உள்ளடக்கத்துக்குச் செல்

நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-5

விக்கிமூலம் இலிருந்து


காட்சி - 5



இடம் : தவச்சாலை
இருப் : சம்புகன், இராமன், சம்புகன் தாய்.

நிலைமை : [தவச்சாலையில் சம்புகன், தவம் செய்து
கொண்டிருந்தான். சாந்தி தவழும் அவன் முகம்,
காண்போரை வசீகரப் படுத்தக் கூடியதாக இருக்கிறது.]

தேவனின் திருப்பெயர்களைக் கூறித் துதிக்கிறான்.

இராமன் அங்கு வருகிறான். முகத்திலே —
கோபக்குறியுடன்.

சம்புகனின் தவம், இராமனின் அதிகாரக் குரலால்
கலைகிறது.

சீற்றத்துடன், பேசுகிறான் மன்னன் — காரணம்
புரியாதவனாகிக் குழம்புகிறான் சம்புகன்.

மன்னரின் கோபம், எதன் பொருட்டு என்பதை
அறிந்ததும் சம்புகனுக்குச் சிரிப்பு உண்டாகிறது.

தவம் செய்வது, தவறா! என்று தன்னைத்தானே
கேட்டுக் கொள்கிறான். தண்டிக்க வந்த இராமனையும்
கேட்கிறான்.

சம்புகன் : தரும சொரூபியே! தவம் செய்வது, குற்றமா? என்
        தலை மட்டும் வெட்டப்பட்டு விட்டால், கவலை
        கொள்ளேன். இராமா! தர்மத்தையே, வெட்டி
        வீழ்த்துகிறாயே, – தகுமா? இராவணனைக்
        கொன்றாய்,இலங்கையை வென்றாய், என்று
        கூறினார்களே, அது பொய்! மன்னரின் பெருமை
        மங்கக் கூடாது என்பதற்காக, யாரோ, தந்திரசாலி
        கட்டிவிட்ட பொய்யாக இருக்க வேண்டும். இராமா! நீ
        இராவணனிடம் தோற்றாய் – அவன் உன்னைத் தன்
        பெருந்தன்மையால், மன்னித்தான் — மணி முடியும்
        சுமந்து கொண்டிரு என்று சொன்னான். – ஆம்
        அதுதான் நடந்திருக்கும் – இங்கு நீ, இராவணனுடைய
        பிரதிநிதியாகவே வந்திருக்கிறாய்.

இராமன் : சம்புகா! சித்த சுவாதீனமற்றவன் போலப்
            பேசாதே–

சம் : பொய் அல்ல! அவன் தவத்தை அழிப்பவன் – இதோ
       நீயும் அதே வேலையை செய்ய வந்திருக்கிறாய் –
       அவனாவது தவத்தை மட்டும் அழித்தான். நீயோ,
       தவம் செய்யும் என்னையே அழிக்க வந்தாய் –
       அவனுக்கு நீ பிரதிநிதிதானே! – பொய்யா – ?

இரா : சம்புகா! இங்கு நான் தவம் கூடாது என்று கூறி
       நடத்தப்படும் தவங்களை எல்லாம் அழித்துக்
       கொண்டிருக்கிறேன் என்றா எண்ணுகிறாய்? தவம்
       நடக்கிறது நான் அதனை ஆதரிக்கிறேன் – உதவியும்
       செய்கிறேன்.

சம் : இது, தவம் அல்லவா?

இரா : தவம்தான்! ஆனால் நீ செய்வது, தகாது – என் கோபம்,
           தவத்தின் மீது அல்ல – அந்தக் குணம் அரக்கனுக்கு!
           அவரவர், தத்தம், குலத்துக்கேற்ப நடக்க வேண்டும்

           என்ற தர்மத்தைக் காப்பற்றவே, நான் இந்தக்
           கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது.
           அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்ல
           நான்.

சம் : யோசியாமல் பொய் பேசுகிறாய் – இராமா! கூசாது
      பேசுகிறாய். உன் ஆட்சியிலே, சிலருக்குத் தவம்
      செய்தால், ஆதரவும், என் போலச் சிலருக்குத்
      தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி
      என்கிறாய்.
      
இரா : தர்மம் – நானும் மீற முடியாத தர்மம்.

சம் : இதற்குப் பெயர் தர்மம்! அரக்கர் செய்தது மட்டும்
      என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக்
      கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர்
      என்றும் கூற முடியாதே. அவர்களில் பலர் தவம்
      செய்தனர். – இராவணனே,பெரிய தவசி! அரக்கர்
      தலைவர்களெல்லாம், தவம் பல செய்து, வரம் பல
      பெற்றவர்கள். ஆகவே அவர்களும், தவம் என்றாலே
      வெறுத்து அழித்தவர்களல்ல – தவம் நாங்கள்
      செய்யலாம் – ஆரியர் செய்யலாகாது என்றனர். –
      அழித்தனர் – நீயும், இங்கு ஆரியர் தவம் புரியலாம்,
      அநாரியனான நான் புரிதல் தகாது, தலையை
      வெட்டுவேன் என்கிறாய் இலங்கையான் செய்தால்
      பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச்
      செய்யும்போது அதற்குப் பெயர் ராஜ தர்மம்! இராமா!
      எனக்கு வெட்கமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அரசிலே
      வாழ்கிறோமே என்று – சீக்கிரம், என் தலையை
      வெட்டிவிடும்.

      [வாதம் முடிந்தது, இராமனின் தண்டனை கிடைத்தது,
      வரம் வேண்டி தவம் செய்த சம்புகனுக்கு அவன் தலை
      தரையில் உருண்டது.]
 
      இராமன், தவச்சாலையை விட்டு நீங்கினான்.

      இரத்தம் ஒழுகும் தலை! துடித்துத் துவண்ட உடல்!
      காக்கை, கழுகுகள் வட்டமிடலாயின.
      வழிப்போக்கர்கள், இந்தக் கோரக் காட்சியைக்
      கண்டனர். அலறினர்.

     சம்புகனின் தாயாருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது
     –உன் மகன் தலையை யாரோ வெட்டி விட்டனர்.
     என்று!

      ஐயோ, மகனே! என்று அண்டமதிரக் கூவினாள்
      அன்னை. ஓடோடி வந்தாள் தவச்சாலைக்கு, தரையில்
      உருண்டு கிடந்த தலையைக் கண்டாள். மீண்டும் கண்
      திறந்தாள். தலையைக் கையிலே எடுத்தாள் – துடி
      துடித்தாள் – பெருங்குரலில் கூவி அழுதாள் –
      பெற்றவள், வேறென்ன செய்வாள்?

      எடுத்துக் கொண்டாள் தலையை – எதிர்ப்பட்டோரை
      எல்லாம், கேட்கலுற்றாள், யார் செய்தது
      இக்கொடுஞ்செயலை என்று.

ச.தாயார் : மகனே! இந்தக் கதியா உனக்கு? யார் செய்த
       சதியடா இது? எந்தப் பாதகன், எந்தப் பாவி இந்தக்
       காரியத்தைச் செய்தான்?

       கண் மூடிக் கைகூப்பிக் கடவுளைத் தொழுது
       கொண்டிருந்த என் மகனை, கத்தி கொண்டு, கழுத்தை
       வெட்டிய காதகன் யார்?

       மகனே! மகேசனைக் காண வேண்டும், அவன்
       அருளைப் பெற வேண்டும், அதற்கான ஞான
       மார்க்கத்தை நாட வேண்டும், என்று ஏதேதோ
       கூறினாயே. இந்தக் கதிக்கு ஆளானாயே! ஈவு
       இரக்கமற்ற இந்தச் செயலைச் செய்தவன் யார்?
       இலங்கையிலே இருந்து, தப்பி ஓடி வந்த அரக்கன்
       எவனாவது செய்திருப்பானோ இந்தக் காரியத்தை!
       மகனே! அருமை மகனே! வெட்டுண்ட உன் தலையை,
       நான் எப்படியடா கண்டு சகிப்பேன்.

       தவம் செய்கிறேன், தவம் செய்கிறேன் என்று கூறித்
       தேகத்தைப் பாழாக்கிக் கொள்கிறாயே, காணும்
       போதே பெற்ற மனம் எரிகிறதே, போதுமடா


அப்பா உன் தவம்! இதற்கு கடவுள் அளிக்கும் அருள்
நமக்குப் போதும்! எழுந்திரு, சாப்பிடு, உடலைக்
கவனித்துக் கொள், என்று நான் சொன்ன
போதெல்லாம், ஆசை அதிகமாகக் கொண்டு,
அன்னையே! அஞ்ஞானம் பேசுகிறாயே! அவன்
அருளை நாட அகோரத்தவம் செய்வது முறைதானே –
நான் தவத்தைக் கைவிடேன் – மகாபாபமாகும்; அதைவிடப்
பாபம் தவத்தைத் தடுப்பதும் கெடுப்பதும், என்று,
எனக்குப் புத்திமதி கூறினாயே – இந்தக் கதி வந்ததே!

உன் முகத்தைக் கண்டபோது, ஞான ஒளி
வீசியிருக்குமே! தவத்தின் களையைக் கண்டும், இந்தக்
கொலையைச் செய்யத் துணிந்த பாதகன், யார்? யாரடா
மகனே? அவன் குருடனா? பகவான் நாமத்தை நீ
பூஜிப்பதைக் கேட்டும், உன் தலையை வெட்டிய அந்தப்
பாவி,செவிடனா?

[சூழ வந்திருப்போரைக் கண்டு ஊமைகளா ஐயா
நீங்கள் – யார் செய்த, அக்ரமம் இது?

இதோ, பாருங்கள் – என் மகனின் தலை
சொல்லடா – சொல்.

ஏன், ஓடுகிறாய்? நில்லடா, நில் – எவன் செய்தான்
இந்தக் காரியத்தை?

தலையை வெட்டிய பாதகன் யார்?

என் மகனைக் கொன்ற மாபாவி யார்?

தவசியைக் கொன்ற கொடியவன் யார்? – தவசியைக்
கொன்றவன் யார்? என் மகனைக் கொன்ற மாபாவி
யார்? இரக்கமற்ற அந்தக் கொடியவன் எங்கே
இருக்கிறான்? –

ஏடா! மூடா! விறைத்துப் பார்க்கிறாய் பதிலேதும்

கூறாமல், உனக்கு மகன் இல்லையா – தவம் செய்து


தலையைப் பறிகொடுத்த தனயனின், தாய் நான்! இந்த
அநீதி, நடந்திருக்கிறது, அடவியில் அல்ல,
அயோத்தியில்! களத்திலே அல்ல, தவத் தலத்திலேயே
நடந்திருக்கிறது.

மகனே! கடவுளை உள்ளன்போடு எண்ணும்போது,
கசிந்து கண்ணீர் மல்கும் என்று சொல்வாயே! இது,
என்னடா மகனே! எனதருமை மகனே! – இரத்தமடா,
இரத்தம், பெற்ற மனம் சும்மா இருக்குமாடா, மகனே!
எந்தப் பேயன் செய்தான் இந்தக் காரியம் –

அவனைக் காட்டுங்கள். சிரம் இருபது இருப்பினும், என்
இருகரம் போதும், இரக்கமற்ற பேயன் யார்?

யார்? அவன் யார்? எங்கே? எங்கே இருக்கிறான்?

சீக்கிரம் அழைத்துச் செல்லுங்கள் – இன்னும் சில
விநாடியே என் உயிர் இருக்கும் – அதற்குள் நான்
அவனைக் காண வேண்டும் – அவன் என்
கண்ணீரைக் காண வேண்டும்.

இதோ – இரத்தம் – மகனுடைய இரத்தம், தாயின்
கரத்தில் –

ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரனைக் காட்டுங்கள்,
அவன் உடலிலே, இந்த இரத்தத்தைப் பூசுகிறேன். –
அதுபோதும், அவன் உயிர் போக –

[இராமன் அவ்வழி வர]


யார்? இராமனா! இராமன் அறிவானா, இதனை –
இராமா! உன் ஆட்சியிலே, மகனின் வெட்டுண்ட தலை,
தாயின் கையிலே! தவசியின் தலை! – சிலையா, நீ
– சீற்றம் பிறக்கவில்லையா? – கண் திறந்துதானே
இருக்கிறது – இதோ, என் மகன் தலை – மாபாவியாரோ,

கொன்றுவிட்டான் – பிடி – நீட்டு கரத்தை –


என் உயிர் பிரியும் நேரம் இது – நீ தர்ம தேவன் –
ராஜாராமன் – தவசிகளை ரட்சித்தவன் – தவசிகளை
இம்சித்த ராட்சதர்களைச் சம்ஹரித்த ஜெயராமன்! –
இந்த அக்ரமத்துக்குத் தக்க தண்டனை தர, உன்னால்
முடியும்! உன் கடமை அது! மகனை, மாபாவி கொன்று
விட்டான் – மாதா வயிறெரிந்து கூறுகிறேன்,
பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
– ராமா! நீ நல்லவன். சகலகலா வல்லவன். என்
மகனைக் கொன்ற மாபாவியை, மண்டலத்திலே, எங்கு
இருப்பினும், தேடிக் கண்டுபிடித்து, அவனுடைய ஈவு
இரக்கமற்ற நெஞ்சைக் கூறு கூறாக்கிக் காக்கை கழுகுக்கு
விருந்திடு. வேண்டாம்! அவைகளின் குணமும் மேலும்
கெட்டு விடும் – மண்ணில் புதைத்து விடு. இராமா! என்
கண்ணீர் என் மகனின் வெட்டுண்ட கழுத்திலிருந்து
ஒழுகும் இரத்தம், இரண்டும், இதோ, உன் கரத்திலே.
கலந்து குழைந்து இருக்கிறது! பழிக்குப் பழி
அக்ரமக்காரனுக்குத் தக்க தண்டனை!
இரக்கமற்றவனுக்கு ஏற்ற தண்டனை அளிக்க
வேண்டிய பொறுப்பு உன்னுடையது என் மகன்
தலை – உன் கையில் – நான், உன் காலடியில்–

[அவள் கீழே உயிரற்று வீழ்கிறாள். இதற்குள்
பணியாட்கள் வந்து கூடுகின்றனர். கரைபட்ட
இராமனின் கரத்தைக் கழுவ நீர் கொண்டு வந்து

தருகின்றனர். கை கழுவிக் கொண்டே]


இரா : இன்னும் கொஞ்சம் ஜலம், கழுவக் கழுவ... கரை
        போகக் காணோம்.

        பட்டுத்துணி கொண்டு துடைத்தும் பயனில்லை.
        எடுத்துச் செல்லுங்கள்.

        [தலையையும் தாயின் உடலையும் எடுத்துச்
        செல்கின்றனர். இராமன் அரண்மனை செல்கிறான்.]