நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/6. புலவர்களும் பொய்யும்
மந்திராலோசனைக் குழுவினர் பேசி முடித்த பின் வடக்கே களப்பிர தேசத்திலிருந்து வந்திருந்த நாலைந்து பாலிமொழிக் கவிகள் அரசனைக் கண்டு பரிசில் பெறக் காத்திருந்தார்கள். களப்பிரர் ஆட்சியில் அடிமைப் பட்ட பின், அரசவையில் பாலி மொழிக் கவிஞர்களுக்கும், புலவர்களுக்கும் இருந்த செல்வாக்கு, தமிழ்க் கவிஞர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் இல்லாமற் போயிருந்தது. புலவர்கள், பரம்பரையாகச் சந்திக்கவும் நூல்களை அரங்கேற்றவும் இருந்த தமிழ்ச் சங்கத்தின் புகழ் பெற்ற கட்டிடங்களை யானைகள் கட்டுமிடமாகவும், குதிரைகள் கட்டுமிடமாகவும் பயன்படுத்தத் தொட்ங்கி யிருந்தார்கள் களப்பிரர்கள். மந்திராலோசனைக் கூட்ட முடிவில், தென்னவன் மாறன் தன் நினைவிழந்து மயங்கி விழுந்தவுடனே, அவனை ஒற்றறியக் காம மஞ்சரியிடம் விட்ட பின் மற்ற மூவரும் மீண்டும் சிறைக் கோட்டத்துக்கே அனுப்பப்பட்டு விட்டார்கள். எல்லைகளில் படை பலத்தைப் பெருக்கி வைத்திருக்குமாறு மீண்டும் நால்வகைத் தானைத் தலைவர்களையும் கலிய மன்னன் கேட்டுக் கொண்டான். அவ்வளவில் மந்திராலோசனைக் குழுவினர் கலைந்தனர். சிறைப் பட்டிருந்த நால்வரில் தென்னவன் மாறனைப் பற்றி மட்டுமே கலிய மன்னனுக்கும், மாவலி முத்தரையருக்கும் அதிகமான பயம் ஏற்பட்டிருந்தது.
"நாளைப் பொழுது விடிந்தால், அவனைச் சிரச்சேதம் செய்யப் போகிறோம். அதற்குள்ளே அவனை மயக்கி வசப்படுத்தி அவனிடம் இருந்து அறிய வேண்டியவற்றை அறிய வேண்டும்" என்பதாகக் காம மஞ்சரியிடம் கட்டளையிடுமாறு பூத பயங்கரப் படைத் தலைவனிடம், கலிய மன்னர் கூறிய போது அரசகுரு மாவலி முத்தரையர் குறுக்கிட்டார்:
“அப்படிச் சொல்லாதே கலியா! இவனை உடனே கொன்று அழித்து விடுவதால், நமக்குப் பயன் இல்லை. நான் முன்பே உன்னிடம் சொல்லியது போல் கிடைத்த பறவையை வைத்துத் தப்பி விட்ட பறவைகளைப் பிடிக்க வேண்டும்.”
“பிடிக்கலாம்! ஆனால் காம மஞ்சரியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! நீங்கள் காலக் கெடு வைத்துத் துரிதப் படுத்தினால் அன்றி, அவளுடைய சாகஸம் விரைந்து பயன்படாது. ஆகவே, அவளிடம் நாளை வைகறையிலேயே, நம்மிடம் சிறைப்பட்டிருக்கும் இந்தப் பாண்டிய குல இளைஞன் சிரச்சேதம் செய்யப்படுவான் என்று கூறினால்தான் நல்லது” என்றான் கலியன்.
“கூற வேண்டியவற்றை எல்லாம் காம மஞ்சரியிடம் மிகவும் தந்திரமாகக் கூறியிருக்கிறேன். பாண்டிய மரபின் உறுதுணையானவர்களில் இவன் ஏதோ ஒரு விதத்தில், மிக மிக இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். இதே சங்கு முத்திரை உள்ள ஒருவனைப் பற்றி மிகவும் சந்தேகப்பட்டு முன்பொரு சமயம், சில ஆண்டுகளுக்கு முன் கழுவேற்றியிருக்கிறோம். எனக்கு அது இன்னும் மறந்து போய் விடவில்லை. இப்போது இவனையும் அப்படிக் கொன்று விடுவதன் மூலம் மிகப் பலவற்றை அறியவும், காணவும் நேரும் வாய்ப்புக்களை நாம் இழந்து விடுவோம்.”
“முயல்களுக்கு விரித்த வலையில், தெரிந்தோ தெரியாமலோ ஒரு வேங்கை சிக்கியிருக்கிறது என்கிறீர்! இல்லையா?”
“பொருத்தமான உவமையைச் சொல்கிறாய் அரசே! இவன் ஒரு வேங்கையேதான். உன்னுடைய சாகஸக் காரிகை காம மஞ்சரி இவனை மயக்கி இவனிடமிருந்து எதையும் தெரிந்து கொள்வதற்குப் பதில், அவளை இவன் மயக்கி அவளிடமிருந்து இவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை கலியா!”
“உங்கள் சந்தேகம் வீணானது! வில்லாலும், வாளாலும் வெல்ல முடியாதவர்களைப் பல முறை அவள் விழிப் பார்வையே வென்று தந்திருக்கிறது அரச குருவே!”
பேசிக் கொண்டே அவர்கள் பாலி மொழிப் புலவர்கள் கலிய மன்னனை எதிர்பார்த்துக் காத்திருந்த கொலு மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். புலவர்கள் எழுந்து நின்று, அரசனை வாழ்த்தி வரவேற்றனர். அரசன் களைத்து வந்திருப்பதை அறிந்து, அவன் மனக் குறிப்பு உணர்ந்த புலவர்கள் அவனை மகிழ்விக்கக் கருதினர். அரச குரு புலவர்களை எல்லாம் மிக மிக ஏளனமாகவும் அலட்சியமாகவும் ஏறிட்டுப் பார்த்தார். அரச குருவின் செல்வாக்கை அறிந்த புலவர்கள் அவரையும் வாய் நிறைய வாழ்த்தினர். அரச குரு மாவலி முத்திரையர் உள்ளுற நகைத்துக் கொண்டார். இந்தப் புலவர்களில் பலர் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அரசன் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக இல்லாததையும், பொல்லாததையும் புனைந்து கூறி, அரசனிடம் பரிசில் பெற்றுக் கொண்டு போவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அலைவதால், மாவலி முத்தரையருக்கு இவர்கள் மேல் என்றைக்கும் மதிப்பு எதுவும் இல்லை. இன்றும் அப்படியே நடந்தது. முதல் புலவரே சிங்காரச் சுவை நிறைந்த கற்பனை ஒன்றைப் புனைந்து பாடினார்.
‘கலிய மன்னனே! அழகிய பெண்கள் ஆகிய நாங்கள் உன்னை நினைத்து உருகிக் கருத்தைப் பறிகொடுத்துக் கைவளைகள் சோர்ந்ததால், நான்மாடக் கூடல் நகரத் தெருக்களின் இரு சிறகிலும் குவியல் குவியலாகப் பொன் வளைகள் கேட்பாரற்றுக் குவிந்து விட்டன. வளையிழந்து கை சோர்ந்த பெண்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்” என்று அர்த்தம் வருமாறு பாடினார் அவர்:-
“தெருமருங்கின் இருசிறகும் பொன்னினொளிர்
தொடிநிறைந்து குவிந்திருந்த நான்மாடத்
தருமருந்திற் கூடல்நகர் ஆரணங்கார்
அய்யா கலியழகா அறிவாழித்
திருவுருவே திண்தோளாய் வலிமிக்காய்!
திண்டிநினைக் கூடுமின்பம் வலிமிக்காய்!
வருநாளாய் நீதருநாளாய்த் திருநாளாய்
வளையிழந்து தெருவெல்லாம் அலைகின்றோம்”
மேற்கண்ட பொருளமைந்த பாலி மொழிக் கவிதையை முதற் புலவர் பாடி முடித்ததும் மாவலி முத்தரையர் அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டார். அவருடைய ஏளனம், இயல்பை மீறி இருப்பதை அரசன் கவனித்தான்.
“ஐயோ, பாவம் அவ்வளவு பெண்களையும் இங்கே அழைத்து வந்து, நம் கலிய மன்னனைக் காண்பித்து விட்டுத் தெருக்களில் தேர்களும், யானைகளும், குதிரைகளும் போவதற்கு இடமில்லாதபடி வளைகள் குவிந்து விடாதவாறு தடுத்திருக்கலாமே!” என்று முத்தரையர் ஏளனம் செய்ததற்கு, ஒரு புலவர் மறுமொழி கூறலானார்:‘மெய்யாகவே வளைகள் அப்படிக் கழன்று குவியாது! இதெல்லாம் ஒரு வகைக் கற்பனை அதிசயோக்தி. உயர்வு நவிற்சி என்பார்கள் உங்கள் தமிழில்.”
“நீங்கள் எல்லாம் இப்படியே கற்பனையைப் புனைந்து தள்ளிக் கொண்டிருந்தீர்களானால் இந்தக் களப்பிரப் பேரரசின் வீரம் கூட ஒரு நாள் கற்பனையாகப் போய் விடும்.”
எந்த ஒரு மகிழ்ச்சியை எதிர் பார்த்து அரச குரு தம்முடைய குரூரமான இயல்பை விடுத்துச் சிரிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதைக் கலியன் சிந்தித்தான். அரச குருவுக்குப் பயந்தபடியே இரண்டாவது புலவர், கலிய மன்னன் நான்மாடக் கூடல் வீதியில் உலாப் போகும் போது, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவ மகளிரும் மயக்கமுற்று மையலானதைப் பற்றிய உலாக் கவிதையைப் பாடலானார்:-
“இந்த ஏழு பருவ மகளிரும் பல நூறு ஆண்டுகளாக அரசர்கள் தெருவில் வரும்போது மட்டும்தான் மையல் கொள்ளுகின்றார்கள்! இந்த மதுரை மாநகரம் பாண்டியப் பேரரசின் தலைநகராக இருந்த போது, பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர்களும் இப்படித்தான் ஒரு பாவமும் அறியாத ஏழு பருவ மகளிரை வம்புக்கு இழுத்துப் பாடியிருப்பார்கள். இன்று நம் கலிய மன்னன் உலாப் போகும் போதும் இந்த ஏழு பருவ மகளிர்தான் மையல் கொள்கிறார்கள். நாளைக் கலிய மன்னனின் மகன் உலாச் சென்றாலும் இவர்கள்தான் மயங்க வேண்டும் இவர்களுக்கும் உங்களுக்கும், வேறு வேலையே இல்லையா?” என்று இரண்டாவது புலவரையும் ஏளனம் செய்தார் அரச குரு. ஒரு நிலைமைக்கு மேல் அவர் தன்னையே ஏளனம் செய்கிறாரே என்றுகூட அரசன் உள்ளுற உணரத் தலைப்பட்டான்.
அங்கு அப்போது யாருமே எதிர்பாராத விதமாகக் காம மஞ்சரி மான் நடந்து வருவது போல் அன்னநடை பயின்று, கொலு மண்டபத்திற்குள் வந்தாள். உடனே அரசனும் மாவலி முத்தரையரும் பரபரப்படைந்தனர். அவளைப் பின் தொடர்ந்து பூத பயங்கரப் படைத் தலைவனும் அங்கு வந்தான். புலவர்களையும் வைத்துக் கொண்டு காம மஞ்சரியிடம் தான் விசாரித்தறிய வேண்டியதை எப்படி விசாரிப்பது என்று கலியன் தயங்கினான். அரச குரு அப்படித் தயங்காமல் கேட்டுவிட்டார்:-
“உன்னிடம் ஒப்படைத்த காரியம் என்ன ஆயிற்று? வெற்றிதானே?”
“இல்லை. அந்த முரட்டு ஆடவனை எந்த நளினமான உணர்வுகளாலும் வசப்படுத்த முடியவில்லை. இறுதியில் நான் அவனிடமிருந்து உயிர் தப்புவதே அரும்பாடு ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஒரு கண்ணீர் நாடகம் ஆட வேண்டியிருந்தது. அந்த இறுதி நாடகத்தில் மட்டுமே நான் அவனை வென்று தப்பினேன். மாமன்னருக்குத் துரோகம் செய்து, அவன் மேலுள்ள பிரியத்தால் அவனைத் தப்பிச் செல்ல விடுவதற்கு உதவுவது போல் நடித்துத்தான் நானே, அவனால் எனக்கு அபாயம் விளையாமல் பிழைத்தேன்!”
கலியன் ஏதோ சந்தேகத்துடன் அவளைக் கூர்ந்து நோக்கினான்.