நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/3. அழகன் பெருமாளின் வேதனை
அழகன் பெருமாள் மிக மிகச் சாதுரியமாக நடித்த அரச தந்திர நாடகத்தை மாவலி முத்தரையர் நம்பாததுடன் விரைந்து அவனை எதிர்த்துச் சொல்லால் மடக்கினார். குறுக்குக் கேள்விகள் கேட்டு அவனைத் திகைக்கச் செய்தார்.
“தம்பி! என் வயதை நோக்க நீ மிகவும் இளைஞன்தான். உன்னைப் போன்ற பாண்டியர் இயக்கத்து இளைஞர்களிடம் நான் அத்தனை எளிதாக ஏமாறி விட மாட்டேன் என்பதை நீ மறந்து விடக் கூடாது! திடீரென்று எதையாவது சொல்லி, நம்ப வைத்து என்னையோ, என்னைச் சேர்ந்தவர்களையோ நீ கவிழ்த்து விட முடியாது. நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறோம். நீங்கள் களப்பிரர்களிடம் ஆட்சியையும், நாட்டையும் இழந்திருப்பவர்கள். இழந்ததை மீட்கத் தவிப்பவர்களின் அறிவும், ஒற்றுமையும், வலிமையும், சாதுரியங்களும், எல்லாமே மிகமிகக் கூர்மையாக இருக்கும் என்பதை நான் அறிவேன் அப்பனே! முன்பு ஒருநாள் வினாவும் போது நீயே என்னிடமும், என் ஆட்களிடமும் ‘நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகன் யாரென்றே எனக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது'என்பது போல் நடித்திருக்கிறாய். இன்றோ இருந்தாற் போலிருந்து உள்ளுற ஏதோ சதித் திட்டம் செய்து கொண்டு பேசுவது போல ‘மதுராபதி வித்தகன் ஏமாற்றத்தால் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு விட்டதாகக்’ கதை அளக்கிறாய்!"
“இல்லை ஐயா! இதில் கதை எதுவும் கிடையாது. நான் இப்போது கூறுவதுதான் மெய்யாக நடந்த காரியம்! மதுராபதி வித்தகர் இப்போது இல்லை. நீங்கள் அவரைப் பற்றி நினைத்து வீணாகக் கவலைப் பட வேண்டாம்” என்று மீண்டும் உறுதியாகக் கூற முயன்றான் அழகன் பெருமாள். அவர் அதை நம்பாமலே மேலும் பேசினார்.
“நீ என்னை இத்தனை சுலபமாக ஏமாற்றி விட முடியாது அப்பனே! மதுராபதி வித்தகனை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒரு சிறிய முயற்சி. முதல் முறை தோற்றுப் போவதை ஏற்றுத் தாங்கிக் கொள்ள முடியாமல், மனம் உடைந்து மலை மேல் ஏறிக் குதித்து உயிர் விடுகிற கோழை அவனில்லை. விரக்தியையே விரக்தியடையச் செய்து தன்னை அணுக விடாமல் துரத்தும் வீரன் அவன். ஏமாற்றத்தையே ஏமாற்றம் அடையச் செய்து, தன்னை நெருங்கி விடாமல், எட்டி நிற்கச் செய்கிற வல்லாண்மை அவனுக்கு உண்டு. இப்படி ஒரு கதை கட்டி விட்டால், நீ கூறும் இதை உண்மை என்று நம்பி, நான் உன்னை இந்த இருட்சிறையிலிருந்து விடுதலை செய்வேன் என நீ நினைந்தால், அது பேதமை இதை நான் நம்பவில்லை....”
“நீங்கள் என்னை விடுதலை செய்யா விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால், மதுராபதி வித்தகர் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது உண்மைதான்! உயிரோடு இருப்பவரை மாய்ந்து போனதாக உங்களிடம் பொய் கூறி இப்போது எனக்கு ஆகப் போவது என்ன?” என்று மேலும் முன் சொன்னதையே அவரிடம் அழகன் பெருமாள் வற்புறுத்தினான். மாவலி முத்தரையர் அவன் கூறியதை ஏற்றதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும், நம்பாமல் சிறிதும் நம்பிச் சிறிதும் மனம் குழம்பினார் அவர். நேரே போய் அவர் களப்பிர அரசனிடம் அந்தச் செய்தியைக் கூறினார். கூறிய சுவட்டோடு, தாம் இந்தச் செய்தியை நம்பவில்லை என்றும் களப்பிரக் கலியரசனிடம் தெரிவித்தார்.
கலியரசன், மதுராபதி வித்தகர் இருக்கிறாரோ, மாண்டு போய் விட்டாரோ என்று அவரிடம் விவாதிக்கவில்லை. ஆனால் பாண்டிய வம்சம் தலையெடுக்க இனி வழியில்லை என்பது போல், ஏற்கெனவே தனக்குள் இருந்த ஒரு முடிவை மேலும் நம்பினான் அவன். இந்த உறுதியான நம்பிக்கையினால், கோநகரிலும், கோட்டையின் உள்ளேயும், வெளியேயும், செய்திருந்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், படை பலப் பெருக்க ஏற்பாடுகளையும் மெல்ல மெல்லப் பிடி தளர்த்தி விட்டான். படை வீரர்களில் பெரும் பகுதியைக் கோட்டையில் வைத்திருந்த நிலையை மாற்றி, வடக்கேயும், தெற்கேயும், நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கும் அந்தப் படைகளைப் பிரித்து அனுப்பினான். மாவலி முத்தரையரை மீறியே இதைச் செய்தான் அவன். அழகன் பெருமாள் முதலியவர்களைக் காராக்கிருகத்தில் இருந்து விடுதலை செய்து விடக் கூடக் கலியரசன் சித்தமாயிருந்தான். ஆனால், அதை மட்டும் முத்தரையர் பிடிவாதமாக மறுத்ததோடு, தடுத்து நிறுத்தியும் விட்டார். “இந்தப் பாண்டிய வேளாளர்கள் நம் வசம் சிறைப்பட்டிருக்கிற வரைதான் வெளியே அங்கங்கே இலைமறை காய் போல் ஒளிந்திருக்கின்ற வேறு சில பாண்டிய வேளாளர்கள் நமக்கு அஞ்சித் தயங்க முடியும். இவர்களையும் விட்டு விட்டால், மறுபடி பூசல்களை மூட்ட இவர்களே வெளியே போய்த் தூண்டினாலும் தூண்டலாம். ஆகவே, நான் சொல்கிற வரை இவர்களை நீ வெளியே விடவே கூடாது” என்று அரசனைக் கடுமையாக எச்சரித்து விட்டார் மாவலி முத்தரையர். கலியரசனும் இந்தச் சிறிய விஷயத்தில் அவரைத் தட்டிப் பேச விரும்பாமல் அவர் சொல்கிறபடியே கேட்டு விட்டான்...
அதே நேரத்தில் இருட்சிறையில் “பெரியவர் இறந்து விட்டதாக உன் வாயால் நீ ஏன் அமங்கலமாக ஒரு சொல் சொல்ல வேண்டும்?” என்று தன்னைக் கோபத்தோடு வினாவிய மற்ற நண்பர்களுக்கு, அழகன் பெருமாள் ஆத்திரப் படாமல் நிதானமாக மறுமொழி கூறினான்:
“நண்பர்களே? நான் இப்படி ஒரு பொய்யைக் கூறி மாவலியாரைத் திசை திருப்பி நினைக்க விட்டிருப்பதால் நமக்குப் பொன்னான வாய்ப்புகள் பல நேரும். போகப் போக நீங்களே அவற்றை அறிவீர்கள் . இப்போது உங்களுக்கு அது புரியாதுதான். நான் கூறியதால் மட்டுமே, பெரியவர் இல்லையாகி விட மாட்டார். அவர் இல்லை என்பதை அந்த மாவலியாரே நம்பவில்லை; பார்த்தீர்களா? ஆனால் இந்தக் குழப்பத்தினை நான் உண்டாக்கி விட்டிருப்பது நம் பெரியவருக்கே நல்லது. இனி இவர்கள், அவர் தலையைத் தேடி அலையும் முயற்சிகள் தானாகக் குறையும். அதனால் அவருக்கு அதிகப் பயன் விளைந்து, மற்ற திட்டங்களை அவர் நினைத்தபடி நிறைவேற்றுவார். பார்த்துக் கொண்டே இருங்கள்! எல்லாம் நமக்குச் சாதகமாகத் திரும்பப் போகிறது” என்று அழகன் பெருமாள் கூறிய பின்பே இது விஷயத்தில் நண்பர்களின் ஐயப்பாடுகள் தீர்ந்தன. ஒரு தந்திரத்திற்காகத் தான் கூறியுள்ள இந்தப் பொய்யை உறைத்துப் பார்க்கக் கருதி, மாவலி முத்தரையர் கோநகரில் பரப்புவாரானால், அதன் விளைவாகக் கோநகரிலேயே இருக்கும் தன் மனிதர்களும் கூடக் குழப்பமடைய நேரிடுமே என்ற ஒரு பயம்தான் அப்போது அழகன் பெருமாளின் அந்தரங்கத்தில் இருந்தது.
மாவலி முத்தரையர், தான் கூறிய மதுராபதி வித்தகர் பற்றிய செய்தியைக் கோநகரில் பரவச் செய்து விடுவாரானால், அதன் விளைவாகக் கணிகை இரத்தினமாலை, இளையநம்பி, பாண்டியர்களுக்கு வேண்டிய பிறர் எல்லாருமே ஒன்றும் புரியாமல் திகைக்கவும், குழப்பம் அடையவும் நேரிடுமே என்று அஞ்சினான் அழகன் பெருமாள். ஆனால், அப்படியெல்லாம் குழப்பமோ, கெடுதலோ நேராது என்றும் அவன் உள் மனத்தில் ஏதோ ஓருணர்வு உறுதியாக நம்பிக்கை அளித்தது. பெரியவரைத் தொடர்பு படுத்திக் கூறிய ஒரு பொய்க்காக அவன் மனம் வருந்தியது. ‘புரை தீர்ந்த நன்மை பயக்கக் கூடியது’ என்றால், அப்படிப்பட்ட ஒரு பொய்யையும் சொல்லலாமா என்ற முன்னோர் முடிவையும், வழுவமைதியையும் நினைத்தால், ஓரளவு அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது.
தான் சமயோசிதமாக இட்டுக் கட்டிக் கூறிய இந்தப் பொய்யை, மாவலி முத்தரையர் முழுமையாக நம்பி விடா விட்டாலும், மதுராபதி வித்தகர் மறைந்திருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்ற வேகத்தைக் குறைக்கவும் திசை திருப்பவும் இது பயன்பட முடியும் என்று அழகன் பெருமாள் நம்பினான். சிறையிலிருந்தபடியே தந்திர உபாயத்தின் மூலம் செய்ய முடிந்த மிகப் பெரிய தேச சேவையாக இதை அவன் கருதினான்.
தானும், ஏனைய உப வனத்து நண்பர்களும், தென்னவன் மாறனைச் சிறை மீட்கும் குறிக்கோளுடன் பூத பயங்கரப் படையினர் போன்ற மாறு வேடத்தில் அரண்மனைக்குள் நுழைந்த போது, இப்படிப் பன்னெடுங் காலமாகச் சிறையில் தாங்களே சிக்கித் தவிக்க நேரிடும் என்று அழகன் பெருமாளோ, மற்றவர்களோ கனவில் கூட நினைத்ததில்லை. இப்போது இந்த இருட் சிறையிலிருந்து வெளியே என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்க முடியும் என்பதை அநுமானம் செய்வது கூடச் சிரமமாக இருந்தது. தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றித் தென்னவன் மாறனைத் தான் விடுவித்துப் பெரியவரிடம் அழைத்துச் செல்லுமுன், களப்பிரர்கள் அந்தப் பாண்டிய குல வீரனின் நல்லுயிரை இந்த உலகிலிருந்தே விடுவித்து விட்டார்கள் என்று எண்ணும் போது, அழகன் பெருமாளின் இதயம் கனத்தது. அவன் சிந்தனையில் விரக்தியும் வேதனையுமே வந்து தங்கின. அவன் எண்ணினான்:
‘நான் இந்த இருட்சிறையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தாலும், இனி எந்த முகத்தோடு பெரியவர் முன்னிலையிலே போய் நிற்பேன்? அப்படிப் பெரியவர் முகத்தில் விழிக்க வெட்கப்படும் நிலையுடன் இந்தச் சிறையிலிருந்து மீள்வதை விட இதிலேயே நலிந்து ஒடுங்கி அழிந்து போவது மேல். நமது பெருமதிப்புக்குரியவர் நம்மை மதிக்காத நிலையிலும், உயிர் வாழ்வதா பெரிய காரியம்? “என்னால் சிறை மீட்க முடியாமற் போனதால், தென்னவன் மாறனைக் களப்பிரர்கள் கழு ஏற்றிக் கொன்று விட்டார்கள்” என்பதாக எப்படி நான் பெரியவரிடம் போய் வாய் கூசாமல் சொல்லுவேன்? தனக்கு இடப்பட்ட கட்டளையை வெற்றியுடன் நிறைவேற்றி விட்டு முன்னே போய் நிற்கிற வீரன் பட முடிந்த பெருமையைத் தோற்றுவிட்டு நிற்பவன் எதிர்பார்க்கவே முடியாது. நானோ தோற்று விட்டவன். இங்கிருந்து விடுபட்டு வெளியேறினாலும், பெரியவர் முன்னால் போய்த் தலை நிமிர்ந்து நிற்க எனக்கு இனி என்ன தகுதி இருக்கிறது! நான் இந்தச் சிறைக்குள்ளேயே சாவதுதான் மேல். எதனாலும் தாழ்ந்து போகக் கூடாது. தாழ்ந்து போய் விட்டால், அப்புறம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆபத்துதவிகள் என்றாலே ஆபத்தில் உதவவும், மீட்கவும் கடமைப்பட்டவர்கள். நானோ உதவவும், மீட்கவும் முடியா மற் போனதுடன், பிறரை ஆபத்திலிருந்து மீட்கத் தவறிய குற்றத்தோடு, என்னையும், என்னைச் சேர்ந்தவர்களையும் ஆபத்தில் சிக்க வைத்துக் கொண்டு விட்ட மிகப் பெரிய குற்றத்தையும் புரிந்து விட்டேன். இனி எனக்குக் கழுவாயோ, தீர்திறனோ இல்லவே இல்லை! நான் மிகப்பெரிய பாவி' என்று நினைத்து, நினைத்து, தவித்து நெக்குருகிக் கண்ணீர் வடித்தான் அழகன் பெருமாள். தான் செய்துவிட்ட பிழையால், இனிமேல் பாண்டியக் குலத்துக்கு விடிவே இல்லாமல் போய் விடுமோ என்று அவன் உள்ளம் பதறியது, பயந்தது, தவித்தது, உருகியது, உழன்றது, மறுகியது, மலைத்தது.