நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-12
காட்சி - 12
நீதிதேவன் மாளிகை
நீதிதேவன் சோகமே உருவாக, சிந்தனையில்
ஆழ்ந்திருக்கிறார். அப்போது உள்ளே நுழைகிறான்,
பணியாள்.
பணி : தேவா, பூலோகத்தில் தாங்கள் கண்ட
காட்சிகளிலேயே, இன்னும் மனம் இலயத்திருக்கிறீரா?
இல்லை, இலங்கேசன் தன்னுடைய அரக்கக் குணத்தை
தங்களிடமும் காட்டி விட்டானா? கலக்கத்துக்கு என்ன
சுவாமி காரணம்? இல்லை, என் காதில் பட்டவை
தங்கட்கும் எட்டி விட்டதா?
நீதி : என்ன வரும்போதே, அடுக்கடுக்காக கேள்விகளைக்
கேட்டுக் கொண்டே வருகிறாய்! எனது கலக்கம், நான்
– பூலோகத்தில் கண்ட காட்சிகள்தான். இலங்கேசன்
தன் வாதத்திற்கு, ஆதாரபூர்வமாக பூலோக
நடவடிக்கைகளைக் காட்டினான். பூலோகம் என்ன?
தேவலோகத்திலும் சில காட்சிகளைக் கண்டேன்.
அவரவர்கள் ஏற்றிருக்கின்ற தொழில், வாழ்க்கை முறை,
இலட்சியம் ஆகியவற்றால், இரக்கம் காட்ட முடியாத
சந்தர்ப்பங்கள் பல நேரிடுகின்றன. இதை நினைத்தே
கலக்கம் கொண்டேன். அது சரி, நீ ஏதோ காதில் பட்டது.
என்றாயே, என்ன சேதி காதில் பட்டது?
பணி : சந்தேகிக்கிறார்கள். சுவாமி, தங்களை. அது மட்டுமல்ல,
குற்றமே சாட்டுகிறார்கள், தங்கள் மீது.
நீதி : [அலட்சியமாக] குற்றமா? என் மீதா? யார் அவர்கள்?
பணி : தேவர்கள் சுவாமி! தாங்கள் இராவணனுடன் சுற்றிக்
கொண்டிருக்கிறீர்களாம். குற்றவாளியுடன் இவர் சுற்றக்
காரணம் என்ன என்கிறார்கள்.
நீதி : குற்றம் சாட்டப்பட்டவன், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு,
அநீதி, அக்ரமம், அநியாயம் என்பதை விளக்க
ஆதாரங்களைக் காட்டினான். ஏன் அவனுடன் செல்லக்
கூடாது?
பணி : இலங்கேசனுடன் தாங்கள் செல்வது, அவனிடம்
இலஞ்சம் பெற்றுக் கொண்டுதான் என்றும் தேவர்கள்
பேசுகிறார்கள் சுவாமி.
நீதி : [கோபத்துடன்] எவரும், எவரைப் பற்றியும் எப்படியும்
ஏசித் திரியும் மனோபாவம் பூலோகத்தில் தான்
பெருகியிருக்கிறது, என்று எண்ணியிருந்தேன். எந்த
விதமான பற்றோ, பாசமோ, கொள்கையோ,
இலட்சியமோ, இல்லாதவர்களும் பாடுபடாமலேயே
பலனை அனுபவிக்க வேண்டும் என்பவர்களும்
மட்டுமே இதைப் போன்ற இழிவான காரியங்களைச்
செய்து கொண்டிருப்பார்கள். இந்தப் புற்றுநோய்
பூலோகத்தோடு நிற்காமல், தேவலோகத்தையும் பற்றிக்
கொண்டதுபோலும். அவைகளை விட்டுத் தள்ளு.
காதில் போட்டுக் கொள்ளாதே. அப்படியே
விழுந்தாலும், மனதைப் போட்டுக் குழப்பிக்
கொள்ளாதே! தென்னிலங்கை இராவணன், தீர்ப்பைப்
பற்றி, கவலையின்றியே இந்த விசாரணையில் கலந்து
கொள்கிறேன், என்று சொல்லிவிட்ட பிறகு, அவன்
[இப்போது, கம்பர் கோபமாக உள்ளே நுழைகிறார்.]
அவரைக் கண்டதும்]
பணி : இதோ, கவிச் சக்கரவர்த்தி அவர்களே வந்து விட்டார்.
கம் : நீதிதேவன் அவர்கள் ஏதோ அவசியத்தைப் பற்றி
எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான்
இப்போது அவசியத்தோடுதான் வந்துள்ளேன்.
அவசியம் இல்லாமல் அந்த அரக்கனோடு, தாங்கள்
பூலோகத்திற்கு சென்று வருவதும், அவனோடு
குலாவிக் கொண்டிருப்பதும் கேலிக்குரியதாக உள்ளது
தேவா! இது அவசியம்தானா, என்று கேட்கிறேன்.
நீதி : குற்றவாளியெனக் கருதப்படுபவன் மிகச்
சாதாரணமானவன் என்று தாங்கள் கூறிட முடியாது.
கம்பரே, அவன் தனக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டும்
சம்பவங்களையும் சாதாரணமானதென்றும் தள்ளிவிட
முடியாது. தன் இசை வன்மையால் பரமனின்
உள்ளத்தையே உருக வைத்தவன். ஈடு இணையற்ற
கலைஞன். இவைகளை இல்லை என்று மறுத்திட எவர்
உளர் கம்பரே! அவனுடன் நான் செல்வது, அடாது.
கூடாது, என்று கூறுவோர், என்ன காரணம் கூறுவார்.
கம் : மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தான்
ஏதும் அறியேன். நான் கூறுவது, குற்றவாளியெனக்
கருதப்படுபவனுடன், தீர்ப்பு கூறுவோர் சுற்றிக்
கொண்டிருப்பது, முறையல்ல, சரியல்ல என்று அவன்
விளக்கம் கூற தங்களை அழைக்கிறான் என்றால்,
என்னையுமல்லவா, உடன் அழைத்து செல்ல
வேண்டும்? தாங்கள் மட்டும் தனியாகச் செல்வது
தவறல்லவோ?
நீதி : குற்றம் சாட்டப்பட்டவனை, தனியாக விசாரிப்பதும்.
குற்றம் சாட்டியவர்களை தனியாக விசாரிப்பதும் பிறகு
இருவரையும் வைத்து விசாரணை நடத்துவதும்;
தீர்ப்புக் கூறுவோனின் முறை அல்லவோ? அது
எப்படித்தவறாகும்?
கம் : கடல் சூழ் உலகமெலாம், கவிச்சக்கரவர்த்தி எனப்
போற்றப்படும் என்னையும், கருணையும், இரக்கமும்
இல்லாத அரக்கனையும், ஒன்றாகவே கருதிவிடுகிறீரா.
தேவா? ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் மீது, மறு
விசாரணைக் கொள்வதே ஏற்றமுடையதாகாது. அப்படி
எடுத்துக் கொண்ட மறுவிசாரணையில் குற்றவாளியின்
பின்னால், தீர்ப்புக் கூறுவோர் சுற்றிக் கொண்டிருப்பது
கற்றறிவாளர், ஏற்றுக் கொள்ள முடியாதது, தேவா!
நீதி : முற்றும் கற்றுணர்ந்தோர் முடிவு கூட கால
வெள்ளத்தால், சரியானவை அல்ல என்று
மறுதீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதும் தாங்கள்
அறியாததல்ல.
கம் : நீதிதேவா ! தங்களை நிந்திக்க வேண்டுமென்பதோ,
தங்கள் மீது மாசு கற்பிக்க வேண்டுமென்பதோ, எனது
எண்ணமல்ல. எல்லாவித ஆற்றலும், அறிவும், திறனும்
இருந்தது. ஆனால் அன்னை சீதா பிராட்டியாரை,
அவன் சிறை வைத்ததும், கொடுமைப்படுத்தியதும்,
அவனது இரக்கம் இல்லாத அரக்க குணத்தால்தான்
என்று நான் எடுத்துரைத்த தீர்ப்புக்கு தங்கள் தீர்ப்பு
மாறுபடுமானால், கவிச்சக்கரவர்த்தி கம்பர் மட்டுமல்ல,
தேவரும், மூவரும், முனிவரும் பரிகசிக்கப்படுவர்.
எனவே தங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம்,
இரக்கமில்லா கொடுமனம் படைத்தவன் தான்
இராவணன், அரக்க குணம் படைத்தவன்தான்
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, என்ற
தீர்ப்பையே நான் எதிர்ப்பார்க்கிறேன். சென்று
[கம்பர் போய் விடுகிறார்.]
பணி : என்ன தேவா! இராவணனுடன் செல்வது, தகாது,
கூடாது என்று கூறி விட்டு, கம்பர் தானே தீர்ப்பைக்
கூறி, அதன்படி தீர்ப்பும் இருக்க வேண்டுமென்கிறாரே!
இது என்ன வகையில் நியாயம் தேவா!
நீதி : இதுதான் நேரத்துக்கேற்ற, ஆளுக்கேற்ற நியாயம்.
இலங்காதிபதி, தீர்ப்பைப் பற்றிக் கவலைப் படவில்லை.
கம்பர் தன் தீர்ப்பு குற்றமுடையது என்று கூறிவிடப்
போகிறார்கள் என்று கவலைப்படுகிறார்.உம்
பார்ப்போம்.
[காட்சி முடிவு]