நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/5. ஒரு சாகஸம்
தென்னவன் மாறன் கூறியதைக் கேட்டு அந்த வேல் விழியாள் எந்த விதத்திலும் அஞ்சியதாகத் தெரியவில்லை. நிதானமாக அவள் அவனுக்கு மறுமொழி கூறினாள்:-
“யார் யாரிடமிருந்து உயிர் தப்ப முடியாது என்பது போகப் போகத் தெரியும்...”
“ஆண் புலியைப் பார்த்துப்பெட்டைப் பூனை சீறுகிறது”
“சிறைப்பட்டவர்கள் சிறைப்படுத்தியவர்களைப் பார்த்து உயிர் தப்ப முடியாது என்று பயமுறுத்தினால், சீறாமல் பின் சிரிக்கவா செய்வார்கள்?”
“வீரர்களைக் காமக் கிழத்தியர் தங்கள் தோள்களிலே சிறைப்படுத்தி விடலாம் என்று களப்பிரர்கள் நினைத்தால் அது பேதமை.” தனக்கு இணையற்ற அழகுச் செருக்கும், உடல் வளமும் உள்ள ஒரு யுவதி கம்பீரமான ஆடவன் ஒருவனால் அலட்சியப் படுத்தப்பட்ட ஆற்றாமைக் கோபத்தில் எப்படிச் சீறுவாளோ, அப்படிச் சீறினாள் அவள். அப்போது அவன் தன்னைக் கையைப் பிடித்து இழுத்து அறைந்திருந்தால் கூட அவளுக்குக் கோபம் வந்திருக்காது; கோபமே, அந்த விநாடி வரை அவன் அப்படித் தன்னைக் கையைப் பிடித்து இழுத்தும் கூட அறைய முற்படவில்லையே என்பதனால் தான் 'ஏ முரட்டு ஆண் மகனே! தயவு செய்து என்னைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ள மாட்டாயா? என்னை ஏன் இப்படி அலட்சியம் செய்கிறாய்? நீ அடக்கி ஆளக் கூட நான் தகுதியற்றவளா?’ என்று இறைஞ்சி இரப்பது போல் ஒரு கணமும், உடனே மாறிய மன நிலையில் அடியுண்ட நாகம் சீறுவது போல் மறு கணமும் மாறி மாறிப் பார்க்கும் பார்வைகளை உடையவளாகத் தவித்தாள் அவள்.
‘நீர் என்னை ஒரு பேதைப் பெண்ணாக ஒப்புக் கொண்டு உம்முடைய கைகளால் வதை செய்தால் கூட நான் உம் அடிமையாகி விடுவேன்’ என்பது அவள் தாபமாக அவன் எதிரே நின்றது. அந்தத் தாபத்தை அவன் அங்கீகரிக்கவில்லை என்பதே அவள் சீற்றமாக இருந்தது. அவன் அலட்சியமாக அவளை நோக்கிக் கூறலானான்:
“எனக்குத் தெரியும் பெண்ணே! பேயின் முகத்தைப் போல் கொடிய முகத்தை உடைய உங்கள் அரச குரு மாவலி முத்தரையரின் ஏற்பாடாகத்தான் இருக்கும் இது. ஆணைப் பெண்ணால் மயக்கி வசப்படுத்த வேண்டும். பெண்ணை, ஆணால் மயக்கி வசப்படுத்த வேண்டும் என்ற வெளிப்படையான அளவுகளை வைத்து யாவற்றையும் திட்டமிடுகிறார் அவர்.”
“அவ்வளவுக்கு அவர் சிறுபிள்ளைத்தனமான அரச தந்திரி இல்லை ஐயா வாலிப வீரரே! பெண்களால் வசப்படுத்தி, மயக்க முடியாத ஆண்களும், ஆண்களால் வசப்படுத்தி, மயக்க முடியாத பெண்களும் அபூர்வமாக இந்த உலகில் இருப்பார்கள் என்பது மாவலி முத்தரையருக்கும் தெரிந்திருக்கும்!" “தெரிந்தால் இப்படி நடந்திருக்காது.”
“எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதைச் சிறைப் பட்டிருப்பவர்கள் முடிவு செய்ய வாய்ப்பில்லை; பாவம்.”
“பாவம் என்று நீ என்னிடம் பரிதாபம் காட்ட வேண்டியதில்லை பெண்ணே! பாண்டிய நாட்டு வீரர்கள், பெண்களின் பரிவில் உயிர் வாழ விரும்புவதில்லை! அவர்கள் மன உறுதி படைத்தவர்கள்.”
“உண்மைதான்! கல் மனம் படைத்தவர்களுக்கு யாருடைய பரிவும் தேவைப்படாது.”
இதைச் சொல்லும் போதும் அவள் குரலில் அளவற்ற தாபமும், தாகமும், தவிப்புமே ஒலித்தன.
அடுத்த கணம் அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று இருந்தாற் போலிருந்து அவள் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். தென்னவன் மாறன் எதிர்பார்க்கவில்லை. பெண்ணிடம் இரண்டு விதமான படைக்கலங்கள் இருக்கின்றன. ஒன்று புன்னகை, மற்றொன்று கண்ணீர். ஓர் அழகிய பெண் இந்த இரண்டு படைக்கலங்களாலும் வெற்றி அடைய முடியும். ஒன்றினால் தவறி விட்டால், மற்றொன்றினால் உறுதியாக வெற்றி கிடைக்கும். தென்னவன் மாறன் அவளுடைய புன்னகை என்ற படைக்கலனால் தாக்கப்பட்ட போது உறுதியாக இருந்து, எதிர்த்து அவளைத் தோற்கச் செய்திருந்தான். முதல் தோல்வியைப் புரிந்து கொண்டு இப்போது இந்த இரண்டாவது வகைப் போரைத் தொடங்கியிருந்தாள் அவள்.'சில சமயம் புன்னகைகளால் வெல்ல முடியாத கல் மனம் படைத்தவர்களைப் பெண்கள் கண்ணீரினால் வென்று விடுவார்கள்’ - என்று பலமுறை கேள்விப் பட்டிருந்ததை நினைத்துத் தன் விஷயத்திலும், இப்போது அப்படி நடந்து விடாமல் இருக்க வேண்டுமே என்று எண்ணி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான் அவன்.
அரச தந்திரக் காரியங்களைச் சாம, தான, பேத, தண்ட முறைகளால் சாதித்துக் கொள்வது எல்லா அரசமரபிலும் வழக்கம்தான். சேர, சோழ, பாண்டிய மரபிலோ, தென் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களிடையிலேயோ, பெண்களின் அழகைப் பயன் படுத்திச் சாதிக்கப்படும் அரச தந்திர சாதனைகள் மிகவும் கெளரவமாக மதிக்கப்படுவது கிடையாது. ஆனால், களப்பிரர்கள் இதிலும் தரக் குறைவாக இறங்கியிருப்பதாகப் பெரியவர் மதுராபதி வித்தகர் போன்றவர்கள் அடிக்கடி சொல்லி வந்ததை, இப்போது தென்னவன் மாறன் தன் சொந்த அநுபவத்திலேயே கண்டான்.
“கூர்மையான வாள்களின் காரியத்தை மென்மையான பூக்களால் சாதிக்க முடியாது! பூக்களைக் கொண்டு வாள்களின் காரியத்தைச் சாதிப்பது வாள்களை அவமானப் படுத்துவதற்குச் சமம்"-என்று பெரியவர் மதுராபதி வித்தகர் அடிக்கடி சொல்வது உண்டு. அதை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் தென்னவன் மாறன். நீண்ட நாட்களாகக் களப்பிரர்களின் வாள்கள் முனை மழுங்கிப் போய் விட்டதாலோ என்னவோ, வாள்களைப் பயன்படுத்த வேண்டிய காரியங்களுக்கு மலர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள். தென்னவன் மாறன் காம மஞ்சரி என்ற வெறியூட்டும் அழகுக் கருவூலத்துக்கு முன் மிகவும் விழிப்பாக இருந்தான். பெண்களின் அரச தந்திரம் என்பது மலர்களால் எழுப்பும் கோட்டைச் சுவரைப் போன்றது. அந்தச் சுவர் எங்கே சரிந்து விழும், எப்போது சரிந்து விழும், எதற்கு முன்பு சரிந்து விழும் என்பதை முன் கூட்டியே ஒன்றும் சொல்ல முடியாது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த போதே, அந்த நினைவை நிரூபிப்பது போன்ற ஒரு காரியத்தைக் காம மஞ்சரி செய்தாள். தன்னால் எந்த வகையிலும் வெல்ல முடியாத அவன் ஆண்மைக்கு முன்னால், அவளுடைய மலர்க் கோட்டையின் மெல்லிய தந்திரச் சுவர்கள் பொலபொலவென்று சரிந்தன! ‘ஐயா! சுந்தர வாலிபரே! தயைகூர்ந்து நீங்கள் இங்கிருந்து உடனே எப்படியாவது வெளியேறி விடுவது நல்லது. இல்லா விட்டால், நாளைக்குச் சூரியோதயத்திற்குள் உங்களைச் சிரச்சேதம் செய்து விடுவதாக ஏற்பாடு ஆகியிருக்கிறது. அப்படி நீங்கள் என்னென்ன இரகசியங்களை ஒற்றறிய முடியுமோ அவற்றை எல்லாம் அறிவதற்கான சாகலங்களைப் புரிவதற்கே நான் வந்தேன். நீங்கள் என் மேல் கருணை காட்டவில்லை என்றாலும், நான் என் கடமை தவறியாவது, உங்கள் மேல் கருணை காட்டுகிறேன். உங்கள் மேல்-என்ன காரணமோ சொல்லத் தெரியவில்லை; என் மனம் பித்துப் பிடித்தது போல் அடிமைப் படத் தொடங்கி விட்டது” என்று கண்ணீரும், கம்பலையுமாக மன்றாடிய அவள் விழிகளில்-முகபாவத்தில் எந்த அளவு கபடம் இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கலானான் தென்னவன் மாறன். இப்படி அவள் ஒரேயடியாகச் சரணாகதி அடைவது போல் தன்னிடம் மன்றாடுவதும் கூட ஒரு சாகஸமோ என்று பயந்தான் அவன். ‘பஞ்சணையில் வேதாந்தம் பேசும் தமிழன்’ என்று தாபம் பொறுக்க முடியாமல் அழகுத் திமிரோடும், உணர்ச்சி வெறியோடும் தன்னை எடுத்தெறிந்து பேசியவளா, திடீரென்று இப்படித் தன்னுடைய அரண்களை எல்லாம் தானே சிதைத்துக் கொண்டு, எதிர்ப்பட்டுச் சரணாகதியாகிறாள் என்று நினைத்த போது நம்புவதற்கு அருமையாகவும் இருந்தது. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இந்த இரண்டும் கெட்ட மனநிலையில் நாகரிகங்களை அதிகம் பழகாத அவனுடைய நாட்டுப்புறத்து மனப் பான்மை அவனைக் காப்பாற்றியது. அந்த நாட்டுப்புறத்துப் பிடிவாதம் அவனை அவளுக்கு முன் அந்த நிலையிலும், இளகி விடாமல் தடுத்தது. தன் மார்பில் பூத பயங்கரப் படைத் தலைவனின் வாள் இலேசாகக் கீறியிருந்த காயத்துக்கு அவள் கைகள்தான் மருந்திட்டிருக்க வேண்டும் என்று புரிந்ததும், மனத்துக்குள் அதற்காக நன்றியுணர்வு சுரந்தாலும் கூட அவளிடம் அதிகம் பேசவில்லை அவன்.
“உன்னுடைய கருணைக்கு நன்றி பெண்ணே! ஆனாலும் உன்னை நியமித்தவர்களுக்கு, நீ துரோகம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. காம மஞ்சரி! பெண்களின் உதவியோடு தப்பி ஒட நான் விரும்ப மாட்டேன் என்பது உனக்குப் புரிந்திருந்தால், நீ இப்படி என்னிடம் பேசியிருக்க மாட்டாய்!”
“இருக்கலாம்! ஆனால், இந்த இடத்தில் இப்போது என்னைத் தவிர, உங்களுக்கு வேறெவரும் உதவ மாட்டார்கள். நேரே பூத பயங்கரப் படை வீரர்களோடு, நாளை பொழுது புலர்வதற்கு முன் கொலைக் களத்துக்குப் போவதுதான் இனி உங்கள் விதி.”
“என் தலை விதியை மாற்றுவதற்காக மட்டும்தான், ஆண்டவன் உன்னைப் படைத்திருப்பதாக நீ நினைக்கிறாய் போலும்.”
அவள் மறுமொழி கூறவில்லை. நடைப் பிணம் போல் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, தளர்நடை நடந்து பயத்தோடு, அந்தக் கூடத்திலிருந்து அவள் வெளியேறிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே, இன்னொரு வாயில் வழியாகப் பூத பயங்கரப் படை வீரர்களின் கூட்டம் ஒன்று திமுதிமுவென்று உள்ளே நுழைந்து, மீண்டும் அவனுடைய கைகளையும் கால்களையும் சங்கிலியால் பிணைக்கத் தொடங்கியது.