நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/பூக்களை யாரும மிதிக்கக்கூடாது

விக்கிமூலம் இலிருந்து

141. பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது

மிஸஸ் மாத்யூ அந்தக் கான்வென்ட் பள்ளியிலிருந்து வெளியேறித் தனக்கென்றே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்குவதென்று முடிவு செய்து விட்டாள். கன்னிமாடங்களையும், மத சம்பந்தமான நிறுவனங்களையும் சார்ந்து வேலை பார்ப்பதில் சொந்தமாக அதிக லாபம் சம்பாதிக்க முடியாமலிருந்தது. சேவை மனப்பான்மை என்பது மிஸஸ் மாத்யூவுக்கும், அவள் குடும்பத்தினருக்கும் என்றுமே ஒத்து வந்ததில்லை. அளவற்றுப்பெருகும்.ஆசைகளுக்கும்,சேவை மனப்பான்மைக்கும் பொருத்தமில்லாதிருந்தது. சேவை மனப்பான்மையால் வருமானம் ஒன்றும் பெருகவில்லை.

‘புதிய நர்ஸ்ரி பள்ளிக்கூடம், எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புக்கள் தொடங்கப்படும்’ என்று போர்டு மாட்டி விட்டு, நகரில் எந்த மூலையில் தொடங்கினாலும் சேருவதற்குக் குழந்தைகள் இருப்பார்கள் என்பதை மிஸஸ் மாத்யூ புரிந்து வைத்திருந்தாள்.

அரசியல்வாதிகள் இங்கிலீஷை எதிர்க்க, எதிர்க்க ஜனங்களிடம் தங்கள் குழந்தைகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வம் பெருகி வருவதையும் அவள் கவனித்திருந்தாள்.

தங்கள் வருமானத்தில் மிகவும் மேல் நிலையில் உள்ளவர்கள் உதகமண்டலம், கோடைக்கானல், கூனூர் என்று மலை வாசஸ்தலங்களில் இருக்கும் ஹாஸ்டல் வசதியோடு கூடிய ரெஸிடென்ஷியல் பள்ளிக்கூடங்களுக்குக் குழந்தைகளை அனுப்பிவிடுவார்கள். செலவைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

மத்திய தர வருமானம் உள்ளவர்களும், குறைந்த வருமானம் உள்ளவர்களும் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை இங்கிலீஷ் படிக்க வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், மிஸஸ் மாத்யூ போன்றவர்கள் தெருவுக்குத் தெரு, பேட்டைக்குப் பேட்டை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும் நர்ஸ்ரி பள்ளிக்கூடங்களை விட்டால் வேறு வழியில்லை. பல பேர் இதே போல நடத்திக் கொண்டிருந்த நர்ஸரி பள்ளிகளில் எப்படி எல்லாம் பணம் பண்ணினார்கள் என்பதை மிஸஸ் மாத்யூ நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள். சொல்கிற தொகைக்குக் கையெழுத்துப் போடவும், கொடுக்கிற தொகையை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக் கொண்டு போகவும் வாத்தியாரம்மாக்கள் தயாராகக் காத்திருந்தார்கள். வேலை கிடைத்தால் போதாதா?

மே மாதம் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்றால் பிப்ரவரியிலேயே, தான் தொடங்க இருக்கும் புதிய நர்ஸ்ரிப் பள்ளியைப் பற்றி விளம்பரம் செய்யத் தொடங்கியிருந்தாள் மிஸஸ் மாத்யூ.

பரங்கிமலையில் பழைய நாளில் ‘ஒயின் ஸ்டாக்’ செய்கிற ஸெல்லர் கிடங்காக இருந்து சிதிலமடைந்து சுவர்களில் அரசும் ஆலும் முளைக்கத் தொடங்கியிருந்த கட்டிடம் ஒன்று மிஸஸ் மாத்யூவின் கண்ணில் பட்டது. கட்டிடத்தைச் சுற்றித் தோட்டத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் பயன்படுத்த ஏற்றபடிநிறையக் காலி இடம் புதர் மண்டிக் கிடந்தது.

மிஸஸ் மாத்யூ கட்டிடத்திற்குச் சொந்தக்காரரைத் தேடிப் பிடித்து விசாரித்ததில், “அது உபயோகப்படாதும்மா. ரொம்பப் பழசாப் போச்சு. சீக்கிரமே அதை இடிச்சுப் போட்டு காலி மனையைப் பிளாட் பண்ணி வித்துடலாம்னு இருக்கேன். நீங்க வேறு இடம் பாருங்க” என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

ஆனால், மிஸஸ் மாத்யூவா விடுகிறவள்? "ஒரு வருஷத்துக்கு மட்டும் வாடகைக்கு விடுங்கோ. புதரை வெட்டிச் செதுக்கிக் கட்டிடத்தை உபயோகத்துக்கு ஏத்ததா நானே பண்ணிக்கறேன். நல்ல காரியத்துக்காக நான் கேட்கிறேன். அங்கே ஒரு நர்ஸரி ஸ்கூல் போடலாம்னு உத்தேசம் மறுத்துச் சொல்லக்கூடாது நீங்க.”

சுவர்களும், விதானமும் ஈரம் பாய்ந்து உப்புப் பரிந்து உளுத்துப் போன அந்தக் கட்டிடத்தை ‘டெமாலிஷ்’ பண்ண இருந்த சமயத்தில், அதற்கு இப்படி ஒரு யோகம் அடிக்கும் என்று வீட்டுக்கு உரியவர் எதிர்பார்க்கவே இல்லை. கிடைத்த மட்டில் லாபம் என்று சம்மதித்து, மாதம் ஐநூறு ரூபாய் வாடகையும், மூன்று மாத அட்வான்ஸும் கேட்டார் வீட்டுக்காரர். மிஸஸ் மாத்யூ உடனே ஒப்புக் கொண்டாள். மூன்று மாத அட்வான்ஸ் கொடுத்து, ஒப்பந்தமும் செய்து கொண்டாள். மார்ச் மாதம் முழுவதும் அந்தப் பாழடைந்த கட்டித்தைச் செப்பனிடும் பணிக்குச் சரியாகப் போய் விட்டது.

மிஸஸ் மாத்யூவின் கருத்துப்படி ஐநூறு ரூபாய் அந்த இடத்திற்கு மிக மிகக் குறைவு. நர்ஸரி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி. மூன்று வகுப்புக்களிலும் இரண்டு இரண்டு செக்‌ஷன்கள் வீதம் நடத்துவதற்குப் போதுமான இடம் அந்தக் கட்டித்தில் இருந்தது. இது தவிர ஆபீஸ் ரூமுக்கும், மாடியில் இடம் கிடைக்குமென்று தோன்றியது.

பழைய நாளில் ஒயின் ஸ்டாக் செய்வதற்காக பேஸ்மெண்ட்டில் ஒரு பெரிய ஹால் பாதாளக் கூடமாகப் பூமி மட்டத்திற்கு அடியில் இருந்தது. அதற்கு அப்புறம் முதல் ஃப்ளோரின் கூடம், மாடி என்று மூன்று இடங்கள் ஆகிவிட்டன. மிஸஸ் மாத்யூவுக்கு ஒரே கொண்டாட்டம். நடுவே ஒரு கீற்றுத் தட்டி வைத்து மறித்தால் மூன்று, இடத்திலுமாக ஆறு கிளாஸ் ரூம்கள் கிடைத்துவிடும்.

பாழடைந்து போய்ப் புதர் மண்டி, இன்றோ நாளையோ இடிந்து விழப் போகிறது என்ற நிலையிலிருந்த கட்டிடத்தை முப்பதே நாளில் மயன் மாளிகை போல் வெளிப்பூச்சால் மாற்றியிருந்தாள் மிஸஸ் மாத்யூ. விளையாட்டுமைதானத்திற்கு இடம் விட்டது தவிர மீதி இடங்களில் அழகான தோட்டம் போட்டிருந்தாள். பசுமை கொழிக்கும் நல்ல செழிப்பான மண், அதிக நாள் எதுவும் பயிரிடப்படாமல் கிடந்த கன்னி நிலமாகையினால் எல்லாம் நன்றாகக் கொழித்து வளர்ந்தன. பூங்கா, காய்கறி, செடி கொடிகள் எல்லாமே நன்றாக வளர்ந்திருந்தன.

‘நியூ ஃபீல்டு நர்ஸரி ஸ்கூல்’ என்று அழகாகக் கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் பெரிய பெரிய போர்டுகள் எழுதி மாட்டப்பட்டிருந்தன. கட்டிடத்தின் அருகே புதிதாக விரைந்து வளர்ந்து பூவும், பசுமையுமாக உருவான பூங்கா அதற்குத் தனி அழகைக் கொடுத்தது. வந்து பார்த்த போது வீட்டுக்காரருக்கே அது தன் பழைய கட்டிடம்தானா என்று பிரமிப்பு ஏற்படும்படி மேல் பூச்சால் அதை மாற்றியிருந்தாள் மிஸஸ் மாத்யூ. ஆசிரியைகளுக்காக விளம்பரம் கொடுக்கப்பட்டதும், ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன்கள் குவிந்தன. பி.ஏ.யும், எம்.ஏ.யும் பி.எட்டும், எம்.எட்டும் படித்து விட்டு, வேலை கிடைக்காமல் வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் எல்லாரும் விண்ணப்பித்திருந்தார்கள். முறையான பள்ளிக்கூடங்களுக்கோ, அரசாங்கப் பள்ளிக்கூடங்களுக்கோ போனால் பயிற்சி, முன் அனுபவம், அதிகத் தகுதி என்றெல்லாம் கேட்டுத் தொந்தரவு செய்த காரணத்தால், அந்தத் தொந்தரவெல்லாம் இல்லாத இம்மாதிரித் தனியார் பள்ளிக்கூடங்களில் கைச்செலவுக்குக் கிடைத்தது போதும் என்று பலர் வேலைக்கு வந்தார்கள். சிலர் இந்த வேலைக்கே மிஸஸ் மாத்யூவுக்கு ஏதாவது லஞ்சம் கொடுத்துக் கூட வரத் தயாராயிருந்தார்கள். வாங்குபவருக்கு அப்படி எண்ணமே கூட இல்லாத சமயத்தில் கொடுப்பவரால் ஆசையூட்டப்பட்டுத்தான் முக்கால்வாசி லஞ்சங்கள் இந்த தேசத்தில் தொடங்குகின்றன. வாங்குபவர் கேட்டு வற்புறுத்தும் லஞ்சத்தை விட,"ஏதாவது பணம் கிணம் ஆகும்னாலும் தந்துடறேன். காரியத்தை முடிச்சுக் குடுங்க, போதும்” என்று கொடுப்பவர் முந்திக் கொண்டு சரணாகதியாகும் தேசத்தில் லஞ்சம் மரபாகவும், சம்பிரதாயமாகவும் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி ஆகியும் இருந்தது.

இங்கே மிஸஸ் மாத்யூவிடம் ஆசிரியை வேலைக்காக அப்படிச் சரணாகதியடைந்தவர்கள் பலர் இருந்தனர். மொத்தம் ஆறே ஆறு பேரைத்தான் அவள் ஆசிரியைகளாகத் தேர்ந்தெடுத்தாள். தன்னையும் சேர்த்து ஏழு பேர் என்று வைத்துக்கொண்டாள்.

மாதம் முன்னூறு ரூபாய் சம்பளம் என்று ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு 75 ரூபாயும், நானூறு ரூபாய் சம்பளம் என்று ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு 100 ரூபாயும்தான் கைக்கு வரும் என்றும், ஆனால், அவர்கள் முந்நூறு ரூபாய்க்கும், நானூறு ரூபாய்க்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாக வேண்டுமென்றும் முதலிலேயே சொல்லியாயிற்று; அவர்களும் அதற்குச் சம்மதித்தாயிற்று.

மிஸஸ் மாத்யூவின் தம்பி ஒருவன் ஊரில் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை வரவழைத்து ‘நியூ பீல்டு நர்சரி’ ஸ்கூல் மானேஜர் என்று. நியமித்தாயிற்று. காஷியர், கிளார்க், சமயா சமயங்களில் ப்யூன் எல்லாம் அவன் தான். ‘ஸ்கூல் வேன்’ என்ற பெயரில் வாங்கியிருந்த ஓர் ஓட்டை டீஸல் வாகனத்தைச் செலுத்திப் போய்க் குழந்தைகளை அழைத்து வருகிற டிரைவரும் அவன்தான். மிஸ்டர் மாத்யூவுக்குப் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆஃபிசர் என்றொரு நர்சரி பள்ளிக்குத் தேவையில்லாத உத்தியோகம். தோட்ட வேலையையும், வாட்ச்மேன் உத்தியோகத்தையும் சேர்த்துப் பார்ப்பதற்கு ஒரு வேலைக்காரனும் போடப்பட்டிருந்தான்.

அட்மிஷன் மிஸஸ் மாத்யூ எதிர்பார்த்ததை விடப் பிரமாதமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐநூறு குழந்தைகளுக்கு மேல் சேர்ந்து விட்டார்கள். குழந்தைகளுக்கு ரூ.30, ரூ.40, ரூ.50 என்று வகுப்புக்கு ஏற்றபடி சம்பளம் நிர்ணயித்தாள். அட்மிஷனின் போது ரசீது கொடுக்காமல் ‘பில்டிங் ஃபண்ட்’ என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் ஒரு நூறு ரூபாய் நன்கொடையும் வற்புறுத்தி வாங்கினார்கள். ஸ்கூல் வேனில் வருகிற குழந்தைகளுக்கு ‘வேன்’ கட்டணம் ரூ.20 என்று நிர்ணயித்தாள். ஸ்கூலில் டெலிவிஷன் வாங்குவதற்காக என்று தலைக்கு ஐந்து ரூபாய் விதம் குழந்தைகளிடம் கட்டாயமாக வசூலித்தார்கள். இப்படியே ஒரு ரேடியோ ஸெட்டுக்கும் வசூல் நடந்தது. - z

“பள்ளிக்கூடம் நடக்கிற நேரத்தில் டெலிவிஷனில் ஒரு புரோகிராமும் கிடையாதே?” என்று கொஞ்சம் விழிப்பு உணர்ச்சியுள்ள ஒரு தந்தை கேட்ட போது, “சம்மதமானால் இங்கே சேருங்கள். இல்லாவிட்டால் வேறு ஸ்கூல் பார்த்துக் கொண்டு போங்கள்” என்று முகத்திலறைந்தாற் போல் பதில் சொன்னாள் மிஸஸ் மாத்யூ. மெடிகல் ஃபீஸ், ஸ்பெஷல்ஃபீஸ், அது இது என்று ஒரு குழந்தையின் அட்மிஷனுக்குக் கிட்டத்தட்ட நூறு முதல் நூற்றியிருபது ரூபாய் வரை ஆயிற்று. தினசரி ஒரு நிமிஷம், அரை நிமிஷம் லேட்டாய் வருகிற குழந்தையிடம் கூடலேட் ஃபைன் என்று எட்டணா வசூலிக்கப்பட்டது.

‘அம்மாடி காலேஜ் ஃபீஸை விட அதிகமாயிருக்குதே’ என்று குறைப்பட்டுக் கொண்டேயாவது பணத்தைக் கட்டிக் குழந்தையை நியூ ஃபீல்டு நர்ஸ்ரி ஸ்கூலில் சேர்த்தார்களே ஒழிய, ஒரு பெற்றோராவது மிஸஸ் மாத்யூவிடம் முறைத்துக் கொண்டு திரும்பிப் போய் விடவில்லை. கிராக்கி அதிகமாக, அதிகமாக மிஸஸ் மாத்யூ ஓர் அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் பெற்றோர்களிடம் பணத்தை உறிஞ்சினாள்.

நியூ ஃபீல்டு நர்ஸ்ரி ஸ்கூலின் பரீட்சையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மார்க்கைக் குறைத்துப் போட்டு, அப்படிக் குறைந்த மார்க் வாங்கிய குழந்தைகளுக்கு எல்லாம் காலையில் ஸ்கூல் தொடங்குவதற்கு முன்போ அல்லது மாலையில் ஸ்கூல் விட்ட பிறகோ ஸ்கூலிலுள்ள டீச்சர்களே ‘ஸ்பெஷல் கோச்சிங்’ அல்லது டியூஷன் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் அதற்குத் தனியே பதினைந்து ரூபாய் கட்டி விட வேண்டுமென்றும் மிஸஸ் மாத்யூ ஏற்பாடு செய்தாள். அந்தப் பதினைந்து ரூபாயில் பத்து ரூபாயைத் தான் எடுத்துக் கொண்டு, ஐந்து ரூபாயை டியூஷன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைகளுக்குத் தந்தாள்.

முதல் இல்லாத ஒரு வியாபாரமாக அந்த நியூ ஃபீல்டு நர்ஸ்ரி ஸ்கூல் நடந்து கொள்ளை லாபம் தரத் தொடங்கியிருந்தது. முதல் வருஷம் முடிவதற்குள்ளேயே சுமார் நாற்பதினாயிரம் ரூபாய் வரை ஸ்கூலிலிருந்து வந்த வருமானம் மிஸஸ் மாத்யூவின் பெயரில் ‘டெபாசிட்’ ஆகி பாங்கில் பத்திரமாக இருந்தது.

இரண்டாவது வருஷம் வந்தது. பூமிக்கு அடியிலிருந்த நிலவறையில் மின் விளக்கு, மின் விசிறி எல்லாம் போட்டு இரண்டாகத் தடுத்து, நர்ஸரி வகுப்புக்கள் நடந்தன. முதல் ஃப்ளோரில் எல்.கே.ஜி. மாடியில் யூ.கே.ஜி. என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஹாலும், பல வகுப்புக்களாகத் தடுக்கப்பட்டிருந்தன.

பணம் பண்ணுவதில் மிஸஸ் மாத்யூவின் நிபுணத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு ஜவுளிக் கடையில் ஒரு குறிப்பிட்ட நீல நிறத்துக் கனரகத் துணி ரொம்ப நாளாக விற்காமல் ஸ்டாக் கிடந்து தேங்கியிருந்தது. ‘நியூ ஃபீல்டு நர்ஸரி’ ஸ்கூலில், எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த நீலநிறக் காக்கித் துணியை யூனிஃபார்ம் துணியாக அறிவித்து, அந்தத் துணியையும் அதே கடையில் வாங்கச் சொல்லி ஏற்பாடு பண்ணினால், மிஸஸ் மாத்யூவுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவதாக அந்தக் கடைக்காரனே வந்து ஆசை காட்டினான்.

மூவாயிரம் தந்தால் அப்படியே செய்வதாக மிஸஸ் மாத்யூ பேரம் பேசினாள். கடைக்காரன் மறு பேச்சுப் பேசாமல் மூவாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டான். முந்தின வருஷத்து ப்ரெளன் யூனிஃபாரத்துக்கு ஏற்பப் பழுப்புநிற ஷூ போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள். “இந்த வருஷம் ப்ளு யூனிஃபாரத்துக்குக் கறுப்பு நிற ஷூவை அத்தனை குழந்தைகளும் உங்கள் கடையிலேயே வாங்கச் செய்கிறோம். ஸ்கூலுக்கு இரண்டாயிரம் ரூபாய் டொனேஷன் தர முடியுமா?” என்று பக்கத்தில் இருந்த ஷகு மார்ட்டுக்கு மிஸஸ் மாத்யூவே சொல்லி அனுப்பினாள். ஷூமார்ட் ‘ஓனர்’ வந்தான். குறிப்பிட்ட ஷூ மார்ட் ஒனரும் ஒரு விடாக்கண்டன் ஆகையால் கறாராக ரூ. 1800க்குப் பேரம் பேசிக் கொடுத்துவிட்டுப் போனான். நோட் புக், புத்தகங்களில் கூட இதே மாதிரி கமிஷன் வந்தது.

இரண்டாம் வருஷம் இப்படி ஸ்கூல் தொடங்குவதற்கு முன்பே சுமார் ஐயாயிரம் ரூபாய் சுளையாக லாபம் வந்து விட்டது. முந்தின வருஷத்துக்கு ப்ரெளன் யூனிஃபாரமும் ப்ரெளன் ஷூவும் பல குழந்தைகளிடம் புதிதாக அப்படியே இருந்தும், அதை மூலையில் எறிந்து விட்டுப் புதிய நீல நிற யூனிபாரமும் ப்ளாக் ஷூவும் வாங்க வேண்டியதாயிற்று. பழைய யூனிபாரத்தோடு வரும் குழந்தைகளுக்கு ஃபைன் போட்டுத் துன்புறுத்திப் புதிய யூனிப்பாரம் வாங்க நிர்ப்பந்தம் செய்தாள் மிஸஸ் மாத்யூ. ஆகவே, அவள் வாக்களித்தபடி ஜவுளிக்கடைக்காரருக்கும், ஷூ மார்ட்காரருக்கும் உடனடியாக நல்ல வியாபாரமாயிற்று. -

எலும்பும், தோலுமான க்ஷயரோகக்காரனுக்கு சில்க் சட்டையைப் போட்டு அலங்கரித்து உட்கார வைத்த மாதிரி க்ஷீணித்துப் போய் விட்டிருந்த அந்தக் கிழட்டு மாளிகையின் வெளியே சுத்தமான கச்சிதமான பூந்தோட்டமும், ‘பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது’ என்று குழந்தைகளுக்கும், பகலில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வரும் ஏராளமான பெற்றோர்களுக்கும் எச்சரிக்கையாக ஒரு பளீரென்ற போர்டும் விளங்கிக் கொண்டிருந்தன.

நியூ ஃபீல்டு நர்ஸரி ஸ்கூலில் இரண்டாவது வருஷ நடுவில் ஒரு சிறிய சலனம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து…

மே, ஜூனில் முறையான அட்மிஷன் இருந்தாலும், அக்டோபரில் விஜய தசமியின் போதும் மிஸஸ் மாத்யூ குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். நிறைய இந்துக்கள் அப்படிச் சேர்க்க வந்ததே காரணம்.

அந்த வருஷ விஜய தசமிக்கு முதல் நாள் கல்கத்தாவில் ஒரு என்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் பல வருடங்கள் வேலை பார்த்துவிட்டுச் சமீபத்தில் அதன் சென்னைக் கிளைக்கு மாறுதலாகி வந்திருந்த ஒருவர் தன் பையனைச் சேர்க்க நியூ ஃபீல்டு நர்ஸரி ஸ்கூலுக்கு வந்தார். அவருக்கு அந்த ஸ்கூல்தான் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. -

அட்மிஷன் ஃபாரங்களைப் பூர்த்தி செய்து, பணத்தைக் கட்டிய அவரிடம் மிஸஸ் மாத்யூவின் தம்பி ரசீது தராமல் பில்டிங் ஃபண்டுக்குத் தனியே நூறு ரூபாய் நன்கொடை தருமாறு கேட்டான். அவர் தருவதற்கு மறுத்து விவாதித்தார். “நன்கொடை என்பது நானாக விரும்பிக் கொடுப்பது. நீங்கள் அதை வற்புறுத்தக்கூடாது. அது முறையில்லை.”

“கண்டிப்பாக நீங்கள் கொடுத்தாக வேண்டும். மறுத்துப் பிரயோசனமில்லை.”

“கண்டிப்பாகத் தர முடியாது.”

தகராறு இப்படி நடந்து கொண்டிருந்த போதே, மிஸஸ் மாத்யூ ஏதோ வேலையாக ஆபீஸுக்குள் வந்தாள். அந்தத் தந்தை அவளிடமே அதை முறையிட்டார். மிஸஸ் மாத்யூ “ஐ டோண்ட் ப்ரெஃப்ர் பேரண்ட்ஸ் லைக் யூ பீ ஜெனரஸ்” என்று ஏதோ ஆரம்பித்தாள். முக்கால் வாசி வேளைகளில் மத்திய தர கீழ் மட்டத்துப் பெற்றோர்களிடம் நாலு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் பெரும்பாலும் பயந்து மசிந்து வழிக்கு வருவதைக் கவனித்து, அப்படிப் பேசுவதை ஒரு ‘சீப் டெக்னிக்காக’ அவள் எப்போதும் கையாண்டு வந்தாள். ஆனால், இப்போது இந்த விநாடியில் இந்தக் கல்கத்தாவில் இருந்து டிரான்ஸ்ஃபரில் வந்திருந்த தந்தையிடம் அந்த டெக்னிக் பலிக்கவில்லை. . .

“இட் இஸ் நாட்எ க்வஸ்ச்சின் ஆஃப் ஜெனராஸிட்டியூ ஆர் ஃபோர்ஸ் ஃபுல்லி

ஆஸ்க்கிங் மீ” என்று அவர் வெடித்துச் சீறினார்.

உடனே மிஸஸ் மாத்யூ “தென் வொய் டு யூகம் ஹியர் அண்ட் டிஸ்டர்பிங் அஸ்? கோ அண்ட் ஆஸ்க் ஃபார் அட்மிஷன் இன் எ சீப் கார்ப்பொரேஷன் ஸ்கூல்.”

“பார் தட் ஐ டோண்ட் நீட் யுவர் அட்வைஸ். ஸீ ஐயாம் கம்மிங் ஃப்ரம் எ ஸிடி ஆஃப்டெய்லி குவாரல்ஸ் அண்ட்ஃபைட்டிங்ஸ். கீப் யுவர் லிமிட்ஸ்” என்று இரைந்து கத்தி விட்டுப் போனார் அந்தத் தந்தை. அவருடைய குழந்தையை அவர் மிஸஸ் மாத்யூவின் நர்ஸரியில் சேர்க்கவில்லை.

ஆனால், இரண்டு நாள் கழித்து அரசாங்கத்தின் பி.டபிள்யூ.டி. இலாகாவைச் சேர்ந்த “சேஃப்டி அண்ட் செக்யூரிடி ஆப் பப்ளிக் பில்டிங்ஸ்” பிரிவில் இருந்து நியூ ஃபீல்டு நர்ஸரி ஸ்கூலுக்கு அவசரமாக ஒரு ரிஜிஸ்தர் நோட்டீஸ் வந்தது.

பொது உபயோகத்துக்கு இலாயக்கில்லாத, இடிந்து விழத்தக்கநிலையிலுள்ள ஒரு பாழுங் கட்டிடத்தில் பள்ளிக்கூடம் நடத்துவதைக் கண்டித்து ஷோ காஸ் நோட்டீஸ் மாதிரி அது விடப்பட்டிருந்தது. இன்ஸ்பெக்‌ஷனுக்காக வரப் போவதாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் கிடைத்ததும் மிஸஸ் மாத்யூவுக்கும், அவள் தம்பிக்கும் அந்தக் கல்கத்தா ஆசாமி மேல்தான் சந்தேகம் வந்தது. “சண்டையையும், எதிர்த்துப் போரிடுவதையும் தினசரி வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒரு நகரத்திலிருந்து நான் வருகிறேன்” என்று அந்த ஆள் சவால் விட்டதும் நினைவு வந்தது.

பயத்தோடு அவசர அவசரமாக ஒரு மேஸ்திரியையும், கொத்தனாரையும் கூப்பிட்டுக் கட்டிடத்தில் கொஞ்சம் மராமத்து வேலையையும், மேல் பூச்சு, வெள்ளையடித்தல் முதலிய வேலைகளையும் தொடங்கினாள் மிஸஸ் மாத்யூ.

இரண்டு, மூன்று நாளாக அடை மழை வேறு பிடித்துக் கொண்டு கொட்டியது. மைதானத்தில் காலை ப்ரேயரைக் கூட நடத்த முடியவில்லை. ஆகவே, மூன்று வகுப்புக்களின் ப்ரேயரையும் சேர்த்து நடு ஹாலில் அஸெம்பிள் பண்ணச் சொல்லி அங்கே நடத்தினார்கள். நடு ஹால் என்பது ஒயின் ஸெல்லர் நிலவறைக்கு மேலேயும், மாடிக்குக் கீழேயும் இருந்த தரை. அந்த ஃப்ளோரின் நிலைமைதான் மிக மிக மோசமாயிருந்தது. மூன்று தினங்களாக அந்தத் தரை தாங்க முடிந்ததற்கு மேல் எண்ணிக்கையுள்ள கூட்டம் அங்கே கூடி அழுத்தவே, அடைமழை ஈரத்தில் நசிந்திருந்த சுவரும் தளமும் மேலும் பலமிழந்திருந்தன. அதேசமயம் வேலையாட்கள் அந்த மழை ஈரத்தில் மராமத்துக்காகக் கட்டிடத்தை வேறு இடிக்கவும், கொத்தவும் செய்து கொண்டிருந்தனர்.

நான்காவது நாள் ப்ரேயர் நடந்து பாதிக் குழந்தைகள் நிலவறையில் வகுப்புக்கு இறங்கியிருந்தார்கள். பாதிக் குழந்தைகள் ப்ரேயர் ஹாலிலேயே நின்றார்கள். அப்போதுதான் அது யாரும் எதிர்பாராமல் திடீரென்று நடந்தது.

சடசடவென்று பூகம்பம் போல் நிகழ்ந்த அந்த நிகழ்ச்சியில் தளம் சரிந்ததைக் கவனிக்கக் கூட யாருக்கும் நேரமில்லை. மாடியேறிய குழந்தைகள் மட்டுமே பிழைக்க முடிந்தது. கீழே நிலவறையில் அதிகாலையின் மென்மையான பட்டு ரோஜாப் பூக்களாக இறங்கிய நர்ஸரி வகுப்புக் குழந்தைகள் அப்படியே அமுங்கிச் சமாதியாகி விட்டன. சரிந்த தளத்தின் ஹாலில் நின்ற குழந்தைகளில் சுவரோரமாக நின்றவை தப்பின. நடுவில் நின்றவற்றில் கை கால் இழந்து நசுங்கிக் குற்றுயிரும் குலையுயிருமாகப் போனவை பல. டீச்சர்களில் சிலரும் நிலவறையில் நசுங்கி மாண்டிருக்க வேண்டும்.

ஒரே ஓலம், அலறல், அழுகை, கதறல், கண்ணீர், சாவு, ரத்தம், காயம், அடை மழை வேறு. நல்ல வேளையாகப் பிழைத்த குழந்தைகளும், மற்றவர்களும் வெளியேற்றப் பட்டுப் பத்திரமான இடத்துக்கு அனுப்பப்பட்டார்கள். காயமுற்றவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்கள். ஆம்புலன்ஸும், தீயணைக்கும் படையினரும் வந்தனர். ஸ்கூல் காம்பவுண்ட் கதறல்களினாலும், ஓலங்களினாலும், துயரமும், கொதிப்பும், கொந்தளிப்பும் நிறைந்த ஜனங்களாலும் நிறைந்திருந்தது.

மிஸ்டர் மாத்யூவும், மிஸஸ் மாத்யூவும், அவள் தம்பியும் கீழே படியிறங்கி வந்தால் என்ன ஆகுமோ என்று பயந்து மாடியிலிருந்த ஆபீஸ் அறையிலேயே கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு விட்டார்கள். போலீஸும், ஆம்புலன்ஸும், தீயணைக்கும் படையினருமாகச் சேர்ந்து மாடியறைக் கதவைத் திறந்து, அவர்களைக் கீழே கொண்டு வந்து நிறுத்திய போது தன் குழந்தையைப் பறி கொடுத்த ரிக்‌ஷாக்காரன் ஒருவன் ஆத்திரம் தாங்காமல் தரையில் பூங்காவினிடையே ‘பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது’ என்று போர்டு எழுதி ஊன்றியிருந்த இரும்புச் சட்டத்தைப் பிடுங்கிக் கொண்டு அடிப்பதற்காக மிஸஸ் மாத்யூவின் மேல் பாய்ந்தான். அவன் கண்களில் அப்போது குரூரமான கொலை வெறி மின்னியது.

அப்போது நாகரிகமாக உடை அணிந்திருந்த ஒருவர் குறுக்கே பாய்ந்து அவன் கையிலிருந்த இரும்புச் சட்டத்தைப் பறித்து அவனைத் தடுத்தார். “அவசரப்படாதே. சட்டம் அவர்களைக் கவனித்துக் கொள்ளும்” என்றார். மிஸஸ் மாத்யூ நிமிர்ந்து பார்த்தாள். இப்படிச் சொன்னது வேறு யாருமில்லை. அந்தக் கல்கத்தா ஆசாமிதான். “உடம்பைச் செருப்பாக்கி உழைச்சிக் கிடைக்கிற கூலியிலே, பையனை இங்கிலீசு படிக்க வச்சுடணும்னு ஆசைப்பட்டேனே பாவி. இப்போ உலகத்தை விட்டே போயிட்டியேடா என் தங்கமே” என்று தடுக்கப்பட்ட அந்த ரிக்‌ஷாக்காரன் கதறிக் கொண்டிருந்தான்.

“பூக்களை விடச் சிரேஷ்டமானவற்றை எல்லாம் மிதித்து நசுக்கிக் கொன்ற பின், இங்கே இந்த போர்டு ஒரு கேடா?” என்று ஆத்திரத்தோடு கையிலிருந்த ‘பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது' என்ற போர்டைத் தலையைச் சுற்றி வீசி எறிந்தார் கல்கத்தாவிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்த அந்த மனிதர்.

அந்த போர்டுதோட்டத்தின் ஒரு பகுதியில் பூத்திருந்த பட்டு ரோஜாப் பாத்தியின் மேல் விழுந்து, பூக்களை எல்லாம் அழுத்திச் சின்னாபின்னமாக்கி விட்டுக் கிடந்தது. விழுந்த வேகத்தில் போர்டும், ஸ்டாண்டும் வேறு வேறாய்த் தனித்தனியே கழன்று போயிருந்தன.


(அமுதசுரபி, தீபாவளி மலர், 1978)