உள்ளடக்கத்துக்குச் செல்

நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/4. புன்னகையும் வார்த்தைகளும்

விக்கிமூலம் இலிருந்து

4. புன்னகையும் வார்த்தைகளும்

கூடற்கோநகரத்தின் வானத்தில் மழை மேகங்களோடு, மெல்ல இருண்டு கொண்டு வந்த பின், மாலை வேளையில் மாளிகையின் கூடத்தில், இரத்தின மாலைக்கும் இளைய நம்பிக்கும் இடையே இந்த உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அவள் தரையில் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் அருகே அமர்ந்து அவள் பூத்தொடுக்கும் அழகைக் கண்களாலும், இதயத்தாலும் இரசித்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“இரத்தினமாலை! அழகன் பெருமாளும் உப வனத்து நண்பர்களும்தான் களப்பிரர்கள் வசம் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாய்! ஒரு விதத்தில் பார்க்கப் போனால், நானும்தான், இந்த மதுரை மாநகர எல்லைக்குள் சிறைப்பட்டிருக்கிறேன். அவர்கள் களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருக்கிறார்கள். நான் நம்மவர்களிடமே, சிறைப்பட்டுப் போய் விட்டேன். கொலை செய்யப்பட்டு விட்ட என் தமையன் தென்னவன் மாறனை அவர்களாலும் மீட்க முடியவில்லை. நான் மீட்பதற்கும் முயல முடியாமல், எல்லாருமாகச் சேர்ந்து என் கைகளைக் கட்டிப் போட்டு விட்டீர்கள். இதன் விளைவாகக் களப்பிரர்கள் காட்டில்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய நல்வினைக் காலம் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.”

“ஆத்திரம் வரும் போதெல்லாம், உங்களுக்கு இப்படி என்னிடம் ஏதாவது வம்புக்கு இழுத்தாக வேண்டும். என்னைப் போருக்கு இழுக்காவிட்டால் உங்களுக்குப் பொழுது போகாதோ?”

“கோபித்துக் கொள்ளாதே இரத்தினமாலை! இங்கே நான் செய்ய முடிந்ததாக மீதமிருக்கும் ஒரே போர் இதுதான்! வேறு போர்களிலிருந்தும், முயற்சிகளிலிருந்தும் நான்தான் தடுக்கப்பட்டிருக்கிறேனே?...”

“யார் சொன்னார்கள் அப்படி? நீங்கள் செய்வதற்குப் பெரிய, பெரிய போர்கள் எல்லாம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.”

“விரைவில் என்றால் எப்போது?”

“இப்போதே இன்றிரவில் கூட அது தொடங்கப் படலாம்! நான் கூறுவது மெய்...”

“மெய்யாயிருக்கலாம். ஆனால், நீ ஒன்றை மறந்து விடக் கூடாது இரத்தினமாலை. ஆயுத பலமும், ஆள் பலமும், இல்லாமல் களப்பிரர்களோடு மோத முடியாது. போருக்கு நம்மிடம் வலிமை இல்லை. போரே இல்லா விட்டாலும் ஒரு சிறு கலகம் புரியக் கூட நம்மிடம் ஆள் வலிமை இல்லை...”

“போருக்கும், கலகத்துக்கும், மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதாய் நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.”

“அதில் சந்தேகமென்ன? தொடக்கமும், முடிவும் நியாயமும், இலக்கணமும் உடையது போர். அதற்கு இரு தரப்பிலும் வலிமை வேண்டும். ஆனால், ஒரு கலகத்தை எப்போதும், எப்படியும், எவ்வளவு குறைந்த வலிமையோடும் எங்கேயும் தொடங்கலாம். கலகத்துக்கு முடிவு இல்லை. போருக்குத் தொடக்கத்தைப் போலவே முடிவும் உண்டு...”

“களப்பிரர்களை எதிர்த்து இனி நாம் செய்ய வேண்டியது போரா, கலகமா?”

“நாம் நீண்ட காலம் காத்திருந்து விட்டோம். பல பூசல்களுக்கும், கலகங்களுக்கும் பின்பு கூட, நமக்குப் பயன் விளையவில்லை. போருக்குத்தான் முடிவான பயன் உண்டு! கலகத்துக்கு அது இல்லை. எனவே, இம்முறை நாம் எதைச் செய்தாலும், அது நமக்கு முடிவான பயனைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.”

“அப்படியானால், இங்கே நீங்கள் அதற்குத் திட்டமிட வேண்டிய காலம் வந்து விட்டது...”

“வெறும் கை முழம் போட முடியாது! பெரியவரிடம் இருந்து கட்டளை இல்லை. வீரர்கள் இல்லை. மாபெரும் களப்பிர அரசை எதிர்க்கப் போதிய படைக்கலங்கள் இல்லை. திட்டமிடுவது மட்டும் எப்படிச் சாத்தியமாகும்? தரையில் உள்ள பூக்களை எடுத்துக் கைகளால் தொடுப்பது போல், அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.”

“நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்! ஆனால், இப்போதுதான், இங்கே உங்கள் எதிரே அமர்ந்து பூத்தொடுப்பது எவ்வளவு சுலபமாயிருக்கிறதோ, அவ்வளவு சுலபமாகப் போர் தொடுப்பதையும் ஆக்கி வைத்திருக்கிறோம். எல்லா ஏற்பாடுகளும் இங்கு அருகருகே உள்ளன.”

“நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை இரத்தின மாலை போர் தொடுப்பது என்பது பூத்தொடுப்பதை விடப் பெரிய காரியம்.”

“பெரிய காரியம்தான்! ஆனால் சமயமும், வேளையும் பொருந்தியிருந்தால், அதுவே பூத்தொடுப்பதை விட எளிதாகிவிடும்...”

“ஆனால் சமயமும், வேளையும் இப்போது அப்படிப் பொருந்தி வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே? உனக்கு மட்டும் எவ்வாறு அப்படித் தோன்றுகிறது? குறைபாடுடைய கணிப்புக் காரணமாக நீ அப்படி நினைக்கிறாயா?”

எதிரே அமர்ந்து அவன் இப்படி வினாவிக் கொண்டிருந்த போது அவள் பூக்களைத் தொடுத்து முடித்திருந்தாள். தொடுத்து முடித்த கண்ணியைக் குடலையில் வைத்து எடுத்துக் கொண்டு புறப்படும் போது, அவனை நோக்கி நகைத்தாள் இரத்தினமாலை. அவன் கேள்விக்கு அவள் இன்னும் மறு மொழி கூறவில்லை. அவன் மேலும் அவளை வற்புறுத்திக் கேட்டான்;

“என்ன பதில் சொல்லாமலே எழுந்து போகிறாய்? வார்த்தைகளால் வினாவிய வினாவுக்குப் புன்னகை மட்டுமே பதிலாகி விடாது.”

“என்ன செய்வது? வார்த்தைகளை விட அதிகப் பொருளாழம் உள்ளவற்றைப் புன்னகையால் மட்டுமே கூற முடிகிறது. சற்றே பொறுத்திருங்கள்! இருட்டியதும், பதிலைச் சொற்களால் சொல்லாமல், கண் முன் காட்டியே விளக்குகிறேன்" என்று கூறினாள் இரத்தினமாலை. சிறிது நேரம் கழித்து, மாளிகையின் உணவுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளும் மடைப்பள்ளி பணிப் பெண்களிடம், "பணிப் பெண்களே! இன்றிரவு நம் மாளிகையில் விருந்தினர்கள் இருநூற்றுவருக்கு மேல் எதிர் பார்க்கப்படுகிறார்கள். அவ்வளவு பேருக்கும் இங்கேயே உணவு படைக்க வேண்டியிருக்கும்” என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இதை இளையநம்பியும் கேட்க நேர்ந்தது. அவனுக்கு இது புதிராய் இருந்தது. ஆயினும் ஏனென்று அவளைக் கேட்கவில்லை. -

அன்று மழையின் காரணமாக, விரைந்து இருட்டியது.

இருட்டி வெகு நேரமாகியும், மழை நிற்கவில்லை.

மாளிகையில் எல்லா இடங்களிலும், அந்தி விளக்குகள் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், இரத்தினமாலை அவனைத் தேடி வந்து அழைத்தாள்: “தயை செய்து என்னோடு வரலாம் அல்லவா? இது கட்டளை அல்ல. அழைப்புத்தான். நீங்கள் கட்டளையை மறுக்கலாம். அழைப்பை மறுக்கக் கூடாது.”

“மறுக்காமல் வருகிறேன் இரத்தினமாலை! ஆனால், ஒரு நிபந்தனை. நீ தெளிவாக எல்லாவற்றையும் வார்த்தைகளால் பேச வேண்டும். மறுபடியும் புன்னகையால் பேச முயலுவாயானால், நான் நிச்சயமாக வருவதற்கில்லை.”

“ஏன்? என் புன்னகை உங்களுக்குப் பிடிக்கவில்லையோ?”

“புன்னகை பிடிக்காமல் என்ன? புன்னகையையும் புன்னகை செய்பவளையும் சேர்ந்தே பிடிக்கிறது... ஆனால், புன்னகையைக் கருவியாகக் கொண்டு பேச்சை மறைப்பதுதான் பிடிக்கவில்லை” என்று கூறி நகைத்தபடியே, அவளோடு எழுந்து புறப்பட்டான் இளைய நம்பி. அவள் மாளிகையின் பின்புறம், தோட்டம் இருந்த பகுதிக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அங்கே கூரைச்சார்பு வேய்ந்த கூடாரங்களில் கறவைப் பசுக்கள் கழுத்து மணி ஆடி ஒலிக்கப் புல் தின்று கொண்டிருந்தன. பசுக்களின் கொட்டாரத்தை அடுத்த பெரிய கூரைக் கொட்டாரத்தில், நீளமும் பருமனுமாக நூற்றுக் கணக்கான விறகுக் கட்டுகள் வரிசை குலையாமல் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. மழையில் நனைந்து விடாமல் அவை மிகமிகப் பாதுகாப்பாக அடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்து இளைய நம்பி கேட்கலானான்:

“மழைக் காலத்தில் பயன்படட்டும் என்று கட்டுக் கட்டாக விறகு வாங்கி அடுக்கியிருக்கிறாய் இரத்தினமாலை! கடந்த சில நாட்களாக வாயிற் பக்கமாகவும், புறங்கடைப் பக்கமாகவும், பணியாட்கள் விறகுக் கட்டுகளைக் கொண்டு வந்து அடுக்கிய வண்ணமாயிருக்கிறார்கள். இவ்வளவு விறகிலும், உணவு சமைக்கத் தகுந்த அவ்வளவு பெரிய எண்ணிக்கையில், இனி உன் மாளிகைக்கு விருந்தினர்களும் வருவார்கள் போலிருக்கிறது!” “இது போதாது! இன்னும் விறகுக் கட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் நிறைய வர வேண்டியுள்ளது.”

“அப்படியா? பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரையைக் கண்ணகி தன் கற்பினால் எரித்ததாகச் சொல்வார்கள். இப்பொழுது இந்தக் களப்பிரக் கலியரசனின் மதுரையை நீ விறகினால் எரிக்கத் திட்டமிட்டிருக்கிறாய் போல் இருக்கிறது! அந்தக் கண்ணகியைப் போல் உனக்கும் மதுரையை எரித்துப் புகழ் பெறும் ஆசை வந்துவிட்டதா, என்ன?” என்று அவன் வினாவிய போது, இதைச் செவியுற்றுச் சிரித்தாள் அவள். உடனே அவன் அவளைக் கேட்டான்:

“பார்த்தாயா? பார்த்தாயா? மறுபடியும் புன்னகையால் பேசத் தொடங்கி விட்டாயே இரத்தின மாலை.”

“ஆமாம்! நீங்கள் வார்த்தைகளால் பேசுவது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் புன்னகையால் பேசுவது எதுவோ, அதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ள முயலக் கூட இல்லை...”

“அப்படியா? புரிந்து கொள்ள முயல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையாவது சொல்லேன்; அப்படியாவது புரிகிறதா என்று மீண்டும் முயன்று பார்க்கிறேன்...”

இதைக் கேட்டு மீண்டும் அவள் புன்னகை பூத்தாள். அவளுடைய ஒவ்வொரு புன்னகையும், அவன் வியப்பை அதிகமாக்கின. விறகுக் கட்டுகள் அடுக்கப்பட்டிருந்த பகுதியில் பசுக் கொட்டாரத்தின் விளக்கொளி படர்ந்திருந்தது. விளக்கொளியில் அவன் கண் காண அவள் ஒரு பெரிய விறகுக் கட்டின் கயிற்று முடிப்புக்களை அவிழ்த்துக் கட்டை நெகிழ்த்தி விட்டாள். என்ன அதிசயம்! நெகிழ்ந்த விறகுகளினிடையே வாள்களும், வேல்களும், பிற படைக்கலங்களும் மின்னின. உள்ளே ஆயுதங்களை வைத்துக் கட்டியிருப்பது தெரியாமல் மிகச் சாதுரியமாக அந்த விறகுக் கட்டுகள் அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. அவள் புன்னகையின் மர்மம், இளையநம்பிக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. “ஐயா திருக்கானப்பேர் வீரரே! உங்கள் கேள்விக்குப் புன்னகையால் மட்டுமே நான் மறுமொழி கூறியதாக வருத்தப்பட்டுக் கொண்டீர்கள். இப்போது வார்த்தைகளாலும் மறுமொழி கூறுகிறேன். இதோ, கேட்டுக் கொள்ளுங்கள்.

“இந்த விறகுகள் மதுரையை எரிக்காது. ஆனால், களப்பிரர்களை எரித்து நிர்மூலமாக்கி விடும் என்பது என்னவோ சர்வ நிச்சயமானது.”

இப்படி அவள் பேசி முடித்த போது வியப்பில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவளை நோக்கி அவன் புன்னகை புரிந்தான்.

ஒரு பெரும் போருக்கு வேண்டிய படைக்கலங்கள் விறகுக் கட்டுகள் மூலம் உள்ளே வந்திருப்பதை அவன் அறிந்த போது, அது அவள் சாதுரியமா அல்லது அதை அப்படி அனுப்பி வைத்தவர்கள் சாதுரியமா என்று உடனே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வியப்பிலிருந்து அவள் மீள்வதற்குள்ளேயே.

“என்னோடு வந்தால் இதைவிடப் பெரிய மற்றோர் அதிசயத்தையும் காட்ட முடியும்! கருணை கூர்ந்து தாங்கள் வந்தருள வேண்டும்” என்றாள் இரத்தினமாலை.

“எங்கே வர வேண்டும்?”

“கீழே நிலவறைக்கு” என்று கூறி நிலவறை வழியே நுழைவாயிலுக்கு அவனை அழைத்துச் சென்றாள் அவள்.