உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/இனிதவன் நினைவே

விக்கிமூலம் இலிருந்து

34 இனிதவன் நினைவே!



சொல்லொடு புனையின் புல்லெனப் போமே;
சொல்லின் றமையின் இல்லென் றிழிமே!
ஒன்றுபா ராட்டி னொன்றுசீர் குன்றும்
நின்றுயிர் இயங்க லொன்றே சாலும்
இன்றுபோல் வதுவே எதிர்ந்தவந் நாளே
அன்றன்று புதிதவ னணைப்பே
என்றும் அகத்தது இனிதவன் நினைவே!

பொழிப்பு :

சொற்களைக் கொண்டு புனைந்துரைப்பின் (அவன் அன்பு) புல்லியதாகப் போகும். சொல்லப் பெறாமல் அமைந்துவிடின் அஃது இல்லையென்றாகும்; அந்நிலை மிக இழிந்தது! (அவன் அன்பு நிலைகளில் யாதானும் ஒன்றைப் பாராட்டியுரைப்பின், பிறிதொன்றினது பெருமை குறைவுபடும். என் உயிர் இன்றுகாறும் உடலில் நின்று இயங்குவதொன்றே(அவன் என்பால் காட்டும் அன்புக்குப்) பெருமை தருவதாகும். இன்றுபோலவே உள்ளது, அவன் முதன் முதல் வந்து என்முன் எதிர்ப்பட்ட நாள்! அன்றன்றைக்கும் புதியதாகும் அவன் அன்பு நிறைந்த தழுவல் (அவ்வன்பு நிலை யாவும்) என்றைக்கும் என் உள்ளத்தது; இனிது ஆகும், அவனைப் பற்றிய நினைவு !

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

இல்லிருந்து அறம் பேணிவரும் தலைவியைத் தோழி, அவன் அன்பு எத்தகையது என்று வினவ, அது சொற்களைக் கொண்டு புனைந்து சொல்லுந் தகையதன்று அவ்வாறு சொல்லின் அது புல்லியதாகப் போய்விடும்; இனி, சொல்லாதும் நினக்கு விளங்காதாகையால் அஃது இல்லையோ என ஐயறவுக்கிடமாகி இழிவு பெற்றுவிடும். அவனது அன்பின் பெருமை நிகழ்ச்சிகளில் ஒன்றை எடுத்துக்கூறின் மற்றொன்று பெருமையில் தாழும்; என் உயிர் இன்றுவரை உடலில் பொருந்தியிருப்பதே அவ்வன்பின் பெருமையை உரைக்கப் போதுமான சான்றாகும்; அவன் என்முன்வந்து மகிழ்வூட்டிய அந்த முதல்நாளைப் போன்றே, இன்றும் எனக்குக் காட்சி தருகின்றான், ஒவ்வொரு நாளும் புதியதாகும் அவன் தழுவல் என்றைக்கும் அவன் அன்பு என் அகத்தில் நிறைந்து இன்பம் தருகின்றது ; அவனைப்பற்றிய நினைவே எனக்கு இன்பம் தருவதாகும்’ என்று உரைத்து,தலைவனது அன்பின் பெருமையை உணர்த்துவதாகும் இப் பாட்டு.

சொல்லொடு புனையின் - சொற்களைக் கொண்டு புனைந்துரைப்பின், என்னை? 'புனையினும் புல்லென்னும் நட்பு’ என்றாராகலின், அவன் அன்பு சொற்களால் புனைந்துரைப்பது அன்று. சொற்களால் அமைந்து விடுவதன்று, என்பதாகும்.

புல்லென - புல்போல் எளிமை சான்றது. புல்லியதாக

சொல்வின் றமையின் - சொல்லாமல் அமைந்து விடுவதெனின்.

இல்லென்று இழிம் - இல்லை என்றாகி இழிந்ததுபோல் ஆகிவிடும். அவன் அன்பைப்பற்றி ஒன்றும் கூறாது அமைந்து விடுவேனாயின், ஒருவேளை அவன் அன்பாக நடந்து கொள்வதில்லையோ என்று பொருள்பட்டு அவன் பெருமைக்கே இழிவாகிவிடும்.

ஒன்று பாராட்டின் ஒன்றுசிர் குன்றும் - அவன் அன்புச் செயல்களில் ஏதானுமொன்றை எடுத்துப் பாராட்டிப் பேசின், மற்றைய வகைகளில் அவன் அன்பின் பெருமை குறைவுபடும்; ஆகையால் அதுவும் பிழையாகி விடும்.

நின்றுயிர் இயங்கல் - என் உயிர் இன்று வரை என் உடலினின்று இயங்கிக் கொண்டிருப்பதே.

ஒன்றே சாலும் - அவன் அன்பு சிறந்ததாக உள்ளதென்று அவ்வொரு நிலையினாலேயே எண்ணிக்கொள். அவ்வாறில்லையாகின் என் உயிர் என்றோ என் உடலை விட்டுக் கழிந்திருக்கும் என்பது பொருள்.

இன்று போல்வது - இன்றைக்குப் போல் உள்ளது. எதிர்ந்த அந்நாள் - அவன் என்முன் எதிர்பட்டுத் தலைக்கூடிய அந்த நாள்.

அவன் என்னைக் கூடிய முதல் நாளைப் போன்றே, இன்றும் அன்பு நிறைவால் அவன் நடந்து கொள்கின்றான் என்க.

அன்றன்று புதிது, அவன் அணைப்பு - அவனது தழுவல், ஈடுபாடு - அன்றன்றும் புதியதாகவே எனக்குப் படும்படி அவன் அன்பைப் பொழிகின்றான் என்றபடி

என்றும் அகத்தது - அவன் நிறைந்த அன்பு என்றும் என் அகத்தை ஆட்கொண்டுள்ளது.அது புறத்தே கூறுதற்கியலாதது. எனவே சொற்களால் புனைந்து கூற முடியாது என்க.

இனிதவன் நினைவு- அவன் நினைவு ஒன்றே எனக்கு இன்பம் பயப்பது. நேர்ச்சி இன்னும் இனியதாம் என்க.

'அவன் அன்பு எத்தகையது, சொல்’ எனக் கேட்கின்றாய்; அது சொல்லுந்தகையதன்று சொல்லாமல் வாளா அமைந்திருக்கும் தகையது மன்று. அவனைப் பற்றி யாதானும் ஒன்றைக் கூறுவதாயின் மற்றொன்று பெருமை இழக்கும். என் உயிர் உடலில் உறைந்திருப்ப தொன்றினாலேயே நீ உய்த்துணர்ந்து கொள், அவ்வன்பு உண்மையது என்பதை. அவ்வாறில்லாவிடின் நான் என்றோ உயிர் துறந்திருப்பேன். அவன்முதல் நாள் என்னைக் கண்டது போலவே இன்றும் நடந்து கொள்கின்றான். அவன் அன்பு ஒவ்வொரு நாளும் புதிய உணர்வை எனக்கு ஊட்டுகின்றது. அவ்வன்பு உணர்வு புறத்தே எடுத்துக் கூறற் கியலாதது உள்ளத்தே உறைந்து நிற்பது. அவன் நினைவே எனக்கு இனியதாகப் படுகின்றது . எனின், அவன் செயல்களைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ? வேண்டா’ என்றபடி, என்க.

இது, முல்லைத் திணையும் பெருமையின்றரியா அன்பைப் புகழ்ந்தது என்னுந் துறையுமாகும்.