேயே அடங்காத பிறவி ஆபாசம்! நீர் பத்திரிகை நடத்துகிற இலட்சணமும் அப்படித்தான் இருக்கு!”
இதைக் கேட்டுச் சிவகாமிநாதன் அவர்களுக்கு என்மேல் அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. என்னைக் ‘கன்னாபின்னா’ என்று வாயில் வந்தபடி திட்டிவிட்டுப் போய்விட்டார். இது நடந்து ஒரு வாரத்துக்குப் பின் - மைலாப்பூரிலே எங்கே ஒரு மூலையில் ஏதோ ஒரு மாதர் சங்கத்திலே ஆண்டு விழா ஒன்று நடந்தது. அந்த விழாவில் உயர்திரு சிவகாமிநாதன்-ஆசிரியர்-அறவிளக்கு தலைமையில் நான் சொற்பொழிவாற்றினேன். லிப்ஸ்டிக் பூச்சு, அஜந்தா, குதிரைவால் ஹேர்ஸ்டைல்கள், சொந்தமாகவே செழித்த மார்புகள், ஃபோம் ரப்பர் திணித்த ஃப்ரேஸியர்ஸ்களால் நிமிர்ந்த கச்சுக்கள் - என்று தங்கள் அழகை நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் ஆபாசமாகத் தோன்றிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான உயர் குடும்பத்துப் பெண்களுக்கு முன்னே இந்த ஆண்டு விழாக் கூட்டத்தில் பெண்மையின் சிறப்பைப் பற்றியும், புனிதத்தன்மையைப் பற்றியும் வேத வேதாந்த உபநிஷத மேற்கோள்களுடன் ஒரு மணிநேரம் தலைமையுரை கூறியருளினார் திரு.சிவகாமிநாதன். நான் அரைமணி நேரம் ஏதோ பேசினேன். பேசிவிட்டு உட்கார்ந்ததும் என் அருகே தலைவராக வீற்றிருந்த சிவகாமிநாதனிடம், “இந்தக் கூட்டத்திலே இருக்கிற நாலு பெண்களைப் பார்த்துக்கெட்டுப்போவதைவிட எந்த விதத்திலும் அதிகமாகக் கெட்டுப் போவதற்கு ஜனரஞ்சமாக ஒரு தமிழ்ப் பத்திரிகையில் வருகிற படங்கள் தூண்டிவிட முடியாது” என்று கூறினேன் நான். அவர் கோபத்தினால் எனக்குப் பதிலே சொல்லவில்லை. மேடைக்கு நேரே எதிர்நாற்காலியில்-கீழே முதல் வரிசையில் ‘ஸெக்ஸ் அப்பீல்’ என்ற பதத் தொடர்ச்சிக்கே நிரூபணம் போல் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து, அந்தப் பெண் தன்னைச் செயற்கையாக அலங்கரித்துக் கொண்டு எடுப்பாகவும் திமிராகவும் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்து எரிச்சலோடு நான் மீண்டும் சிவகாமிநாதன் அவர்களின் காதருகே சென்று, “அதோ அந்த அம்மாளைப் பார்த்தீரா? பேரன் பேத்தி எடுத்துப் பாட்டியான பிறகும் என்ன திமிரான அலங்காரம் ஐயா? ‘ஸெக்ஸ் அப்பீலுக்கு’ இதைவிட வேறே ஃபெர்ஸானிபிகேஷன் (உருவகம்) வேண்டவே வேண்டாம்.” என்றதும் அவர் முகம் பேதிக்குச் சாப்பிட்ட மாதிரி ஆகிவிட்டது. “இரைந்து பேசாதீர்! அவள்தான் என்னுடைய சம்சாரம்” - என்று வெட்கத்தோடு சிவகாமிநாதன் எனக்குப் பதில் கூறியதும்...
"ஐ ஆம் வெரி. ஸாரி. எக்ஸ்க்யூஸ். மீ..” என்று அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதைத் தவிர என்னால் வேறு எதுவுமே சொல்ல முடியவில்லை.நான் அடைந்த திகைப்பு அவ்வளவு இவ்வளவு இல்லை.
அழகைக்கூட ஆபாசம் என்று வெறுக்கிற 'ஸினிக்'குகளில் ஒருவராக அவர் ஏன் ஆனார் என்ற மர்மம் அவருடைய தர்மபத்தினியைப் பார்த்ததுமே இன்று எனக்குப் புரிந்துவிட்டது! ஐயோ பாவம், சிவகாமிநாதன்!
(தாமரை, நவம்பர், 1963)