நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/பாக்கிப் பணம்

விக்கிமூலம் இலிருந்து

142. பாக்கிப் பணம்

டைசி வாடிக்கைக்காரர் வரையில் அவர் நினைத்தது நடக்கவில்லை. இந்தக் கடைசி வாடிக்கைக்காரரையும் தவற விட்டு விட்டால், அப்புறம் நாளை விடிகிற வரை பணத்துக்கு வேறு வழியே இல்லை. நல்ல வேளையாகக் கடைசி வாடிக்கைக்காரன் ஓர் ஆந்திராக்கார ஆளாக இருந்தான். கடையிலும், கேஷ் மேஜை அருகிலும் கூட்டம் குறைவாக இருந்தது. வந்து சிக்கிய ஆளும் சரியான இளிச்சவாயனாக இருப்பான் போலத் தோன்றியது. கொஞ்சம் கூடப் பயமோ, அடக்கமோ இல்லாமல் ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்தும், பிரித்தும், கலைத்தும் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த வாடிக்கைக்காரன். நடுநடுவே எண்ணிக்கை மறந்து போய் விட்டதனாலோ, படிப்பறிவின்மையினாலோ அல்லது பணத்தைப் பற்றிய அலட்சியத்தாலோ எதனாலென்று தெரியவில்லை - அந்த வாடிக்கைக்காரன் அப்படி அப்பாவியாக நடந்து கொண்டான். .

சிமெண்ட், கட்டிட சாமான்கள், சானிடரி பொருள்கள், இரும்புச் சாமான்கள் மொத்த விற்பனை செய்யும் வியாபாரக் கடை அது. வடிவேலு அங்கே விற்பனை நிர்வாகி. பல ஆண்டுகளாகப் பழந்தின்று கொட்டை போட்டவர். வேறு வார்த்தைகளில் சொல்லலாமானால் பழைய பெருச்சாளி. இப்படி யாராவது அப்பாவிகள் சிக்கிக் கொண்டால் நூறு, இருநூறு பணம் பண்ணத் தயங்காத ஆள். எப்படி ஏமாற்றுவது என்பதிலும் அத்துபடி ஆனவர்.

வடிவேலுவுக்குத் தோதாகக் கேஷியரோ, பில் போடுகிற ஆளோ அருகில் இல்லை. கடை மூடுகிற நேரம். கேஷியர் முகம் கை கால் கழுவிப் புறப்படத் தயாராவதற்காகக் கடைக்குப் பின்புறமுள்ள கிணற்றடிக்குப் போயிருக்க வேண்டும். பில் போடுகிற பஞ்சாட்சரம் பக்கத்தில் காப்பி குடிக்கப் போயிருந்தான். சாமான் எடுத்துத் தருகிற ஆட்கள் மட்டும் வாடிக்கைக்காரருக்காகச் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். . . . ... - . . . . .

வடிவேலுவின் மனம் ‘நயினார்’ வந்து இரகசியமாகச் சொல்லி விட்டு போன புது ‘உருப்படி’யைப் பற்றிய கற்பனையில் ஈடுபட்டிருந்தது. ‘நயினார்’ சொல்லி விட்டுப் போன வேளையோ அல்லது வடிவேலுவின் பலவீனமான நிலையோ தெரியவில்லை. அதே ஞாபகமாக இருந்தது. எப்போது கடையைப் பூட்டி விட்டுப் பணத்தோடு அங்கே போய் அந்த ‘எவளோ ஒருத்தி’யின் மடியில் தலையைச் சாய்க்கப் போகிறோம் என்று உள்ளே நைப்பாசை அரித்துக் கொண்டிருந்தது. :

எப்போதுமே இந்த விவகாரங்களில் ‘நயினார்’ எக்ஸ்பெர்ட். வடிவேலுவின் பிரியம், டேஸ்ட் எல்லாம் அவனுக்கு அத்துபடி. எப்போதாவது வந்து போகும் கம்பெனி மானேஜிங் டைரக்டர், வடக்கே இருந்து வரும் வியாபாரப் பெரும் புள்ளிகளுக்கு ‘ஏற்பாடு’ செய்ய, நயினாரின் தயவை நாடப் போக முடிவில் அது வடிவேலுவுக்கும் பழக்கமாகி விட்டது. அவ்வப்போது ஆசைத் தீயை மூட்டி விட ‘நயினார்’ இருக்கவே, கேள்விமுறையில்லாமல் ஆசையும் கொடிகட்டிப் பறந்தது வடிவேலுவுக்குள்ளே.

தங்கள் கம்பெனி விருந்தாளியாக வந்து தங்கும் பெரும்புள்ளிகளுக்குப் ‘புட்டிகளும் குட்டி’களும், ஏற்பாடு செய்யவென்று தான் பழக்கப்படுத்திக் கொண்ட நயினார் நாளடைவில் அதே ஏற்பாட்டை வடிவேலுவுக்கும் செய்யத் தொடங்கி விட்டான். பெரிய வாடிக்கை தருபவர் என்ற முறையில் வடிவேலுவுக்குக் கொஞ்சம் தாராளமாகவே இதில் சலுகையும் காண்பித்தான்.

வடிவேலுவின் சிந்தனை கலைந்தது.

“பில்லு வேண்டியதில்லே. டோட்டல் சொல்லுப்பா” என்றான் அந்த வாடிக்கைக்காரன். அதையும் ,இதையும் எழுதிக் கூட்டிக் கழிப்பது போல் பாவனை செய்து விட்டு வந்த கூட்டல் தொகையோடு மேலும் ஒரு நூற்றிருபது ரூபாய் சேர்த்து, இரண்டாயிரத்திப் பதினேழு ரூபாய் இருபத்தேழு காசு ஆவதாகத் தெரிவித்தார் வடிவேலு.உண்மையில் ஆன தொகை ஆயிரத்துத் தொள்ளாயிரத்துச் சொச்சம்தான். ஒரு நம்பிக்கை வருவதற்காகத் துல்லியமாகக் கூட்டிச் சொன்னதுபோல் இரண்டாயிரத்துப் பதினேழு ரூபாய் இருபத்தேழு காசு என்பதாகச் சொல்லியிருந்தார். ஆந்திரா ஆள் கையிலிருந்த பணத்தை வடிவேலுவின் முன் வைத்து விட்டு, அதை வடிவேலுவே எண்ணுகிற வரை காத்திருந்தான்.

வடிவேலுவின் சாமர்த்தியம் எப்போதுமே சோடை போனதில்லை.

“நீ என்னா கொடுத்தே?”

“ரெண்டாயிரத்துப் பத்து இருக்கு-தய சேசி. கொஞ்சம் கமிஷன் ஈவண்டி…”

“சரி போப்பா.. ஏழு ரூபா இருபத்தேழு பைசா உனக்குக் கமிஷனா வச்சுக்க. நீ அதைத் தர வேண்டாம்…”

- உண்மையில் அவன் கொடுத்த நோட்டுக் கற்றைகளை எண்ணினால், இரண்டாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் இருந்தது. அவனே இரண்டாயிரத்துப் பத்து என்று சொல்லியதனால் வடிவேலுவுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. ஞாபக மறதியாலோ, அல்லது எண்ணிக்கை தவறுதலினாலோ அந்த ஆள் இருபத்தைந்து ரூபாயைக் குறைத்துக் கணக்கிட்டிருக்க வேண்டும். சரியான வாத்து மடையன்.

மனச்சாட்சி உறுத்தியதாலோ என்னவோ, மறுபடியும் எண்ணினார் வடிவேலு. சந்தேகமே இல்லை. இரண்டாயிரத்து முப்பத்தைந்து ரூபாய்தான் இருந்தது. நூற்று இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் சுளையாக லாபம்.

“பாக்கி...” வாடிக்கைக்காரன் இப்படித் தொடங்கி என்ன சொல்ல வந்தானோ தெரியவில்லை.அதற்குள் வடிவேலுவே முந்திக்கொண்டு அவனை இடைமறித்து, “பாக்கியாவது ஒண்ணாவது? ஏ.மி. பாக்கி? பாக்கிலேது சாமி” என்று தனக்குத் தெரிந்த அரைகுறைத் தெலுங்கில் முடித்துவிட்டார். - “நமஸ்காரமண்டி' - என்று ஒரு பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு அந்த ஆந்திராக்காரன் விடைபெற்றுப் போய்ச் சேர்ந்தான். அவன் தலை மறைந்ததும் பில் எழுதிக் கிழித்துப் போட்டுவிட்டுக் கடைக்குச் சேரவேண்டிய பணத்தை ஒழுங்காகக் கல்லாவில் எண்ணிப் போட்டுவிட்டு மீதியைச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டார் வடிவேலு. கடைக்கணக்கு முடித்து அக்கவுண்ட் புக், டே புக், கேஷ் ரிஜிஸ்தர் எல்லாவற்றிலும் கையெழுத்துக்கூடப் போட்டாயிற்று. கடையையும் பூட்டிவிட்டார்கள். வடிவேலு கம்பெனியின் மானேஜர் என்ற முறையில் சாவிக் கொத்தும் அவர் கைக்கு வந்துவிட்டது. - மனத்தில் இன்பக் குறுகுறுப்பும் ஆசைத் தவிப்பும் தாங்கமுடியவில்லை. கடையிலிருந்து கிளம்பிய குமாஸ்தா கேஷியர் முதலியவர்களோடு சேர்ந்து போகாமல் நயினாரைத் தேடிச் செல்வதற்காக வேண்டுமென்றே பின் தங்கினார் வடிவேலு. "சார்! வேற யாரும் வரலேன்னா என்னைக் கொஞ்சம் ராமபவன் வாசல்லே விட்டுடlங்களா?' என்று வடிவேலுவின் ஸ்கூட்டரில் லிஃப்ட்கேட்டுக் குழைந்தார் பில்போடுகிற பஞ்சாட்சரம். “நான் இன்னைக்கி ராமபவன் பாதையாப் போகலே. இங்கே ஒருத்தரைப் பார்க்கணும். வெயிட் பண்ணப் போறேன்.” - "அப்பிடியானா வேண்டாம் சார் நான் வரேன்” பஞ்சாட்சரம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். வடிவேலு ஸ்கூட்டர் அருகே தயங்கி நின்றார். பத்து நிமிஷத்தில் நயினாரே அவரைத் தேடி அங்கு வந்தான். கையைப் பாட்டில் மாதிரி அடையாளம் காட்டி "அதுகூடக் கிடைச்சுது சார் கொண்டாந்திருக்கேன்” என்றான் நயினார். - “சபாஷ்” என்றார் வடிவேலு. "அங்கே அந்த வீட்டுக்குப்போகவேணாம் சார்! மாசக் கடைசி. திடீர்னுபோலீஸ் ரெய்டு வந்தாலும் வரும். ரெய்டு இல்லாட்டியும் அதைச் சொல்லி மிரட்டியே அதிகப் பணம் பறிச்சுடுவாளுவ கடைச்சாவி உங்ககிட்டத்தானே இருக்கு? நீங்க கடையைத் திறந்து உள்ளார இருங்க.நான் போயி ஒரு டாக்ஸியிலே இட்டாந்துடறேன். சோடா வாங்கிக் குடுத்துட்டுப் போறேன். சிப்ஸாம் கொண்டாரேன்; பாட்டிலை. முடியுங்க. அதுக்குள்ளே உருப்படி வந்துடும். என்னா, நான் சொல்றது. சரிதானே?" . . . . “ரொம்ப சரி. நயினார்! நான் இங்கே கடையிலேயே இருக்கேன். இந்தா டாக்ஸிக்குப் பத்து ரூபா வச்சுக்க, உள்ளே வந்து பாட்டிலைக் கொடுத்தப்புறம் கிளம்பு.” - - -  வடிவேலு கடைக் கதவைத் திறந்தார். நயினார் சோடாவும், வறுவலும் வாங்கப் போனான். ஐந்து நிமிஷத்தில் வாங்கிக் கொண்டு திரும்பியும் வந்துவிட்டான்.

“பாட்டில்காரன் தெருமுனையிலே காத்திருப்பான் சார்! முதல்லே அதைக் கணக்குத் தீர்த்துக் குத்துடு சார்” - என்றான் நயினார். அவன் ஃபாரின் பிராந்தி குவாட்டர் பாட்டிலுக்காகக் கேட்ட அதிகத் தொகையை மறு பேச்சுப் பேசாமல் எண்ணிக் கொடுத்தார் வடிவேலு.

“சிப்ஸ்", சோடா, எனக்கு டீக்காசு” - என்று தரகனுக்கே உரிய குணத்தோடு விடாமல் மேற்கொண்டு அரித்த நயினாரிடம் மேலும் ஒரு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினார் வடிவேலு. பொறுமையிழந்து கொண்டிருந்தார் அவர். நயினார் புறப்பட்டுப் போனான்.

வடிவேலு கடைக் கதவைத் தாழிட்டுவிட்டுக் குடிக்கத் தொடங்கினார்.

மணி இரவு ஒன்பதரை. முன்பனிக் காலமாகையினால் தெரு வெறிச்சோடி விட்டது. எப்போதாவது ஊடறுத்துச் செல்லும் ஒரு பஸ், லாரி, கார் ஓசையைத் தவிர அந்தச் சாலையில் அதிகச் சத்தமில்லை.

வாசலில் டாக்ஸி வந்து நிற்கும் ஓசையை வடிவேலுவின் செவிகளும் மனமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தன. உடலின் வெறி ஏறிய சூடு, குடிபோை ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? .

மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம் இருக்கும்போது வாசலில் டாக்ஸி வந்து நின்றது. நேரே வாயிற்கதவைத் திறந்து பார்க்கத் தயங்கி ஜன்னல் வழியாக முதலில் எட்டிப் பார்த்தார் வடிவேலு. முதலில் நயினார்தான் டாக்ஸியின் முன் nட் - அதாவது டிரைவர் பக்கத்து ஆசனத்தின் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான்.

முகப்பருகே வந்து நயினார் மெதுவாகவும், இரகசியமாகவும் கடைக் கதவைத் தட்டினான். வடிவேலு கதவைத் திறந்தார்.

“வந்தாச்சு. இட்டாரட்டா சார்?”

"சட்னு கூட்டிக்கிட்டு வா. அக்கம் பக்கம் கவனிச்சு யாரும் பார்க்கிறதுக்குள்ளே உள்ளே அனுப்பு.”

“சார் வந்து..?”

“என்ன வந்து.”

“டாக்ஸிக்குப் பணம் பத்தலே. ஒரு ரெண்டு ரூவா இருந்தாக் குடு சார்.”

"தெரியுமே? உன் வழக்கம்.” இரண்டு ரூபாயை நயினாரிடம் நீட்டினார் வடிவேலு. டாக்ஸியிலிருந்து இறங்கி உயரமும் செழிப்புமாய் வளைகுலுங்க வாசனைகள் கட்டியங்கூற ஒரு பெண்ணுருவம் அவசரமும், பதற்றமுமாக ஓடிவந்து நின்று போர்த்திக் கொண்டிருந்த சால்வையை நீக்கியதும் பாதாதி கேச பரியந்தம் விழுங்கி விடுவதுபோல் அந்த உருவத்தைப் பார்த்தார் வடிவேலு. திருப்தியாயிருந்தது. ஒடத் தயாராக நிற்கும் பந்தயக் குதிரை போல் திமிறி நிற்கும் வாளிப்பான உடல் வீங்க வேண்டிய இடங்களில் அளவாக வீங்கித் தணிய வேண்டிய இடங்களில் அளவாகத் தணிந்த அங்கங்கள், வடிவேலுவின் நரம்புகள் முறுக்கேறின. அவளது முகமும், இதழ்களும், சிரிப்பும்கூட நல்ல வசீகரம்தான். தோற்றத்தை எடுத்துக்காட்டுவதுபோல் வடிந்த கூரிய நாசி. காமவேட்கைநிரம்பி வழியும் கருவிழிகள். அவள் நின்றாள். அல்ல, அந்த வசீகரத்தேர் நின்றது.

"உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது?”

“நாகு அரவம் தெலீது.”

(எனக்குத் தமிழ் தெரியாது)

அவள் குரல் சன்னமாக இனிதாகத் தெலுங்குச் சங்கீதம் போலிருந்தது. பாஷை தெரியாமல் அவளோடு சகஜமாகப் பேசமுடியாது என்று தெரிந்தது.ஆனால் என்ன? அவள் உடலோடு விதம் விதமாகப் பேசமுடியுமே. பேசிச்சரசமாடிச் சிரித்துக் குலாவ அவருக்கும் நேரம் இல்லை. வாயால் பேச வேண்டிய அவசியமும் இல்லை.

டாக்ஸியை அனுப்பி விட்டு நயினார் உள்ளே வந்தான்.

"நா போறேன் சார்! எனக்கு வேறே கிராக்கிங்க காத்துக் கிட்டிருக்கும். எனக்குக் குடுக்கிறதைச் சட்டுனு குடுத்தனுப்புங்க. அதுக்கு அதே கேட்டு வாங்கிக்கும், தகராறு பண்ணாது. ரொம்ப நல்ல மாதிரி. ஒன் அவருக்குச் சொல்லி இட்டாந்திருக்கேன். இப்பத்தான் புதிசு சார் சூது வாது எதுவும் தெரியாது. ஊர் கடப்பை.”

வடிவேலு நயினாருக்குப் பணத்தைக் கொடுத்தார். அவன் மேலும் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். மேலும் ஏதோ போட்டுக் கொடுத்தார் வடிவேலு. அப்புறமும் விடாமல் அரித்தான் அவன். மேலும் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். மேலும் ஏதேதோ சில்லறைக் காசுகளைக் கையில் வந்தபடி வாரி அவன் கையில் திணித்தார் வடிவேலு. அவன் வாங்கிக் கொண்டு ஒருவழியாகப் புறப்பட்டான்.,

“நா வரேன் சார். ஒன் அவுருக்கு மேலே வேண்டாம். கரீக்டா அனுப்பிடுங்க. அதுவே ரிக்ஷா பார்த்துப் போயிக்கும்.”

நயினாரை அனுப்பிவிட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்துத் தாழிட்டார் வடிவேலு. கடையிலேயே பின் பகுதியில் வியாபார சம்பந்தமாக வருவோர் போவோர் தங்க ஒர் அறை உண்டு. அதில் டன்லப்பில்லோ மெத்தையோடு கூடிய கட்டில் - வாஷ்பேஸின் எல்லாம் உண்டு.

அவளைத் தழுவினாற் போல அந்த அறைக்குத் தள்ளிக் கொண்டு போனார் வடிவேலு. தகராறு, முரண்டு. மறுப்பு எதுவுமில்லாமல் இழுத்த இழுப்புக்கு விளையாடக் கிடைத்த ஒரு மிருதுவான ரப்பர் பொம்மை போலச் சிரித்தபடி தாராளமாகப் பழகினாள் அவள் உண்மையிலேயே புதுசு என்றுதான் தெரிந்தது. நாணமும், கூச்சமும்கூட அப்படி அப்படியே மெருகு குன்றாமல் இருந்தன.வடிவேலுவுக்கு ஒரே கும்மாளம்தான். அவளை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இரவு பதினொரு மணி வடிவேலு உடைகளைப் பழையபடி அணிந்து கொண்டு முகம் கழுவியபின் கடையின் முன்புறம் கேஷ் மேஜை அருகே வந்தார். அதற்கு முன்பே அங்கு வந்து தயாராக நின்றிருந்த அவளிடம், "இந்தா வேனுங்கிறதை எடுத்துக்க." என்று தம் மணி பர்ஸை நீட்டினார் வடிவேலு. அவள் மேல் அவருக்கு மிகவும், பிரியமும் அனுதாபமும் ஏற்பட்டு இருந்தன. மணிபர்ஸிலும் அறுபத்தைந்து ரூபாயோ என்னவோதான் இருந்தது. அவர் கூறியது அவளுக்குப் புரியவில்லை. மேலும் ஜாடை செய்து ஒருவிதமாகப் புரிய வைத்தார்.

ஒருவாறு புரிந்து கொண்ட அவள் மணிபர்ஸை எடுத்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை மட்டும் சரியாக எண்ணி எடுத்துக் கொண்டு,"இதிகோபாக்கிடப்புலு தீஸ் கோண்டி” (இதோ பாக்கிப் பணம் எடுத்துக்கொள்ளுங்கள்) என்று அவரிடம் திருப்பிக் கொடுத்தாள்.

“எனக்குப் பாக்கிப் பணம் எதுவும் வேண்டியதில்லை. பூராவும் நீயே எடுத்துக்க” என்று வார்த்தையால் சொல்லவும் சொல்லிச் சைகையும் வேறு செய்தார் அவர்.

அவள் பிடிவாதமாக மறுத்தாள். “தீனிகி பைஸா தீஸ்கோனிலேவு." (இதுக்குமேலே நான் பைசா வாங்கமாட்டேன்) இப்படிச் சொல்லியபடியே அதே கேஷ் மேஜையில் பாக்கிப் பணத்தை மணிபர்ஸோடு மீண்டும் திருப்பி வைத்தாள் அவள்.

வடிவேலுவுக்கு என்னவோ போல் இருந்தது. யாரோ ஒருவருக்குத் தர வேண்டிய பாக்கியை ஏமாற்றி மீதம் பிடித்துத்தான் அவளுக்குக் கொடுக்கிறார் அவர். அவளோ அவருக்கு ஒழுங்காக ஏமாற்றாமல் பாக்கியைத் திருப்பித் தந்து கொண்டிருக்கிறாள்!

தன்னிடம் சிறிதும் பாக்கி இல்லாமல் தீர்ந்து போய்விட்டஏதோ ஒரு நல்ல குணம் அவளிடம் அப்படியே இன்னும் இருப்பது புரிந்தது அவருக்கு.

அதுதான் நாணயம் எந்த மேஜையருகே அவர் தம் நாணயத்தை இழந்தாரோ அந்த மேஜையருகிலேயே ஒரு சிறிதும் அதன் மாற்றுக் குறையாமல் நின்றாள் அவள். உடலை விற்பவளானாலும் மனத்தில் நாணயத்தோடு நின்றாள் அவள். இதில் யார் செய்வது விபசாரம்? என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார் வடிவேலு.