உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/அமிழா நெடும்புகழ்

விக்கிமூலம் இலிருந்து


32 அமிழா நெடும்புகழ்


இவனியா ரென்குவி ராயி னிவனே
பேராய மென்னும் பெரும்பெயர்க் களிற்றை
ஆரமர்க் களத்தே அலறக் கிடத்தி
ஊராயத் திருத்தி உருக்குலைத் திட்டுத்
தமிழக வரசைத் தலைமுதல் நிறுத்திய 5
அமிழா நெடும்புகழ் அண்ணாத் துரையே!
அடித்தலை தாழ்த்தித் தமிழ்கொல் தில்லியின்
முடித்தலை நெரித்த மொய்ம்பிவன் மொய்ம்பே!
இமிழ்கடல் வையத்தி யாண்டும் புகழ்கொளத்
தமிழ்விழ வெடுத்த திறலிவன் திறலே! 10
மடம்படு கொள்கை மறித்துயிர்ப் படக்கி
உடம்பட நிறுத்திய விறலிவன் விறலே!
புறம்பொய்த் தொழுகிய புல்லியர் விதிர
அறம்பெறத் தூக்கிய அரசிவன் அரசே!
தற்சார் புற்ற இளையோர்ப் பிணிக்குறுஞ் 15
சொற்சோர் வறிகிலா வினைவலி சூழ்தலின்
தோலா திடுகவன் றோளே;
கானிலை கொள்ளுக செந்தமிழ்க் கழலே!

பொழிப்பு:

(படிவமாய் நிற்கும்) இவன் யார் என்று கேட்பீர் ஆயின், இவன்,பேராயம் என்னும் பெரும் புகழ் சான்ற, களிறு போல்வதாம் ஒரு கட்சியைத் தேர்தல் என்னும் நிறைவுற்ற போர்க் களத்தே தோற்றுப் புலம்பும்படி வீழ்த்தி, ஊர்மக்கள் நடுவே கொணர்ந்து நிறுத்தி, அதன் பொய்யுருவத்தைக் குலைத்து உண்மை உருவம் புலம்படும்படி செய்து, வரலாற்றான் முன் இழந்த தமிழகம் என்னும் பெயரை மீட்டு, அதன் பெயரால் ஓர் அரசை முதன் முதல் அரும்பாடுபட்டு எடுத்து நிலைநாட்டியோனும், காலவெள்ளத்துள் அமிழ்ந்து போகாத நெடிய புகழ் கொண்டோனும் ஆகிய அண்ணாத்துரை என்னும் பெயரினனாம்.தன் அடியின் கீழ்த் தலைமை சான்ற தமிழ் மொழியை வலக்காரத்தால் தாழ்த்தி, அதனை நாள்தொறும் சிறிது சிறிதாக அழித்து நின்ற தில்லி யாட்சியின் அதிகாரம் நிரம்பிய தலைமைச் செருக்கைத் தன் வெற்றியால் நொறுக்கிய வலிமை இவனுடையது. ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகின்கண் எக்காலத்தும், எவ்விடத்தும் தன் புகழ் நினைவு கொள்ளும்படி தமிழ் மொழிக்கென்று பதினொரு நாள்கள் விழா வெடுத்த துணிவு இவனுடையது மடமை நிரம்பிய மூடக் கொள்கைகளைத் தடுத்து, அவை மீண்டும் கிளையா வண்ணம் ஒடுக்கி அறிவுக்கு உடன்பட்டுப் போமாறு மக்களை நிறுத்திய பெருமை இவனுடையது. வெளிப்படையாகவே பொய்மைகூறி யொழுகிய சிறுமையர் நடுங்கும்படி, அறம் தழுவியவாறு நிறுவப் பெற்ற அரசு இவனுடையது. தன் சார்பினராகிய இளைஞர்கள் கட்டுப்படும்படி சொல்தளர்வு அறியாத உரையாற்றலோடு வினை வலிமையும் சூழ்ந்திருத்தலின் இவன் முயற்சிகள் தோல்வி யின்றி விளங்குமாக இவனின்று தொடங்கிய செந்தமிழ் வெற்றியின் அடி அசைவின்றி நிலைபெறுமாக!

விரிப்பு :

இப்பாடல் புறத்திணையைச் சார்ந்தது.

“இப் படிமத்து நிற்கும் இவன் யார்?” என்று சதுக்கம் ஒன்றில் நின்றிருந்த அண்ணாத்துரையின் படிமத்தைப் பார்த்துக் கேட்ட வழிப்போக்கற்கு விடையாகக் கூறியதாகும் இப்பாட்டு.

“தமிழ் மரபு தாழ, இருபதியாண்டுகள் வடநாட்டினரின் தில்லியாட்சிக்குக் கையாளாக நின்று, தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பேராயக் கட்சியின் வலிமையைத் தாழ்த்தி, அரசைத் தேர்தல் வழி கைப்பற்றி, மதராசு என்று வழங்கி வந்த இந்நாட்டிற்குத் தமிழ்நாடு என்னும் பெயரைச் சூட்டிய பெருமையும், ஆட்சி வெறியில் மேலேறி நின்ற தில்லியின் அதிகாரச் செருக்கை நொறுக்கிய வலிமையும், தலைநகரில் பதினொரு நாள்கள் உலகத்தமிழ் விழாவெடுத்துத் தமிழ்மொழிக்குப் பெருமை சாற்றிய துணிவும், தன் கருத்து வலிமையால் மூடக் கொள்கைகளை முறியடித்த திறமையும், எவர்க்கும் கட்டுப்படா இளைஞர்களைக் கட்டுப்படுத்திய சொல் வன்மையும் வினைவலிமையும் கொண்ட அண்ணாத்துரையென்னும் விறலோனுடையதாகும் இப்படிமம்” என்று விடையாக மொழிந்தது. இது.

பேராயம் எனும் பெரும் பெயர்க் களிறு - பேராயம் (Congress) என்னும் புகழ்வாய்ந்த கட்சி கட்சிகளுள் அஃது ஒரு களிறு போல்வதாகவின் பெரும் பெயர்க் களிறு என உருவகிக்கப்பெற்றது.

ஆரமர்க்களம் - நிறைந்த போர்க்களம் குடியரசமைப்பில் தேர்தலே போர்க்களம் போன்றதாகலின், அதன் வெற்றி தோல்வியே ஓர் அரசு அமைவதற்கும், சரிவதற்குமான அடிப்படைகளாம். ஆர்தல் நிறைதல். பொருந்துதல் நிறைந்த அமர்க்களம் என்றது. பொதுத் தேர்தலை. அறைக் கிடத்தல் - புலம்ப வீழ்த்துதல், பேராயக்கட்சி ஒரு களிறு போல்வதாகலின் அதை புலம்பி யழும்படி அடித்து வீழ்த்தி - எனலாயிற்று.

ஊராயத் திருத்தி - ஊர்மக்கள் நடுவில் நிறுத்தி.

உருக்குலைத்திட்டு - அதன் பொய்யுருவைக் குலைத்து மெய்யுருவைக் காட்டி

பேராயக்கட்சி தமிழ்மொழி வளர்ச்சிக் கெதிராக இந்தி நுழைப்பையும், தமிழின வளர்ச்சிக்கெதிராக ஆரியவின மேம்பாட்டுக்கானவற்றையும், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிராக வட நாட்டினர் தம் மேலாண்மைக்கு வழி வகுக்கவும் செய்ததெனினும், அது மக்களிடையில் தன்னை ஒரு நடுநிலைக் கட்சியென்றும், மக்கள் முன்னேற்றத்திற்கே உழைக்கும் தன்மை வாய்ந்ததென்றும் போலிக் கொள்கை கூறி அவர்கள் நம்பும்படி செய்தது. இப் பொய்ப் புனைவைத் தோலுரித்துக் காட்டி, அதன் புரட்டுகளை அம்பலப்படுத்திய அண்ணாத்துரையவர்கள் தலைமையாக நின்று இயக்கிய திராவிட முன்னேற்றக் கழகமே யாகலின், ஊராயத் திருத்தி உருக்குலைத்திட்ட பெருமை அவரையே சாருமென்க.

தமிழக அரசை தலைமுதல் நிறுத்திய.... அண்ணாத்துரையே - பேராயக் கட்சி தமிழ்நாட்டரசை தி.பி. 1978 (கி.பி.1947) இல் மேற்கொண்டது. அதை அண்ணாத்துரை அவர்கள் தி.பி.1998 (கி.பி1967) இல் பொதுத் தேர்தல் வழி கைப்பற்றினார். அவரின் முதல் நடவடிக்கையாகத் தமிழ் நிலத்திற்கு அதுவரை இருந்த மதராசு மாநிலம் என்ற பெயரை மாற்றித் தமிழ்நாடு என்னும் பெயரை அமைத்தார். இப் பெயரே மூவேந்தர் காலத் தமிழாட்சியில் இடப்பெற்றிருந்தது. ஏறத்தாழ எண்ணுாறாண்டுக் காலத்திற்குப் பின் மீண்டும் முதன் முதல் அப்பெயரைத் தமிழகத்திற்கு ஆக்கித் தந்த வரலாற்றுப் பெருமை அண்ணாத்துரையவர்களையே சார்ந்ததாகலின் தமிழக அரசைத் தலை முதல் நிறுத்திய அமிழா நெடும் புகழ் அண்ணாத்துரை எனக் கூறலாயிற்று.

அத்தலை தாழ்த்தி....மொய்ம்பே - உலக மொழிகளுக்கெல்லாம் பழமையானதும், இயற்கையானதும், தாயானதும், தலைமை சான்றதுமான தமிழ் மொழியை, ஆட்சியதிகார மேலாண்மையாலும் வலக்காரத்தாலும் தன் அடியின் கீழ்ப்படுத்தி, வடமொழியாகிய சமற்கிருதத்தை ஊக்குவிப்பதாலும்,மிகப்பிந்திய காலத்தே தோன்றியதும், பன்மொழிக் கலவை மிக்கதும், செயற்கையானதும், ஆட்சிக்கென உருவாக்கிக் கொண்டதும் வட இந்தியாவில் வழங்கிவருவதுமாகிய இந்தியெனும் பயனற்ற ஒரு மொழியைத் தென்னகத்து மக்களிடை வலிந்து புகுத்துவதாலும், நாளுக்கு நாள் சீரழிந்து வருகின்ற தில்லியரசின் போக்கை, தன் வலிந்த இந்தி யெதிர்ப்புணர்ச்சியாலும் இருமொழிக் கொள்கையாலும் முறியடித்த மொய்ம்பு அண்ணாத்துரையின் ஆட்சியினது என்க. மொய்ம்பு

வலிமை. தமிழ் கொல் தில்லி -என்றமையின் அக்கொல்வதாந் தன்மை தொடர்வதாம் நிலை உணர்த்தப்பெற்றது.

இமிழ்கடல் - வையத்து . . . திறலே - அண்ணாத்துரையின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த மறு ஆண்டான தி.பி.1999(கி.பி. 1958). இன் தொடக்கத்திலேயே உலகத் தமிழ் விழாவை உலகமெலாந் தழுவிய அளவில் தமிழ்நாட்டின் தலை நகராகிய சென்னையம்பதியில் சிறப்புறக் கொண்டாடியது. இவ்விழா சனவரி 3 ஆம் பக்கலிலிருந்து 11ஆம் பக்கல் வரை கொண்டாடப்பெற்றது. இவ்விழாவில் தமிழகத்தினின்றும், பல வெளிநாடுகளிலிருந்தும் ஏறத்தாழப் பத்திலக்கம் மக்கள் வந்து கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு ஏறத்தாழ ஓரிலக்கம் உருபா செலவிடப் பெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நடந்த அறிஞர் கருத்தரங்கில் நூற்று ஐம்பத்து மூன்று கட்டுரைகள் படிக்கப்பெற்றன. அவை, ஏறத்தாழ இருபத்தேழு நாடுகளிலிருந்து வந்த பேரறிஞர்களால் படிக்கப் பெற்றவை யாகும். இவ்விழாவின் பொழுதுதான் சென்னைக் கடற்கரையில் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஒளவையார் முதலிய முற்கால பிற்காலச் செந்தமிழ்ப் புலவர்களின் பதினொரு படிமங்கள் நிறுவப்பெற்றன. இவ்வளவு சிறப்புறும்படி மொழிக்கென எடுத்த வேறு ஒரு விழா உலகிலேயே இல்லை. இதன் வழி அண்ணாத்துரை அவர்களின் அரசு தமிழின் பெருமையை உலகெல்லாம் பறைசாற்றியது. வடவரின் தில்லி யாட்சியதிகாரத்தின் கீழும், வடமொழியாளரின் சூழ்ச்சிகளுக்கிடையிலும் இத்தகைய ஒரு விழா வெடுத்தது மிகத் துணிவான செயலாகும். அத்துணிவு அண்ணாத்துரையினுடையதே என்று இவ் வரிகளில் பாராட்டப் பெற்றது என்க, திறன் - வலிமை, துணிவு.

மடம்படு கொள்கை - மடமை நிறைந்த மூடக் கொள்கைகள். மக்களை நால்வேறு பிரிவினராக்கி அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வைக் கற்பித்ததும், மெய்ப்பொருள் கொள்கைக்கு மாறாக, அவற்றிற்குக் காவலாகச் சிறுதெய்வங்களைக் கற்பித்ததும், அவை தழுவிய ஆரவாரத் திருவிழாக்களை எடுப்பித்ததும், மக்களை மேலும் மேலும் மடமையில் ஆழ்த்தும் பகுத்தறிவுக் கொவ்வாத கருத்துகளைப் பரப்புவதும் மடம்படு கொள்கையாம். இவற்றைப் பெரும்பாலும் ஆரியர்கள் தமிழர்களின் மேம்பாட்டைச் சீரழிப்பதற்காகப் பயன்படுத்தினர். அவற்றை அண்ணாத்துரையவர்கள் மிகுவாகக் கடிந்து தடுத்து நிறுத்தினார்.

மறித்து உயிர்ப்பு அடக்கி - அவற்றைத் தடுத்து நிறுத்தி அவை மேலும் மேலும் கிளராவண்ணம் அவற்றின் மூலக்கரணியங்களை எடுத்து விளக்கி, அவற்றின் பொய்மையை நிலைநாட்டி அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை யிட்டார். உயிர்ப்பு அடக்குதல் - உயிரற்றுப் போகும்படி செய்தல்,

உடம்பட நிறுத்திய விறல் - மூடநம்பிக்கை நிரம்பிய கொள்கையைத் தடுத்துத் தன் கொள்கைக்கு உடன்பட்டுப் போமாறு மக்களைக் கொண்டு நிறுத்திய பெருமை.

விறல் - வெற்றி, பெருமை.

புறம் பொய்த்து - வெளிப்படையாகவே பொய் சொல்லி மக்களை ஏமாற்றி.

புல்லியர் விதி - புன்மையாளர் நடுக்கமுற

அறம் பெறத் துக்கிய அரசு - அறத்திற்கு வழிவகுக்குமாறு நிறுத்திய அரசமைப்பு. மடம்படு கொள்கைகள் மறவுணர்வு சான்ற வாகையால், அவற்றைத் தடுத்து அறம் பெறுமாறு அரசமைத்தார் என்றவாறு.

தற்சார் புற்ற - தன்னைச் சார்ந்த ஒழுகும். தன் கொள்கையை ஏற்று நடக்கும்.

இளையோர் - இளைஞர், தம்பியர். இவர் கட்சியைச் சார்ந்தவர் அனைவரும் அண்ணாத்துரையவர்களை அண்ணா, அண்ணா, என்று உடன் பிறப்புணர்வுடன் அழைக்கின்ற தன்மையை நோக்கின் அவரைப் பின்பற்றுபவர் அவரின் இளையோராகத் தம்மைக் கருதிக் கொள்பவரே என்க.

சொற்சோர்வு - சொல் தளர்வு

வினைவலி - செயல் வலிமை

தோலாதிடுக - தோல்வியின்றி இலங்குக!

தோள் - முயற்சிக்காக வந்த -.

கானிலை கொள்ளுக - அடிப்படை அசைவிலாது நிலையாக நிற்க,

செந்தமிழ்க் கழல்-செந்தமிழின் வெற்றி. தமிழ்மொழிக்கும் தமிழ்பேசும் இனத்திற்கும் ஒரு தடை நீக்கம் செய்து பழம் பெருமையை மீண்டும்கால்கொளச் செய்தது இவர் கழகமாகவின் இவர் தம் வெற்றி செந்தமிழின் வெற்றி எனலாயிற்று.

இது, பாடசண் திணையும், இயன்மொழி என்துறையுமாம்.