உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/யாங்கோய் வாளோ

விக்கிமூலம் இலிருந்து

33 யாங்கோய் வாளோ


யாங்கோய் வாளோ துரங்குபிற் றூங்கி
ஆங்குமுற் புலர்ந்து வாழில் வினைந்து
பனிநீர்க் கொண்டு மணியுடல் மண்ணி
குனிநுதற் பளிங்கிற் குங்கும மிலங்க
எமைவிழிப் பித்தெஞ் சிறாரை எழுப்பி
5
அமைய வுதவி இமையும் ஓயாது
அடுக்களை வெம்பணி அலர்முகத் தலைந்தே
உடுக்கை வெளிற்றிப் பீறல் ஒட்டிச்
சாயல் ஞான்றொளி யேற்றியுண் டுவந்து
பாயல் வீழ்ந்தெமைப் பற்றி யோளே!
10

பொழிப்பு:

எவ்விடத்து ஒய்ந்திருப்பாளோ, முன் இரவில் யாம் தூங்கிய பின் தூங்கி, அவ்வாறே மறுநாள் வைகறையில் எமக்கு முன்னதாகக் கண் விழித்து எழுந்து, வாழ்கின்ற அகத்தையும் புறத்தையும் வினையால் தூய்மைசெய்து, குளிர்ந்த நீரைக் கொணர்ந்து தன் அழகிய வுடல் குளித்துப் பளிங்கு போல் ஒளிசான்ற வளைந்த நெற்றியில் குங்குமம் விளங்கும் முகத்துடன், எமை விழிப்புறச் செய்து, எம் மக்களைத் துயில் களையச் செய்து, யாவர்க்கும் அவரவர் வினைகளுக்குப் பரிவு கலந்த அன்புடன் துணையாக நின்று, இமைப்பொழுதும் ஒய்வு கொள்ளாது, அடுக்களையின் வெம்மை நிறைந்த பணிகளில் மலர்ந்த முகத்துடன் அலைவுற்றுப் பிற்பகலில் அழுக்கடைந்த உடைகளை வெளுத்துத் தூய்மை செய்து, கிழிந்தவற்றைத் தைத்துச் சாயுங்காலப் பொழுதில் விளக்கம் ஏற்றி, இராவுணவு உண்பித்துத் தானும் உண்டு, எல்லாருடனும் பேசி மகிழ்ந்து மீண்டும் படுக்கையில் வந்து வீழ்ந்து எம்மைக் காதலால் பற்றிக் கொண்ட தலைவியாகிய இவளே!

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

கற்புக் காலத்துத் தலைவியின் ஓயாத இல்லறப் பணிகளைக் கூர்ந்து நோக்கிய தலைவன், அவள் அவற்றை அமைதியுடனும் மகிழ்வுடனும் மிகுந்த பொறுமையுடன் செய்வதையும், அவற்றுக் கிடையில் அவள் சிறிதும் ஒய்வின்றி இயங்குவதையும் கண்டு வியப்பும் இரக்கமும் மேலிட, தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, அத்தகைய அவளைப் பெற்றமைக்காகப் பெருமிதம் கொண்டதாக அமைந்ததிப்பாட்டு.

யாங்கு ஒய்வாளோ -எவ்விடத்து எவ்வகையில் ஒய்வு கொள்வாளோ? இரக்கவுணர்வால் பாட்டின் முதலாக நின்றன இச்சொற்கள்.

தூங்கு பின்- தூங்கிய பின் இறந்த காலத்தை உணர்த்தியது.

ஆங்கு- அவ்வாறே பொறுப்புடன் எல்லாரையும் தூங்கச் செய்த பின் தூங்கியவள். அதே பொறுப்புடன் எல்லார்க்கும் முன்னே எழுந்ததைக் குறிப்பிட்டது.

வாழில்- வாழ்தல் செய்கின்ற இல்லத்தை,

வினைந்து - வினையைச் செய்து.

கொண்டு - போய்க் கொணர்ந்து

மணியுடல் - அழகிய வுடல் இல்லறப் பணிகளால் அவளுடல் துயர் கொள்வதைப் பொறாத வுளத்துடன் வெளிப் போந்ததாகும் இச்சொல். இவ்வழகிய வுடலை அவள் ஒய்வின்றி அலைவு செய்கின்றாளே’ என்று காதலாற் கசிந்தது.

மண்ணி - கழுவி, மணியுடல் என்றதால் மண்ணி எனலாயிற்று. அவள் உடல் வருத்தமுறாது இருத்தல் வேண்டும் என்னும் குறிப்புத் தோன்றக் கூறியது.

குனிநுதல் - வளைந்த நெற்றி.

பளிங்கில் -பளிங்கு போல் ஒளி பொருந்திய நெற்றி.

குங்குமம் இலங்க எமை விழிப்பித்து - தான் கண்விழிக்கையில் தன் முன் அவள் குளித்து முழுகிய தோற்றத்துடனும், குங்குமம் விளங்கும் நெற்றியுடன் கூடிய மலர்ந்த முகத்துடனும் நிற்பது, தலைவன் உள்ளத்தில் அவளுக்கொரு பெருமையைத் தோற்றியது. தட்டியோ, அழைத்தோ எழுப்பாமல், நெருக்கமாய் அருகில் நின்றோ கையால் மெதுவாகத் தீண்டியோ, நீவியோ அவன் தானே விழிப்புறும்படி செய்தாள் என்க.

அவள் தன்மேல் கொண்ட அன்பையும் மதிப்பையும் அவன் உணர்ந்து வியந்தது குறிப்பால் நின்றது.

சிறாரை எழுப்பி-தம் குழந்தைககளை உலுப்பியோ, கூவியோ விழிப்புறச் செய்தாள் என்றபடி

இங்குத் தலைவனை விழிப்புறச் செய்தபின் அவள் அவ்வாறு செய்ததும், அதற்கு முன் செய்யாமையும், பிள்ளைகளை எழுப்பும் அரவத்தான் தலைவன் திடுக்கிட எழக்கூடாதே என்னும் அவள் மனக் குறிப்பை உணர்த்திற்று.

பெரும்பாலும் மிகு காலையில் எழும்போது நிற்கும் உள்ள உணர்வே அன்றைப் பொழுது முழுவதற்கும் அடிப்படையாக அமைவதாகலின், ஒருவரைத் துயிலினின் றெழுப்புகையில் மற்றவர் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் என்னும் குறிப்பை உணர்க.

அமைய விதவி - அவரவர் பணிகளில் அமைதியுடன் உதவியாக நின்று.

இமையும் ஓயாது- இமைப் பொழுதும் ஒய்விலாது.

அடுக்களை வெம்பணி -. சமையலறையில் வெப்பம் நிறைந்த பணி.

அலர்முகத்து அலைந்து - மலர்ந்த முகத்துடன் அலைவுற்று. வெப்பம் மிகுந்த சூழலிலும் தன் மலர் முகம் வாடாது கடமையாற்றும் அவள் மனப்பாங்கை வியந்தது.

வெளிற்றி - அன்றாடம் அழுக்கடைந்த உடைகளைத் துவைத்து வெளுத்து.

பீறல் ஒட்டி - சிறு சிறு கிழிசல் அடைந்த உடைகளைத் தைத்து இணைத்து தையலை நூலால் ஒட்டுதலால் ஒட்டி எனப்பெற்றது.

சாயல் ஞான்று - சாயுங்காலப் பொழுதில், ஒளியேற்றி - விளக்கம் ஏற்றி. உண்டு உவந்து - உண்டு முடித்து அன்றாடப் பணிகளால் மனந்திரிபுறாது, எல்லாருடனும் இணைந்து மகிழ்ந்து.

பாயல் வீழ்ந்து எமைப் பற்றியோளே! - அவள் படுக்கையில் சேர்வதற்கு முன்பே தலைவன் அதில் படுத்திருந்தது, வீழ்ந்து எமைப் பற்றினாள் என்னும் குறிப்பால் உணர்த்தப் பெற்றது. தலைவனைத் தலைவி பற்றுதல் காதற்குறிப்பாய் அமைந்தது.

பற்றியோள் யாங்கு ஒய்வாளோ என்று இணைக்க

இப்பாடலைத் தலைவன், தலைவி தன்னை இராப்படுக்கையில் பற்ற வந்த நேரத்து, அவளை அன்பூற ஆறுதலுடன் அனைத்தவாறு நினைத்துக் கொண்டதாகக் கொள்க.

“நேற்று இராப்பொழுது என்னோடிருந்து, யான் தூங்கியபின் தூங்கி, வைகறையில் எனக்கு முன்னரே எழுந்து தலைவியாக நின்று, இல்லறப் பணிகளில் மலர்ந்த முகத்துடன் அலைவுற்றுத் தாயாகி என்னையும் மக்களையும் புரந்து பேணி, மீண்டும் இவ்விராப்பொழுதில், இளமைக் காலத்தின் காதல் குறையாத உள்ளத்துடன் வந்து என்தோளைப் பற்றுகின்ற இவள்தன் பணிகளுக்கிடையில் எவ்வாறு எவ்விடத்து ஒய்வாக அமர்கின்றாள்? இல்லையே” என்று வியப்போடு இரக்கமுற்றுப் பெருமிதத்துடன் அனைத்துக் கொண்டான் தலைவன் என்க.

இது முல்லைத் திணையும், கற்புக் காலத்துத் தலைவியை வியந்து தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிய தென்னுந்துறையுமாம்.